இலங்கையின் அரசியல் கட்சி
முறைமை
அரசியல் கட்சி முறை என்பது பாராளுமன்ற ஜனநாயகம் நிலவும் எல்லா நாடுகளிலும் காணப்படுகின்ற கட்டாயமான ஒரு பண்பாகும். பிரித்தானியா, ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் ஆரம்ப காலத்தில் இரு கட்சிகள் மட்டுமே காணப்பட்டன. அவை இரு கட்சி முறை ஆட்சி எனப்பட்டன. பிரான்ஸ், ஜேர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் இந்தியா, இலங்கைப் போன்ற ஆசிய நாடுகளிலும் பல அரசியல் கட்சி கள் காணப்படுகின்றன. அவை பல கட்சி முறை ஆட்சி எனப்பட்டன.
அரசியல் கட்சி முறையால் அவ்வவ் கட்சிகளின் கொள்கை அடிப்படையில் மக்களை ஒன்றுதிரட்டுவது, கட்சியின் கொள்கைகளை மக்கள் முன்கொண்டு செல்வது என்பன இலகுவாயுள்ளன. அத்தோடு பாராளுமன்ற ஜனநாயகம் மக்கள் பிரதிநிதிகளால் மேற்கொள்ளப்படும் ஆட்சி முறையானபடியால், அரசியல்வாதிகளுக்கும் பொதுமக் களுக்குமிடையிலான உறவைக் கட்டியெழுப்புவதற்கும் அரசியல் கட்சி முறைமை அவசியப்படுகிறது. இலங்கையில் அரசியல் கட்சிகள் ஆரம்பிக்கப்பட்டது பிரித்தானியரின் ஆட்சிக் காலத்திலேயாகும். 1931 ஆம் ஆண்டில் இந்நாட்டிற்கு சர்வஜன வாக்குரிமை கிடைத்த போதிலும் 1947 ஆம் ஆண்டு வரை பொதுத் தேர்தல்களில் கட்சி முறைமைக் கவனத்தில் கொள்ளப்படவில்லை. இந்நாட்டில் முதன்முறையாகக் கட்சி முறைமை பிரயோகிக்கப்பட்டது 1947 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின் போதேயாகும். அத்தேர்தலில் இலங்கை சமசமாஜக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் கட்சி என்னும் பல கட்சிகள் போட்டியிட்டன.
இலங்கை சமசமாஜக் கட்சி
இலங்கை சமசமாஜக் கட்சி இந்நாட்டின் பழைய அரசியல் கட்சியாகும். பிரித்தானியரின் ஆட்சியின்போது கல்வி கற்பதற்காக வெளிநாடு சென்றிருந்த கலாநிதி என்.எம். பெரேரா, கலாநிதி கொல்வின் ஆர். டீ சில்வா, திரு பிலிப் குணவர்தன போன்ற தலைவர்கள் வெளிநாடுகளில் நிலவிய இடதுசாரிச் சிந்தனைகளால் கவரப்பட்டு அம்முறையை இந்நாட்டில் செயற்படுத்துவதற்காக 1935 ஆம் ஆண்டு இலங்கை சமசமாஜக் கட்சியை உருவாக்கிக் கொண்டனர். பின்னர் அக்கட்சியில் இருந்து பிரிந்து சென்ற ஒரு பகுதியினரால் வைத்தியர் எஸ்.ஏ. விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் 1943 ஆம் ஆண்டில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சி
1946 ஆம் ஆண்டளவில் இடதுசாரி, சிறுபான்மை இனக் கட்சிகள் சிற்சிலவும் தொடங்கப்பட்டிருந்தாலும் இந்நாட்டு நடுநிலை அரசியல்வாதிகளுக்கு என்று ஓர் அரசியல் கட்சி உருவாகி இருக்கவில்லை. 1947 ஆம் ஆண்டில் முதலாவது பொதுத் தேர்தல் நடைபெற இருந்தமையால் டீ.எஸ். சேனாநாயக்க அவர்களின் தலைமையில் 1946 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சி தோற்றுவிக்கப்பட்டது. அப்போதிருந்த இலங்கை தேசிய சங்கம், எஸ். டபிள்யூ. ஆர். டீ.பண்டாரநாயக்க அவர்களால் ஆரம்பிக்கப்பட்டிருந்த சிங்கள மகா சபை அங்கத்தவர்கள் பலரும் ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்ந்து கொண்டனர். ஆகையால் அக்கட்சி ஆரம்பத்திலிருந்தே பலம் வாய்ந்த ஓரணியாகத் திகழ்ந்தது. 1947 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் 95 வேட்பாளர்களை நிறுத்தி, 42 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பின்னர் 1952 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் 54 தொகுதிகளில் வென்று ஆட்சியை அமைத்துக் கொள்ளும் பலம் அக்கட்சிக்குக் கிடைத்தது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி
எஸ். டபிள்யூ.ஆர்.டீ. பண்டாரநாயக்க அவர்கள், ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி,1951ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை நிறுவினார். ஐக்கிய தேசியக் கட்சியை விட அதிகமாக சாதாரண மக்களின் தேவைகள் தொடர்பாகக் கவனஞ் செலுத்திய அக்கட்சி, சுயமொழி அறிஞர்கள், புத்த பிக்குகள், தேசியவாதிகள் ஆகியோரின் ஆதரவைப் பெற்றிருந்தது. 1951ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பங்கேற்று 9 தொகுதிகளில் வெற்றிப் பெற்றது. அக்கட்சி இன்னும் பல அரசியல் கட்சிகளை ஒன்று சேர்த்துக் கொண்டு மக்கள் ஐக்கிய முன்னணி என்ற பெயருடன் 1956 பொதுத் தேர்தலில் பங்கு பற்றி 51 தொகுதிகளில் வென்று அரசாங்கம் ஒன்றை அமைத்தது. அதற்கமைய 1956 இலிருந்து 1959 வரை பண்டாரநாயக்க அவர்கள் இந்நாட்டின் பிரதமராகச் செயற்பட்டார். 1959 ஆம் ஆண்டில் அவர் கொலை செய்யப்பட்டார். அதன்பின்னர் அவரது மனைவியான திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். இவர் உலகின் முதலாவது பெண் பிரதமர் ஆவார்.
ஏனைய அரசியல் கட்சிகள்
முழு நாட்டிலும் வேட்பாளர்களை நிறுத்தக்கூடியதாயிருந்த ஐக்கிய தேசிய கட்சி. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிகளைத் தவிர சுதந்திரத்திற்கு முன்பிருந்தே இன்னும் பல சிறிய கட்சிகள் செயற்பட்டுக் கொண்டிருந்தன. ஏ.ஈ.குணசிங்க அவர்களால் அமைத்துக் கொள்ளப்பட்ட தொழிலாளர் கட்சி,ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்களின் தமிழ் காங்கிரஸ் கட்சி என்பன அதில் குறிப்பிடத்தக்கவையாகும். இந்நாட்டுத் தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பாகத் தீவிர கவனஞ் செலுத்திய அக்கட்சி 1947 பொதுத் தேர்தலில் 7 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 1949 ஆம் ஆண்டு எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்கள் சமஷ்டிக் கட்சியை ஆரம்பித்ததுடன், தமிழ் காங்கிரஸ் கட் சிக்கு கிடைத்து வந்த மக்களின் ஆதரவு குறைவடைந்தது.
இலங்கையில் காணப்பட்ட அரசியல் கட்சி முறையின்படி ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்ற இரண்டிற்கும் மேலதிகமாக மேலும் சிறிய கட்சி கள் பலவும் காணப்பட்டமையால் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் ஒரு கட்சிக்கும் பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றுக் கொள்ள முடியாத சந்தர்ப்பங்கள் காணப் பட்டன. ஆகையால் பல கட்சிகள் ஒன்று சேர்ந்து கூட்டணிகளை அமைத்துக் கொண்டு கூட்டரசாங்கங்கள் உருவாவது பொதுவாகக் காணப்படுகின்றது.
நன்றி
0 Comments