இலங்கையில் பிரித்தானியரின் ஆட்சி - BRITISH RULE IN SRI LANKA


இலங்கையில்

பிரித்தானியரின் ஆட்சி


இலங்கையில் பிரித்தானியரின் ஆட்சி - BRITISH RULE IN SRI LANKA

பிரித்தானியரின் ஆசிய வருகை 

போர்த்துக்கேயரும் ஒல்லாந்தரும் ஆசியாவுடனான வர்த்தகத்தால் பேரளவில் இலாபம் ஈட்டுவதை அவதானித்த ஆங்கிலேயரும் ஆசியாவில் தமது கவனத்தைச் செலுத்தினர். இதற்கமைய பிரித்தானிய மகாராணி 1 ஆம் எலிசபெத் அவர்களிடமிருந்து அனுமதிப் பத்திரம் ஒன்றைப் பெற்றுக் கொண்டு, ஆங்கிலேய வணிகக் குழு ஒன்று 1600 டிசெம்பரில் ஆங்கிலேயக் கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனி ஆசியாவில் வர்த்தகத்தில் ஈடுப்பட்டனர். அவ்வர்த்தகக் கம்பனியின் முதலாவது கப்பல் குழுவினர் சுமாத்ரா தீவுக்குச் சென்று அங்கு தமது வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பித்தனர். அதன் பின்னர் வில்லியம் ஹோகின்ஸ் தலைமையில் இன்னொரு கப்பல் குழுவினர் இந்தியாவிற்கு வந்து அப்போதைய மொகலாயப் பேரரசின் மாமன்னரான ஜஹங்கீருடன் வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பாகப் பேச்சுவார்த்தைகள் நடத்தினர்.

ஆங்கிலேயர் ஆசியாவுக்கு வந்த ஆரம்ப காலத்தில் தென்கிழக்கு ஆசியப் பிரதேசங்களுடன் தமது வர்த்தகத் தொடர்புகளைப் பலப்படுத்திக் கொள்வதில் ஈடுபாடு காண்பித்தனர்.

17 ஆம் நூற்றாண்டின் முதலிரு தசாப்தங்களிலும் தென்கிழக்கு ஆசியாவின் வர்த்தக ஆதிக்கத்தைக் கட்டி எழுப்பிக் கொள்வதில் போர்த்துக்கேயருக்கும் ஒல்லாந்தருக் கும் இடையில் மோதல்கள் ஆரம்பித்திருந்தன. அப்போது ஆங்கிலேயர் சில சந்தர்ப்பங்களில் போர்த்துக்கேயருக்கு எதிராக ஒல்லாந்தருடன் ஒன்றுபட்டுச் செயற்பட்டனர். இவ்விரு சாராரின் பொது எதிரியான போர்த்துக்கேயருக்கு எதிராகப் போராடுவதற்கு ஆங்கிலேயரின் உதவியைப் பெற்றுக் கொண்டாலும் தென்கிழக்கு ஆசியாவில் வாசனைத் திரவியங்கள் பெருமளவில் விளையும் தீவுகளில் ஆங்கிலேயரின் ஆதிக்கம் பலப்படுவதை ஒல்லாந்தர் விரும்பவில்லை. இதனால் 1623 ஆம் ஆண்டில் அம்பொய்னா தீவிலிருந்த கோட்டை ஒன்றைத் தாக்கிய ஒல்லாந்தர் அங்கிருந்த ஆங்கிலேயர்களில் ஒரு பகுதியினரைக் கொன்றுவிட்டனர். அதற்கு எதிராக ஒல்லாந்தர் மீது பதில் தாக்குதலைப் புரியும் அளவிற்கு அப்பிரதேசத்தில் ஆங்கிலேயரின் பலம் போதியதாக இன்மையால், தென்கிழக்கு ஆசியப் பிரதேசங் களில் இருந்து ஆங்கிலேயர் அகன்று சென்றனர். அதன் பின்னர் அவர்கள் இந்தியா மீது தமது பூரண கவனத்தையும் செலுத்தியதாகத் தெரிகின்றது.

ஆங்கிலேயர் 1607 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவுடன் வர்த்தகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு முயற்சித்த போதிலும் அதை அடைந்து கொள்வதற்கு பத்து வருடங்களுக்கு மேற்பட்ட காலத்தை எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தது. இந்தியாவில் ஆங்கிலேயர் தந்திரமான முறையில் செயற்பட்டமையால், 17 ஆம் நூற்றாண்டின் முன்பகுதியில் சென்னை, பம்பாய், கல்கத்தா உட்படப் பல பிரதே சங்களில் வர்த்தக நிலையங்களை ஆரம்பிப்பதற்கு அவர்களால் முடியுமாய் இருந்தது. என்றாலும் 1664 ஆம் ஆண்டிலிருந்து பிரான்சியரும் இந்தியாவுக்கு வந்து பாண்டிச் சேரி, காரைக்கால், சந்திரநகர் போன்ற இடங்களில் வர்த்தக நிலையங்களை ஆரம்பித் ததுடன் ஒல்லாந்தருடன் மட்டுமன்றி பிரான்சியருடனும் ஆங்கிலேயர் வர்த்தகப் போட்டிகளில் ஈடுபட நேர்ந்தது. 18 ஆம் நூற்றாண்டாகும்போது இந்தியாவில் தமது ஏகாதிபத்தியத்தை நிலைநிறுத்திக் கொள்வதில் ஆங்கிலேயருக்கும் பிரான்சியருக்கும் இடையே அரசியல் போராட்டம் ஆரம்பமானது.

இலங்கை மீது பிரித்தானியரின் கவனம் 

ஆங்கிலேயர் இந்தியாவுக்கு வந்து நூற்றுக்கு மேற்பட்ட ஆண்டுகள் செல்லும் வரை இலங்கை மீது அவர்கள் தமது கவனத்தைச் செலுத்தவில்லை என்பது தெரிகின்றது. இக்காலகட்டத்தில் ஆங்கிலேயர் இந்தியாவில் தமது பலமான ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ளாமைக்கு, போர்த்துக்கேயரும் பின்னர் ஒல்லாந்தரும் இலங்கைத் தீவின் கடற்கரையோரமாக சக்தி வாய்ந்த கோட்டைத் தொகுதி ஒன்றைக் கொண்டிருந்தமை காரணமாக இருந்திருக்கலாம். என்றாலும் 18 ஆம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதியில் இந்தியாவில் மொகலாயப் பேரரசு வீழ்ச்சியுறத் தொடங்கியதுடன் அதுவரை வர்த்தகத்தில் மாத்திரம் கவனம் செலுத்திய ஆங்கிலேயர் இந்தியாவில் அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள எத்தனித்ததுடன் இலங்கை மீதும் அவர்களது கவனம் ஈர்க்கப்பட்டது. அதற்கான இரு காரணிகளும் வருமாறு,

இலங்கையின் அமைவிடம்

இலங்கையின் கறுவா உட்பட பெறுமதிவாய்ந்த வர்த்தகப் பொருள்கள் கிடைக்கப்பெற்றமை

இலங்கை இந்தியாவுக்கு அருகில் இருந்தமையாலும் வங்காள விரிகுடா, உட்பட, இந்தியாவைச் சூழவுள்ள கடற் பிரதேசங்களில் கடற்படை, வியாபார ஆதிக்கத்தை நிலைநிறுத்தப் பொருத்தமான இடமாக இருந்தமையாலும் ஆங்கிலேயருக்கு அதன் தேவை முக்கியமானதாக இருந்தது. பிரான்சியருடன் பிரித்தானியருக்கு வங்காள விரிகுடாப் பிரதேசத்தில் மோதல் ஏற்பட்டபோது பழுதடைந்த கப்பல்களைத் திருத்தி அமைத்துக்கொள்வதற்குப் பொருத்தமான துறைமுகம் ஒன்றின் அவசியத்தை ஆங்கிலேயர் நன்கு உணர்ந்திருந்தனர். இதனால் இலங்கையின் திருகோணமலைத் துறைமுகத்தின் மீது கவனம் செலுத்த ஆரம்பித்தனர். திருகோணமலைத் துறைமுகத் தின் மீதான ஆங்கிலேயரின் கவனம் ஈர்க்கப்பட்டதற்கான காரணங்கள் வருமாறு,

திருகோணமலைத் துறைமுகம் வங்காள விரிகுடாவை நோக்கி அமைந்திருத்தல்.

இந்தியாவின் கிழக்குக் கரையோரத்தில் ஆங்கிலேயரின் கடற்படைப்பலத்தைப் பாதுகாத்துக்கொள்ள இத்துறைமுகத்தின் அமைவிடம் முக்கியத்துவமாயிருத்தல். 

வடகிழக்குப் பருவக் காற்றுக் காலத்தில் கப்பல்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கு திருகோணமலைத் துறைமுகத்தைப் பயன்படுத்திக்கொள்ள முடியுமாயிருத்தல்.

இந்தியாவின் பாதுகாப்பிற்காகவும் இந்து சமுத்திரக் கடற்படை நடவடிக்கைகளுக் காகவும் பொருத்தமான கேந்திர நிலையமான திருகோணமலைத் துறைமுகம் பிரான்ஸியர் வசப்படுமாயின் அது தமக்குப் பாதிப்பாக அமையும் என்பதை ஆங்கிலேயர் தெரிந்து வைத்திருந்தனர். ஆகையால் இலங்கையின் புவியியல் அமைவிட முக்கியத்துவமும் திருகோணமலைத் துறைமுகத்தின் விசேட முக்கியத்துவமும் ஆங்கிலேயரின் கவனத்தை இந்நாட்டின்மீது திருப்புவதற்கான காரணங்களுள் முதன்மையானவையாகக் காணப்பட்டன.

இலங்கை கறுவா உட்பட வாசனைத் திரவியங்களுக்குப் புகழ்பெற்ற நாடாக விளங்கியது. ஐரோப்பியச் சந்தையில் அதிக கேள்வி நிலவிய உயர் தரமான கறுவா இந்நாட்டில் விளைந்தது. கறுவா வியாபாரத்தால் ஒல்லாந்தர் பெருமளவு இலாபம் ஈட்டுவதை ஆங்கிலேயர் தெரிந்து வைத்திருந்தனர். இதனால் கறுவா வியாபாரத்தின் தனியுரிமையைத் தாம் கையேற்பது பிரித்தானியருக்கு தேவையாய் இருந்தது. கறுவாவுக்கு மேலதிகமாக மிளகு, ஏலம், கராம்பு, முத்து, இரத்தினக் கற்கள், யானைத் தந்தம் என்பன அதிக விலைக்கு விற்கக்கூடிய வர்த்தகப் பொருள்களாயிருந்தன. இவ்வாறான காரணங்களால் ஆங்கிலேயர் இலங்கையின் அரசியல் அதிகாரத்தைத் தமதாக்கிக் கொள்வதில் கவனஞ் செலுத்தியதாகத் தெரியவருகிறது.

ஆங்கிலேயருக்கும் கண்டி இராச்சியத்திற்கும் இடையிலான தொடர்புகள்

போர்த்துக்கேயரை இந்நாட்டில் இருந்து வெளியேற்றுவதற்கு ஒல்லாந்தரின் உதவியைப் பெற்றுக் கொண்டது போல, ஒல்லாந்தரை வெளியேற்றுவதற்கு இன்னொரு அந்நிய ஐரோப்பியரின் உதவியைப் பெற்றுக் கொள்வதில் கண்டி மன்னர்கள் கவனம் செலுத்தி வந்தனர். இதற்கமைய கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்க மன்னரால் இந்தியாவில் இருந்த ஆங்கிலேயரிடமும் பிரான்சியரிடமும் தூதுவர்கள் அனுப்பப்பட்டனர். ஆங்கிலேயத் தூதுவர்கள் கண்டிக்கு வருகை தருவதற்கான பின்னணி இதன் விளைவாகவே உருவானது. ஆங்கிலேயர் இந்நாட்டின் கரையோரத்தைக் கைப்பற்றிக் கொள்வதற்கு முன்னர் அவர்களுடைய தூதுவர்கள் மூவர் காலத்திற்குக் காலம் கண்டிக்கு வருகை தந்திருந்தனர்.

1762 இல் ஜோன் பைபஸின் வருகை

1782 இல் ஹியு பொயிட்டின் வருகை

1795 இல் ரொபட் அன்ட்றூஸின் வருகை

ஜோன் பைபஸ் இங்கு வரும்போது கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்க மன்னன் கண்டி இராச்சியத் தின் ஆட்சியாளராவார். அடுத்த ஆங்கிலேயத் தூதுவர்கள் இருவரினதும் வருகைகள் இடம்பெற்றது இராஜாதி இராஜசிங்கனின் காலத்திலாகும். ஜோன் பைபஸினதும் ஹியு போயிட்டினதும் வருகையின்போது இலங்கையுடன் வர்த்தகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதே ஆங்கிலேயரின் நோக்கமாக இருந்தது. அத்தூதுவர்களின் வருகை இடம்பெற்ற காலத்தில் ஒல்லாந்தரும் ஆங்கிலேயரும் மோதல்களைத் தவிர்த்து ஒற்றுமையுடன் இருந்தனர். ஆகையால் திருகோணமலைத் துறைமுகத்தை ஆங்கிலேயர் பயன்படுத்துவதற்கு ஒல்லாந்தர் இடமளித்திருந்தபடியால், இந்நேரத்தில் ஒல்லாந்தருக்கு எதிராக கண்டி இராச்சியத்திற்கு உதவுவதற்கு ஆங்கிலேயர் முன்வரவில்லை. தமது அரசியல் இலக்கான ஒல்லாந்தரை வெளியேற்றுவதற்கு உதவி செய்யாத ஓரினத்தவருடன் வர்த்தகத்தை மேற்கொள்வதற்கு கண்டி மன்னர்கள் விருப்புக் கொண்டிருக்கவில்லை. ஆகையால் அவ்விரு தூதுவர்களின் வருகையால் எவ்வித சாதகமான விளைவுகளும் ஏற்படவில்லை.

1795 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஆங்கிலேயப் படை, ஒல்லாந்தர் வசமிருந்த திருகோணமலைத் துறைமுகத்தைக் கைப்பற்றிக் கொண்ட பின்னர் ரொபட் அன்ட்றூஸ் மலைநாட்டிற்குச் சென்று, இராஜாதி இராஜசிங்க மன்னனைச் சந்தித்தார். இலங்கையில் ஒல்லாந்தரின் ஏனைய கோட்டைகளைக் கைப்பற்றிக்கொள்வதற்கு யுத்தம் நடைபெறும் வேளையில் கண்டி மன்னரின் உதவியை ஆங்கிலேயர் பெற்றுக் கொள்வதே, அன்ட்றூஸ் அவர்களின் தூதின் முக்கிய நோக்கமாயிருந்தது. அப்போது ஆங்கிலேயருக்கு உதவி புரிய மன்னர் இணங்கினார் என்றாலும் ஒல்லாந்தருடன் இடம்பெற்ற போர்கள், அவர்கள் எதிர்பார்த்த அளவிற்குத் தீவிரமாக இல்லாதிருப்பதை ஆங்கிலேயர் புரிந்து கொண்டனர். இதனால் ஒல்லாந்தரின் இந்நாட்டிலிருந்த கோட்டைகளைத் தமதாக்கிக் கொள்வதில் ஏற்படும் பலாபலனை மன்னருடன் பகிர்ந்து கொள்வதற்கு ஆங்கிலேயர் விரும்பவில்லை. இதன் பெறுபேறாக கண்டி மன்னனின் நிபந்தனைகளை ஏற்று அவனுடன் நீண்ட கால நட்புறவு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொள்வதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட ஆங்கிலேயர் முன் வரவில்லை.

பிரித்தானியர் ஆதிக்கத்தை நிலைநாட்டுதல்

இலங்கையைப் பிரித்தானியரின் குடியேற்ற நாடாக்குவதில் முனைப்பாகத் தெரியும் மூன்று சந்தர்ப்பங்களை இனங்காண முடியும்.

1796 ஆம் ஆண்டில் ஆங்கிலேய கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனி, கரையோரப் பிரதேசங்களில் தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ளுதல்.

1802 ஆம் ஆண்டில் அதுவரை ஆங்கிலேய கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனியின் நிருவாகத்திலிருந்த இந்நாட்டின் கரையோரப் பிரதேசங்கள் முடிக்குரிய குடியேற்ற நாடாக்கப்படுதல். 

1815 ஆம் ஆண்டில் கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றுதல்.

1796 ஆம் ஆண்டில் ஆங்கிலேய கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனி, கரையோரப் பிரதேசங்களில் தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ளுதல்.

1789 இல் பிரான்ஸியப் புரட்சி ஏற்பட்டதன் பின்னர் ஐரோப்பாவில் உருவான புதிய அரசியல் சூழ்நிலை, ஐரோப்பியரின் ஆசியக் குடியேற்றவாதக் கொள்கையிலும் செல்வாக்குச் செலுத்தி யது. புரட்சியின் பின்னர் பிரான்ஸில் உருவான புதிய அரசாங்கத்தின் இராணுவம், 1795 இல் ஒல்லாந்தை ஆக்கிரமித்தது. அப்போது ஒல்லாந்த ஆட்சியாளனான (ஸ்டெத் ஹோல்டர்) ஐந்தாம் வில்லியம் பிரித்தானியாவுக்குத் தப்பி ஓடினார். ஒல்லாந்து நாடு பிரான்ஸின் ஆதிக்கத்திற்கு உட்பட்டது. இதனால் ஒல்லாந்தரின் ஆதிக்கத்திலிருந்த கரையோரப் பிரதே சங்கள், பிரான்ஸின் அதிகாரத்திற்கு உட் படும் சந்தர்ப்பம் ஒன்று உருவானது. இலங்கையின் முக்கியத்துவம் பற்றி பூரண தெளிவுடன் இருந்த ஆங்கிலேயர், இச்சந்தர்ப்பத்தைத் தமது அதிகாரத்தை நிலைநாட்டிக்கொள்ளப் பயன்படுத்திக் கொண்டனர். 

தம்மிடம் தஞ்சமடைந்திருந்த மன்னரைக் கொண்டு, தமக்குச் சார்பான கடிதமொன்றை இந்நாட்டு ஆளுநருக்கு அனுப்புவதற்கான ஏற்பாடு ஒன்றைச் செய்து ஒல்லாந்து மன்னன், இங்கிலாந்தின் கியூ மாளிகையிலிருந்து எழுதியமையால் அது 'கியூ கடிதம்' எனப்பட்டது. 'ஒல்லாந்தர் வசமிருந்த இலங்கையின் பிரதேசங்கள், பிரான்ஸியரின் கைவசமாவதைத் தடுக்க, ஆங்கிலேயப் படைகளை அப்பிரதேசங் களுக்கு அனுமதிக்கும்படி" அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. 1795 பெப்பிரவரி மாதம் இந்நாட்டு ஒல்லாந்த ஆளுநரான பன் எங்கல் பெக்கிற்கு அக்கடிதம் கிடைக்கப் பெற்றது. என்றாலும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டவாறு, தமது கோட்டைகளினுள் ஆங்கிலேயப் படையைப் பிரவேசிக்கச் செய்வதற்கு ஆளுநர் பின்வாங்கினார். இதனால் 1795 ஆகஸ்ட் மாதத்தில் ஆங்கிலேயரால் ஒல்லாந்தர் வசமிருந்த திருகோணமலைக் கோட்டை தாக்கப்பட்டது. இத்தாக்குதலால் ஒல்லாந்தர் நிபந்தனையற்ற விதத்தில் அடிபணிந்தனர்.

திருகோணமலை ஆங்கிலேயர் வசமானதன் பின்னர் அக்காலத்தில் ஒல்லாந்தர் வச மிருந்த மட்டக்களப்பு, முல்லைத்தீவு, பருத்தித்துறை, யாழ்ப்பாணம், மன்னார் உட்பட கோட்டைகள் பலவும் குறுகிய காலத்தில் ஆங்கிலேயர் வசமாகின. 1796 பெப்பிரவரி மாதமளவில் கொழும்பு, காலி கோட்டைகளும் ஆங்கிலேயர் வசமா கின. இதனால் ஒல்லாந்தர் வசமிருந்த இலங்கையின் அனைத்துப் பிரதேசங்களும் ஆங்கிலேயர் கைவசமாயின. ஒல்லாந்தருக்கு மேலும் நட்டம் ஏற்படாத விதமாக பொது உடன்படிக்கையின் கீழ், அமைதியான முறையில் இந்நாட்டிலிருந்து வெளி யேறிச் செல்வதற்கான ஒப்பந்தம் ஒன்று பெப்பிரவரி 16 ஆந் திகதி கையொப்பம் இடப்பட்டது. இத்தோடு ஒல்லாந்தர் வசமிருந்த இந்நாட்டு கரையோரப் பிரதேசங் கள். ஆங்கிலேயக் கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனியின் ஆட்சியின் கீழ் வந்தது.

1802 ஆம் ஆண்டில் அதுவரை ஆங்கிலேய கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனியின் நிருவாகத்திலிருந்த இந்நாட்டின் கரையோரப் பிரதேசங்கள் முடிக்குரிய குடியேற்ற நாடாக்கப்படுதல். 

போர்த்துக்கேயரும் ஒல்லாந்தரும் இந்நாட்டின் கரையோரப் பிரதேசத்தை ஆட்சி செய்தபோது, நிருவாக நடவடிக்கைகளில் இயன்றளவு சுதேச உத்தியோகத்தர்களையும் பயன்படுத்திக் கொண்டனர். என்றாலும் ஆங்கிலேய வர்த்தகக் கம்பனிக்கு அது தொடர்பான விளக்கம் இருக்கவில்லை. இதனால் ஆங்கிலேயர் தம்வசமாகிய பிரதேசங்களில் இந்தியாவில் சென்னையில் இருந்து வரவழைத்த அதிகாரிகளைக் கொண்டு நிருவாகத்தை நடத்திச் சென்றனர். 1796 - 1798 வரை இந்நிருவாக முறை காணப்பட்டது.

சென்னை நிருவாகத்தினால் இலங்கையின் கரையோரப் பிரதேசத்தை நிருவகிக்க ( ரெசி டன்) வதிவிடப் பிரதிநிதி ஒருவர் நியமிக்கப்பட்டார். அவரால் வரி வசூலிப்பதற்கு உதவிப் பரிசோதகர்கள் பலர் நியமிக்கப்பட்டனர். இவர்கள் கலெக்டர் எனப்பட்டனர். இவர்களின் நிருவாக மையம் கச்சேரி எனப்பட்டது. இவ்வாறே இலங்கையில் கச்சேரி முறை ஆரம்பிக்கப்பட்டது. கலெக்டர்களுக்கு உதவியாக மேலும் அதிகாரிகள் பலர் நியமிக்கப்பட்டிருந்ததோடு அவர்கள் அவுமில்தார்கள் எனப்பட்டனர். இவர்களின் உதவிக்கு மேலும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். இவ்வதிகாரிகள் அனைவரும் கலெக்டர்மாரின் மேற்பார்வையின் கீழ் வரிவசூலிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

ஆங்கிலேய வர்த்தகக் கம்பனியின் நிருவாகத்தின் கீழ் முதலியார் எனப்பட்ட சுதேச உத்தியோகத்தர்கள் கவனிப்பாரற்று விடப்பட்டனர். மேலே குறிப்பிட்ட பதவிகளுக்குத் தேவையானோர் சென்னையில் இருந்து இந்நாட்டிற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். இவர்களுக்கு இந்நாட்டின் மொழி, கலாசாரம், சம்பிரதாயங்கள் போன்றவற்றில் அனுபவம் ஏதும் இருக்கவில்லை. அவ்வாறான அதிகாரிகள் குழுவினரிடம் சிவில் நிர்வாக, நீதி நடவடிக்கைகள் போன்ற பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டிருந்தபடியால் நிர்வாக அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலிருந்த இடைவெளி அதிகரித்துச் சென்றது.

இலங்கையின் கரையோரப் பிரதேசத்தைத் தமது கட்டுப்பாட்டின்கீழ்க் கொண்டு வருவதற்கு, ஆங்கிலேயக் கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனி பெருந்தொகைப் பணத்தைச் செலவிட நேர்ந்தது. அப்பணத்தை விரைவில் ஈட்டிக் கொண்டு, இயன்றளவு இலாபத்தைச் சம்பாதித்துக் கொள்வதே இவர்களின் நிருவாகத்தில் காணப்பட்ட வெளிப்படையான பண்பாக இருந்தது. இதற்காக வர்த்தகக் கம்பனி யால் கரையோரப் பிரதேசங்களில் புதிய வரிகள் பலவும் விதிக்கப்பட்டன. அத்தோடு அவற்றை பணமாகச் செலுத்துவதிலும் பொது மக்கள் இடர்பாடுகளை எதிர்நோக்கினர். புதிதாக விதிக்கப்பட்ட தெங்கு வரி இதற்கு உதாரணமாகும். இதில் 10 தென்னை மரங்களுக்கு மேல் உள்ள காணிகளிலிருந்து ஒரு தென்னை மரத்திற்கு ஒரு வெள்ளிக் காசு வீதம் வரி செலுத்தவேண்டியிருந்தது. தெங்கு அறுவடையை கருத்திற்கொள்ளாது வரி வசூலிக்கப்பட்டதாலும் அவ்வரியைப் பணமாகச் செலுத்த வேண்டியிருந்ததாலும் கரையோரப் பிரதேசங்களில் குழப்ப நிலை ஏற்பட்டது. புதிய ஆட்சியின்மீது கொண்டிருந்த மக்களின் வெறுப்புணர்வு குறுங்காலத்தில் கிளர்ச்சி ஒன்றாக உருவானது. 1797 இல் ஆங்கில கிழக்கிந்திய வர்த்தக கம்பனியின் ஆட் சிக்கு எதிராக உருவான இக்கலவரம் கரையோரப் பிரதேசம் பலவற்றிலும் பரவியது. பெரு முயற்சியின் பின்னர் ஆங்கிலேயர் கலவரத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இந்நாட்டின் பிரித்தானிய ஆட்சியின் ஆரம்பத்திலேயே பொது மக்களின் எதிர்ப்பு இருந்ததை இக்கலவரம் தெளிவாகக் காட்டியது. இதனால் கரையோரப் பிரதேசத்தின் நிலையை ஆராய்ந்து பார்த்து, தேவையான சீர்திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்கு ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டது. பிரிகேடியர் ஜெனரல் டீ. மியூரன் தலைமையில் நியமிக்கப்பட்ட இக்குழு மியூரன் ஆணைக்குழு எனப்பட்டது. மியூரன் குழுவின் பரிந்துரைகளாவன,

வரி வசூலிப்பதில் ஈடுபட்டிருந்த சென்னை உத்தியோகத்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டு, அவர்களுக்குப் பதிலாக சுதேச உத்தியோகத்தர்களை ஈடுபடுத்துதல்.

தெங்கு வரி உட்பட புதிய வரிகள் நீக்கப்படுதல்.

வரி வசூலித்தலுக்கும் நீதி வழங்குவதற்கும் வெவ்வேறான உத்தியோகத்தர்கள் அமர்த்தப்படுதல்.

ஒல்லாந்தரின் நீதிமன்ற முறையை மீண்டும் தாபித்தல்.

1798 ஒக்டோபர் மாதத்திலிருந்து இந்நாட்டுக் கரையோரப் பிரதேசங்களில் ஆங்கிலேயர் நிருவாகத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டன. இதற்கமைய நிர்வாகம் மற்றும் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பிரித்தானிய அரசால், ஆளுநர் ஒருவர் நியமிக்கப்பட்டார். முதலாவது ஆளுநராக பிரட்றிக் நோர்த் இலங்கைக்கு வந்தார். கரையோரப் பிரதேசங்களைக் கைப்பற்றும்போது வர்த்தகக் கம்பனிக்கு செலவான பணத்தை மீளப் பெற்றுக் கொள்வதற்காக வரிவசூலிக்கும் உரிமை தொடர்ந்தும் வர்த்தகக் கம்பனிக்கே வழங்கப்பட்டது.

அரசியல் நடவடிக்கைகள் பிரித்தானிய அரசாங்கத்தாலும் பொருளாதார நடவடிக் கைகள் வர்த்தகக் கம்பனியாலும் மேற்கொள்ளப்பட்ட இந்நிருவாக முறை இரட்டை ஆட்சிமுறை எனக் குறிப்பிடப்பட்டது. 1798 இலிருந்து 1802 வரை இவ்வாட்சி முறை நிலவி வந்தது. இரட்டை ஆட்சியில் ஆளுநர் பிரித்தானிய முடிக்குப் பொறுப்புச் சொல்ல வேண்டியவராக இருந்ததோடு, வர்த்தகக் கம்பனியின் பணிப்பாளர் சபையின் ஆலோசனைகளையும் பின்பற்ற வேண்டியவராக இருந்தார். ஆளுநர் நோர்த்திற்கு வர்த்தகக் கம்பனி உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்பு போதிய அளவில் கிடைக்கவில்லை. இரட்டை ஆட்சியில் காணப்பட்ட இவ்வாறான குறைபாடுகளால் 1802 இல் அம்முறையை முடிவுக்குக் கொண்டு வந்து இந்நாட்டின் கரையோரப் பிரதேசம் முடிக்குரிய குடியேற்ற நாடாக்கப்பட்டது. அதிலிருந்து பிரதேச நிருவாக நடவடிக்கைகள் முழுமையாக பிரித்தானிய அரசின் கீழ் கொண்டுவரப்பட்டது.

1815 ஆம் ஆண்டில் கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றுதல்.

1798ஆம் ஆண்டில் இராஜாதி இராஜசிங்க மன்னன் மரணிக்கும்போது கண்டி அரசியல் சிம்மாசனத்திற்கு உரிமையாளர்களாக நாயக்கர் இளவரசர்கள் இருவர் இருந்துள்ளதாகத் தெரிய வருகின்றது. ஒருவர் கண்ணுசாமி மற்றவர் முத்துசாமி ஆவர். அப்போது கண்டி அரசின் தலைமைப் பிரதானியான பிலிமத்தலாவையின் ஏற்பாட்டிற்கமைய கண்ணுசாமி இளவரசன் ஸ்ரீ விக்கிரம இராஜசிங்க என்னும் நாமத்துடன் மன்னராக்கப்பட்டார். முத்துசாமி இளவரசர், பாதுகாப்புக்கருதி ஆங்கிலேயரிடம் தஞ்சம் அடைந்தார்.

ஆங்கிலேயர் கரையோரப் பிரதேசங்களில் தமது ஆட்சியை ஆரம்பித்து சிறிது காலம் செல்வதற்கு முன்னர், கண்டி அரசின் மீதும் தமது அவதானத்தைச் செலுத்த ஆரம்பித்தனர். பிரட்றிக் நோர்த் ஆளுநரின் கொள்கை இதில் முக்கியமானதாகும். ஆளுநர் நோர்த் ஆரம்ப காலத்தில் தமக்குச் சார்பான ஒப்பந்தம் ஒன்றிற்கு கண்டி மன்னரை இணங்கச் செய்வதற்கு முயற்சித்தார். அதற்கமைய 1800 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தளபதி மெக்டோவலின் தலைமையில் கண்டிக்கு தூதுக்குழு ஒன்றை அனுப்புவதற்கான ஏற்பாடுகளை ஆளுநர் நோர்த் மேற்கொண்டார். 1164 இராணுவ வீரர்களையும் 8 பீரங்கிகளையும் கொண்ட இத்தூதுக் குழுவின் உரு 2.4. ஸ்ரீ விக்கிரம இராஜசிங்க மன்னன் நோக்கம் ஆங்கிலேயரின் படைபலத்தைக் காட்டி, தமக்குச் சார்பான ஒப்பந்தம் ஒன்றிற்கு மன்னனை இணங்கச்செய்து கொள்வதாகும். என்றாலும் படை ஒன்றுடன் பீரங்கிகளையும் எடுத்துக்கொண்டு கண்டியினுள் பிரவேசிப்பதற்கு மன்னன் இணங்கவில்லை. இதனால் படையின் பெரும் பகுதி யையும் பீரங்கிகளையும் இடையில் நிறுத்தி விட்டு, தூதுக் குழுவினர் மட்டும் மன்னனைச் சந்திக்க நேர்ந்தது. மெக்டோவல் கண்டிக்குச் சென்று மன்னனுடனும் பிரதானிகளுடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டாலும் ஆங்கிலேயரின் நிபந்தனை களை ஏற்றுக் கொள்வதற்கு அரசன் சிறிதும் விரும்பவில்லை. ஆகையால் அத்தூதுப் பயணம் எவ்வித நல்ல பெறுபேற்றையும் அளிக்கவில்லை.

கண்டி அரசைத் தமது செல்வாக்கிற்குள் கொண்டு வர முடியாது போனமையால், ஆளுநர் நோர்த் மனச் சஞ்சலமுற்றார். கண்டியில் சுதந்திரமான அரசொன்று இருப்பது, கரையோர ஆங்கிலேய ஆட்சிக்கு ஆபத்தானது என அவர் கருதினார். இதனால் கரையோரப் பிரதேசங்களின் பாதுகாப்பிற்குப் படையினரை வைத்திருப்பதற்கும் மேலாக உள்நாட்டு பிரதேசத்தின் எல்லைகளைப் பாதுகாக்கப் படையினரை வைத்திருப்பதற்குப் பெருமளவு பாதுகாப்புச் செலவை மேற்கொள்ள வேண்டிய தேவை ஆங்கிலேயருக்கு ஏற்பட்டது. கரையோரப் பிரதேசத்து மக்களும்கூட கண்டி மன்னரையே தமது மன்னராகக் கருதுவதனாலும் அப்பிரதேசங்களில் கிளர்ச்சி ஏற்படுகையில் அவர்களுக்கு மன்னர் ஆதரவு வழங்குவதும் ஆங்கிலேயர் எதிர்நோக்கிய இன்னொரு பிரச்சினையாகும். கண்டி அரசு சில வேளையில் தமது எதிரியான பிரான்ஸியரிடமிருந்து உதவி கோரினால் அது தமது ஆட்சிக்கு ஆபத்தாக அமையும் என்பதை ஆங்கிலேயர் தெரிந்துவைத்திருந்தனர். அத்தோடு தனது தலைமையகமான கொழும்பிலிருந்து இராணுவத் தலைமைப் பீடமான திருக்கோணமலையுடன் தரை வழிப் பாதையால் தொடர்புகளை வைத்திருப்பதற்கான தேவை ஆங்கிலேயருக்கு இருந்தது. இவ்விரு நகரங்களுக்கும் இடையே தரைவழிப் போக்குவரத்தை மேற்கொள்வதற்கு கண்டி மன்னனுடைய ஆட்சிப் பிரதேசங் களைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. இதற்காகப் பாதை ஒன்றை நிர்மாணிக்க வேண்டிய தேவை பிரித்தானியாவிற்கு ஏற்பட்டது. இதற்கு மன்னனின் அனுமதி கிடைக்கவில்லை. இவ்வாறான காரணங்களினால், கண்டி அரசைத் தமது செல்வாக் கினுள் வைத்திருப்பதற்கோ அல்லது கைப்பற்றிக் கொள்வதற்கோ வேண்டிய தேவை ஆங்கிலேயருக்கு இருந்தது.

1803ஆம் ஆண்டு கண்டிப் படையெடுப்பு

மெக்டோவலின் தூதுப் பயணம் எதிர்பார்த்த பலனை அடையாததால் ஆளுநர் நோர்த் கண்டிக்குப் படையெடுக்கத் தீர்மானித்தார். இதற்கமைய 1803 ஜனவரி - பெப்பிரவரி மாதங்களில் கொழும்பிலிருந்தும் திருகோணமலையில் இருந்தும் இரண்டு படையணியினரை கண்டிக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்தார். மெக்டோவலின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இவ்வாக்கிரமிப்பின்போது பெப்பிரவரி 21 ஆந் திகதி ஆங்கிலேயப் படை கண்டி நகரினுள் பிரவேசித்தது. ஸ்ரீ விக்கிரம இராஜ சிங்க மன்னனும் நகர மக்களும் பாதுகாப்பு உத்தியாக நகரத்தைக் கைவிட்டுத் தம்மை ஆயத்தப்படுத்திக் கொள்வதில் ஈடுபட்டனர். ஆங்கிலேயரால் கண்டிக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளவரசன் முத்துசாமி மன்னராகப் பிரகடனம் செய்யப்பட்டார். என்றாலும் முத்துசாமிக்கு எவ்வித ஆதரவையும் வழங்காத கண்டி மக்கள், ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கனைச் சூழ ஒன்று கூடி யுத்தத்திற்கான ஆயத்தங்களில் ஈடுபட ஆரம்பித்தனர்.

மழைக் காலம் ஆரம்பமானதுடன், ஆங்கிலப் படையினரிடையே நோய்கள் பரவ ஆரம்பித்தன. கரையோரப் பகுதியில் இருந்து கண்டியுடனான தொடர்பு வழிகளைக் கண்டியினர் தடைப்படுத்தியதனால் உணவு, குடிபானங்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட் டது. அத்தோடு கொழும்புடனான தகவல் தொடர்புகளுக்கும் இடைஞ்சல் நேர்ந்தது. இதனால் ஆங்கிலேயர் எதிர்பாராத நிலை ஒன்றிற்கு முகங்கொடுக்க வேண்டி இருந்தது. இதற்கிடையில் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, கண்டிப் படையினர். மேற்கொண்ட தாக்குதல்களால் ஆங்கிலேயப் படையினருக்குப் பெருந்தோல்வி ஏற்பட்டது. தமது பொம்மை ஆட்சியாளனான முத்துசாமி இளவரசன் கொல்லப்பட்டதிலிருந்து ஆங்கிலேயர் அடைந்த தோல்வியின் அளவு வெளிப்படுத்தப்பட்டது.

இப்படையெடுப்புக்கு முன்னர் ஆளுநர் நோர்த்துக்கு கண்டி இராச்சியம் தொடர்பான சரியான அறிவோ அனுபவமோ இருக்கவில்லை. என்றாலும் தனது ஆக்கிரமிப்பு தோல்வியில் முடிவடைந்ததுடன் கண்டி அரசு பலமானது என்றும் இவ்வாறான ஆக்கிரமிப்புகளால் அதனை வெற்றி கொள்ள முடியாது என்றும் விளங்கிக் கொண்டார். இதனால் 1803 படையெடுப்பின் பின்னர் கண்டியுடன் மிகவும் பொருத்தமான தந்திரோபாயக் கொள்கை ஒன்றைச் செயற்படுத்துவதற்கு ஆங்கிலேயர் முனைந்தனர்.

1815 கண்டி மீதான படையெடுப்பு

1805 ஆம் ஆண்டில் ஆளுநர் நோர்த்தின் பதவிக் காலம் முடிவடைந்த பின்னர் தோமஸ் மெயிட்லண்ட், இந்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். நோர்த்தைப் போன்று, கண்டி இராச்சியத்தை ஆக்கிரமிக்கும் கொள்கையைக் கைவிட்ட அவர், எதிர்காலத்தில் கண்டி இராச்சியத்தை ஆக்கிரமிப்பதற்கான பின்னணியைத் தோற்றுவிப்பதற்கான தந்திரமான கொள்கையை மேற்கொண்டார். இதற்காக அவர் திறமைமிக்க ஜோன் டொயிலி என்ற அரச உத்தியோகத்தரைப் பயன்படுத்திக் கொண்டார்.

இவர் கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பட்டதாரி ஆவார். இலங்கைக்கு வந்த அவர், ஏனையவர்களைப் போல தேசிய கலாசாரத்தை இழிவுபடுத்தாமல் விளங்கிக் கொள்வதற்காக அவற்றைக் கற்றுக் கொண்டார். அவர், கரதொட்ட தர்மராம பௌத்த பிக்குவிடம் சிங்கள மொழி பயின்றார். டொயிலி, கஜமன் நோனா என்ற புகழ்பெற்ற பெண் கவிஞருடன் போட்டிக்குக் கவி பாடும் அளவுக்குத் தேர்ச்சி பெற்றிருந்ததாக வாய்மொழிக் கதைகள் கூறுகின்றன. தேசிய பழக்கவழக்கங்கள் தொடர்பாகச் சிறந்த தேர்ச்சியைப் பெற்றிருந்த டொயிலி, வெற்றிலை மெல்லுவதற்குக் கூடப் பழக்கப்பட்டிருந்தார். இதனால் பொதுமக்களிடம் மட்டுமல்லாமல் கண்டிப் பிரதானிகளிடமும் செல்வாக்குப் பெற்றவராகத் திகழ்ந்தார். தனது திறமைகளைப் பயன்படுத்திக் கொண்ட அவர் கூர்ந்த அறிவுடன் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த பணியை வெற்றிகரமாக நிறைவேற்றினார்.

ஜோன் டொயிலி, கண்டிப் பிரதானிகளுடன் இரகசியத் தொடர்புகளைக் கொண்டி ருந்து அவர்களை ஆங்கிலேயருக்கு சார்பானவர்களாய் மாற்றிக் கொள்வதில் அதீத ஈடுபாடு காண்பித்தார். அத்தோடு வியாபாரிகள், அறிஞர்கள், சமய குருமார் போன்று வேடம் பூண்ட ஒற்றர்களைக் கண்டிக்கு அனுப்பி இராச்சியத்தின் உள்நாட்டு நடவடிக்கைகள் தொடர்பான சகல விடயங்களையும் சேகரித்துக் கொள்வதில் அவர் ஈடுபட்டார். இதனால் கண்டி அரசின் உள்நாட்டுப் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஏனைய எந்தவொரு ஐரோப்பியரும் அறிந்திராத விடயங்களைத் தெரிந்து வைத்திருக்கும் திறமையாளராக அவர் காணப்பட்டார். மெயிட்லண்டும் டொயிலியும் உருவாக்கி வைத்திருந்த தமக்குச் சார்பான சூழ்நிலையைப் பயன்படுத்தி, கண்டியை கைப்பற்றுவதற்கான எஞ்சிய நடவடிக்கைகளை மேற்கொண்டவர் அடுத்து பதவிக்கு வந்த ரொபட் பிரௌன்றிக் ஆளுநராவார்.

கண்டி இராச்சியம் ஆங்கிலேயருக்கு அடிமைப்படுவதற்கு ஆங்கிலேயரின் தந்திரமான செயற்பாடுகள் மட்டும் காரணமாக இருக்கவில்லை. ஸ்ரீ விக்கிரம இராஜசிங்க மன்னனின் ஆட்சிக் காலத்தில் இவ்விராச்சியத்தின் வீழ்ச்சியைத் துரிதப்படுத்துவதற் கான பல காரணிகள் உருவாகி இருந்தன. அனுபவம் குறைந்த வாலிபனாக அரசன் இருந்தபடியால், நாயக்க உறவினரின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு செயற்பட்டமை யையும் அவதானிக்க முடிந்தது. கண்டியின் இறுதிப் பிரதம பிரதானிகள் இருவரும் மன்னருடன் முரண்பட்டவர்களாய் இருந்தனர். தன்னை மன்னனாக்கிய, பிலிமத்த லாவை என்ற பிரதம பிரதானியுடன் மோதல் உருவாகி, அதன் விளைவாக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதனை அடுத்து அப்பதவிக்கு நியமிக்கப்பட்ட எஹலபொல என்ற பிரதம பிரதானியுடனும் முரண்பாடுகள் தோன்றத் தொடங்கின.

ஸ்ரீ விக்கிரம இராஜசிங்க மன்னனின் ஆட்சிக் காலத்தில் கண்டிப் பிரதானிகளிடை யேயும் பேதங்கள் வளர்ச்சியுற்றிருந்தன. இதனால் பெரும்பாலான பிரதானிகள் அரசனுக்கு எதிராகச் செயற்படும் நிலை ஒன்று காணப்பட்டது. இதற்கு முன்னர் ஐரோப்பியர், கண்டி மீது ஆக்கிரமிப்பை மேற்கொண்ட சந்தர்ப்பங்களில் பொது மக்களை ஒன்று திரட்டி அரசையும் அரசனையும் பாதுகாக்கும் பணிக்குத் தலைமை தாங்கி செயற்பட்டவர்கள் இப்பிரதானிகளேயாவர்.

அரசனால் பிக்குகள் பலர் கொலை செய்யப்பட்டமையால் அரசனுடன் பிக்குகளுக்கு இருந்த நல்லுறவு பாதிப்புற்றிருந்தது. ஸ்ரீ விக்கிரம இராஜசிங்க மன்னனின் இறுதிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சில நடவடிக்கைகளால் அரசனுக்கும் பொது மக்களுக் கும் இடையே நிலவிய உறவு சீர்குலைந்திருந்தது. அதற்கான முக்கிய காரணம் போகம்பரை வாவியை விஸ்தரித்தல், பத்திரிப்புவைக் கட்டுதல் போன்ற கண்டி மாநகரை அலங்கரிக்கும் அரச பணிகளில் ஈடுபட்டிருந்த சப்ரகமுவ, நான்கு கோரளை, ஏழு கோரளை மக்கள் இரவு வேளையில் கண்டி நகரில் தங்குவதற்கு மன்னர் தடை விதித்திருந்தார். இதனால் அம்மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாயினர்.

மன்னனுக்கு எதிராக சப்ரகமுவப் பிரதேசத்தில் ஏற்பட்ட கலவரத்தை இலகுவாக கட்டுப்படுத்த முடிந்தாலும் அதில் நூற்றுக்கு மேற்பட்ட கலவரக்காரர்கள் மரணித்தனர். இக்கலவரத்தின் பின்னர் எஹல பொலயைக் கைதுசெய்வதற்கு முடியாமல் போனமையால், கண்டி நகரில் இருந்த அவரது மனைவி மக்களுக்குக் கொடூரமான முறையில் மரண தண்டனை விதிக்கப்பட்டதாக வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. மனிதாபிமானமற்ற இவ்வாறான நடத்தைகளால் 1815 ஆம் ஆண்டாகும்போது ஸ்ரீ விக்கிரம இராஜசிங்க மன்னருக்கும் பொது மக்களுக்கும் இடையில் பெரும் இடைவெளி ஒன்று உருவாகி இருந்தது.

ஐரோப்பிய இனத்தவர்கள் ஆக்கிரமிப்புச் செய்த எல்லாச் சந்தர்ப்பங்களிலும் கண்டிப் பிரதானிகளும் மக்களும் உயிரைக் கொடுத்தேனும் மன்னரைப் பாதுகாப்பதற்கு முன்வந்தனர். கண்டியைப் பாதுகாத்த இம்மனித சக்தி, ஸ்ரீ விக்கிரம இராஜ சிங்க மன்னரின் நடத்தைகளால் அவருக்கு எதிராக அணிதிரண்டது. இதனால் தமது நாட்டினுள்ளேயே மன்னர் பாதுகாப்பற்றவரானமை ஆங்கிலேயருக்குச் சார்பான ஒன்றாக இருந்தது. இந்நிலையைத் தனக்குச் சார்பாகப் பயன்படுத்திக் கொண்ட ஆளுநர் பிரௌன்றிக், 1815 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் கண்டி இராச்சியத்திற்குப் படையெடுத்தபோது, வழக்கமான முறையில் மன்னரைப் பாதுகாத்துக் கொள்வதற்கு கண்டி மக்கள் முன்வரவில்லை. இவ்வாக்கிரமிப்பு மக்களின் நலனுக்காகவே மேற் கொள்ளப்படுவதாகவும் கண்டி இராச்சியத்தின் எதிரி ஆங்கிலேயரல்ல, ஸ்ரீ விக்கிரம இராஜசிங்க மன்னரேயாவார் என்ற செய்திகளை மக்களிடையே பரப்புவதற்கு ஆளுநர் பிரௌன்றிக் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.

ஆங்கிலேயர் கண்டியை ஆக்கிரமிக்கும்போது, ஸ்ரீ விக்கிரம இராஜசிங்க மன்னர் கண்டி நகரைக் கைவிட்டு, பாதுகாப்பான இடமொன்றிற்குச் சென்று தலைமறைவாக இருந்தார். மெதமகநுவரையில் இருந்த அவ்விடத்தை கண்டி மக்களே சுற்றி வளைத்தனர். 1815 பெப்பிரவரி 18 ஆந் திகதி மக்கள் மன்னரையும் மகாராணியையும் பிடித்து ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தனர். இவ்வாறு மன்னர் கைதுசெய்யப்பட்ட மையால் ஏனைய எந்தவொரு ஐரோப்பியரும் கண்டியில் அடையப் பெறாத வெற்றியை ஆங்கிலேயர் பெற்றுக் கொண்டனர். என்றாலும் மன்னர் கைதுசெய்யப்பட்டதுடன் மலைநாடு அடிமைப்பட்டுவிடும் என்று ஆங்கிலேயர் நம்பத் தயாராக இருக்க வில்லை. கண்டிப் பிரதானிகள் ஆங்கிலேயருக்கு வழங்கிய ஒத்துழைப்பினாலேயே மன்னரைக் கைதுசெய்ய முடிந்தது. ஆகையால் அவர்களுடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்வதன் மூலம் கண்டி இராச்சிய வெற்றியை முழுமைப்படுத்திக் கொள் வதற்கு ஆங்கிலேயர் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

1815 கண்டி உடன்படிக்கை 

1815 மார்ச் 2ஆந் திகதி கண்டி அரச சபை (மகுல்மடுவ) மண்டபத்தில் ஆங்கிலேய ஆட்சியின் சார்பாக ஆளுநர் பிரௌன்றிக் கண்டி மக்கள் சார்பாக அதன் பிரதானி களுக்கும் இடையே ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்தானது. அது கண்டி உடன்படிக்கை எனப்படுகின்றது.

அரச சபையில் கூடியிருந்தோருக்கு உடன்படிக்கையின் வாசகங்களை வாசித்து விளக்கிய பின்னர், அவர் கையொப்பம் இடுவதற்கு முன்னர் சிங்கக் கொடியைக் கீழிறக்கி, ஆங்கிலேயக் கொடியை ஏற்றியபோது, வாரிய பொல ஸ்ரீ சுமங்கல தேரர், ஆங்கிலக் கொடியைக் கீழிறக்கி சிங்கக் கொடியை மீளவும் ஏற்றியதாகக் கருத்தொன்று நிலவுகின்றது. சில தகவல்களின் பிரகாரம் ஆளுநர் பிரௌன்றிக்கும் பிரதானிகள் சிலரும் உடன்படிக்கையில் கையொப்பம் இட்டிருப்பது மார்ச் 10 ஆந் திகதியாகும்.

கண்டி உடன்படிக்கை என்பது கண்டி இராச்சியம் பிரித்தானியருக்கு அடிமைப் பட்டமையை உத்தியோகபூர்வமாக ஒப்புக் கொண்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஓர் ஆவணமாகும். இவ்வுடன்படிக்கையின் முதல் மூன்று வாசகங்களும் இராஜசிங்க மன்னனுக்கும் அவரது உறவினர்களுக்கும் கண்டி இராச்சியம் சிம்மாசனத்தின் மீதிருந்த சகல உரிமைகளையும் நீக்கிவிட்டது. நான்காம் வாச கம் கண்டி இராச்சிய ஆங்கிலேயரின் ஆட்சிக்குட்பட்டது என்பதுடன் மலைநாட்டு பிரதானிகளின் உரிமைகளும் சலுகைகளும் பாதுகாக்கப்படும் வண்ணம் ஆங்கிலேயர் ஆட்சி புரிவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐந்தாம் வாசகத்தில் சாசனமும் கிறிஸ்தவ சமயமும் தடையின்றிச் செயற்படுவதுடன் புத்த பிக்குகளும் விஹாரைகளும் தேவால யங்களும் பாதுகாக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. ஏனைய வாசகங்களில் கண்டி இராச்சிய நீதி முறைமையின் செயற்பாடு விவரிக்கப்பட்டுள்ளது.

கண்டி உடன்படிக்கை கையொப்பமானதுடன், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பாதுகாப்புடன் திகழ்ந்த இந்நாட்டின் சுதந்திரம் முற்றிலும் இழக்கப்பட்டு இலங்கை முழுமையாக அந்நியராட்சிக்கு உட்பட்ட நாடாக மாறியது. ஒப்பந்தத்தின் மூலம் கிடைத்த அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்ட ஆங்கிலேயர் மலைநாட்டுப் பிரதேச நிருவாகத்திற்காக ஆளுநரின் வதிவிடப் பிரதிநிதியாக ஜோன் டொயிலி என்பவரை நியமித்தனர். அவரது அலுவலகத்தை கண்டி நகரில் நிறுவி, அவருக்குத் துணையாக அதிகாரிகள் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டது. பிரித்தானியர் ஆட்சியின்கீழ் பணியாற்ற விரும்பிய பிரதானிகளுக்கு ஆங்கிலேய ஆட்சியால் பதவிகள் வழங்கப் பட்டன. இதற்கமைய மூன்று நூற்றாண்டுகளுக்கு மேலாக சுயாதீன ஆட்சிக்குப் பழக்கப்பட்டிருந்த கண்டி மக்கள் வெளிநாட்டு ஆட்சியாளர் குழுவினரால் மேற் கொள்ளப்பட்ட ஆட்சி முறையின் கீழ் வாழ நேரிட்டது.

பிரித்தானியருக்கு எதிரான போராட்டங்கள்

1818 சுதந்திரப் போராட்டம்

1815 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் கண்டியைக் கைப்பற்றியமையால், ஸ்ரீ விக்கிரம இராஜசிங்க மன்னரின் கொடூர ஆட்சியிலிருந்து கண்டி மக்கள் விடுவிக்கப்பட்டாலும் அதன் பின்னர் ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்ட ஆட்சி முறை தொடர்பாக அவர்களிடம் வரவேற்பு இருக்கவில்லை. மூன்று நூற்றாண்டுகளாக போர்த்துக்கேய, ஒல்லாந்தர் முதலிய ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக உயிர்த் தியாகத்துடன் கட்டிக்காக்கப்பட்ட சுதந்திரம் தற்போது தம்மிடம் இல்லாதிருப்பதை அதிக காலம் செல்வதற்கு முன்னரே கண்டி மக்கள் விளங்கிக் கொண்டனர். இதனால் 1818, 1848 ஆம் ஆண்டுகளில் தாம் பழக்கப்பட்டிருந்த போராட்ட முறைகளைக் கையாண்டு ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக எழுச்சியுற்றனர். ஆங்கிலேயர்களால் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சி எனக் குறிப்பிடப்பட்ட இவ்வெழுச்சி, சுதேசிகளின் பார்வையில், அந்நியர்களைத் துரத்தி, தாம் இழந்த சுதந்திரத்தை மீளவும் அடைந்து கொள்ள மேற்கொள்ளப்பட்ட எத்தனமாகக் கருதப்படுகின்றது. ஆகையால் அவை ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சுதந்திரப் போர்களாகும். இப்போது நாம் 1818 ஆம் ஆண்டுப் போராட்டம் தொடர்பாக ஆராய்ந்து பார்ப்போம்.

1818 சுதந்திரப் போராட்டம்

1817 செப்டெம்பர் மாதத்திலிருந்து 1818 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வரை கண்டியில் நிலவிய ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக மக்கள் ஆயுதபாணிகளாகக் கிளர்ந்தெழுந்தமை முதலாவது சுதந்திரப் போராட்டம் எனப்படுகின்றது. கண்டியில் ஆங்கிலேயர் ஆட்சி உருவாகி மூன்று ஆண்டுகள் செல்வதற்கிடையில் பிரதானிகளும் சாதாரண மக்களும் இவ்வாறான போராட்டத்திற்கு முன்வந்ததற்கு, ஆங்கிலேய ஆட்சியில் ஏற்பட்டிருந்த கடும் வெறுப்பே காரணமாகும். 1818 போராட்டத்திற்குப் பொதுமக்கள் தூண்டப்பட்டதற்குக் காரணங்கள் பல காணப்பட்டன.

1818 சுதந்திரப் போராட்டத்திற்கான காரணங்கள்

சுதந்திரத்தை இழந்தமையும் அரசன் இல்லாமையும் பற்றிய மனவேதனை.

கரையோரப் பகுதிகளில் போர்த்துக்கேய, ஒல்லாந்த ஆட்சி நிலவியபோதும் தம்முடைய ஆட்சியில் சுதந்திரத்தை அனுபவித்து வந்த கண்டி மக்கள் 1815 ஆம் ஆண்டைத் தொடர்ந்து தமக்குப் பழக்கப்பட்டிருந்த ஆட்சி முறை கைவிட்டுப் போனமையால் வேதனையடைந்தனர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

நாடு அடிமைப்பட்டதன் பின்னர் பிரித்தானிய அரசரே கண்டி இராச்சியத்திற்கும் அரசர் எனப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தாலும் மக்கள் ஒருபோதும் அவரைக் கண்டதில்லை. கண்டி மக்களுக்குத் தேவைப்பட்டது ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருக்கின்ற ஒரு நாட்டிலுள்ள கண்காணாத மன்னர் அல்ல. தமது தலை நகரில் வாழந்து தமது துன்ப துயரங்களை முன்வைத்து நிவாரணம் பெறக்கூடிய மன்னர் ஒருவரேயாகும். இவ்வாறான இடத்தில் மன்னர் ஒருவர் இல்லாமையால் தாங்கள் அனாதரவானவர்கள் என்ற உணர்வு கண்டி மக்களிடையே நிலவி வந்தது. அக்காலத்தில் மலைநாட்டில் வாழ்ந்த பிக்கு ஒருவர் பாடியதாக கூறப்படும் கவிதையில் அரசர் ஒருவர் இல்லாமையால் அவர்கள் அடையும் மனச்சஞ்சலத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஐயோ எறும்புகளே! உங்களுக்கென்று அரசர் இருக்கின்றார் நாம் என்ன செய்வது? இது எங்கள் விதியா?

அரசர் ஒருவர் வாய்க்கப் பெற்றால், அன்று பாற்சோறுண்போம். ஊர்வலம் போவோம். சாது நாதத்தை முழங்குவோம்.

சமய, கலாசார, பாதுகாப்புத் தொடர்பான பிரச்சினைகள் உருவானமை.

கண்டி உடன்படிக்கையின் 5வது வாசகத்தில், பெளத்த சமயத்தைப் பாதுகாப்பதாக ஆங் கிலேயர் வாக்குறுதி அளித்திருந்தாலும் அம்மதத்தைச் சாராத வெளிநாட்டவர்களால், பௌத்தத்தைப் பின்பற்றும் அரசர் ஒருவரால் வழங்கப்படும் பாதுகாப்புக் கிடைக்கும் எனகண்டி மக்கள் நம்பத் தயாராக இருக்கவில்லை. மேலே குறிப்பிட்டுள்ள கவிதையில் அரசர் ஒருவர் கிடைக்கப் பெற்றால். ஊர்வலம் செல்லவும் சாது நாதத்தை முழங்கவும் தயாராக இருப்பதிலிருந்து, இந்நிலைமை நன்கு விளங்குகின்றது. பௌத்த குருமார் போராட்டத்திற்கு உதவியமையும் இதற்கு இன்னுமொரு உதாரணமாகும்.

வெளிநாட்டவரின் ஆட்சியில் தமது கலாசாரமும் சம்பிரதாயங்களும் அழிந்தொழிந்து போகும் என்ற பயம் மக்கள் மனதில் குடிகொண்டிருந்தது. மன்னர் ஆட்சியில் பழைய சம்பிரதாயங்களைப் பாதுகாத்தல் அரசர் ஒருவருடைய கடமையாகும். அதேபோல அரச மாளிகை, அரச சபை, நிருவாகம் என்பவை தொடர்பான பல சம்பிரதாயங்கள் காணப்பட்டன. பழைய ஆட்சியில் தத்தமது பதவிக்குத் தகுந்த ஆடை ஆபரணங்கள் அணியப்பட்டமை அவற்றின் கௌரவத்தைப் பாதுகாக்கும் வகையிலாகும்.

என்றாலும் கண்டி நகரில் காணப்பட்ட ஆங்கிலேய அதிகாரிகள் அவ்வாறான சம்பிரதாயங்களைக் கொண்டவர்கள் அல்லர். இதனால் சமய ரீதியிலும் கலாசார ரீதியிலும் ஆங்கிலேயருக்கும் கண்டியர்களுக்கும் இடையில் இடைவெளி ஒன்று உருவாகி இருந்தது. இது கண்டியர்களிடையே சுதந்திர உணர்வைத் தூண்டுவதற்கான காரணியாக அமைந்தது.

மலைநாட்டுப் பிரதானிகளுக்கு ஏற்பட்ட தாக்கம்.

1815 ஆம் ஆண்டு உடன்படிக்கைக்கேற்ப கண்டி இராச்சிய பாரம்பரிய பதவிகளை ஆங்கிலேயர் தொடர்ந்தும் பேணி வந்தாலும் பிரதானிகளின் அதிகாரமும் சமூக நிலைமையும் பாதுகாப்பானதாக இருக்கவில்லை. பிரித்தானியப் படை வீரர்கள் தமக்கு உரிய மரியாதையை வழங்குவதில்லை என்று பிரதானிகள் டொயிலியிடம் முறைப்பாடு செய்திருந்தனர். பிரதானிகளின் சம்பிரதாயபூர்வ வருமான வழிகளும் ஆங்கிலேயரால் பாதிப்புற்றிருந்தன. ஆங்கிலேயர் தெருக் கடவைகளுக்கான வரியை அகற்றியமையால், பிரதானிகள் அதன் மூலம் பெற்று வந்த வருமானத்தை இழந்திருந்தமை இதற்கு உதாரணமாகும். பிரதானிகளுக்கு பாரம்பரியமாக உரிமையாக இருந்த பதவி நிலைகளை மாற்றியமைப்பதற்கும் ஆங்கிலேயரால் இயலுமாயிருந்தது. கண்டி இராச்சியத்தின் போக்குவரத்துக் கடமைகளுக்குப் பொறுப்பாக இருந்த மடிகே முகாந்திரம் பதவிக்கு இதுவரை சிங்களவர்களே நியமிக்கப்படும் வழக்கம் இருந்து வந்தது. என்றாலும் ஆங்கிலேயர் அந்நிலைமையைக் கவனத்திற் கொள்ளாது ஹஜ்ஜி மரிக்கார் என்ற முஸ்லிம் ஒருவரை முகாந்திரம் பதவிக்கு நியமித்திருந்தனர். இதனால் ஊவா வெல்லஸ்ஸ பிரதேசப் பிரதானிகளிடையே பெரும் மனச்சஞ்சலம் ஏற்பட்டிருந்தது. இவ்வாறு பல்வேறு முறைகளில் பிரதானிகளின் அந்தஸ்த்திற்கும் சலுகைகளுக்கும் வருமான வழிமுறைகளுக்கும் தாக்கம் ஏற்பட்டமையால் அவர்கள் போராட்டத்திற்குத் தலைமை தாங்க முன்வந்தனர்.

1818 சுதந்திரப் போராட்டத்தின் இயல்பு

ஆங்கிலேயர் ஆட்சிமீது கண்டியர்களுக்கு வெறுப்பு வளர்ந்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், சிம்மாசனத்திற்கு உரிமை கோரி துரைசாமி என்றொருவர் வெல்லஸ்ஸப் பிரதேசத்தில் வெளிப்பட்டார். இவர் கொகுகும்புரே ரட்டேரால போன்ற பிராந்தியத் தலைவர்களின் உதவியுடன் அரசுரிமையைப் பெற்றுக் கொள்வதற்கு மக்களை ஒன்று திரட்டுவதாக பதுளையின் அரச அதிபரான டக்லஸ் வில்சன் அறிந்து கொண்டார். உடனே துரைசாமியைக் கைதுசெய்வதற்கு டக்லஸ் வில்சன், முகாந்திரம் ஹஜ்ஜி மரிக்கார் உட்பட ஒரு குழுவினரை அனுப்பி வைத்தார். அங்கு சென்ற வேளையில் அவர்கள் போராளிகளால் கொலை செய்யப்பட்டனர். பின்னர் டக்லஸ் வில்சன் அங்கு சென்ற வேளையில் அவரும் போராளிகளின் தாக்குதல்களால் உயிரிழந்தார். வெல்லஸ்ஸப் பிரதேச மக்கள் துரைசாமியைச் சூழ ஒன்றுபடுவதைக் கண்ட அரசாங்கம் நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக ஊவாவுக்குப் பொறுப்பான கெப்பட்டிப் பொல திஸாவையை அனுப்பி வைத்தது என்றாலும் அவர் தம்முடன் வந்த ஆங்கிலப் படையைத் திருப்பியனுப்பி விட்டு, போராளிகளுடன் சேர்ந்து கொண்டார். இவ்வாறு அவர் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு முன்வந்ததுடன் கண்டிப் பிரதானிகள் பலரும் போராட்டத்தில் பங்கெடுக்க முன்வந்தனர். கண்டிப் பிரதேசம் எங்கும் போராட்டம் பரவுவதற்கும் அது காரணமாயிருந்தது. முக்கியமான பிரதானிகளுள் மொல்லிகொடையும் எக்னெலி கொடையும் மாத்திரம் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

கெப்பட்டிப்பொலவின் வழிநடத்தலில், போராளிகளால் துரைசாமி கண்டியின் மன்னராகப் பிரகடனப்படுத்தப்பட்டார். அதன்படி மன்னரின் மகாதிகாரமாக பிரதானியான கெப்பட்டிப்பொல நியமனம் செய்யப்பட்டார். இந்நாட்டு அரசுரிமையின் குறியீடாகக் கொள்ளப்பட்ட புனித தந்தம் போராளிகளின் கைவசமானமை ஆங்கிலேயர் எதிர் நோக்கிய இன்னுமொரு முக்கிய பிரச்சினையாகும். எஹலபொல போராட்டத்தில் கலந்து கொள்ளாதுவிடினும் போராட்டத்தை முன்னெடுக்கும் பிரதானிகளுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருப்பதாக ஆங்கிலேய அதிகாரிகள் சந்தேகமுறத் தொடங்கினர். இதனால் அவர் கைதுசெய்யப்பட்டு கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

போராட்டத்தை அடக்குவதற்கு கடுமையான நட 1818 ஆங்கிலேயர் மிகக் வடிக்கைகளை மேற்கொண்டனர். பெப்பிரவரி மாதத்தில் ஆளுநர் கண்டிப் பிரதேசத்திற்கு இராணுவச் சட்டத்தைப் பிரகடனஞ் செய்தார். கரையோரத்தில் இருந்த ஆங்கிலேயப் படையைக் கண்டிக்கு அனுப்பிவைத்தார். போராட்டத்தை அடக்குவதற்கு ஆங்கிலேயர் நிலத்தைப் பாழடையச் செய்யும் கொள்கையைக் கையாண்டனர். கிராமங்களுக்குத் தீயிடல், மக்களின் சொத்துக்களை அழித்தல், மக்களை கைது செய்து இராணுவச் சட்டப்படி தண்டனை வழங்கல் என்பன அக்காலத்தில் சர்வசாதா ரணமாகக் காணப்பட்டன. ஆங்கிலேயரின் கடும் அடக்கு முறையால் நீண்ட காலப் போராட்டம் ஒன்றிற்கு முகங்கொடுக்க போராளிகளால் இயலவில்லை. இதனால் போராட்டத் தலைவர்கள் பலரையும் கைது செய்வதற்கு ஆங்கிலேயரால் முடியுமா யிருந்தது. கொப்பேகடுவ கலகெதர மொகட்டால, கதிர்காம பசநாயக்க நிலமே, பூட்டாவே ரட்டேரால, எஹல் பொல அதிகாரம் போன்ற தலைவர்கள் அவ்வாறு கைதானவர்களில் சிலராவர்.

போராட்டத்தில் அரசனாக குறிப்பிடப்பட்டவர் உண்மையான துரைசாமி அல்ல என்றும் அவருக்கு அரசுரிமை இல்லையெனவும் அவர் போலியான நபர் எனவும் ஆங்கிலேயர் பிரசாரம் செய்தனர். அத்துடன் போராட்டத்தின் தலைவர்களான கெப்பட்டிக் பொல, மடுகல்ல, பிலிமத்தலாவை ஆகியோருக்கிடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன. 1818 ஆகஸ்ட், செப்டெம்பர் மாதங்களில் போராட்டம் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டது. ஒக்டோபர் மாதத்தில் கெப்பட்டிப் பொலவும் மடுகல்லேயும் கைது செய்யப்பட்டனர். இராணுவ நீதிமன்றம் முன் நிறுத்தப்பட்டு தலைவர் இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. 1818 நவம்பர் 26 ஆம் திகதி ஆங்கிலேயரால் கெப்பட்டிப் பொலவும் மடுகல்லவும் சிரச்சேதம் செய்யப்பட்டனர்.

1818 சுதந்திரப் போராட்டத்தின் தோல்வி

போராட்டம் ஆரம்பித்து சில மாதங்களில் அது மிக வேகமாகப் பரவிச் சென்றது. ஒரு பிரதேசத்தில் வீடுகளையும் தோட்டந் துரவுகளையும் நாசமாக்கி, ஆங்கிலப் படையால் போராளிகள் துரத்தியடிக்கப்பட்ட பின்னர் வேறொரு பிரதேசத்தில் போராட்டங்கள் மூண்டன. அப்போது ஆங்கிலேயர் மேலதிக இராணுவத்தை வரவழைத்து, மிகக் கடுமையான அடக்கு முறையைக் கையாண்டதுடன், ஒன்றிணைந்த போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு போராளிகளால் முடியாமல் போனது. மொல்லிகொட நிலமே ஆங்கிலேயருக்குச் சார்பாக நடந்து கொண்டபடியால் அவரது நிருவாகப் பிரதேசமான நான்கு கோரளை ஊடாக கொழும்புடன் தொடர்புகளை மேற்கொள்ள முடிந்தமையும் ஆங்கிலேயருக்குச் சார்பாக விளங்கியது. இவ்வாறு நோக்கும்போது போராட்டம் தோல்வியுற்றமைக்கான காரணங்கள் பலவற்றைக் கண்டறியலாம். அவ்வாறான காரணிகள் சுருக்கமாக கீழே தரப்பட்டுள்ளன, 

ஆங்கிலேயர் கையாண்ட கடுமையான அடக்குமுறைக் கொள்கை. 

நீண்டகாலப் போராட்டத்திற்குத் தேவைப்பட்ட ஆயுதங்களோ வளங்களோ கண்டியரிடம் காணப்படாமை.

போராட்டம் முறையாக மேற்கொள்ளப்படாமை. 

அரசனாகத் தோன்றிய நபர், அரசுரிமையற்ற போலியானவன் என்று தெரிய வந்தமை.

1818 சுதந்திரப் போராட்டத்தின் விளைவுகள்

1818 ஆம் ஆண்டு போராட்டத்தின் விளைவாக எஹலபொல, கெப்பட்டிபொல, மடுகல்ல போன்ற தலைவர்கள் மலைநாட்டின் சுதந்திரத்திற்காக உயிரைத் தியாகம் செய்ய வேண்டி ஏற்பட்டது. இன்னும் பல பிரதானிகளின் சொத்துக்கள் அரசுடைமை யாக்கப்பட்டன. போராட்டத்தை ஆதரித்த தலைவர்கள் பலர் நாடு கடத்தப்பட்டனர். அரசிற்கு எதிராகச் செயற்பட்ட தலைவர்களுக்கு இவ்வாறு பல்வேறு தண்டனைகள் வழங்கப்பட்டதுடன் ஆதரவாகச் செயற்பட்ட மொல்லிகொட, எக்னெலிகொட போன்ற பிரதானிகளுக்கு பல்வேறு சலுகைகளையும் ஆங்கிலேய அரசு வழங்கியது.

1818 ஆம் ஆண்டு போராட்டம் தோல்வியுற்றமையால் ஆங்கிலேயருக்கு தமது அதிகாரத்தை மேலும் நன்கு உறுதிப்படுத்திக் கொள்ள முடியுமாயிருந்தது. ஆளுநர் பிரௌவுன்றிக் 1818 நவம்பர் 21 ஆந் திகதி பிரகடனம் ஒன்றை வெளியிட்டதன் மூலம், கண்டியில் தமது அதிகாரத்தை மேலும் உறுதிப்படுத்திக் கொள்ள நடவடிக்கைகளை எடுத்தார். 56 அம்சங்களைக் கொண்ட இந்த கண்டிப் பிரகடனத்தில் பிரதானிகளின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டன. அதுவரை பிரதானிகளிடம் காணப்பட்ட நீதி அதிகாரங்களும் வரையறுக்கப்பட்டு, ஆங்கிலேய நீதிமன்ற முறைமையை கண்டியிலும் அமுல்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற் கமைய 1818 நவம்பர் கண்டிப் பிரகடனம் மூலம் கண்டியின் மீதான ஆங்கிலேயரின் ஆட்சி அதிகாரம் முழுமையானதாக்கப்பட்டது.

பின் 1818-1832 வரை இலங்கையில் இராணுவ ஆட்சி இடம்பெற்றது.

1848 சுதந்திரப் போராட்டம்

1818 போராட்டம் தோல்வியடைந்து 30 வருடங்களின் பின்னர் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக மீண்டும் ஒரு போராட்டம் ஆரம்பமானது. கண்டியருக்குப் பழக்கமான பழைய மன்னராட்சியை மீளவும் உருவாக்கிக் கொள்வதற்காக இரண்டாவது முறையாகவும் முயற்சித்த இவ்வாயுதப் போராட்டம், ஆங்கிலேயர் ஆதிக்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது சுதந்திரப் போராட்டம் என்றும் குறிப்பிடலாம். 1848 இல் ஏற்பட்ட இப்போராட்டம் ஆரம்பமாவதற்குப் பல காரணிகள் பங்களிப்புச் செய்துள்ளன.

1848 சுதந்திரப் போராட்டத்திற்கான காரணங்கள்

அரசின் நிலக் கொள்கை

1833 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வந்த கோல்புறூக்கின் சீர்திருத்தங்களுக்கு அமைவாக அரசின் நிலங்களை விற்கும் கொள்கை செயற்படுத்தப்பட்டது. கோப்பிச் செய்கைக்குத் தேவையான வளமான நிலமும் அதற்கான சூழலும் கண்டியில் காணப் பட்டது எனினும், அரசின் நிலக் கொள்கையால் அப்பிரதேச பொதுமக்கள் அவல நிலைக்குள்ளாயினர். 1840 ஆம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட தரிசு நிலச் சட்டத்திற்கு ஏற்றவாறு 30 வருடங்கள் தொடர்ச்சியாக அனுபவித்தமைக்கான ஏற்றுக் கொள்ள கூடிய சான்றுகளை சமர்ப்பிக்க முடியாத, பயிர்ச் செய்கைக்கு உட்படுத்தப்படாத நிலம் அரசுடைமையாக்கப்பட்டது. கண்டி மக்கள் பரம்பரை பரம்பரையாக அனுபவித்து வந்த பெரும்பாலான நிலங்களின் உரிமையை நிலைநாட்டுவதற்கு சட்ட ரீதியான ஆவணங்கள் அவர்களிடம் காணப்படவில்லை.

இதனால் அவர்களுடைய சேனை நிலங்கள் அதிகளவில் அரசுடைமையாயின. அர சின் இந்நிலங்கள் மிகவும் குறைந்த விலைக்கு வெளிநாட்டவர்களுக்குப் பெற்றுக் கொடுக்கப்பட்டன. இவ்வாறு தமது காணிகள் பறிக்கப்பட்டமையாலும் விவசாய நடவடிக்கைகள் தடைப்பட்டுப் போனதாலும் பொது மக்கள் அரசு தொடர்பாக அவ நம்பிக்கையுற்றனர்.

கிராம சபைகள் செயலற்றுப் போனமை.

கோல்புறூக் சீர்திருத்தத்தினால் கட்டாய அரச சேவை ஒழிக்கப்பட்டது. கிராம சபைகளின் செயற்பாடுகளுக்கு இது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியது. அவ்வப் பிரதேச குளங்கள், அணைக்கட்டுகள், கால்வாய்களை அமைப்பதும் பராமரிப்பதும் பெரும்பாலும் கிராம சபைகளாலேயே மேற்கொள்ளப்பட்டு வந்தன. கிராம சபைகளுக்கு உழைப்பைப் பெற்றுக் கொள்ளும் பிரதான வழிமுறையாக அமைந்தது கரும் முறையாகும். என்றாலும் அரச உழைப்பு முறை அரச ஒழிக்கப்பட்டமையால் கிராம சபைகளுக்கு உழைப்பைப் பெற்றுக் கொள்வது சிரமமாக இருந்தது. கிராமியப் பிரதேசங்களில் சிறிய பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதும் இதன் முக்கியமானதொரு சேவையாகும். என்றாலும் 1833 ஆம் ஆண்டு சீர்திருத்தத்தால் கிராம சபைகளிடம் இருந்த நீதித்துறை அதிகாரம் இல்லாமல் ஆக்கப்பட்டது. இவ்வாறான காரணிகளினால் கிராமிய மக்கள் துன்பத்திற்கு ஆளாகினர்.

புதிய நீதிமன்ற முறை

கமரனின் நீதிமன்ற சீர்திருத்தங்களுக்கு அமைய கிராமிய மக்களின் சிறு பிரச்சி னைகளுக்குக் கூட நீதி மன்றங்களை நாடிச் செல்லவேண்டி இருந்தது. இதற்கு முன்னர் இவ்வாறான பிரச்சினைகளை கிராம மட்டத்தில் தீர்த்துக் கொள்வதற்கான வழிமுறைகள் இருந்து வந்தன. புதிய நீதி மன்றங்களில் பயன்படுத்தப்பட்ட ஆங்கில மொழி அறிவோ, சட்டதிட்டங்கள் தொடர்பான அறிவோ கிராம மக்களிடம் காணப் படவில்லை. இந் நீதிமன்றங்களிடம் உதவி பெறச் சென்றபோது வழக்கறிஞர் களுக்கான கொடுப்பனவுகளுக்கும், முத்திரைக் கட்டணங்களுக்கும் பணம் செலவிட வேண்டியிருந்ததாலும், பல நாட்களைச் செலவிட வேண்டி இருந்தமையாலும் கிராமிய மக்கள் இடர்பாடுகளை எதிர்நோக்கினர். இதனால் அவர்களது சேனைச் செய்கைகளும் விவசாய நடவடிக்கைகளும் பாதிப்புற்றது.

அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான தொடர்பு விலகிச் சென்றமை.

கோல்புறூக்கின் சிபாரிசுகளுக்கு அமைய சிவில் சேவையாளர்களின் தொகையைக் குறைத்தமையும் அவர்களுக்குப் பெருந்தோட்டச் செய்கையில் ஈடுபட அனுமதி அளிக்கப்பட்டமையும் பிரதேசங்களின் நிருவாக சேவை செயற்றிறன் அற்றுப் போனதற்கான காரணங்களாக அமைந்தன. இதற்கமைய நிருவாக உத்தியோகத்தர் களின் நிருவாகப் பிரதேசம் முன்பை விட விரிவடைந்ததால் அவர்களுடைய மேற்பார்வை செயற்பாடுகளை முறையாகச் செய்வது சிரமமாய் இருந்தது. சில அதிகாரிகள் பெருந்தோட்ட நடவடிக்கைகளில் கூடிய கவனம் செலுத்தியமையால் மக்களின் தேவை தொடர்பாகப் போதிய காலத்தைச் செலவிட அவர்களால் இயலவில்லை. இவ்வாறான காரணங்களினால் பொது மக்களினது பிரச்சினைகளை அரசாங்கத்திற்கு முறையாக அறிக்கைப்படுத்தப்படாததினால் அரசுக்கும் பொது மக்களுக்கும் இடையிலான தொடர்புகள் தடைப்பட்டுப் போவதற்கும் அது காரணமாகியது.

அரசின் புதிய வரிக் கொள்கை

இலங்கையில் ஆங்கிலேய ஆளுநரான டொரிங்டனினால் 1848 ஆம் ஆண்டில் புதிய பல வரிகள் விதிக்கப்பட்டமை போராட்டத்திற்கு உடனடிக் காரணியாய் அமைந்தது. இக்கால கட்டத்தில் கோப்பியின் விலை வீழ்ச்சியால் அரசின் வருமானம் குறைந்து செல்லவே, அதனைக் குறிப்பிடத்தக்க அளவிற்கு பொதுமக்களிடம் இருந்து வசூலித்துக் கொள்வதற்காக ஆளுநரால் வரிச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. முத்திரை வரி, வண்டி வரி, படகு வரி, கடை வரி, துப்பாக்கி வரி, ஆள் வரி, நாய்வரி என பல வரிகள் விதிக்கப்பட்டன. இவ்வரி வகைகள் அனைத்திற்கும் பொதுமக்களின் எதிர்ப்பு இருந்து வந்ததோடு துப்பாக்கி, நாய், ஆள் வரிகளுக்குக் கடும் எதிர்ப்பு உருவாகியது.

கிராமிய மக்கள் துப்பாக்கியைப் பாவித்தது தமது பயிர்ச் செய்கையைப் பாதுகாத்துக் கொள்வதற்காகும். புதிதாகப் பிறப்பிக்கப்பட்ட துப்பாக்கி வரியாக வருடத்திற்கு இரண்டரை சிலிங் கொடுக்க வேண்டி இருந்தது. இதற்காக மக்கள் அரச அலுவலகங்களுக்குச் செல்லவேண்டி நேர்ந்ததுடன் அதற்காகச் காலச் செலவும் ஆங்கிலேய மொழியிலான படிவங்களை நிரப்புவதற்கும் மேலதிக செலவும் ஏற்பட்டது. துப்பாக்கிக்காகச் செலவிடப்பட்ட பணம், அதன் பெறுமதியை விடவும் கூடியதாக சில சந்தர்ப்பங்களில் காணப்பட்டன. இதனால் துப்பாக்கி வரிக்கு எதிராகக் கடும் எதிர்ப்புக் காணப்பட்டது.

வயதுவந்த ஆண்கள் அனைவரும் வருடத்தில் 6 நாட்கள் பாதைகள் அமைக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என்றும் அவ்வாறு செய்யாவிட்டால் 3 சிலிங் ஆள் வரியாகச் செலுத்த வேண்டும் எனவும் விதிக்கப்பட்டது. இதற்கும் பொதுமக்களின் எதிர்ப்புக்காணப்பட்டது. நாய்களுக்கும் வரி செலுத்த வேண்டி இருந்தது. இது மிகவும் பொருத்தப்பாடற்ற வரியாகக் காணப்பட்டமையால் இதன் மீதும் பொதுமக்களின் எதிர்ப்புக் காணப்பட்டது.

இவ்வாறான வரிகள் பலவும் விதிக்கப்பட்ட சூழ்நிலையில் அரசாங்கம், நீலப் புத்தகத்திற்கான தகவல்களைப் பெற குடிமக்கள் தொடர்பான புள்ளி விவரங்களைச் சேகரிக்க ஆரம்பித்தது. இது இன்னுமொரு புதிய வரிக்கான எத்தனம் என்று பொது மக்கள் சந்தேகப்பட ஆரம்பித்தனர்.

1848 சுதந்திரப் போராட்டத்தின் இயல்பு

அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காக பொதுமக்கள் ஒன்றுபட்டதுடன், அரசுக்கும் மக்களுக்கும் இடையே மோதல்கள் ஆரம்பமாகின. கொழும்பு, காலி, கண்டி, பதுளை போன்ற நகர்களில் இம்மக்கள் ஒன்றுகூடியதுடன். ஆங்கில அரசின் சிவில் உத்தியோகத்தர்களுக்கு எதிராகவும் எதிர்ப்பு வலுத்தது. பதுளையில் திரண்ட விவசாயிகளில் சிலர், துப்பாக்கி வரிக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் முகமாக அரச அதிபரின் முன்பாகவே தமது துப்பாக்கிகளை நிலத்தில் அடித்து உடைத்தெறிந்தனர். 4000 பேரளவில் கண்டி கச்சேரிக்கு அண்மையில் கூடி வரிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஊர்வலம் நடாத்துவதற்கு ஆயத்தமாயினர். பொலிசாருக்கு இவர்களைக் கட்டுப்படுத்துவது சிரமமாயிருக்கவே இராணுவத்தை அழைக்க நேர்ந்தது. கொழும்பு, கண்டிப் பிரதேசங்களில் உருவான எதிர்ப்பு மாத்தளை, தம்புளை, குருணாகலை, வாரியபொல போன்ற பிரதேசங்களுக்கும் பரவியது.

மாத்தளை, குருநாகல், வாரியபொல போன்ற பிரதேச மக்கள் ஆயுதங்களைக் கைகளில் ஏந்தி ஒன்றுபட்டு அரச கட்டடங்களையும் நீதிமன்றங்களையும் தாக்குவதற்குத் தொடங்கினர். அரசின் வரிக் கொள்கையினால் சாதாரண மக்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியிருந்தமையால் அவர்களில் இருந்து தோன்றிய கொங்காலேகொட பண்டா, வீரபுரன் அப்பு, டிங்கிரால, தீனிஸ் போன்ற தலைவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முன்வந்தனர். போராளிகளில் சிலர் தம்புள்ளை விகாரையில் ஒன்று சேர்ந்து அதன் தலைமைப் பிக்குவின் உதவியுடன் கொங்காலேகொட பண்டாவை அரசனாக்கிக் கொண்டனர்.

1848 ஆம் ஆண்டு போராட்டத்தின் பிரதான மத்திய நிலையமாக மாத்தளைப் பிரதேசம் திகழ்ந்தது. அதனுடன் கண்டி, குருணாகலை மாவட்டங்களில் சில பிரதே சங்களிலும் போராட்டம் பரவியது. என்றாலும் 1818 ஆம் ஆண்டு போராட்டத்தை அடக்கி, அனுபவம் பெற்றிருந்த ஆங்கிலேயர் இதனைக் கட்டுப்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஆளுநர் டொரிங்டனால் இராணு வத்தைப் பிரயோகித்து, போராட்டக்காரர்களை ஒன்று சேராது தடுத்து மேற்கொண்ட நடவடிக்கையால் கலவரம் தோல்வியுற்றது. இதனால் போராட்டம் ஆரம்பித்து இரு மாதங்களுக்கிடையில் அதன் தலைவர்கள் பலரையும் கைதுசெய்யக்கூடிய தாயிருந்தது. அவ்வாறு கைதான வீர புரன் அப்புவிற்கு மரண தண்டனை விதிக் கப்பட்டதோடு அவர் அதனை வீரத்துடன் எதிர்கொண்டார். போராட்டத்தில் ஈடுபட்ட ஏனையோருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இதற்கிடையில் ஆங்கிலேயரால் கைதுசெய்யப்பட்டிருந்த கடஹப் பொல தேரரிற்கு எதிரான வழக்குப் போதியளவு விசாரிக்கப்படாமலேயே மறுநாள் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டமைக்காக அரசாங்கத்தின் மீது பொதுமக்கள் கடும் அதிருப்தி கொண்டனர். கொங்காலேகொட பண்டாவுக்கு எதிராக வழக்கை விசாரித்து கசையடி யுடன் அவரை நாடுகடத்தும் தண்டனை வழங்கப்பட்டது.

1848 ஆம் ஆண்டு போராட்டத்தின் தோல்வி


1818 ஆம் ஆண்டு போராட்டம் போன்றே முறையாக ஒழுங்குபடுத்தப்படாமை இப்போராட்டத்தின் தோல்விக்கான முக்கிய காரணமாகும். இப்போராட்டத்தில் ஈடுபட்ட பெருந் தொகையினர் சாதாரண பொதுமக்களாகக் காணப்பட்டதோடு, தேவையான படைப் பயிற்சியோ ஆயுதங்களோ அவர்களிடம் காணப்படவில்லை. இப்போது மலைநாட்டு வீதிகள் தொடர்பாக ஆங்கிலேயருக்குப் போதிய அறிவு இருந்தது. அவர்களுடைய படைப் பலம், ஆயுதம் கையாளும் முறைகளுக்கு எதிராகப் போராட மக்களால் முடியவில்லை. இப்போராட்டம் மலைநாட்டின் சில பிரதேசங்களுக்கு மட்டும் எல்லைப்படுத்தப்பட்டிருந்தமையால் இலகுவாக அடக்கிவிடுவதற்கு ஆங்கிலேயரால் முடிந்ததது.

1848 போராட்டம் நடக்கும்போது ஆளுநராகக் கடமையாற்றிய டொரிங்டனின் செயற்பாடு தொடர்பான பலத்த விமர்சனம் எழுந்தமையால், இந்நாட்டின் நிலைமையை அறிந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காகப் பிரித்தானிய அரசு ஓர் ஆணைக்குழுவை நியமித்தது. அதற்கமைய ஆளுநர் டொரிங்டன் பிரித்தானியாவுக்குத் திருப்பி அழைக்கப்பட்டார். பொது மக்களின் கடும் எதிர்ப்புக்குள்ளான வரிகள் நீக்கப்பட்டன. இதற்கமைய கடைகள் மீதான வரியும் நாய் வரியும் முழுமையாக நீக்கப்பட்டது. ஏனைய வரிகளை மீள் பரிசீலனை செய்து, அவற்றில் பாதகமான அம் சங்களை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டது. புத்த சமயம் தொடர்பாக அதுவரை அரசாங்கம் செயற்பட்ட விதம் தொடர்பாக மக்களிடையே காணப்பட்ட மனக் குறையை விளங்கிக் கொண்டு அதற்குச் தீர்வினைக் காண்பதற்கு அரசாங்கம் முன்வந்தது. இந்நாட்டு விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு 1850ஆம் ஆண்டுக்கு முன்னர் முக்கிய கவனம் செலுத்தப்படாதிருந்தாலும் பின்னர் அக்கொள்கையில் மாற்றம் ஏற்பட்டதை அவதானிக்க முடிந்தது.

பிரித்தானியரால் இலங்கையில் ஏற்பட்ட அரசியல், பொருளாதார, சமூக, கலாச்சார  மாற்றங்கள்  

அரசியல் மாற்றங்கள்

1833 கோல்புறூக் சீர்திருத்தங்கள்

1815 ஆம் ஆண்டிலிருந்து பிரித்தானிய ஆளுநர்கள் இலங்கையின் ஆட்சி நடவடிக் கைகளை மேற்கொள்ளும்போது அரசாங்கத்திற்கு வருமானத்தைவிட செலவு அதிகரித்துக்கொண்டு சென்றது. இதனால் இலங்கை ஆளுநர்களுக்கு இந்நாட்டின் செலவுகளை ஈடுசெய்துகொள்ளுவதற்காகப் பிரித்தானிய அரசிடம் பணம் பெற்றுக் கொள்ள வேண்டிய தேவை இருந்தது. குடியேற்ற நாடு ஒன்றின் தேவைக்காக தொடர்ந்தும் பணம் செலவிடுவதற்குப் பிரித்தானிய அரசிற்கு விருப்பம் இருக்கவில்லை. ஆகையால் இந்நாட்டின் நிலைமையை அவதானித்துத் தேவையான ஆலோசனைகளை வழங்குவதற்காகக் குடியேற்ற நாடுகளின் செயலாளரால், கோல்புறூக் அவர்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 1829 ஆம் ஆண்டில் இங்கு வந்த அவரிடம், இந்நாட்டின் அரசியல், பொருளியல் செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்தறியும் பொறுப்பு கையளிக்கப்பட்டிருந்தது. இலங்கையில் அக்காலத்தில் நிலவிய நீதிமன்ற மற்றும் சட்ட நடவடிக்கை தொடர்பாகப் பரிசீலித்து ஆலோசனைகளை முன்வைப்பதற்காக குடியேற்ற நாடுகளின் செயலாளரால் சார்ள்ஸ் எச், கமரன் நியமிக்கப்பட்டார். அவர் 1830 இல் இங்கு வந்தார். கோல்புறூக் ஆணைக்குழுவின் ஆலோசனைகளை அடிப்படையாகக் கொண்டே அரசியல் சீர்திருத்தம் 1833 ஆம் ஆண்டில் பிரித்தானிய அரசால் எமது நாட்டில் அறிமுகஞ் செய்யப்பட்டது. இது கோல்புறூக் சீர்திருத்தங்கள் எனப்பட்டது. கமரனின் ஆலோசனைக்கு இணங்க நீதிமன்ற முறையும் மறுசீரமைக்கப்பட்டது.

கோல்புறூக் சீர்திருத்தங்களின் முக்கியமான அம்சங்கள்

கோல்புறூக் சீர்த்திருத்தங்களின் கீழ் இந்நாட்டின் அரசியல், பொருளியல் துறைக ளில் முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டன. அவற்றுள் சில வருமாறு,

சட்டவாக்கக் கழகம், சட்ட நிருவாகக் கழகம் என்பன அமைக்கப்பட்டன.

கண்டி இராச்சியமும் கரையோரப் பிரதேசங்களும் ஒன்றிணைக்கப்பட்டு, ஒரே ஆட்சி முறையின் கீழ்க் கொண்டுவரப்பட்டது.

நாடு ஐந்து மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது. கட்டாய இராசகாரிய முறைமை ஒழிக்கப்பட்டது.

அரசின் வர்த்தக ஏகபோக முறைமை அகற்றப்பட்டது.

சட்டவாக்கக் கழகமும் சட்ட நிருவாகக் கழகமும் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும். கோல்புறூக் ஆணைக்குழு இந்நாட்டிற்கு வருகை தருகையில், இலங்கையின் ஆளுநர் அளவுக்கதிகமான அதிகாரங்களைக் கொண்டிருந்தார். அது பொது மக்களின் சுதந்திரத்திற்கு இடைஞ்சலானது எனக் கருதிய ஆணைக்குழு, ஆளுநரின் அதிகாரங்களைக் குறைப்பதற்காக இச்சபைகளை அமைப்பதற்கு ஆலோ சனை வழங்கியது.

1833ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சட்டவாக்கக் கழகம் 15 பேரை அங்கத்தவர்களாகக் கொண்டிருந்தது. அவர்களுள் 9 பேர் உத்தியோக சார்புள்ள அல்லது பதவி அதிகாரத்தினைக் கொண்டு நியமனம் பெற்றோராவர். எஞ்சிய 6 பேரும் உத்தியோக சார்பற்றோர். ஐரோப்பியர் மூவரும் பறங்கியர், சிங்களவர், தமிழர் என்பவர்களுக்காக தலா ஒவ்வொருவர் வீதம் மூவருமாக ஆறு பேர் நியமிக்கப்பட்டனர். உத்தியோகசார் பற்றோரை நியமிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு வழங்கப்பட்டிருந்தது.

சட்டவாக்கக் கழகத்திற்கு உத்தியோகச் சார்பற்ற அங்கத்தவர்கள் இனரீதியாக நியமிக் கப்பட்டமையால், இது இனவாரிப் பிரதிநிதித்துவ முறை எனப்பட்டது. இம்முறை எதிர்கால இலங்கையில் பாதகமான விளைவுகளைத் தோற்றுவிக்கக் காரணமாயிற்று.

சட்டவாக்கக் கழகத்தில் உத்தியோக சார்பற்றோரை விட, உத்தியோக சார்புள்ளவர்கள் பெரும்பான்மையோராய் இருந்தமையால், பொது மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய உத்தியோக சார்பற்றோர்களிடம் போதிய அதிகாரம் காணப்படவில்லை. உத்தியோக சார்பற்றவர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடம் கையளிக்கப்பட்டு இருந்த மையால் தமக்குச் சார்பானவர்களையே அதற்கு நியமிக்கக்கூடியதாயிருந்தது. இதனால் இச்சபை ஆளுநருக்கு சார்பான ஒன்றாக இருந்து வந்தது.

1833 இல் அமைக்கப்பட்ட சட்ட நிருவாகக் கழகத்திற்கு குடியேற்ற நாட்டுச் செயலாளர், திறைசேரி நாயகம், கணக்காளர் நாயகம், நில அளவைத் திணைக்களத் தலைவர், கொழும்பு சுங்கத் திணைக்களத் தலைவர் போன்றோர் இடம்பெற வேண்டுமென்று கோல்புறூக் ஆலோசனை வழங்கியிருந்தார். இச்சபை அமைக்கப்பட்டமையால் நிதி தொடர்பாக ஆளுநருக்கு இருந்த கூடிய அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டது. இதற்கு அமைய வரவு - செலவு தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளும்போது நிருவாகக் குழுவினருடன் கலந்துரையாட ஆளுநர் பணிக்கப்பட்டார். சட்ட நிருவாகக் கழகத்தின் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு ஆளுநர் கடமைப்பட்டிருக்கவில்லை. ஆயினும் அவ்வாலோசனைகளை ஏற்றுக் கொள்ளாதவிடத்து அவர் குடியேற்ற நாடுகளுக்குப் பொறுப்பான செயலாளரிடம் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.

ஐரோப்பியரின் போராட்டம்

கோல்புறூக் சீர்திருத்தங்களின் சிற்சில அம்சங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் போராட்டம் ஒன்றை முதன்முதலில் தொடங்கியோர் இந்நாட்டில் வாழ்ந்த ஐரோப்பிய வணிகர்களாவர். இவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தச் சட்டவாக்கக் கழகத்தில் உத்தியோக சார்பற்ற மூவர் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்நாட்டில் பெருந்தோட்டத் துறையில் ஈடுபட்டிருந்த ஐரோப்பியர்களுக்குத் தோட்டத்துறைக்கான பெருந்தெருக்கள், புகையிரதப் பாதைகள், உட்கட்டமைப்பு வசதிகள் என்பவற்றை மேம்படுத்த வேண்டிய தேவை இருந்தது. என்றாலும் ஆரம்ப காலத்தில் சட்டவாக்கக் கழகத்திற்கு நிருவாக அதிகாரம் கையளிக்கப்படாமையால் நிதியை ஒதுக்கீடு செய்து கொள்வது சிரமமானதாயிருந்தது. அத்தோடு சட்டவாக்கக் கழகத்தில் உத்தியோக சார்பற்றோர் சிறுபான்மையோராக இருந்தமை அவர்களை அதிருப்தி அடையச் செய்திருந்தது. உத்தியோக சார்பற்ற அங்கத்தவர்கள் வாக்குரிமையின் மூலம் தெரிவுசெய்யப்படாது, ஆளுநர் மூலம் நியமிக்கப்படுவது தொடர்பாகவும் அதிருப்திப்பட்டனர். இவற்றை அடைந்து கொள்வதற்காக ஐரோப்பிய முதலீட்டாளர்கள் வரையறுக்கப்பட்ட அளவில் மேற்கொண்ட போராட்டங்கள் சட்டவாக்கக் கழகத்தில் கேள்வி கேட்பது, ஆலோசனைகளைச் சமர்ப்பிப்பது, பத்திரிகைகளில் கவனயீர்ப்புக் கட்டுரைகளை எழுதுவது, போராட்டங்களை மேற்கொள்வதற்கான அமைப்புகளைத் தோற்றுவிப்பது என்பனவையாகும்.
.
ஜோர்ஜ் வோல் அவர்களின் தலைமையில் 1865 ஆம் ஆண்டில் இலங்கையர் சங்கத்தை தோற்றுவித்துக் கொண்டமை ஐரோப்பியாவில் நிலவிய அமைப்பிற்கு ஓர் உதாரணமாகும். இப்போராட்டங்களால் 1889 இல் சட்டவாக்கக் கழகத்தில் உத்தியோக சார்பற்றோரின் தொகை எட்டாக அதிகரிக்கப்பட்டது. முஸ்லிம்களுக்கும் கண்டிச் சிங்களவருக்கும் இரு பிரதிநிதிகள் நியமனம் பெற்றனர். ஐரோப்பியரின் போராட்டங்களின் நோக்கம் நிருவாக அதிகாரங்களை இலங்கையர் பெற்றுக் கொள்வது அல்லாவிடினும், இலங்கையர்கள் முன்மாதிரியொன்றைப் பெற்றுக் கொள்ளுவதற்கு இப்போராட்டங்கள் வழிகாட்டின.

1910 குறூ மக்கலம் சீர்திருத்தங்கள்

கோல்புறூக்கின் சீர்தித்தங்களினால் 19 ஆம் நூற்றாண்டில் இந்நாட்டின் சமூக, பொருளாதார விடயங்களில் பெருமாற்றங்கள் ஏற்பட்டன. அதன் எதிரொலியாக 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தோடு, பழைய பிரபுத்துவ வர்க்கம் மறைந்து, புதிய மத்தியதர வர்க்கம் ஒன்று தோற்றம் பெற்றது. 1833 இல் இருந்து கடந்த 70 ஆண்டு காலகட்டத்தினுள் ஏற்பட்ட சமூக, பொருளாதார மாற்றங்களுக்கு இயைபாக அரசியல் துறையில் மாற்றங்கள் ஏற்படவில்லை. இதனால் இலங்கை மத்திய தர வர்க்கத்தினர் மனக்குறையோடு இருந்தமையால் 1908 - 1909 ஆம் ஆண்டுகளில் அவர்கள், அரசியல் யாப்புச் சீர்திருத்தம் ஒன்று இந்நாட்டிற்குத் தேவை எனக் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

1908 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் ஜேம்ஸ் பீரிஸ் அவர்களால், இலங்கைக்கு அரசியல் யாப்புச் சீர்த்திருத்தம் ஒன்றின் தேவை தொடர்பான கோரிக்கை ஒன்று குடியேற்ற நாடுகளின் செயலாளரிடம் கையளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்னும் பல இயக்கங்களும் இவ்வாறான கோரிக்கைகளை முன்வைத்தன. கரைநாட்டு உற்பத்தியாளர் சங்கம், சிலாபச் சங்கம், யாழ்ப்பாணச் சங்கம் போன்றன இவ்வாறான இயக்கங்களுக்கு உதாரணங்களாகும். இவற்றின் முக்கியமான சில கோரிக்கைகள் வருமாறு,

சட்டவாக்கக் கழகத்தில் உத்தியோக சார்பற்றோரின் அங்கத்துவத்தை அதிகரித்தல்.

இனவாரிப் பிரதிநிதித்துவ முறையை நீக்குதல்.

பிரதேசவாரி பிரதிநிதித்துவமுறைக்கேற்ப வாக்குரிமை மூலம் ஒவ்வொரு மாகாணத்திற்கும் பிரதி நிதிகளைத் தெரிவு செய்தல். 

சட்டவாக்கக்கழகத்தின் அதிகாரங்களை அதிகரித்தல்.

அப்போதைய இலங்கை ஆளுநரான ஹென்றி மக்கலம், இலங்கையரின் கோரிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தார். கோரிக்கைகளை முன்வைக்கும் நபர்களோ இயக்கங்களோ பொதுமக்களை பிரதிநிதித்துவப்படுத்தாதவர்கள் என்ற வாதத்தை அவர் முன் வைத்தார். மேற்குறிப்பிட்ட அரசியல் யாப்புச் சீர்திருத்தத்தின் தேவை தொடர்பாக உருவாகி வந்துள்ள தர்க்க ரீதியான கருத்துக்களை நிராகரிப்பதற்குக் குடியேற்ற நாட்டுச் செயலகத்தால் இயலவில்லை. கோல்புறூக்கின் அரசியல் யாப்பு 75 ஆண்டுகள் பழைமையானபடியால், புதிய சீர்திருத்தம் அவசியமானது என்பதை குடியேற்ற நாட்டு செயலக அதிகாரிகளும் ஏற்றுக் கொண்டது போல் தெரிகின்றது. இதற்கமைய 1910 நவம்பர் மாதத்தில் புதிய சீர்திருத்தத்தை வழங்குவதாக குடியேற்ற நாடுகளின் செயலாளர் தெரிவித்தார். அப்போதைய ஆளுநர் ஹென்றி மக்கலம் அவர்களின் ஆலோசனைப்படி, குடியேற்ற நாடுகளின் செயலாளர் குறூ பிரபு அவர்களின் திட்டத்தின்படி, இச்சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டமையால் இது குறு மக்கலம் சீர்திருத்தம் எனப் பெயர் பெறுகின்றது.

1912 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வந்த இவ்வரசியல் யாப்புச் சீர்திருத்தத் தின்படி, சட்டவாக்கக் கழகத்தின் அங்கத்தவர் தொகை 21 ஆக அதிகரிக்கப்பட்டது. உத்தியோக சார்புள்ள 11 பேரும் உத்தியோக சார்பற்ற 10 பேரும் அங்கத்துவம் பெற்றனர். உத்தியோக சார்பற்ற 10 பேரில் 6 பேர் நியமனம் பெற்றனர். எஞ்சிய நால்வரில் ஐரோப்பியர் இருவரும் பறங்கியர் ஒருவரும் படித்த இலங்கையர் ஒருவர் என வரையறுக்கப்பட்ட வாக்குரிமை மூலம் தெரிவாகினர்.

குறூ மக்கலம் சீர்த்திருத்தத்தின் முக்கிய அம்சங்கள் 

சட்டவாக்கக் கழகத்திற்கு முதன்முறையாக வாக்குரிமை மூலம் பிரதிநிதிகள்

தெரிவு செய்யப்பட்டமை. இலங்கையருக்காக கல்வி கற்ற பிரதிநிதி ஒருவர் தெரிவுசெய்யப்பட்டமை.

தொடர்ந்தும் உத்தியோக சார்பற்றோரே பெரும்பான்மையோராய் இருந்தமை.

இச்சீர்திருத்தங்களின்படி சட்டவாக்கக் கழகத்திற்குப் பிரதிநிதிகள் வாக்குரிமை மூலம் தெரிவுசெய்யப்பட்டமை மிக முக்கியமான ஓர் அம்சமாகும் என்றாலும் வாக்காள ராவதற்கு பால், கல்வி, சொத்து தகைமைகள் தேவைப்பட்டமையால், அவர்களின் தொகை மிகவும் குறைவாக இருந்தது. 1912 ஆம் ஆண்டு முதலாவது தேர்தலின் மூலம் கல்விகற்ற இலங்கையரின் பிரதிநிதியாக சேர். பொன்னம்பலம் இராமநாதன் தெரிவு செய்யப்பட்டார்.

மது ஒழிப்பு இயக்கம் 1912 - 1915

1910 அரசியல் யாப்புச் சீர்த்திருத்தத்தில் இலங்கையரின் கோரிக்கைகள் நிறைவேற்றப் பட்டிருக்கவில்லை. இதனால் மத்தியதர வர்க்கத்தினரிடையே மனக்குறை நிலவி வந்தது. இதே வேளையில் 1912 ஆம் ஆண்டு அரசாங்கத்தால் மதுபானசாலைகளை அமைப்பதற்கு அனுமதியளிக்கும் புதிய சட்டமொன்று பிறப்பிக்கப்பட்டமையால் அதனை எதிர்த்து மது ஒழிப்பு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.

பிரித்தானியரின் ஆட்சியின்போது இலங்கையில் மதுபாவனை அதிகரித்துச் சென் றமையால் சமய மறுமலர்ச்சி இயக்கத்தினூடே மது ஒழிப்பு இயக்கம் உருவான விதம் மூன்றாம் பாடத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. மது ஒழிப்பு இயக்கத்தின் நோக்கம் மதுவினால் விளையும் தீமைகளை விளக்கி, மக்களை அதிலிருந்து மீட்பதேயாகும். என்றாலும் 1912 இல் மது ஒழிப்பு இயக்கப் போராட்டம் அரசாங்கத்தின் மதுவரிக் கொள்கைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டது. 1910 ஆம் ஆண்டு சீர்த்திருத்தத்தினால் தமது கோரிக்கைகளைப் பெற முடியாது இருந்த மத்தியதர வர்க்கத்தினரே இவ்வியக் கத்திற்குத் தலைமை தாங்கிச் செயற்பட்டனர். இதனால் மது ஒழிப்புப் போராட்டம், அரசியல் தன்மையுடன்கூடிய ஓர் இயக்கமாக மாற்றமுற்றது. அம்மது ஒழிப்பு இயக்கத்தின் முக்கியமான சில பண்புகள் வருமாறு,

அரசாங்கத்தின் மதுவரிக் கொள்கைக்கு எதிராகப் பொது மக்களின் அபிப்பிராயத்தை உருவாக்க முயற்சித்தமை. 

மத்தியதர வர்க்கத்தினரான ஆங்கிலம் கற்றவர்களும் சமய, கலாசார மறுமலர்ச்சி இயக்கத்தினரும் ஒரே கொள்கை அடிப்படையில் செயற்பட்டமை.

கொழும்பில் மத்திய மது ஒழிப்புச் சபை ஒன்றை அமைத்து, நாடு பூராவும் அதன் கிளைகளைத் தோற்றுவித்து ஒன்றிணைந்த வலையமைப்பு ஒன்றை உருவாக்கிக் கொண்டமை.

மது ஒழிப்பு இயக்க மேடைகளில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் விமர்சிக்கப்பட்டமை. 

இவ்வியக்கத்தின் செயற்பாட்டால், சில பிரதேசங்களில் மதுச்சாலைகள் மூடப்பட புதிய மதுச்சாலைகளை அமைப்பதற்கு இடங்களைப் பெற்றுக் கொள்வதும் சிரம மாக இருந்ததென அறிக்கைகள் கூறுகின்றன. இவ்வாறு இவ்வியக்கச் செயற்பாடுகள் வெற்றி பெற்றதனாலும் மது ஒழிப்பு இயக்கத்தினூடாக மக்கள் இயக்க ரீதியாக ஒன்றுபட்டதனாலும் மது ஒழிப்பு இயக்க மேடைகளில் அரசாங்கம் விமர்சிக்கப்பட்டதனாலும் அவ்வியக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் சந்தர்ப்பத்தை எதிர்பார்த் திருந்தது. இதற்கிடையில் 1915 ஆம் ஆண்டு கண்டிப் பகுதியில் சிங்கள முஸ்லிம் மக்களிடையே மோதல் ஒன்று ஏற்பட்டது. அது சிங்கள முஸ்லிம் இனக்கலவரம் என அழைக்கப்படுகின்றது. மோதல் பரவுவதற்கு இடமளித்த அரசு அதை ஒரு சந்தர்ப்ப மாகப் பயன்படுத்தி மது ஒழிப்பு இயக்கத்தை கட்டுப்படுத்த முயன்றது. தொடர்ந்து, அடக்கு முறையைப் பிரயோகித்து இத்தலைவர்கள் பலரும் கைது செய்யப்பட்டதோடு, சிங்களப் பத்திரிகைகள் பலவும் பிரசுரமாகாது தடைசெய்யப்பட்டன. இவ்வாறான அடக்கு முறைகளால் மது ஒழிப்புச் செயற்பாடுகள் முடக்கப்பட்டன. என்றாலும் மது ஒழிப்பு இயக்கத்தினூடாக அரசியலுக்கு வந்த எஃப். ஆர். சேனாநாயக்க, டீ. எஸ். சேனாநாயக்க, சேர் டீ. பீ. ஜயதிலக போன்ற தலைவர்கள் பிற்காலத்தில் தேசியத் தலைவர்களாகப் பெயர்பெற்றனர்.

இந்தியத் தேசிய இயக்கத்தின் தாக்கம்

19 ஆம் நூற்றாண்டாகும்போது இலங்கையைப் போன்றே இந்தியாவிலும் பிரித்தா னியரின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. இவ்வாறு பிரித்தானியரின் குடியேற்றமாகத் திகழ்ந்த இந்தியாவிலும் இருபதாம் நூற்றாண்டாகும்போது சக்திவாய்ந்த தேசிய இயக்கம் ஒன்று உருவானது. 1885 ஆம் ஆண்டு இந்தியத் தலைவர்கள் தமது போராட்டத்தை முன்னெடுத்தனர். இப்போராட்டத்தால் 1918 ஆம் ஆண்டளவில் இலங்கையை விட முற்போக்கான அரசியல் யாப்புச் சீர்திருத்தத்தை இந்தியாவிற்கு வழங்குவதற்கு பிரித்தானிய ஆட்சியாளர்கள் நடவடிக்கையை மேற்கொண்டனர். சுரேந்திரநாத் பனர்ஜி, பாலகங்காதர திலகர், மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு போன்ற தலைவர்கள் பிரித்தானியருக்கு எதிரான போராட்டங்களில் இந்திய மக்களின் பங்களிப்பைப் பெற்றுக் கொண்டு சுயராஜ்யம் அல்லது சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்குக் கடுமையான போராட்டங்களை மேற்கொண்டனர். மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு போன்ற தலைவர்கள் இலங்கைக்கு வந்து இந்நாட்டு மக்களுக்கு உரையாற்றினர். மகாத்மா காந்தி 1927 இல் இலங்கைக்கு வந்து சில நாட்கள் தங்கிச் சென்றார்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தாக்கம் இலங்கையிலும் எதிரொலித்தது. பிரித்தானியாவுக்கு முறைப்பாட்டு மனுக்களை முன்வைத்தல், குடியேற்ற நாட்டுச் செயலாளருடன் பேச்சு வார்த்தை நடாத்துதல் போன்ற நடவடிக்கைகள் முக்கியமான அரசியல் சீர்திருத்தங்களை அடைந்து கொள்வதற்கு போதியதாய் இன்மையை இந்நாட்டுத் தலைவர்கள் விளங்கிக் கொண்டனர். அதற்கிணங்க 1915 ஆம் ஆண்டின் பின்னர் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட இயக்கங்கள் மூலமாகத் தமது போராட் டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு இந்நாட்டுத் தலைவர்கள் செயற்பட்டனர்.

இலங்கை தேசிய சங்கம்

1915 ஆம் ஆண்டில் சிங்கள - முஸ்லிம் கலவரம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் இராணுவச் சட்டத்தைப் பிரயோகித்து, மக்களை அடக்கியமையால் நிருவாக நடவடிக்கைகளில் இலங்கையருக்குக் கூடிய அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளும் தேவை அதிகளவில் உணரப்பட்டது. என்றாலும் 1919 வரை இந்நாட்டில் அரசியல் போராட்டங்களை முன்னெடுப்பதற்கான பொதுவான அமைப்பு ஒன்று உருவாகி இருக்கவில்லை. இதுவரை சிறிய அமைப்புக்கள் பலவும் காணப்பட்ட போதிலும் அவற்றால் சக்தி வாய்ந்த முறையில் குரல் எழுப்ப முடியவில்லை. இதனால் அதுவரை இருந்த அமைப்புகளை ஒன்றுபடுத்தி 1919 டிசெம்பரில் இலங்கை தேசிய சங்கம் அமைத்துக்கொள்ளப்பட்டது. 1915 இன் பின்னர் இந்நாட்டு அரசியல் போராட்ட இயக்கத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான சேர். பொன்னம்பலம் அருணாசலம், இலங்கைத் தேசிய சங்கத்தின் முதலாவது தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். இந்நேரத்தில் அரசியல் செயற்பாடுகளில் கவனம் செலுத்திய சகல இயக்கங்களும் தேசிய சங்கத்தின் தலைமையில் ஐக்கியமுற்றன. அரசியல் அதிகாரத்தை இலங்கையர் வசப்படுத்திக் கொள்வதற்காக பலமிக்க போராட்டங்களை நடத்துவதற்காகத் தேசிய சங்கத்தைத் தோற்றுவித்துக் கொண்டனர். பொதுவான நோக்குடன் செயற்படுவதற்காக சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் அங்கம் வகிக்கின்ற பல்வேறு இயக்கங்களும் தேசிய சங்கம் என்ற ஒரே அமைப்பின் கீழ் ஒன்றுபட்டமை, இந்நாட்டின் வரலாற்றின் முக்கியமான ஒரு சந்தர்ப்பமாகும்.

1920 மனிங் சீர்திருத்தங்கள்

குறூ - மக்கலம் அரசியல் யாப்புச் சீர்திருத்தத்தால் திருப்தியடையாத இலங்கையர்களால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களால் 1920 இல் இச்சீர்திருத்தம் பெற்றுக் கொள்ளப்பட்டது. இச்சீர்திருத்தத்தால் சட்டவாக்கக் கழகத்தின் அங்கத்தவர் தொகை 37 ஆக அதிகரிக்கப்பட்டது. அவர்களுள் 14 பேர் உத்தியோக சார்புள்ளோர் ஆவர். எஞ்சிய 23 பேரும் உத்தியோகச்சார்பற்றோர்களாகும். உத்தியோக சார்பற்றோரில் 7 பேர் ஆளுநரால் நியமிக்கப்பட்டனர். எஞ்சிய 16 பேரும் பிரதேசவாரிப் பிரதிநிதித்துவ முறையில் வரையறுக்கப்பட்ட வாக்குரிமை மூலம் தெரிவுசெய்யப்பட்டனர். உத்தியோக சார்பற்றோர் சட்டவாக்கக் கழகத்தில் பெரும்பான்மையினராயினும் முக்கியமான சந்தர்ப்பங்களில் ஆளுநரால் நியமிக்கப்பட்ட 7 அங்கத்தவர்களும் உத்தியோக சார்புள்ள 14 பேருடன் சேர்ந்து கொள்ளக்கூடிய பின்னணி ஒன்று காணப்பட்டமையால், சட்டவாக்கக் கழகத்தில் ஆளுநருக்குச் சார்பான பெரும்பான்மை வாக்குகளைப் பெறக்கூடிய நிலை இருந்தது. 1920 அரசியல் யாப்புச் சீர்திருத்தத்தின் முக்கியமான பண்புகள் சில கீழே தரப்பட்டுள்ளன,

சட்டவாக்கக் கழகத்தில் முதன்முறையாக உத்தியோக சார்பற்றோர் பெரும்பான்மை பெற்றமை.

பிரதேசவாரிப் பிரதிநிதித்துவ முறை அறிமுகமானவை.

இனவாரிப் பிரதிநிதித்துவம் தொடர்ந்தும் காணப்பட்டமை.

இச்சீர்திருத்தத்தாலும் ஆளுநரின் அதிகாரங்கள் குறைந்துவிடவில்லை. இலங்கை தேசிய காங்கிரஸின் கோரிக்கைகள் கவனியாதுவிடப்பட்டது. இதனால் இலங்கைத் தலைவர்கள் தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுத்தனர். இலங்கை தேசிய சங்கம் ஆரம்பத்தில் இச்சீர்த்திருத்தங்களை நிராகரிப்பதற்குக் கூட ஆயத்தமாகியது. இதனால் குறுகிய காலத்தினுள் இன்னுமொரு அரசியல் யாப்பு சீர்திருத்தத்தைப் பெற்றுத் தருவதாக வில்லியம் மனிங் ஆளுநர் வாக்குறுதி அளித்தார். அதன் பெறுபேறாக 1924 இல் இன்னும் ஓர் அரசியல் சீர்திருத்தம் இடம்பெற்றது. அது மனிங் - டெவன்ஷயர் சீர்திருத்தம் என அறிமுகப்படுத்தப்பட்டது.

1924 மனிங் டெவன்சயர் சீர்த்திருத்தங்கள்

இச்சீர்திருத்தத்தின்படி சட்டவாக்கக் கழக அங்கத்தவர் தொகை 49 ஆக அதிகரிக் கப்பட்டது. அவர்களுள் உத்தியோக சார்புள்ள 12 பேரும் உத்தியோக 37 பேரும் அங்கத்துவம் பெற்றனர். 37 பேரில் 8 பேர் ஆளுநரால் நியமிக்கப்பட்டதோடு, 29 பேர் வாக்குரிமை மூலம் தெரிவு செய்யப்பட்டமை முக்கியமான ஒரு விடயமாகும். உத்தியோக சார்புள்ள 12 பேருடன் நியமனம் பெற்ற 8 பேரும் ஒன்று சேர்ந்தாலும் தெரிவு செய்யப்பட்ட 29 பேர் இருந்தபடியால் வர்கள் சபையில் பெரும்பான்மையினராக இருந்தமை இச்சீர்த்திருத்தத்தின் மிக முக்கியமான அம்சமாகும். 

ஆட்சியைக் கொண்டு நடத்தும் பொறுப்பு ஆளுநர் வசமே ஒப்படைக்கப்பட்டிருந்தாலும் சட்டவாக்கக் கழகத்தில் பெரும்பான்மை பிரதிநிதித்துவப் பலம் அவரிடம் காணப்படாமையால், அங்கு மக்கள் பிரதிநிதிகளின் கைவசமே அதிகாரம் காணப்பட்டது. இதனால் இச்சீர்திருத்தம் அதிகாரமும் பொறுப்பும் வேறுபடுத்தப்பட்ட ஆட்சி முறையாகக் காணப்பட்டமையால் ஆட்சி முறையைக் கொண்டு நடத்துவதில் சிரமங்கள் ஏற்பட்டன. வில்லியம் மனிங் அவர்களுக்குப் பிறகு ஆளுநராக நியமனம் பெற்ற ஹியூ கிளிபர்ட், இந்நிலையைக் குடியேற்ற நாட்டு செயலகத்திற்கு அறிவித்தபடியால், இதனைப் பரிசீலித்து அரசியல் யாப்புத் தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதற்காக டொனமூர் ஆணைக் குழுவை பிரித்தானிய அரசு நியமித்தது.

1931 டொனமூர்  சீர்த்திருத்தங்கள்

டொனமூர் பிரபு தலைமையிலான ஆணைக்குழு 1927 ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்து, மக்களின் கருத்துக்களைப் பெற்று, முன்வைத்த அரசியல் யாப்பு, 1931 இல் இருந்து செயற்படத் தொடங்கியது. இதுவரை நிலவி வந்த பல்வேறு அரசியல் யாப்புச் சீர்த்திருத்தங்களில் இருந்து, இலங்கையரிடம் குறிப்பிடத்தகு அரசியல் பொறுப் புக்களை கையளித்த ஒன்று என்ற முறையில் இது முக்கியத்துவம் பெறுகின்றது. அது சுதந்திரத்திற்கான பயணப் பாதையில் முக்கியமான திருப்புமுனையாகக் கருதப்படக் கூடியதாகும்.

டொனமூர் அரசியல் யாப்பின் முக்கியமான பண்புகள் சிலவற்றைச் சுருக்கமாக அவதானிப்போம்,

இவ்வரசியல் யாப்பின்படி 61 அங்கத்தவர்களைக் கொண்ட அரசுக் கழகம் ஒன்று உருவாக்கப்பட்டது. அதற்கான பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்ட முறை கீழே காட்டப்பட்டுள்ளது. 

அரசுக் கழக அங்கத்தவர்களில் இருந்து அவர்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒருவரே தலைமைப் பொறுப்பை வகித்தார்.

சர்வசன வாக்குரிமை

1912 ஆம் ஆண்டிலிருந்து சட்டவாக்கத் துறைக்குப் பிரதிநிதிகளைத் தெரிவு சொத்து செய்வதற்கு வாக்குரிமை பயன்படுத்தப்பட்டாலும் அவ்வுரிமை உடையோர் தொகை மிகவும் குறைவாகும். வாக்குரிமையைப் பெறுவதற்கு கல்வி அல்லது தகைமைகள் தேவைப்பட்டன. இதனால் பாமர, ஏழை மக்களுக்கு வாக்குரிமை கிட்டவில்லை. 1924 வரை இந்நாட்டு வாக்காளரின் தொகை 4 வீதமாக மிகக் குறைந்த அளவிலேயே காணப்பட்டு வந்தது. பெண்களுக்கு வாக்குரிமை கிட்டியிருக்கவில்லை. இவ்வாறு சனத்தொகையில் கல்வி, செல்வம் உள்ளோருக்கு மட்டும் வாக்குரிமை வழங்கப்பட்டபடியால், ஏழைகளின் பிரச்சினைகளில் அரசியல்வாதிகளின் கவனம் ஈர்க்கப்படுவது குறைவாயுள்ளதாக டொனமூர் ஆணைக்குழு கருதியது. அத்தோடு பெரும்பான்மையான பொது மக்களுக்கு வாக்குரிமை கிட்டாமையால், அரசியல் விடயங்களில் அவர்களின் கவனம் குறைவாக உள்ளதாக இக்குழு கருதியது. இதனால் கல்வி, சொத்து தகைமைகளை விடுத்து 21 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலருக்கும் வாக்குரிமை வழங்கப்பட வேண்டும் என ஆணையாளர்கள் பரிந்துரை செய்தனர். 1931 இல் இலங்கையருக்கு சர்வசன வாக்குரிமை கிடைக்கப் பெற்றமை அதன் பெறுபேறாகும். அது பொது மக்கள் அடையப்பெற்ற மிகப் பெரும் வெற்றியுமாகும்.

நிருவாகக் குழு முறைமை

டொனமூர் சீர்திருத்தங்களுக்கு முன்னர் சட்டவாக்க, சட்ட நிருவாகத் துறையினருக்கு இடையேயான தொடர்பு குறைவாகக் காணப்பட்டது. ஆயினும் இவ்வரசியல் யாப்பின் மூலம் இவ்விரு துறைகளினதும் செயற்பாட்டு அதிகாரம் சட்ட நிருவாகக் கழகத்திற்குக் கிட்டியது. தேர்தல் ஒன்றின் பின்னர் அரசுக் கழக அங்கத்தவர்கள் ஏழு நிருவாகக் குழுக்களாகப் பிரிந்தனர். அந்நிருவாகக் குழுக்கள் ஒவ்வொன்றிடமும் கையளிக்கப்பட்ட துறைகள் வருமாறு,

உள்நாட்டு அலுவல்கள்
விவசாயமும் காணியும்
உள்ளூராட்சி
சுகாதாரம்
கல்வி
போக்குவரத்தும் பொது வேலைகளும் 
தொழில், கைத்தொழில், வர்த்தகம்

ஒவ்வொரு நிருவாகக் குழுவின் தலைவரும் அந்தந்தத் துறைக்கான அமைச்சர் களாயினர். இதனால் டொனமூர் யாப்பின்படி ஏழு இலங்கையர் அமைச்சர்களா யினர். அதன் வாயிலாக இலங்கையரின் தேவைக்கேற்ப அந்தந்த அமைச்சைச் செயற் படுத்துவதற்கான அதிகாரம் கிடைக்கப்பெற்றது. அரசுக் கழகக் காலகட்டத்தில் சுதந்திரமான கல்வி முறை, விவசாயக் குடியேற்றத் திட்டங்கள் போன்ற பொதுமக்கள் சார்ந்த முக்கியமான பல விடயங்களைச் செயற்படுத்துவதற்கு அமைச்சரவைக்கு இயலுமாயிருந்தது.

ஆளுநரும் அரச அதிகாரிகளும்

இதற்கு முன்னர் செயற்பட்ட அரசியல் யாப்பு முறையுடன் ஒப்பிட்டால், டொனமூர் யாப்பின் கீழ் ஆளுநரின் அதிகாரம் பெருமளவிற்குக் குறைக்கப்பட்டிருந்தது.ஆளுநர் அரசுக்கழகத்துடனும் அமைச்சர்களுடனும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டி யிருந்தது. ஆயினும் தேசிய பாதுகாப்பு, நிதி, சட்ட நடவடிக்கைகள் ஆகிய முக்கியமான துறைகள் அரச உத்தியோகத்தர்களின் அதிகாரத்தின் கீழ் வைக்கப்பட்டிருந்தமை டொனமூர் யாப்பின் குறைபாடாகக் கருதப்பட்டது.

1947 சோல்பரி யாப்பின் பின்னணி 

டொனமூர் அரசியல் யாப்பின் கீழ் இலங்கையருக்கு குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தாலும் ஆளுநரிடமும் அரச அதிகாரிகளிடமும் முக்கி யமான ஆட்சித் துறை அதிகாரங்கள் கையளிக்கப்பட்டிருந்தன. ஆகையால் 1931 இலிருந்து ஆளுநரின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தல், அரச அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்த அமைச்சுகளை இலங்கை அமைச்சர்களிடம் கையளித்தல் எனும் விடயங்களுக்கான போராட்டம் ஆரம்பமானது. அதில் அரசுக் கழகமும் அமைச்சர்களும் கோரிக்கைகளை முன்வைப்பதில் முன்னின்று செயற்பட்டனர்.

சூரியமல் இயக்கம்

டொனமூர் அரசியல் யாப்பைச் சீர்திருத்தி நிர்வாக அதிகாரங்களை இலங்கையர் பெற்றுக் கொள்வதற்கு அரசுக் கழகம், அமைச்சரவை, இலங்கை தேசிய சங்கம் என்பவை மேற்கொண்ட போராட்டங்களுக்கு மேலதிகமாக இந்நாட்டு இடதுசாரிகளால் சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்வதற் கான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. 1935 இல் இலங்கை சமசமாஜக் கட்சியை அமைத்துக் கொண்ட கலாநிதி என்.எம். பெரேரா, கலாநிதி கொல்வின் ஆர்.டீ. சில்வா போன்ற இடதுசாரித் தலைவர்கள் சுதந்திரம் கோரி மேற்கொண்ட போராட்டங்களுக்குப் பிரசார முறையாக சூரியமல் இயக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டனர்.

சூரியமல் இயக்கம் பொப்பி மலர் மாற்றாக ஆரம்பிக்கப்பட்டது. முதலாம் இயக்கத்திற்கு உலக மகா யுத்தத்தில் அங்கவீனமுற்ற பிரித்தானிய இராணுவ வீரர் களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் உதவி புரிவதற் காக பொப்பி மலர்களை விற்பனை செய்யும் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. நவம்பர் 11 ஆந் திகதியை உலக சமாதான தினமாகப் பிரகடனப்படுத்தி, ஒவ்வொரு வருடமும் அத்தினத்தில் பொப்பி மலர் விற்பனை இடம்பெற்று வந்தது. இதனோடு அத்தினத்தில் ஊர்வலம் கொண்டாட்டங்களை மேற்கொண்டு பிரித்தானியப் பேரரசிற்கு இலங்கையரின் ஆதரவைத் தெரிவிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. பொப்பி மலரை விற்பதன் மூலம் பெறப் படும் பணம் பிரித்தானியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 1926 இல் இலங்கையில், பிரித்தானிய படையில் பணி புரிந்தோர் சங்கத்தால், பொப்பி மலர் விற்கப்பட்ட அதே தினத்தில் சூரியகாந்தி மலரை விற்கும் இயக்கம் ஒன்று தொடங்கப்பட்டது. பின்னர் இடதுசாரித் தலைவர்கள் இவ்வியக்கத்துடன் சம்பந்தப்படலாயினர்.

அத்தோடு சூரிய காந்தி மலர் விற்பனையின் மூலம் கிடைத்த பணம் இந்நாட்டு ஏழை மக்களின் நலன்களுக்காகச் செலவிடப்பட்டது. பொப்பி மலர் விற்கப்பட்ட பணம் இங்கிலாந்திற்கு அனுப்பப்பட்டபடியால், அம்மலரை வாங்குவது பிரித்தானியப் பேரரசுக்கு ஆதரவைத் தெரிவிப்பதாகும் என பிரசாரத்தை மேற்கொண்ட இடது சாரிகள், சூரியகாந்தி மலரை அணிந்து கொள்வது சுதந்திரப் போராட்டத்திற்கு ஆதரவை நல்குவதாகும் என்ற பிரசாரத்தை மேற்கொண்டனர். பொப்பி மலர் அடிமையின் சின்னம் என்றும் சூரியகாந்தி மலர் சுதந்திரத்தின் சின்னம் என்றும் மேற்கொண்ட பிரசா ரத்தின் மூலம் பிரித்தானியருடைய கொள்கைகளை விமர்சனத்திற்குள்ளாக்கினர். இதற் கமைய சூரியமல் இயக்கம், சுதந்திரத்திற்காக மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தின் பிரசார இயக்கமாக மாற்றமுற்றது.

அமைச்சரவையும் தேசிய சங்கமும்

1939 ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் பெரும்போர் ஆரம்பமானபடியால், பிரித்தானிய அரசுக்கு இலங்கையரின் உதவி தேவைப்பட்டது. இதற்கு உதவுவதற்கு அமைச்சரவை முன்வந்தாலும் யுத்தம் முடிவுற்ற பின்னர் புதிய அரசியல் யாப்புச் சீர்த்திருத்தம் ஒன்றின் அவசியம் பற்றியும் கருத்துக்களை முன்வைத்தனர். யுத்தத்தின்போது இலங்கையின் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு விஷேட பாதுகாப்புச் சபை ஒன்று நிறுவப்பட்டது. அப்போதைய காணி விவசாய அமைச்சராக இருந்த டீ. எஸ். சேனாநாயக்க அச்சபையில் அங்கத்துவம் பெற்றிருந்தார். யுத்தம் இடம்பெற்ற கஷ்டமான காலகட்டத்தில் அமைச்சரவை பெற்றுக் கொடுத்த உதவிகளினால் திருப்தியுற்ற ஆளுநர் உட்பட்ட உயர் அதிகாரிகள், யுத்தம் முடிந்த பின்னர் இலங்கையரின் கோரிக்கைகள் நிறைவேறும் வண்ணம் அரசியல் யாப்புச் சீர்திருத்தம் ஒன்றை வழங்கும்படி பிரித்தானியாவுக்கு அறிவித்தனர்.

அதன் விளைவாக வரையறுக்கப்பட்ட விதத்தில் இலங்கையருக்குப் பொருத்தமான அரசியல் யாப்புத் திட்டம் ஒன்றை வரைவதற்கான அதிகாரம் அமைச்ச ரவைக்கு வழங்கப்பட்டது. 1944 இல் அமைச்சரவையால் வரையப்பட்ட திட்டத்திற்கு அமைவாக இந்நாட்டின் உள்நாட்டு நடவடிக்கைகள் தொடர்பான பூரணமான அதிகாரத்தை இலங்கையருக்கு வழங்கும் வண்ணம், பாராளுமன்ற ஆட்சி முறை ஒன்று பற்றிய ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.

இலங்கை தேசிய சங்கம், 1942 இலிருந்து நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுக் கொள்வதைத் தமது பிரதான நோக்கமாகக் கொண்டு போராட்டத்தை முன்னெடுத்திருந்தது. தேசிய சங்கம் இக்காலத்தில் அமைச்சரவையுடன் ஒத்துழைப்புடன் செயற்பட்டு வந்தது.

1947 சோல்பரி யாப்பு சீர்திருத்தத்தின் இயல்பு 

இலங்கையின் அரசியல் யாப்புச் சீர்த்திருத்தம் தொடர்பாக ஆராய்ந்தறிந்து உரிய ஆலோசனைகளை முன்வைப்பதற்காக பிரித்தானிய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட சோல்பரி ஆணைக்குழு 1944 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதத்தில் இலங்கைக்கு வந்தது. 1945 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் அவர்களுடைய அறிக்கை முன்வைக்கப்பட்டது. அதன்படி நாட்டின் உள்நாட்டு விடயங்களில் முழுமையான அதிகாரத்தை இலங்கையருக்கு வழங்கும் அரசியல் யாப்பு ஒன்றை அவர்கள் முன்வைத்தனர். அவர்களின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்ட வெள்ளை அறிக்கை இந்நாட்டு அரசுக் கழகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் சோல்பரி அரசியல் யாப்புத் தொடர்பான அனுசரணை 1946 ஆம் ஆண்டு மே மாதத்தில் பிரித்தானியாவால் வெளியிடப்பட்டது. 

சோல்பரி யாப்பின்படி நடைபெற வேண்டிய முதலாவது பாராளுமன்றத் தேர்தலை 1947 ஆம் ஆண்டின் மத்தியில் நடத்துவதற்குத் தீர்மானித்திருந்தாலும் இலங்கைக்கு சுதந்திரம் வழங்குதல் தொடர்பாக அதுவரை பிரித்தானியா எவ்வித அறிவிப்பும் செய்திருக்கவில்லை. இதனால் சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்கு இலங்கையருக்கு உள்ள உரிமை பற்றி டீ.எஸ். சேனாநாயக்க உட்பட இந்நாட்டுத் தலைவர்கள் பிரித்தானியாவுக்கு தத்துவார்த்த ரீதியிலான கருத்துக்களை முன்வைத்தனர். இதற்கமைவாக தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பதாக விசேட பிரகடனம் ஒன்றைக் குடியேற்ற நாடுகளின் செயலாளர் வெளியிட்டார். அதன்படி பொதுநலவாயத்திற்கு உட்பட்ட சுதந்திர நாடொன்றின் அந்தஸ்தை இலங்கைக்கு வழங்குவதாகப் பிரகடனப்படுத்தினார். இதற்கிடையில் டீ.எஸ். சேனாநாயக்க அவர்களால் ஐக்கிய தேசியக் கட்சி தோற்றுவிக்கப்பட்டது. 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் கட்சிகளின் நிலை வருமாறு,

ஐக்கிய தேசியக் கட்சி - 42 ஆசனங்கள்
இலங்கை சமசமாஜக் கட்சி - 10 ஆசனங்கள்
தமிழ் காங்கிரஸ் கட்சி - 07 ஆசனங்கள்
இலங்கை இந்திய காங்கிரஸ் கட்சி - 06 ஆசனங்கள்
போல்ஷவிக் - லெனினிஸ்ட் கட்சி - 05 ஆசனங்கள்
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி - 03 ஆசனங்கள்
தொழிலாளர் கட்சி - 01 ஆசனங்கள்
சுயேச்சைகள் - 21 ஆசனங்கள்
மொத்தம் - 95 ஆசனங்கள்

இத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான ஆசனங்களைக் கைப்பற்றியமையால் சுயேச்சை அங்கத்தவர்கள் பலரினது ஆதரவுடன் அரசாங்கத்தை அமைத்தது. 1946 ஆம் ஆண்டிலிருந்து இந்நாட்டின் உள்நாட்டு நிருவாக நடவடிக்கைகளை இலங்கையர்வசம் கையளிப்பதற்கு பிரித்தானிய அரசு விரும்பினாலும் வெளிநாட்டு விவகாரங்களைத் தொடர்ந்தும் பிரித்தானியாவின் கைவசம் வைத்திருப்பதற்கான ஏற்பாடு ஒன்று இருந்து வந்தது. தீவின் புவியியல் அமைவிடம், பாதுகாப்பு, யுத்த நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவமானபடியால் இந்நாட்டுடன் கொண்டிருந்த தொடர்புகளைப் பூரணமாகக் கைவிட்டுவிடப் பிரித்தானிய அரசு முன்வராமையே அதற்கான காரணமாகும். பிரித்தானியரின் இந்த எதிர்பார்ப்பைப் புரிந்து கொண்ட புதிய பிரதமர் டீ.எஸ். சேனாநாயக்க அவர்கள் 1947 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பிரித்தானிய அரசாங்கத்துடன் பாதுகாப்பு, வெளிநாட்டு உறவு தொடர்பான இரு ஒப்பந்தங்களைச் செய்து கொள்ள முன்வந்தார். 

பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு அமைவாக, தேவை ஏற்படும்போது கப்பல், விமானம் உட்பட ஏனைய படை நடவடிக்கைகளுக்கும் இலங்கையை உபயோகித்துக் கொள்வதற்கு இடமளிப்பதற்கு இணங்கினார். வெளிநாட்டு உறவு தொடர்பான ஒப்பந்தத்தின்படி சுதந்திர நாடு ஒன்றாக வெளிநாடுகளுடன் புதிதாக உறவுகளை மேற்கொள்வதற்கு பிரித்தானியாவின் உதவியை இந்நாட்டிற்கு வழங்குவதற்கு இலங்கை விரும்பியது. அதன்பின்னர் இந்நாட்டிற்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பான விடயங்களை உள்ளடக்கிய இலங்கையின் சுதந்திரப் பிரகடனம் 1947 ஆம் ஆண்டு டிசெம்பர் 19 ஆந் திகதி வெளியிடப்பட்டது. 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆந் திகதி தொடக்கம் அவற்றின் விதிகள் செயற்படுத்தப்பட்டதோடு, இலங்கைக்கு சுதந்திரம் கிடைக்கப்பெற்றது. இதனடிப்படையில் இலங்கைக்கான சட்டங்களை இயற்றுவதற்கும் இந்நாட்டின் நிருவாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் பிரித்தானிய அரசுக்கு இருந்த அதிகாரம் முற்றுப் பெற்று அவ்வதிகாரம் இலங்கை அரசாங்கத்திற்குக் கிடைத்தது. 1948 ஆம் ஆண்டு பெப்பிரவரி 10 ஆந் திகதி புதிய பாராளுமன்றம் கோலாகலமாகத் திறந்துவைக்கப்பட்டதோடு, பிரதமர் டீ.எஸ். சேனாநாயக்க அவர்களால் ஆங்கிலேயரின் கொடி இறக்கப்பட்டு, மீண்டும் சிங்கக் கொடி ஏற்றப்பட்டது. இதற்கமைய பெப்ரவரி 4 ஆந் திகதி இலங்கையின் சுதந்திர தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.

1947 சோல்பரி யாப்பு சீர்திருத்தம்

1931-1947 வரையான டொனமூர் அரசியல் யாப்பின் பின்னர், சோல்பரியின் அரசியல் யாப்பு செயற்படத் தொடங்கியது. 1972 ஆம் ஆண்டு குடியரசு அரசியல் யாப்புவரை அது செயற்பட்டது. சோல்பரி யாப்பின்படி அரசாங்கத்தின் பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்கு ஆளுநர் நாயகம், பிரதமரும் அமைச்சரவையும்,பாராளுமன்றம்,நீதி என நான்கு துறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

ஆளுநர் நாயகம்

அதுவரை இருந்து வந்த ஆளுநர் பதவி அகற்றப்பட்டு, இங்கிலாந்தின் முடிக்குரிய பிரதிநிதியாக ஆளுநர் நாயகம் பதவி உருவாக்கப்பட்டது. புதிய அரசியல் யாப்பின் கீழும் பிரித்தானிய மகாராணியே தொடர்ந்தும் இலங்கையின் தலைவியாக ஏற்றுக் கொள்ளப்பட்டபடியால் அரசியின் இந்நாட்டு பிரதிநிதியாக ஆளுநர் நாயகம் செயற்பட்டார். ஆளுநர் நாயகம் பதவி முழுமையாக பெயரளவு நிறைவேற்றுத் துறைப் பதவியாக இருந்ததோடு, அவர் தனது செயற்பாடுகளை முன்னெடுக்கும்போது எப்போதும் போன்று பிரதமரின் ஆலோசனைப்படியே செயற்பட வேண்டியிருந்தது.

பாராளுமன்றம்

சோல்பரி யாப்பின்படி சட்டத்துறை தொடர்பாக பிரதிநிதிகள் சபை, செனட் சபை என்ற இரு சபைகளைக் கொண்ட பாராளுமன்றம் உருவாக்கப்பட்டது. பிரதிநிதிகள் சபையில் 101 அங்கத்தவர்கள் இடம்பெற்றனர். அதில் 95 பேர் தேர்தல் தொகுதி அடிப்படையில் பொது மக்களினால் தெரிவு செய்யப்படுவதுடன் எஞ்சிய 6 பேரும் அங்கத்துவத்தைப் பெற்றுக் கொள்ள முடியாத சிறுபான்மையோருக்காக, பிரதமரின் ஆலோசனைக்கு அமைய ஆளுநர் நாயகத்தால் நியமிக்கப்பட்டோராவர். இச்சபையின் பதவிக் காலம் 5 ஆண்டுகளாகும்.

மூதவை (செனட்) எனப்பட்ட மேல் சபை அல்லது இரண்டாவது சபைக்கு 30 அங்கத்தவர்கள் நியமிக்கப்பட்டனர். பிரதிநிதிகள் சபை மூலம் 15 பேர் நியமிக்கப் படுவதோடு, பிரதமரின் ஆலோசனைக்கு அமைய ஆளுநர் நாயகத்தால் 15 பேரும் நியமனம் செய்யப்பட்டனர். இச்சபையின் பதவிக் காலம் 6 ஆண்டுகளாகும்.

பிரதமரின் தலைமையிலான அமைச்சரவை

பிரதமர் அமைச்சரவையின் தலைவராவார். பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மை அங்கத்தவர்களின் ஆதரவைப் பெறும் ஒருவர் ஆளுநர் நாயகத்தால் பிரதமராக நியமிக்கப்படுவார். இவ்வரசியல் யாப்பின்படி நிறைவேற்று அதிகாரம் அமைச்ச ரவையிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அமைச்சர்கள் பிரதமரின் ஆலோசனைப்படி ஆளுநர் நாயகத்தால் நியமனம் செய்யப்படுவர்.

பிரதமர், பாதுகாப்பு, வெளிநாட்டு விவகார அமைச்சுககளின் பொறுப்புக்களை வகிப்பார். நீதி அமைச்சரும் மேலும் இன்னொரு அமைச்சரும் மேல் சபையில் இருந்து நியமனம் செய்யப்படுவர். இங்கிலாந்தின் பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைவாக அமைச்சரவைக் கூட்டாகப் பாராளுமன்றத்திற்குப் பொறுப்புச் சொல்ல வேண்டியிருந்தது.

நீதிச் செயற்பாடுகள்

சோல்பரி அரசியல் யாப்பின்படி உயர் நீதிமன்றம் உட்பட நீதிமன்றத் தொகுதி ஒன்றால் நீதித்துறையின் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆளுநர் நாயகத்தால் பிரதம நீதிபதியும் உயர் நீதிமன்ற நீதிபதிகளும் நியமிக்கப்பட்டனர். பிரதம நீதிபதியின் தலைமையில் நீதிச்சேவை ஆணைக்குழுவினால் நீதிமன்றங்களுடன் தொடர்பான நீதிபதிகளின் நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இலங்கையில் அரசியல் கட்சி முறைமை 

அரசியல் கட்சி முறை என்பது பாராளுமன்ற ஜனநாயகம் நிலவும் எல்லா நாடுகளிலும் காணப்படுகின்ற கட்டாயமான ஒரு பண்பாகும். பிரித்தானியா, ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் ஆரம்ப காலத்தில் இரு கட்சிகள் மட்டுமே காணப்பட்டன. அவை இரு கட்சி முறை ஆட்சி எனப்பட்டன. பிரான்ஸ், ஜேர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் இந்தியா, இலங்கைப் போன்ற ஆசிய நாடுகளிலும் பல அரசியல் கட்சி கள் காணப்படுகின்றன. அவை பல கட்சி முறை ஆட்சி எனப்பட்டன.

அரசியல் கட்சி முறையால் அவ்வவ் கட்சிகளின் கொள்கை அடிப்படையில் மக்களை ஒன்றுதிரட்டுவது, கட்சியின் கொள்கைகளை மக்கள் முன்கொண்டு செல்வது என்பன இலகுவாயுள்ளன. அத்தோடு பாராளுமன்ற ஜனநாயகம் மக்கள் பிரதிநிதிகளால் மேற்கொள்ளப்படும் ஆட்சி முறையானபடியால், அரசியல்வாதிகளுக்கும் பொதுமக் களுக்குமிடையிலான உறவைக் கட்டியெழுப்புவதற்கும் அரசியல் கட்சி முறைமை அவசியப்படுகிறது. இலங்கையில் அரசியல் கட்சிகள் ஆரம்பிக்கப்பட்டது பிரித்தானியரின் ஆட்சிக் காலத்திலேயாகும். 1931 ஆம் ஆண்டில் இந்நாட்டிற்கு சர்வஜன வாக்குரிமை கிடைத்த போதிலும் 1947 ஆம் ஆண்டு வரை பொதுத் தேர்தல்களில் கட்சி முறைமைக் கவனத்தில் கொள்ளப்படவில்லை. இந்நாட்டில் முதன்முறையாகக் கட்சி முறைமை பிரயோகிக்கப்பட்டது 1947 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின் போதேயாகும். அத்தேர்தலில் இலங்கை சமசமாஜக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் கட்சி என்னும் பல கட்சிகள் போட்டியிட்டன.

இலங்கை சமசமாஜக் கட்சி

இலங்கை சமசமாஜக் கட்சி இந்நாட்டின் பழைய அரசியல் கட்சியாகும். பிரித்தானியரின் ஆட்சியின்போது கல்வி கற்பதற்காக வெளிநாடு சென்றிருந்த கலாநிதி என்.எம். பெரேரா, கலாநிதி கொல்வின் ஆர். டீ சில்வா, திரு பிலிப் குணவர்தன போன்ற தலைவர்கள் வெளிநாடுகளில் நிலவிய இடதுசாரிச் சிந்தனைகளால் கவரப்பட்டு அம்முறையை இந்நாட்டில் செயற்படுத்துவதற்காக 1935 ஆம் ஆண்டு இலங்கை சமசமாஜக் கட்சியை உருவாக்கிக் கொண்டனர். பின்னர் அக்கட்சியில் இருந்து பிரிந்து சென்ற ஒரு பகுதியினரால் வைத்தியர் எஸ்.ஏ. விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் 1943 ஆம் ஆண்டில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சி

1946 ஆம் ஆண்டளவில் இடதுசாரி, சிறுபான்மை இனக் கட்சிகள் சிற்சிலவும் தொடங்கப்பட்டிருந்தாலும் இந்நாட்டு நடுநிலை அரசியல்வாதிகளுக்கு என்று ஓர் அரசியல் கட்சி உருவாகி இருக்கவில்லை. 1947 ஆம் ஆண்டில் முதலாவது பொதுத் தேர்தல் நடைபெற இருந்தமையால் டீ.எஸ். சேனாநாயக்க அவர்களின் தலைமையில் 1946 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சி தோற்றுவிக்கப்பட்டது. அப்போதிருந்த இலங்கை தேசிய சங்கம், எஸ். டபிள்யூ. ஆர். டீ.பண்டாரநாயக்க அவர்களால் ஆரம்பிக்கப்பட்டிருந்த சிங்கள மகா சபை அங்கத்தவர்கள் பலரும் ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்ந்து கொண்டனர். ஆகையால் அக்கட்சி ஆரம்பத்திலிருந்தே பலம் வாய்ந்த ஓரணியாகத் திகழ்ந்தது. 1947 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் 95 வேட்பாளர்களை நிறுத்தி, 42 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பின்னர் 1952 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் 54 தொகுதிகளில் வென்று ஆட்சியை அமைத்துக் கொள்ளும் பலம் அக்கட்சிக்குக் கிடைத்தது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி

எஸ். டபிள்யூ.ஆர்.டீ. பண்டாரநாயக்க அவர்கள், ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி,1951ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை நிறுவினார். ஐக்கிய தேசியக் கட்சியை விட அதிகமாக சாதாரண மக்களின் தேவைகள் தொடர்பாகக் கவனஞ் செலுத்திய அக்கட்சி, சுயமொழி அறிஞர்கள், புத்த பிக்குகள், தேசியவாதிகள் ஆகியோரின் ஆதரவைப் பெற்றிருந்தது. 1951ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பங்கேற்று 9 தொகுதிகளில் வெற்றிப் பெற்றது. அக்கட்சி இன்னும் பல அரசியல் கட்சிகளை ஒன்று சேர்த்துக் கொண்டு மக்கள் ஐக்கிய முன்னணி என்ற பெயருடன் 1956 பொதுத் தேர்தலில் பங்கு பற்றி 51 தொகுதிகளில் வென்று அரசாங்கம் ஒன்றை அமைத்தது. அதற்கமைய 1956 இலிருந்து 1959 வரை பண்டாரநாயக்க அவர்கள் இந்நாட்டின் பிரதமராகச் செயற்பட்டார். 1959 ஆம் ஆண்டில் அவர் கொலை செய்யப்பட்டார். அதன்பின்னர் அவரது மனைவியான திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். இவர் உலகின் முதலாவது பெண் பிரதமர் ஆவார்.

ஏனைய அரசியல் கட்சிகள்

முழு நாட்டிலும் வேட்பாளர்களை நிறுத்தக்கூடியதாயிருந்த ஐக்கிய தேசிய கட்சி. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிகளைத் தவிர சுதந்திரத்திற்கு முன்பிருந்தே இன்னும் பல சிறிய கட்சிகள் செயற்பட்டுக் கொண்டிருந்தன. ஏ.ஈ.குணசிங்க அவர்களால் அமைத்துக் கொள்ளப்பட்ட தொழிலாளர் கட்சி,ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்களின் தமிழ் காங்கிரஸ் கட்சி என்பன அதில் குறிப்பிடத்தக்கவையாகும். இந்நாட்டுத் தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பாகத் தீவிர கவனஞ் செலுத்திய அக்கட்சி 1947 பொதுத் தேர்தலில் 7 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 1949 ஆம் ஆண்டு எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்கள் சமஷ்டிக் கட்சியை ஆரம்பித்ததுடன், தமிழ் காங்கிரஸ் கட் சிக்கு கிடைத்து வந்த மக்களின் ஆதரவு குறைவடைந்தது.

இலங்கையில் காணப்பட்ட அரசியல் கட்சி முறையின்படி ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்ற இரண்டிற்கும் மேலதிகமாக மேலும் சிறிய கட்சி கள் பலவும் காணப்பட்டமையால் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் ஒரு கட்சிக்கும் பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றுக் கொள்ள முடியாத சந்தர்ப்பங்கள் காணப் பட்டன. ஆகையால் பல கட்சிகள் ஒன்று சேர்ந்து கூட்டணிகளை அமைத்துக் கொண்டு கூட்டரசாங்கங்கள் உருவாவது பொதுவாகக் காணப்படுகின்றது.

1956 பொதுத் தேர்தலும் சமூக மாற்றமும்

சுதந்திரத்தின் பின்னர் நீண்ட காலம் பதவியில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சியைத் தோல்வியுறச் செய்து 1956 ஆம் ஆண்டு எஸ். டபிள்யூ. ஆர். டீ பண்டார நாயக்க அவர்கள் தலைமையில் புதிய அரசாங்கம் ஒன்று பதவிக்கு வந்தது. புதிய சக்திகள் பல ஒன்று சேர்ந்து பண்டார நாயக்கவின் தலைமையில் அணிதிரண்டமையாலும் சுதேச மொழி, கலாசாரத்தை மதிக்கும் கொள்கையைக் கடைப்பிடித்தமையாலும் அதுவரை தீர்க்கப்படாதிருந்த சமூக, பொருளாதாரப் பிரச்சினைகள் பலவற்றிற்கும் தீர்வு வழங்க முயற்சித்தமையாலும் அவ்வரசாங்கத்தின் கீழ் சமூக மாற்றம் ஒன்று ஏற்பட்டதாகக் கருதப்படுகின்றது.

1947 ஆம் ஆண்டு தேர்தலின் மூலம் பதவிக்கு வந்த டீ.எஸ்.சேனாநாயக்க அவர்கள், 1952ஆம் ஆண்டு மார்ச் மாதம் அகால மரணமடைந்தபடியால், அவருடைய மகன் டட்லி சேனாநாயக்க அவர்கள் பிரதமர் பதவிக்கு நியமனம் பெற்றார். 1952 ஆம் ஆண்டுத் தேர்தலில் மீண்டும் ஒருமுறை ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்றத்தில் கூடிய தொகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டபடியால் திரும்பவும் ஒருமுறை அவர் பிரதமராக நியமனம் பெற்றார். எனினும் அரிசி மற்றும் உணவுப் பொருள்களின் விலை அதிகரித்தமையால் 1953 ஆகஸ்ட் மாதத்தில் இடதுசாரிக் கட்சிகளால் மேற்கொள்ளப்பட்ட ஹர்த்தால் செயற்பாட்டினால் டட்லி சேனாநாயக்க அவர்கள் பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமா செய்தார். இச்சந்தர்ப்பத்தில் ஐக்கிய தேசியக்
கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான ஜோன் கொத்தலாவல அவர்கள் பிரதமர் பதவிக்கு நியமனம் பெற்றார். அடுத்த பொதுத் தேர்தல் 1957 ஆம் ஆண்டு மே மாதம் நடை பெறவிருந்த வேளையில் அவரின் ஆலோசனைப்படி ஆளுநர் நாயகத்தால் 1956 ஆம் ஆண்டு பெப்பிரவரி மாதத்தில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. இதனால் தேர்தல் ஒன்று இடம்பெறும் நிலை உருவானது.

1956 - பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தனித்துப் போட்டியிட, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோ இன்னும் பல கட்சிகளை ஒன்று சேர்த்துக் கொண்டு பொதுஜன ஐக்கிய முன்னணியாகப் போட்டியிட்டது. இதற்கமைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பிலிப் குணவர்தன அவர்கள் தலைமை தாங்கிய புரட்சிகர சமசமாஜக் கட்சி விஜயானந்த தஹநாயக்க அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட பாஷா பெரமுண, ஐ.எம். ஆர்.ஏ. ஈரியகொல்ல அவர்களும் இன்னும் சுயேட்சை வேட்பாளர்களும் ஒன்று சேர்ந்து மக்கள் ஐக்கிய முன்னணியை ஆரம்பித்திருந்தனர். மக்கள் ஐக்கிய முன்னணி, இலங்கை சமசமாஜக் கட்சியுடன் போட்டித் தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டிருந்தமை அவ்விரு கட்சிகளுக்கும் நன்மை தருவதாயிருந்தது.

1956 தேர்தல் மேடைகளில் பிரதான தொனிப் பொருளாக இருந்தது. சிங்களத்தை அரசாங்க மொழியாக மாற்றுதல் தொடர்பானதாகும். சுதந்திரத்திற்குப் பின்னரும் ஆங்கில மொழிக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வந்தமையால், தாய்மொழியை மட்டும் கற்றவர்கள் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வந்தனர். ஆகையால் மக்கள் ஐக்கிய முன்னணியைச் சூழ உருவான சக்திகள் தேர்தலுக்கு முன்பிருந்தே சிங்களம் அரசகரும மொழியாக வேண்டும் என்று கொள்கையளவில் ஏற்றுக் கொண்டிருந்தன. ஐக்கிய தேசியக் கட்சியும் தேர்தல் நெருங்கியபோது அக்கொள்கைக்கு இணங்கியது.

தேர்தலின்போது பிக்குகள், சுதேச வைத்தியர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள், தொழிலா ளர்கள் ஆகிய ஐம்பெரும் சக்திகளின் ஆதரவு மக்கள் ஐக்கிய முன்னணிக்குக் கிடைக்கப் பெற்றமையும் பல கட்சிகள் ஒன்று கூடி முன்னணி ஒன்றாகப் போட்டியிட்டமையும் இடதுசாரிக் கட்சிகளுடன் போட்டித் தவிர்ப்பு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தமையும் மக்கள் ஐக்கிய முன்னணி இலகுவாக வெற்றி பெறுவதற்கான காரணிகளாக அமைந்தன. மேலே கூறப்பட்டவாறு அம்முன்னணி 51 ஆசனங்கள் இலங்கை சமசமாஜக் கட்சி 14 ஆசனங்கள் வெற்றியீட்டின. இத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியால் 08 ஆசனங்களைப் பெற்றுக் கொள்ள முடியுமாயிருந்தது. சமஷ்டிக் கட்சி 10 ஆசனங்கள் வெற்றி பெற்றது.

மக்கள் ஐக்கிய முன்னணியின் வெற்றியைத் தொடர்ந்து எஸ்.டபிள்யூ.ஆர்.டீ பண்டார நாயக்க அவர்கள் பிரதமரானார். அவர் பிரதமர் பதவி வகித்த இக்காலம் இந்நாட்டு வரலாற்றிலேயே பெருமாற்றங்கள் இடம்பெற்ற ஒரு காலகட்டமாகும். அக்காலத்தில் பின்பற்றப்பட்ட கொள்கைகள், மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் என்பனவற்றில் முக்கியமானவை சில வருமாறு,

சிங்களத்தை அரச கரும மொழியாக்கியமை

பிரித்தானியாவுடன் 1947ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட பாதுகாப்பு, வெளிநாட்டு விவகார ஒப்பந்தத்தை இரத்துச் செய்தமை.

வல்லரசுகளின் அணிகளிலிருந்து விலகி நடுநிலைமையான வெளிநாட்டுக் கொள்கையொன்றைக் கைக்கொண்டமை.

தேசியமயப்படுத்தும் திட்டத்திற்கு அமைவாக துறைமுகம், போக்குவரத்துப் பேருந்துகள் என்பவை அரசுடைமையாக்கப்பட்டமை. 

தேசிய விவசாயத்தையும் கைத்தொழிலையும் முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டமை.

உயர் கல்வித் துறையின் விருத்திக்காக வித்தியோதய, வித்தியாலங்கார பிரிவெனாக்கள், பல்கலைக்கழகங்களாகத் தரமுயர்த்தப்பட்டமை.

பண்டாரநாயக்க அவர்கள் செயற்படுத்திய தேர்தல் இயக்கத்தால் இந்நாட்டுச் சாதாரண குடிமக்களில் இருந்து தோன்றிய தலைவர்கள் பலருக்குத் தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றத்தில் பிரவேசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அதே போன்று அவருடைய ஆட்சிக் காலத்தில் தேசிய பண்புகளை மதித்து நடைமுறைப்படுத்தியமையும் அதுவரை தீர்க்கப்படாது இருந்த பொதுமக்களின் பிரச்சினைகள் தொடர்பாகக் கவனஞ் செலுத்தப்பட்டமையும் அவ்வரசாங்கத்தின் காலத்தில் சமூக மாற்றமொன்று நிகழ்ந்தமையும் ஏற்றுக் கொண்டாக வேண்டும்.

பொருளாதார மாற்றங்கள்

இலங்கையின் பாரம்பரிய சமூக, பொருளாதார, கலாசார முறைகள் அனுராதபுர ஆட்சிக் காலத்திலும் கடைப்பிடிக்கப்பட்டது. தேவநம்பிய திஸ்ஸ மன்னன் காலம் முதல் பௌத்த சமயத்தை அடிப்படையாகக் கொண்ட சமூக, பொருளாதாரக் கட்டமைப்பு 16 ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர் வருகையுடன் மாற்றங்காணத் தொடங்கியது. போர்த்துக்கேயர் வர்த்தகத்தில் அதிக கவனம் செலுத்தியமையினால் அவர்களின் ஆட்சிப் பிரதேசத்தில் விவசாயம் முக்கியத்துவத்தை இழக்க ஆரம்பித்தது. இலங்கையின் கரையோரப் பிரதேசத்தில் ஒல்லாந்தர் ஆட்சி நிலவியபோது அவர்கள் ஏற்றுமதியை நோக்கமாகக் கொண்டு கறுவா, மிளகு முதலிய பயிர்ச் செய்கைகளில் ஈடுபட்டனர். அதே போன்று ஒல்லாந்தர் சிறு கைத்தொழில்களை ஆரம்பித்து செய்து முடிக்கப்பட்ட வேலையின் அளவிற்கு கூலி வழங்கிய காரணத்தால் சம்பளத்திற்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் சிறியளவில் உருவானதையும் அவதானிக்க முடிகின்றது.ஆயினும் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் என்னும் ஐரோப்பியர்கரையோரப் பிரதேசத்தில் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டும்போது நாட்டின் மத்திய பகுதியின் மாபெரும் நிலப்பரப்பில் கண்டி இராச்சியம் காணப்பட்டமையால் இலங்கையின் மரபு வழிவந்த சமூகப் பொருளாதார முறையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்துவது சாத்தியமற்றதாயிற்று.

பிரித்தானியர் இலங்கையைத் தமது குடியேற்ற நாடாக மாற்றியபோது மரபு ரீதியான பொருளாதாரக் கட்டமைப்பைக் கொண்ட சமூக முறைமை ஒன்று காணப்பட்டது.

அச்சமூக அமைப்பில் உயர்ந்த பிரபுத்துவ வகுப்பொன்று இருந்த போதிலும் அவர்கள் நாட்டு சனத்தொகையுடன் ஒப்பிடும்போது மிகவும் சொற்பமான தொகையினராகக் காணப்பட்டனர். இவர்கள் நாட்டின் நிருவாக நடவடிக்கைகளில் ஈடுப்பட்டவரா யிருந்தனர். நாட்டின் பெருந்தொகையான மக்கள் சாதாரண குடிமக்களாகக் காணப் பட்டதுடன் அவர்கள் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கையை மேற்கொண்டிருந்தனர்.

இந்நாட்டின் மக்கள் வாழ்க்கை கிராமத்தை அடிப்படையாகக் கொண்டமைந்திருந்தது. கிராம மக்களுக்குத் தேவையான உணவுப் பொருள்கள் கிராமத்திலேயே உற்பத்தி செய்யப்பட்டமையால் அதனை சுயதேவை நிறைவு செய்யும் கிராமியப் பொருளாதாரம் என நாம் அறிமுகப்படுத்தலாம். பரஸ்பரம் உதவி புரியும் சமாதான சக வாழ்வு சமூகத்தில் நிலவியது. அக்கால சமூகத்தில் கூலிக்காக வேலை செய்யும் பண்பு காணப்படவில்லை. தமது விவசாய வேலைகளின்போது அயலவரின் ஒத்துழைப்பு பெறப்பட்டதுடன் அவர்களின் வேலைகளின்போதும் தமது உழைப்பை வழங்கும் உழைப்புப் பரிமாற்றம் சமூகத்தில் மேற்கொள்ளப்பட்டது. இது "அத்தம்' முறை எனப்பட்டது. எனவே சமூகத்தில் பணப்புழக்கம் மிகக் குறைவாகவே காணப்பட்டது.

கிராம மக்களின் சிறிய பிரச்சினைகளும் வழக்குகளும் கிராம சபைகளால் விசாரிக் கப்பட்டு தீர்த்து வைக்கப்பட்டன. கிராமத்தின் குளங்கள், கால்வாய்கள் பராமரிப்பு மற்றும் வீதிகள், விகாரைகள் அமைத்தல் முதலிய பொதுப்பணிகளில் கிராம சபைகள் முதலிடம் வகித்தன. மரபு ரீதியாகப் பின்பற்றப்பட்டு வந்த அரச முறை மூலம் கிராம சபை தேவையான உழைப்பைப் பெற்றுக் கொண்டது. கிராம சபைகள் வழக்குகளைத் தீர்க்கும் நீதிமன்றங்களாகவும் செயற்பட்டன.

1815ஆம் ஆண்டுக்கு முன்னர் அரசுக்குத் தேவையான உழைப்பு அரச சேவை முறை மூலம் பெற்றுக் கொள்ளப்பட்டது. அக்கால கட்டத்தில் கட்டாய சேவை, நிலத்தை அனுபவிக்கும் அரச சேவை முறை என இரண்டு முறைகள் காணப்பட்டன.

இராஜகாரிய முறை

முற்காலத்தில் அரசர்களுக்கு சேவையாற்றிய அதிகாரிகளின் வாழ்வாதாரத்திற்காக நிலங்கள் வழங்கப்பட்டிருந்தன. சேவாபரவேணி என அழைக்கப்பட்ட அம்மானிய நிலங்களில் விவசாயம் செய்தவர்கள் அரசனுக்குத் தேவையான சேவைகளும் வழங்கினர். அரச அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட நிலங்களில் விவசாயம் செய்வதற்காக அவை மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தன. இந்த நிலங்கள் பயிரிடுவதற்கான வரியாகத் தமது உழைப்பை வழங்குவது நிலத்தை அனுபவிப்பதற்கான இராஜகாரிய முறை எனப்பட்டது.

அரச சேவை முறை 

நாட்டிலுள்ள வயது வந்த ஆண்கள் அனைவரும் ஆண்டில் குறிக்கப்பட்ட சில தினங்களில் எவ்வித கொடுப்பனவுகளுமின்றி அரசனுக்கு இலவசமாக சேவை வழங்க வேண்டியிருந்தது. கிராமப் பிரதானிகளால் கிராம சபைகளின் கீழ் இந்த அரச சேவைமுறை செயற்படுத்தப்பட்டது. பெரும்பாலும் கிராமத்தின் பொது வேலைகள் கட்டாய அரச சேவை முறை மூலமே நிறைவேற்றப்பட்டன.

கோல்புறூக் ஆணைக்குழுவின் பொருளாதாரச் சீர்த்திருத்தங்கள் 

ஆங்கிலேயரின் ஆட்சியில் அரசின் வருமானத்தை விட நிருவாகச் செலவு அதிகரித்த மையே கோல்புறூக் ஆணைக்குழுவை அனுப்புவதற்கான காரணமாக அமைந்தது. இது பொருளாதாரத்துடன் தொடர்பான விடயமென்பதால் ஆங்கிலேயரின் நோக்கங் களுக்குப் பொருத்தமான முறையிலான பொருளாதாரச் சீர்திருத்தங்கள் பலவற்றை கோல்புறூக் ஆணைக்குழு முன்வைத்துள்ளமை தெரிகின்றது. அக்காலப் பகுதியில் அரசு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியைத் தீர்த்துக் கொள்வதற்குப் பொருளாதார ரீதியாகப் பயன்தரக்கூடிய துறைகளில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. ஆயினும் அரசிடம் அதற்கான மூலதனம் இல்லாத காரணத்தால் தனியார் துறையினரை முதலீடுகளில் ஈடுபடுத்துவதற்கான ஊக்குவிப்பை இந்நாட்டில் ஏற்படுத்துவதே கோல்புறூக்கின் முக்கிய நோக்கமாக அமைந்தது.

இலங்கையில் நிலவிய மரபு ரீதியான காணி உரிமைகள் தனியார் முயற்சியாண்மையின் வளர்ச்சிக்கான தடையாக இருந்தமையால் அரசு காணி விற்பனைக் கொள்கையை செயற்படுத்த வேண்டும் என்று கோல்புறூக் சிபாரிசு செய்தார். இதன் மூலம் உள்நாட்டினருக்கும் வெளிநாட்டினருக்கும் இலங்கையில் தமக்குத் தேவையான நிலத்தை விலை கொடுத்து வாங்குவதற்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. இந்த நாட்டில் இருந்த சிவில் சேவை அதிகாரிகளுக்கு பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட வேண்டும் என கோல்புறூக் சிபாரிசு செய்ததற்கிணங்க அரச நிலங்களை அவர்களும் பெற்றுக்கொள்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது.

அவ்வாறு நிலத்தை விலை கொடுத்து வாங்கிய முயற்சியாளர்களுக்கும் அந்நிலத்தில் பயிர்ச் செய்கை மேற்கொள்வதற்கு உழைப்பு தேவைப்பட்டது. அதுவரை காலமும் அரசின் தேவைகளுக்கான உழைப்பு கட்டாய சேவையான அரச கரும முறை மூலம் எவ்வித கொடுப்பனவுகளும் இன்றியே பெற்றுக் கொள்ளப்பட்டது. இது தனியாள் சுதந் திரத்திற்கு தடையாக இருந்ததைப் போலவே தனியார் துறை முயற்சியாண்மைக்கும் பொருத்தமற்றது எனக் கோல்புறூக் கருதினார். இதற்கிணங்க கட்டாய அரச சேவை முறையை நீக்க வேண்டும் என கோல்புறூக் ஆலோசனை வழங்கினார். அதன்படி உழைப்பு என்பது பணம் கொடுத்துப் பெற்றுக்கொள்ளக்கூடிய தன்மையைப் பெற்றதுடன் சம்பளத்திற்கு வேலை செய்யும் தொழிலாளர் வகுப்பினர் உருவாகும் வாய்ப்பும் ஏற்பட்டது.

கோல்புறூக் இலங்கை வரும்போது நிலவிய பொருளாதார முறைக்கேற்ப கறுவா மற்றும் உப்பு வர்த்தகம் அரசின் ஏகபோக உரிமையாகக் காணப்பட்டன. இவ்வாறான அரச ஏகபோக உரிமை தனியார் துறையின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்தது. எனவே கறுவா, உப்பு வர்த்தகத்தின் அரச ஏகபோக உரிமையை நீக்கி தனியார் துறையினருக்கும் அவ்வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு இடமளிக்குமாறு கோல்புறூக் சிபார்சு செய்தார். அக்காலப் பகுதியில் அரசின் வருமான வழிகளாக இருந்த மீன் வரி, மதுவரி, காணிவரி என்பன நேர் வரிகளாக அறவிடப்பட்டன. அதாவது பிடிக்கப்படும் மீனின் ஒரு பகுதி வரியாக செலுத்தப்பட்டது. ஒவ்வொரு பிரதேசத்திலும் வரி அறவிடும் உரிமை ஏலத்தில் விற்கப்பட்டிருந்தது. ஏலத்தில் அவ்வுரிமையைப் பெற்றவர்கள் தமது வரியை மீனாகப் பெற்றுக் கொள்வதைக் கைவிட்டு மீன்பிடிப் படகுகளுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவதன் மூலம் நேரில் வரியை அறவிடுவதற்கும் கோல்புறூக் ஆலோசனை வழங்கினார். காணி வரியும் நேர் வரியாகவே அறவிடப்பட்டது. அதாவது வரி அறவிடும் உரிமையை ஏலத்தில் பெற்றவர்கள் அப்பிரதேசக் காணிகளில் விளைந்த பயிர்களின் ஒரு பகுதியை வரியாக அறவிட்டு வந்தனர். இம்முறையை நீக்கி விட்டு எல்லாக் காணிகளிலிருந்தும் சமவளவு வரியைப் பணமாக அறவிடுமாறு கோல்புறூக் சிபார்சு செய்தார்

நாட்டில் சேமிப்பு வங்கி ஒன்றை ஆரம்பிக்குமாறும் கோல்புறூக் சிபார்சு செய்தார். ஏனெனில் பெருந்தோட்டத் துறையில் முதலீடு செய்யும் முயற்சியாளர்கள் சாதாரண வட்டிக்கு கடனைப் பெற்றுக் கொள்வதே அதன் நோக்கமாகும்.

பெருந்தோட்டத் துறையின் அபிவிருத்தி

கோல்புறூக் ஆணைக்குழுவின் சிபார்சுகள் 1833 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப் படுத்த ஆரம்பித்ததன் பின்னர் இந்நாட்டில் பாரிய பொருளாதார மாற்றம் ஒன்றிற்கான அடித்தளமிடப்பட்டது. தனியார் முயற்சியாளர்களை ஊக்குவித்தல் கோல்புறூக்கின் பொருளாதாரச் சீர்திருத்தங்களின் நோக்கமாக இருந்த போதிலும் இலங்கையில் பணம் படைத்த முதலீட்டாளர்கள் காணப்படவில்லை. எனினும் வெளிநாட்டு முதலீட் டாளர்கள் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை கொள்வனவு செய்யும் ஆற்றலைப் பெற்றிருந்தனர். இதனைக் கோல்புறூக் அறிந்து வைத்திருந்தார்.

இலங்கை வந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஏற்றுமதி மூலம் அதிக இலாபம் ஈட்டக்கூடிய வர்த்தக விவசாயப் பயிர்ச்செய்கையிலேயே முதலீடுகளை மேற்கொண்ட னர். எனவே 19ஆம் நூற்றாண்டில் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கை துரித வளர்ச்சி கண்டது.

கோப்பிப் பயிர்ச் செய்கை

இலங்கையில் ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் கரையோரப் பிரதேசத்தில் சிறியளவில் கோப்பிப் பயிர்ச் செய்கை ஆரம்பிக்கப்பட்ட போதிலும் அக்காலத்தில் கறுலாப் பயிர்ச் செய்கை முதலிடம் பெற்ற காரணத்தால் கோப்பிச் செய்கை வளர்ச்சியடையவில்லை.

1833 ஆம் ஆண்டு கோல்புறூக் சீர்திருத்தங்களின் பின்னர் வெளிநாட்டு முதலீட்டா ளர்கள் அதிகளவில் கோப்பித் தோட்டங்களில் முதலீடு செய்தமை.

ஆங்கிலேயர் கண்டியைக் கைப்பற்றும்போது சில இடங்களில் வீட்டுத் தோட்டப் பயிராக கோப்பி காணப்பட்டது. ஆங்கிலேயராட்சிக் காலத்தில் அது பெருந்தோட்டப் பயிராக வளர்ச்சி அடைந்தது. 19 ஆம் நூற்றாண்டு கோப்பிச் செய்கையின் வளர்ச்சியில் பல காரணிகள் பங்களிப்புச் செய்துள்ளன.

கோப்பிச் செய்கையின் விருத்தியில் செல்வாக்கு செலுத்திய காரணிகள்

ஐரோப்பிய சந்தையில் கோப்பிக்கான கேள்வி அதிகரித்தமை. 

கோப்பிச் செய்கை மூலம் அதிசு இலாபம் அடைய முடிந்தமை.

தென்னிந்திய ஊழியர்கள் மூலம் குறைந்த கூலிக்கு உழைப்பு பெற்றுக் கொள்ளப் பட்டமை. 

ஆளுனர் எட்வர்ட் பான்ஸ் (1824-1831) காலத்தில் கோப்பிக்கான ஏற்றுமதி வரி குறைக்கப்பட்டதும், கோப்பித் தோட்டத் தொழிலாளர்கள் கட்டாய அரச சேவையிலிருந்து விடுவிக்கப்பட்டதும் கோப்பிச் செய்கை விருத்திக்குக் காரணங்களாய் அமைந்தன.

1837-1847 காலப் பகுதியில் மலையகப் பிரதேசத்தில் கோப்பிச் செய்கை வேகமாக விருத்தியடைந்தது. இக்காலப்பகுதியில் கோப்பி மூலம் கிடைத்த அதிக இலாபம் காரணமாக அரசாங்க அதிகாரிகளின் கோப்பித் தோட்டங்கள் 500 அளவில் காணப்பட்டதாக அறிக்கைகள் கூறுகின்றன. எனவே தும்பறை, கம்பளை, பேராதனை மாத்தளை முதலிய மத்திய மாகாணப் பிரதேசங்களிலும் பதுளை மாவட்டத்திலும் வெற்றிகரமான முறையில் கோப்பிச் செய்கை மேற்கொள்ளப்பட்டது. 

1834 ஆம் ஆண்டு ஏற்றுமதி செய்யப்பட்ட கோப்பியின் அளவை விட ஐந்து மடங்கு அதிகமாக 1844 ஆம் ஆண்டு ஏற்றுமதி செய்யப்பட்டது. 1844 ஆம் ஆண்டின் பின்னர் பிரித்தானியா பின்பற்றிய சுதந்திர வர்த்தகக் கொள்கை காரணமாக பிரித்தானிய சந்தையில் இலங்கைக் கோப்பி கடும் முகங்கொடுக்க நேரிட்டது. அதேபோல் 1848 ஆம் ஆண்டளவில் ஏற்பட்ட உலகப் பொருளாதார வீழ்ச்சியும் இலங்கையின் கோப்பிச் செய்கையைப் பாதித்தது. மேற்படி காரணங்களால் கோப்பிக் கான கேள்வி குறைவடைந்ததால் 1847ஆம் ஆண்டளவில் கோப்பித் தோட்டங்களின் பெறுமதி வீழ்ச்சியடைந்தது. ஆயினும் 1850 களின் பின்னர் வெற்றிகரமான தோட்ட முகாமைத்துவம் காரணமாக உற்பத்திச் செலவு குறைந்தமையாலும் ஐரோப்பாவில் கோப்பிக்கான கேள்வி அதிகரித்ததாலும் கோப்பிச் செய்கை இயல்பு நிலையை அடைந்தது, ஆயினும் 1859 ஆம் ஆண்டில் கோப்பிப் பயிருக்கு ஏற்பட்ட ஹெமீலியா வெஸ்டாக்ஸ் (Hemilia Vestatrix) என்னும் இலை வெளிறல் நோய் வேகமாகப் பரவிய காரணத்தால் கோப்பிச் செய்கை முற்றாக வீழ்ச்சியடைந்தது.

சிங்கோனா  பயிர் செய்கை

கோப்பிச் செய்கையின் வீழ்ச்சியைத் தொடர்ந்து சில முயற்சியாளர்கள் சிங்கோனா பயிர்ச் செய்கையில் ஈடுபட்டனர். ஆயினும் சிங்கோனா அதியுயர்ந்த பிரதேசங்களில் மட்டுமே வெற்றியளித்ததுடன் அது குவினைன் என்னும் மருந்திற்கான மூலிகைப் பயிராக விளங்கியமையால் அதற்கான கேள்வியும் குறைவானதாகவே காணப்பட்டது. எனவே கோப்பிக்கான மாற்றுப் பயிர் என்னும் வகையில் சிங்கோனா பயிர்ச் செய்கை வெற்றியளிக்கவில்லை.

கொக்கோ பயிர் செய்கை

கோப்பிச் செய்கையின் வீழ்ச்சியைத் தொடர்ந்து கொக்கோ பயிர்ச் செய்கைக்கு அரச அனுசரணை கிடைத்தது. கொக்கோப் பயிருக்கு நிழல் தேவைப்பட்ட காரணத்தால் உற்பத்தியாளர் அதற்கு மேலதிகமாக செலவு செய்ய நேர்ந்தது. அத்துடன் மாத்தளை மாவட்டத்தில் மாத்திரமே கொக்கோ பயிர்ச் செய்கை வெற்றியளித்தது. இது மிகவும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட காலகட்டத்திலும் 12 000 ஏக்கர் பரப்பளவை அது தாண்டவில்லை. எனவே கோப்பிச் செய்கைக்கு பதிலீடாக கொக்கோ பயிரும் வெற்றியளிக்கவில்லை.

தேயிலைப் பயிர் செய்கை

கோப்பியின் விலை உலகச் சந்தையில் அடிக்கடி கூடிக் குறைந்தமையால் மலையகப் பிரதேசத்தில் பயிரிடுவதற்கு உகந்த வேறு பயிர்கள் பரீட்சார்த்தமாக மேற்கொள்ளப் பட்டன. தேயிலையும் அவ்வாறு பரீட்சார்த்தமாகப் பயிரிடப்பட்டது. 1867ஆம் ஆண்டு பெருந்தோட்ட உற்பத்தியாளர் சங்கம், சிலரை அசாமிற்கு அனுப்பித் தேயிலை தொடர்பான மேலதிக விபரங்களைப் பெறுவதற்கு ஏற்பாடு செய்தது. இதற்கிடையில் ஜேம்ஸ் டெய்லர் என்பவர் லுல் கந்துர என்னும் இடத்தில் சில ஏக்கர் பரப்பில் தேயிலைச் செய்கையை மேற்கொண்டார். அதன் பயனாக 1875 ஆம் ஆண்டில் 500 எக்கர் பரப்பில் தேயிலைப் பயிர்ச் செய்கை வளர்ச்சியடைந்தது. 

கோப்பிப் பயிர்ச் செய்கையின் வீழ்ச்சி காரணமாக அப்பயிர்ச் செய்கையாளர்கள் தேயிலையைப் பயிரிட்டமையால் அது விரைவாகப் பரவியது. 1894 ஆம் ஆண்டாகும்போது தேயிலை 400000 ஏக்கரில் பயிரிடப்பட்டமையைக் கொண்டு தேயிலைப் பயிச்செய்கை விருத்தியை நாம் புரிந்து கொள்ள முடியும். இலங்கையின் உலர் வலயம் தவிர்ந்த 6000 அடி வரை உயரமான எல்லாப் பகுதிகளிலும் தேயிலையைப் பயிரிட முடிந்தமையால் மத்திய, ஊவா, சபரகமுவ மாகாணங்களில் தேயிலைப் பயிர்ச் செய்கை பரவியது. பின்னர் தென் மாகாணத்திலும் மேல் மாகாணத்திலும் தேயிலை பயிரிடப்பட்டது. 1930 ஆம் ஆண்டாகும்போது மத்திய அளவினதும் பாரியளவினதுமான 1200 தேயிலைத் தோட்டங்கள் இலங்கையில் காணப்பட்டதாக அறிக்கைகள் கூறுகின்றன.

தேயிலைப் பயிர்ச்செய்கையின் வளர்ச்சி காரணமாக அது இலங்கையின் பிரதான ஏற்றுமதிப் பயிராக மாறியது. முதலாம் உலகப் போரின் பின்னர் பாரியளவில் தேயிலை உலகச் சந்தையில் நிரம்பல் செய்யப்பட்டது. 1929 உலகப் பொருளாதார வீழ்ச்சி காரணமாக தேயிலையின் விலை இடைக்கிடை குறைவடைந்த போதிலும் அது தற்காலிகமானதாக இருந்தது. பின்னர் மீண்டும் இயல்பு நிலையை அடைந்தது.

தேயிலைப் பயிர்ச்செய்கை, இலங்கையில் கிட்டத்தட்ட 200 ஆண்டு வரலாற்றைக் கொண்டது. 1824 ஆம் ஆண்டு பிரித்தானிய காலனித்துவ காலப்பகுதியில், முதன் முதலாக சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்டதாக பல வரலாற்றுச் சான்றுகள் குறிப்பிடுகின்றன. ஆரம்ப காலத்தில் இவை பேராதனை தாவரவியல் பூங்காவில் கண்காட்சிக்காக வரவழைக்கப்பட்டதாகவும், 1839 ஆம் ஆண்டில் இந்தியாவின் அஸ்ஸாம் மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களிலிருந்து கொண்டு வந்த தேயிலை வகை, எமது நாட்டில் விளையக்கூடியவையா என்ற பரிசோதனையின் நிமித்தம் பயிரிடப்பட்டதாகவும் பல சுவாரஸ்யமான பின்னணி கதைகள் உண்டு.

ஜேம்ஸ் டெய்லர் என்ற ஸ்கொட்லாந்து நாட்டவர், தேயிலைப் பயிர்ச்செய்கையை மற்றொரு பரிமாணத்திற்கு ஈட்டிச்சென்றார். அதுவரை சிறியளவில் மேற்கொள்ளப்பட்ட தேயிலைப் பயிர்ச்செய்கை, இவரது காலத்தில் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையாக உருவெடுத்து வணிகமயமானது. மேலும் இதனை விருத்தி செய்யும் நோக்கத்தில் 1866 ஆம் ஆண்டளவில் தேயிலை பயிர்ச்செய்கையின் நுட்பங்களை அறிந்துகொள்வதற்காக இந்தியா சென்று வந்த இவர், கண்டிக்கு அருகேயுள்ள ‘லூல்கந்துரை’ என்ற இடத்தில், 19 ஏக்கர் விசாலமான தேயிலைத்தோட்டம் ஒன்றை முதன்முதலில் நிறுவினார். காலப்போக்கில் அவ் இடத்திலே, 1872 ஆம் ஆண்டு முதலாவது தேயிலைத் தொழிற்சாலை நிர்மாணிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 1875 ஆம் ஆண்டளவில் லண்டனில் நடைபெற்ற தேயிலை கொள்வனவு ஏலத்திற்கு இலங்கையில் இருந்து முதன் முதலாக தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டது.

1867களில் கண்டியில் 19 ஏக்கரில் ஆரம்பிக்கப்பட்ட இப் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை, நுவரெலியா, டிம்புள, உடபுஸ்ஸெல்லாவ மற்றும் ஊவா முதல் தென்மாகாணம் வரை வளர்ச்சி கண்டது. இதன் விளைவாக இலங்கை உலகின் 19% தேயிலைக் கிராக்கியை நிவர்த்தி செய்ததுடன், உலகில் அதிகம் தேயிலை ஏற்றுமதி செய்யும் நாடுகள் பட்டியலில் 4ம் இடத்தை பிடித்தது. 2019 ஆம் ஆண்டில், அண்ணளவாக 300,000 மெற்றிக் டொன் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதன் பெருமதி 1.5 $ பில்லியனுக்கும் அதிகமாக விளங்குவதோடு, GDP என்று கூறப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2% பங்கை வகிக்கின்றது. மேலும் இப் பயிர்ச்செய்கை மூலம் கிட்டத்தட்ட 10 இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் துறையாக இது விளங்குகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

குளிரான காலநிலை, மழை வீழ்ச்சி போன்ற காரணிகள் தேயிலையின் தரம், சுவை மற்றும் வாசனைக்கு அதிகம் தாக்கம் செலுத்தும் அம்சங்களாக விளங்குகின்றன. பொதுவாக ஊவா மாகாணங்களில் விளையும் தேயிலை, வித்தியாசமான பருவகால காரணிகள் கொண்டடங்குவதுடன், இவை ஜேர்மனி மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அதிகம் பகிரப்படுகின்றன. கடின நிறம் மிகுந்த தேயிலை வகைககள் ஆஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க நாடுகளிலும், தாழ் மலைப்பிரதேசங்களில் பெறப்படும் தேயிலை வகைகள் அதிகமாக மேற்காசிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கிடையும் ஏற்றமதி செய்யப்படுவதுடன், இத் தேயிலை வகைகளுக்கே உலகளாவிய ரீதியில் அதிக கிராக்கி உள்ளதென்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் தேயிலையின் கனவளவிற்கு அமைய Dust, BOP, BOPF மற்றும் OP என, தர நிர்ணயம் செய்யப்படுகிறது. இதில் குறைவான தரமாக கருதப்படும் Dust என்று அழைக்கப்படும் தேயிலையே இலங்கையில் அதிகமானோர் நுகர்வதாகும். அப்படிப் பார்த்தால், எமது நாட்டிலே விளையும் தரமான தேயிலையின் உண்மையான சுவை, இலங்கையர்களுக்கு தெரியாது என்பதே கசப்பான உண்மை. தேயிலை இவ்வாறாக தர நிர்ணயம் செய்யப்பட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதனால்தான், நம் நாட்டு தேயிலைக்கு உலகளவில் இன்றும் கிராக்கி உண்டு. மேலும் இலங்கையில் விளையும் அனைத்து தேயிலைகளிலும் மெதெய்ல் ப்ரோமைட் என்ற சேதன பதார்த்தம் நீக்கப்படுவதனால், ‘Ozon free tea’ என்று உலகளவில் போற்றப்படுகின்றது.

தேயிலைப் பயிரின் விருத்தியில் பங்களிப்புச் செய்த காரணிகள்

இலங்கைத் தேயிலைக்கு உலசு சந்தையில் சிறந்த கேள்வி நிலவியமை.

உலர் வலயம் தவிர இலங்கையின் ஏனைய பிரதேசங்கள் தேயிலைப் பயிர்ச் செய்கைக்கு உசுந்ததாகக் காணப்பட்டமை.

நவீன இயந்திர சாதனங்களுடனான தொழிற்சாலைகள் காரணமாக தரமானதேயிலை உற்பத்தி செய்யப்பட்டமை. 

பெருந்தெருக்கள், புகையிரத வீதிகள் காரணமாக போக்குவரத்து வசதிகள் மேலும் முன்னேற்றமடைந்தமை.

தென்னிந்தியாவில் இருந்து தொழிலாளர்கள் கொண்டுவரப்பட்டு குறைந்த கூலிக்கு உழைப்பு பெற்றுக் கொள்ளப்பட்டமை.

தென்னை பயிர்ச்செய்கை

தென்னை பண்டைக் காலம் முதல் இலங்கையில் பயிரிடப்பட்டு வந்த வீட்டுத் தோட்டப் பயிராகும். 1850களில் கோப்பியின் விலை வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து தென்னையின் மீது கவனம் செலுத்தப்பட்டது. ஐரோப்பியரை விட இலங்கையர் தென்னை பயிரிடுவதில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். 1880 ஆம் ஆண்டளவில் தென்னந்தோட்ட உரிமையாளர்கள் 65 வீதமானோர் இலங்கையராக இருந்தனர்.

மலைநாட்டுப் பிரதேசங்களை விடப் பரந்த சமவெளிப் பிரதேசங்களிலே தென்னை பயிரிடப்பட்டது. குருணாகல், சிலாபம், கம்பஹா முதலிய பிரதேசங்கள் தெங்குப் பயிர்ச் செய்கையில் முக்கிய இடம்பெற்றன. 1920களில் இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தின் 275 தென்னை மூலம் கிடைக்கப்பெற்றது. தெங்குப் பயிர் பரவலடைந்தபோது லுணுவில என்னும் இடத்தில் தென்னை ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டதுடன் அப்பயிர்ச்செய்கை அபிவிருத்தி செய்யப்படுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. இலங்கையின் தெங்கு உற்பத்தியில் அரைவாசிக்கு மேல் உள்நாட்டில் நுகரப்படுவதால் அது ஏனைய பெருந்தோட்டப் பயிர்களைப் போல் முற்றுமுழுதாக ஏற்றுமதியை நோக்காகக் கொண்டு பயிர் செய்யப்படவில்லை என்பது தெளிவாகின்றது. கோப்பி, தேயிலைப் பயிர்ச் செய்கை காரணமாக மலைநாட்டுப் பிரதேசந்தில் பெருந்தெருக்களும் புகையிரத வீதிகளும் அபிவிருத்தியடைந்ததைப் போலவே தெங்குப் பயிர்ச் செய்கை காரணமாக அது பயிரிடப்பட்ட பிரதேசங்களிலும் வீதி அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டதை அவதானிக்க முடிகின்றது.

இறப்பர் பயிர்ச் செய்கை

1877 ஆம் ஆண்டளவில் இலங்கையில் இறப்பர் பயிர் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் அக்காலப் பெருந்தோட்ட உற்பத்தியாளர்கள் தேயிலைப் பயிர்ச் செய்கையில் ஈடுப்பட்டிருந்தமையால் இறப்பர் மீது கவனம் செலுத்தவில்லை. 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மோட்டார் வாகனக் கைத்தொழில் அபிவிருத்தியடைந்தமையால் இறப்பரின் விலை கூடியது. இலங்கைக்குப் பொருத்தமான இறப்பர் இனத்தை அறிந்து அதற்குப் பொருத்தமான தொழினுட்ப முறைகள் பயன்படுத்தப்பட்டமை, தேயிலை விலை தற்காலிகமாக வீழ்ச்சி கண்டமை போன்ற காரணங்களால் இறப்பர் பயிர்ச் செய்கை வேகமாகப் பரவலடைந்தது. ஆரம்பத்தில் களுத்துறை மாவட்டத்தில் மாத்திரம் பயிரிடப்பட்ட இறப்பர் பிற்காலத்தில் சப்ரகமுவ, மேல், தென், மத்திய மாகாணங்களிலும் பரவலடைந்தது. 1920ஆம் ஆண்டுகளில் இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் 30 வீதம் இறப்பர் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்டது. பிற்காலத்தில் அகலவத்த என்னுமிடத்தில் இறப்பர் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டு இறப்பர் பயிரின் அபிவிருத்திக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

சமூக மாற்றங்கள்

மத்தியதர வகுப்பினரின் தோற்றம்

பிரித்தானியரின் ஆட்சிக் காலத்தில் இலங்கையில் இடம்பெற்ற சமூக மாற்றங்களில் பழைய பிரபு வகுப்பினர் செல்வாக்கு இழப்பதும் புதிய மத்தியதர வகுப்பினர் தோற்றம் பெற்றமையும் தெளிவாகத் தெரியும் பண்பாகும். பழைய பிரபு வகுப்பினர் பொருளாதார நிலை, சமூக நிலை மற்றும் அரசியல் அதிகாரம் என்பவற்றின் மூலம் சாதாரண மக்களைவிட உயந்த நிலையில் விளங்கியவர்களாவர். நில உடைமையாளர்களான அவர்கள் அதிக வருமானத்தைக் கொண்டிருந்ததுடன் ஆட்சியாளர்களுக்குப் பக்கச் சார்பாக இருந்தமையால் உயர் பதவி பட்டங்களையும் வகித்து வந்தனர்.

இவ்வாறான தன்மைகளால் அவர்கள் சமூகத்தில் பொது மக்களின் கௌரவத்திற்கும் மதிப்பிற்கும் உரியவர்களாகத் திகழ்ந்தனர். பரம்பரை நிலச் சுவாந்தர்களின் வழித் தோன்றல்களான இவர்கள் ரதல பிரதானிகள் எனப்பட்டனர்.

கோல்புறுக் சீர்த்திருத்தங்கள் மூலம் இலங்கையில் முதலாளித்துவப் பொருளாதார முறைக்கு வித்திடப்பட்டமையால் மரபு ரீதியாகப் பணம் சம்பாதிக்கும் முறைக்குப் பதிலீடாகப் பணம் சம்பாதிக்கக்கூடிய பல்வேறு வழிகளும் திறந்துவிடப்பட்டன. பெருந்தோட்டங்களை அடிப்படையாகக் கொண்டமைந்த இப்பொருளாதார முறையில் பெருந்தோட்டங்களுக்குத் தேவையான சேவை வழங்கும் ஒப்பந்தக்காரர் செயற்படுதல் சாராய உற்பத்தி, விநியோகம் மற்றும் சாராயக் குத்தகை உரிமைகளைப் பெறுதல், காரீயம் அகழ்தல், சில்லறை வியாபாரம், மொத்த வியாபாரம், போக்குவரத்து சேவை வழங்கல், தென்னந்தோட்ட உரிமை போன்ற துறைகள் உள்நாட்டவர் முதலீடு செய்து பணம் சம்பாதிக்கும் வழிகளாகக் காணப்பட்டன. எனவே 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மேற்படி துறைகள் மூலம் பணம் சம்பாதித்துக் கொண்ட உள்நாட்டு செல்வந்தர் வகுப்பொன்று உருவானது. இவ்வகுப்பினர் தமது பிள்ளைகளுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உயர் கல்வியைப் பெறுவதற்காகத் தமது பணத்தைச் செலவிட்டனர். பிரித்தானியர் ஆட்சியில் சட்டத்தரணிகள், வைத்தியர்கள், பொறியி யலாளர்கள், நில அளவையாளர்கள், சிவில் சேவையாளர்கள், எழுதுவினைஞர்கள் என்னும் புதிய தொழில் வாய்ப்புகளும் தோன்றியிருந்தன. ஆங்கிலக் கல்வி மூலம் மேற்படி தொழில்வாய்ப்புகளைப் பெற்று உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை அனுபவித்து சமூக அந்தஸ்தையும் பெற்றுக் கொள்ள முடிந்தது. இதுவும் மத்தியதர வகுப்பினரின் தோற்றத்திற்காகத் திறந்துவிடப்பட்ட கதவாக விளங்கியது.

பிரித்தானியர் ஆட்சியில் திறந்துவிடப்பட்ட புதிய வருமான வழிகள் மூலம் பணம் சம்பாதித்துக் கொண்ட வர்த்தகர் வகுப்பொன்று போலவே ஆங்கிலக் கல்வி மூலம் அரசாங்கத் தொழில்களைப் பெற்றுக் கொண்ட கல்வி கற்ற வகுப்பொன்று உருவானது. இவ்விரு வகுப்பினரும் பொருளாதார ரீதியில் பொதுமக்கள் மத்தியில் வேறுபட்டுத் திகழ்ந்தமையால் அவர்கள் மத்தியதர வகுப்பினர் எனப்பட்டனர். 20ஆம் நூற்றாண்டு ஆரம்பத்தில் உருவான இம்மத்தியதர வகுப்பினர் காரணமாக பழைய நிலப்பிரபுக்கள் வகுப்பு இலங்கையில் செல்வாக்கு இழந்தது.

புதிதாக உருவான மத்தியதர வகுப்பில் காணப்பட்ட கல்வி கற்றவர்கள் அரசியல் ரீதியாக செயற்படுபவர்களாகவும் திகழ்ந்தனர். 20ஆம் நூற்றாண்டில் இலங்கையில் இடம்பெற்ற அரசியல் போராட்டங்கள் இவர்களாலேயே முன்னெடுக்கப்பட்டன. கல்வி கற்ற மத்தியதர வகுப்பினர் எனப்பட்ட இக்குழுவினர் மேலைத்தேயக் கல்வி மூலம் சமூக அந்தஸ்து பெற்றவர்களாவர். எனவே அவர்கள் மேலைத்தேய கலாசாரத் தைப் பின்பற்றும் நகரங்களில் வசிக்கும் செல்வந்த வகுப்பினராகத் திகழ்ந்தனர்.

தொழிலாளர் வகுப்பு தோற்றம்பெறுதல்

பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட பொருளாதார மாற்றம் காரணமாக இலங்கையில் தொழிலாளர் வகுப்பொன்று தோற்றம் பெற்றமையும் முக்கியமான தொன்றாகும். இலங்கையின் மரபு ரீதியான ஆட்சிக் காலத்தில் அரசாங்கத்தின் பொது வேலைகள் கட்டாய அரச சேவை முறை மூலம் பெற்றுக் கொள்ளப்பட்டமையால் கூலிக்கு அல்லது சம்பளத்துக்கு வேலை செய்யும் வகுப்பொன்று உருவாகவில்லை. ஆயினும் ஆங்கிலேயராட்சியில் மலையகப் பகுதியில் உருவான பெருந்தோட்டங்களில் வேலை செய்வதற்கு தொழிலாளர் படையொன்று தேவைப்பட்டது. அக்காலப் பகுதியில் இந்தியாவும் பிரித்தானியாவின் குடியேற்ற நாடாக விளங்கியமையால் மிகக் குறைந்த கூலிக்கு தென்னிந்தியாவிலிருந்து தொழிலாளர்களைத் தருவித்துக் கொள்வது இலாபகரமானதாகக் காணப்பட்டது. எனவே பெருந்தோட்ட உரிமையாளர்களால் தென்னிந்தியாவிலிருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தருவிக்கப்பட்டனர். எனவே மலை நாட்டின் பெருந்தோட்டப் பகுதிகளில் தொழிலாளர் வகுப்பொன்று உருவானது.

புதிய பொருளாதார நடவடிக்கைகள் காரணமாக நாட்டில் உருவான கண்டி, காலி, கொழும்பு முதலிய மாநகரங்களில் பொருள்களை ஏற்றியிறக்குதல், துணிகளை சலவை செய்தல், கைவண்டிகள் மூலம் பொருள்களைக் கொண்டு செல்தல், பெருந்தெருக் கள், புகையிரத வீதிகள் அமைத்தல் முதலிய வேலைகளுக்கும் தொழிலாளர் தேவைப் பட்டனர். எனவே தோட்டத் தொழிலாளர் தவிர நகர்ப்புறங்களில் சுதேச தொழிலாளர் வகுப்பொன்றும் தோற்றம் பெற்றது.

ஆரம்ப காலத்தில் தொழிலாளர்களுக்கு மிகக் குறைந்த சம்பளமே வழங்கப்பட்டது. வேலை செய்யும் நேரமும் வரையறுக்கப்பட்டிருக்கவில்லை. தொழிலாளர் காப்புறுதி, நட்டஈடு வழங்கும் முறைகளோ வேறு தொழிலாளர் நலன்புரி நடவடிக்கைகளோ காணப்படவில்லை. எனவே நகர்புறத் தொழிலாளர், தொழிற்சங்கங்களை அமைத்து செயற்படுவதன் மூலம் தமது உரிமைகளை வெற்றி கொள்வதற்கு செயற்பட்டனர். அத்துடன் குறிப்பிட்ட துறை தொழிலாளரிடையே ஒற்றுமையை ஏற்படுத்தவும் தமது நிலைமைகளை மேம்படுத்திக் கொள்ளவும் அவர்கள் வேலைநிறுத்தப் போராட்டங் களில் ஈடுபட்டனர். கொழும்பு அச்சகத் தொழிலாளர் வேலை நிறுத்தம், சலவைத் தொழிலாளர் வேலை நிறுத்தம், கைவண்டித் தொழிலாளர் வேலை நிறுத்தம் என்பன 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மேற்கொள்ளப்பட்ட வேலை நிறுத்தங்களாகும்.

20 ஆம் நூற்றாண்டின் மூன்றாம் தசாப்தம் ஆரம்பிக்கும்போது தொழிலாளர்கள் சிறந்த முறையில் ஒழுங்கமைந்துச் செயற்பட்டனர். ஏ.ஈ. குணசிங்க அவர்கள் நகர்புறத் தொழிலாளர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்குப் பாடுபட்ட தலைவராவர். 1922ஆம் ஆண்டு முதல் 1935 ஆம் ஆண்டுவரை இந்நாட்டில் சிறப்பாக செயற்பட்ட தொழிலாளர் தலைவராக அவர் காணப்பட்டார். 1922 ஆம் ஆண்டு ஏ.ஈ. குண சிங்க அவர்களின் தலைமையில் இலங்கை தொழிலாளர் சங்கம் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். டொனமூர் யாப்பு நிலவிய காலப்பகுதியில் இலங்கை சமசமாஜ கட்சியின் தலைவர்கள் தொழிற்சங்கங்களை அமைத்து தொழிலாளர் உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கும் போராட்டங்களில் ஈடுபட்டனர். அக்காலப்பகுதியில் தோட்டத் தொழிலாளரின் மத்தியில் தொழிற்சங்கங்களை அமைப்பதில் கோ. நடேச ஐயர் அவர்கள் முன்னோடியாக செயற்பட்டார்.

கலாச்சார மாற்றங்கள்

பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் இலங்கையில் ஏற்பட்ட சமூக மாற்றங்களுக்குச் சமனாக கலாசார மாற்றங்களும் ஏற்பட்டன. மேலைத்தேய கலாசாரம் நாடு முழுவதும் பரவியதை அக்காலப் பகுதியில் அவதானிக்க முடிந்தது. கோல்புறூக் சீர்த்திருத் தங்களின் பின்னர் ஆங்கில மொழி மூலமான மேலைத்தேயக் கல்வி முறை நாட்டில் வேகமாகப் பரவியது. பெரும்பாலும் மிஷனரிப் பாடசாலைகளிலும் அரச அனுசரணை பெற்ற பாடசாலைகளிலும் செயற்படுத்தப்பட்ட பாடத்திட்ட உருவாக்கம், கற்பித்தல் நடவடிக்கைகள் என்பன வெளிநாட்டவர்களாலேயே மேற்கொள்ளப்பட்டன. எனவே அப்பாடசாலைகளின் மூலம் மேலைத் தேசக் கலாசாரம் பரவுவதற்கான வழியேற் பட்டது. உயர் கல்விக்காக வெளிநாடு சென்று வந்தவர்களாலும் மேலைத்தேய கலா சாரத்தின் சில அம்சங்கள் இலங்கையில் பரவின.

19 ஆம் நூற்றாண்டில் பெருந்தோட்டத் துறையின் பரம்பல், வர்த்தக வளர்ச்சி, போக்குவரத்து மற்றும் தொடர்பாடல் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி என்பன காரணமாக ஐரோப்பியர் அதிகளவில் இலங்கைக்கு வருகை தந்தனர். எனவே அவர்களின் விடுமுறைக் கால விடுதிகள் மற்றும் இரவுக் களியாட்ட விடுதிகள் என்பன இங்கு உருவாகின. இதன் காரணமாகவும் மேலைத்தேய கலாசாரம் இலங்கையில் பரவுவதற்கு வழிபிறந்தது. இவ்வாறான பல்வேறு காரணங்களால் மேலைத்தேய ஆடையணிகள், பழக்க வழக்கங்கள், வாழ்த்து வணக்கம் தெரிவிக்கும் முறைகள், கட்டட கலையம் சங்கள், உணவு, பான வகைகள் என்பன இலங்கைக் கலாசாரத்துடன் கலந்துக் கொண்டன.

நன்றி

Post a Comment

0 Comments