திருநாவுக்கரசர்
திருநாவுக்கரசர் சமணசமயம் சார்ந்து, பின் சைவத்துக்கு மீண்ட வரலாறு, அவரது தமக்கையாராகிய திலகவதியார் பற்றிய பாடத்திலே கூறப்பட்டது. அதனை அங்கே கண்டுகொள்க. சைவசமயம் சார்ந்தபின்னரான அவரது வரலாற்றைச் சுருக்கமாக இங்கு நோக்குவோம்.
நாவுக்கரசர் மீண்டும் சைவசமயம் சார்ந்தமையை அறிந்த சமணர்கள் தம் அரச னாகிய பல்லவ மன்னனிடஞ் சென்று முறையிட்டனர். சமண சமயமே மெய்ச்சமயம் என மருள் கொண்ட அம்மன்னவன் மிக வெகுண்டு, நாவுக்கரசரை தன்னிடம் அழைத்து வருமாறு தன் அமைச்சரை அனுப்பினான். அரசன் கட்டளையை அறிவித்த அமைச்சரைப் பார்த்து, நாமார்க்கும் குடியல்லோம் என்ற திருத்தாண்டகத்தைப் பாடி, அரசனிடஞ் செல்ல நாவுக்கரசர் மறுத்தார்; அமைச்சர் அவருடைய அடியில் வீழ்ந்து பன்முறை இரந்து வேண்டியதனால் இரக்கங்கொண்டு "எல்லாவற்றுக்கும் எம்பெருமான் உளன்" என்று தம் மனத்தை உறுதிசெய்துகொண்டு ஒருவாறு உடன்பட்டு அமைச்சருடன் சென்றார்.
நாவுக்கரசரைக் கண்ட அரசன், "இனி இவனை என்ன செய்வது?" என்று தன் பக்கத்திலிருந்த சமணர்களை வினவினான். அச்சமணர்கள், "இவனை நீற்றறையில் விட வேண்டும்" என்றனர். கொடுங்கோலனாகிய அவ்வரசன் 'அவ்வாறே செய்யுங்கள்" என்றான். உடனே அச்சமணர்கள் இரும்பையும் உருக்கும் வெப்பம் நிறைந்த சுண்ணாம்பு அறையில் அவரை இட்டு அடைத்தனர். நாவுக்கரசர் சிவபெருமானை நினைந்து, 'மாசில் வீணையும்' என்னும் பதிகத்தைப் பாடினார். ஈசனின் இணையடி நிழலில் இருந்த நாவுக்கரசரை அந்நீற்றறை வருத்தவில்லை. ஏழு நாள் கழித்துச் சமணர்கள் நீற்றறையைத் திறந்தபொழுது, அவர் முன்னரிலும் நன்றாக இருக்கக் கண்டு திகைத்தனர்.
அரசன் அவர்மேல் யானையை ஏவப் பணித்தான். அப்பொழுது நாவுக்கரசர் சிறிதும் அஞ்சாது, சுண்ணவெண் சந்தனச் சாந்தும்' என்னுந் தேவாரத்தைப் பாடி இறைவனைச் சரணடைந்தபொழுது, அந்த யானை அவரை வலம்வந்து வணங்கியது. சமணர்கள் நஞ்சு கலந்த பாற்சோற்றை நாவுக்கரசருக்கு உண்ணக் கொடுத்தனர். அது அவருக்கு அமிர்தமாக அமைந்தது.
ஈற்றில் சமணர்கள், அவரைக் கல்லுடன் கட்டிக் கடலில் போட்டனர். நாவுக்கரசர் இறைவனை நினைந்து 'சொற்றுணை வேதியன்' என்னும் பதிகத்தைப் பாட, அவரைக் கட்டியிருந்த கல் தெப்பமாக மிதந்தது. சமணர்கள் உறுதி குலைந்து தளர்வுற்றுத் திகைத்தனர். அரசனும் இவ்வற்புதங்களைக் கண்டு வியப்புற்று, சைவ சமயமே மெய்ச்சமயம் என உணர்ந்து அதனைத் தழுவினான்.
நாவுக்கரசர் திருவதிகையிலிருந்து சிலகாலம் சிவத்தொண்டு புரிந்தபின் தலயாத்திரை மேற்கொண்டார். அவர் தம் கையில் வைத்திருக்கும் உழவாரத்தினால் கோயிற் சுற்றுப்புறத்தைச் சுத்தஞ் செய்வார். அதனால் அவர் 'உழவாரப் படையாளி என்று அழைக்கப்பட்டார்.
நாவுக்கரசர் திருவெண்ணெய் நல்லூர், திருக்கோவலூர் முதலிய திருத் தலங்களை வழிபட்டுத் திருப்பெண்ணாகடத்தை அடைந்து, அங்குள்ள திருத் தூங்கானைமாடக் கோயிலுக்குச் சென்றார். அங்கு இறைவனை நோக்கி "எம் பெருமானே, புன்னெறியாகிய சமண சமயத்தில் இருந்து மாசுற்ற இந்த உடலோடு வாழ முடியவில்லை; இவ்வுடலுடன் வாழ்வதற்கு உன்னுடைய சூல, இடப இலச்சி னைகளை எனக்கு இட்டருளல் வேண்டும்" என்று விண்ணப்பித்து பொன்னார் திருவடிக்கு ஒன்றுண்டு விண்ணப்பம் என்று தொடங்குந் திருப்பதிகத்தைப் பாடினார். அப்பொழுது இறைவன் அருளால் சூல, இடப இலச்சினைகள் ஒருவரும் அறியாமல் நாவுக்கரசரின் தோளிற் பொறிக்கப்பட்டன.
நாவுக்கரசர் சிதம்பரத்தில் இருக்கும் நாளில் சம்பந்தரின் மகிமையை அடியார்கள் மூலம் அறிந்தார். அவரைத் தரிசிக்க வேண்டும் என்னும் ஆசை மிகுதியினால் சீர்காழியை நோக்கிப் புறப்பட்டார். சம்பந்தரைக் கண்ட நாவுக்கரசர் அவரின் திருவடிகளிலே வீழ்ந்து வணங்கினார். அப்பொழுது சம்பந்தர் அவருடைய கைகளைப் பிடித்து எழச்செய்து, தாமும் அவரை வணங்கி, "அப்பரே" என்று அழைத்தார். நாவுக்கரசர் "அடியேன்" என்றார். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்கக் கிடைத்ததையிட்டு மிக மகிழ்ந்தனர்; சம்பந்தருடைய மடத்தில் சில காலம் தங்கியிருந்தனர்.
அப்பர் சம்பந்தரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு திருச்சத்திமுற்றம் என்னும் தலத்துக்குச் சென்று இறைவனை வழிபட்டு, தமக்குத் திருவடி தீட்சை செய்யுமாறு இறைவனிடம் விண்ணப்பித்தார். இறைவன், அவரை நல்லூருக்கு வருமாறு பணித்தருளினார். நாயனார் நல்லூரை அடைந்து இறைவனை வணங்கி மகிழ்ந்து எழும்பொழுது "உன்னுடைய நினைப்பதனை முடிக்கின்றோம்" என்று அவர் சென்னிமிசை திருவடி மலர் சூட்டியருளினார்.
திங்களூர் என்ற இடத்தில் அப்பூதியடிகள் என்ற அந்தணர் ஒருவர் இருந்தார். அவர் நாவுக்கரசரிடத்தில் மிகுந்த பக்தி கொண்டவர். தம் ஊரிலே தாம் செய்து வந்த அறப்பணிகளுக்கு அவர் நாவுக்கரசருடைய பெயரையே சூட்டினார். தம் பிள்ளைகளுக்கும் மூத்த திருநாவுக்கரசு, இளைய திருநாவுக்கரசு எனப் பெயரிட் டார். திருநாவுக்கரசர் திங்களூருக்கு வந்தசமயம் அவ்வூரில் காணப்பட்ட தண்ணீர்ப் பந்தல், கிணறு, குளம் முதலியவற்றுக்குத் தம் பெயர் இடப்பட்டிருத்தலைக் கண்டு அதிசயித்தார்; இவ்வாறு செய்தவரான அப்பூதியடிகளுடைய வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்தார். "நீங்கள் செய்த அறப் பணிகளுக்கு வேறு ஒருவரின் பெயர் இட்டதன் காரணம் என்ன?" என்று நாவுக்கரசர் அப்பூதியடிகளிடம் வினவினார். 'இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட திருநாவுக்கரசு நாயனாரை வேறொருவர் என்று கூறுகின்றீரே, நீர் யார்?" என்று அவர் சினந்தார். "சூலைநோய் தந்து ஆட்கொள்ளப்பட்ட சிறுமையேன் யானே" என்று நாவுக்கரசர் விடை கூறினார். அப்பூதியடிகள் அளவிலா ஆனந்தம் அடைந்தார்; நாயனாரை அமுது செய்யுமாறு வேண்டினார். நாயனாரும் இசைந்தார்.
அமுது செய்வதற்கு ஆயத்தஞ் செய்யப்பட்டது. மூத்த திருநாவுக்கரசு வாழைக் குருத்து அரிவதற்காகத் தோட்டத்துக்குச் சென்றான். அங்கு அவனை ஒரு நாகம் தீண்டிற்று. அவன் வீட்டுக்கு ஓடிவந்து தாயாரிடம் வாழைக் குருத்தைக் கொடுத்து விட்டு வீழ்ந்து இறந்தான். இதனை அறிந்தால் நாயனார் அமுது செய்யார் என்று அப்பூதியடிகளும் மனைவியாரும் கலங்கினர். மகனுடைய உடலை மறைத்து வைத்து விட்டு, அமுது செய்யவேண்டும் என்று நாயனாரை இரந்தனர். அங்கு நிகழ்ந்தவற்றைத் திருவருட் குறிப்பினால் அறிந்து, அவர்கள்மேல் அளவிறந்த அருள் கொண்டு, அவ்வுடலை திருப்பழனத்து இறைவரது திருமுன் கொணர்வித்து, ஒன்று கொலாமவர் சிந்தை எனும் பதிகம் பாடினார். சிறுவன் உயிர்பெற்று எழுந்து அப்பர் சுவாமிகளை வணங்கினான்.
வாக்கின் வேந்தர் காவிரிக்கரையிலுள்ள பல சிவத்தலங்களையும் தரிசித்து, திருப்புகலூரை அடைந்து, முருக நாயனாரின் மடத்திலே தங்கியிருந்தார். அப்பொழுது அங்கு வந்த சம்பந்தருடன் அவர் அளவளாவி மகிழ்ந்திருந்தார். அதன்பின் இருவரும் திருவீழிமிழலை என்னுந் தலத்துக்குச் சென்றபொழுது, அங்கு மழையின்மை காரணமாகப் பஞ்சம் நிலவியதைக் கண்டு மிகவும் வருந்தினர். இறைவன் அருளால் படிக்காசு பெற்றுப் பஞ்சம் போக்கினார்கள்.
தலயாத்திரை செய்துகொண்டு இருவரும் திருமறைக்காட்டை அடைந் தனர். அங்கு முன்னர் வேதங்களாற் பூசிக்கப்பட்டுப் பூட்டப்பட்ட கதவு திறக்கப் பெறாமையால், அங்குள்ளவர்கள் வேறு வழியாற் சென்று இறைவனை வணங்குகின்றனர் என்பதை இருவரும் அறிந்தனர். நாவுக்கரசர் பண்ணினேர் மொழியாளுமை பங்கரோ என்று தொடங்கும் பதிகத்தைப் பாடி கதவை திறக்கச் செய்தார். அதன் பின், நாவுக்கரசரின் வேண்டுகோளுக்கு இணங்க, சம்பந்தர் 'சதுரம் மறைதான்' என்று தொடங்கும் பதிகத்தைப் பாடி கதவை மூடச்செய்தார்.
நாவுக்கரசர் திருப்பழையாறையை அடைந்து, அங்கு வடதளியிற் சிவலிங் கத்தைச் சமணர் வஞ்சனையால் மறைத்து, அக்கோயிலைத் தம் பள்ளியாக்கி வைத்திருந்ததைக் கேள்வியுற்றார். சமணர் செயல்கண்டு மனம் வருந்திய அப்பர் அப்பள்ளியினருகே ஓரிடத்தில் இருந்து, சுவாமி, தேவரீரது வண்ணங் கண்டு வணங்கியன்றிப் போகேன்' என்று கூறி உண்ணாவிரதம் இருந்து இறைவன் அருளால் மன்னனைக் கொண்டு சமணர் வசம் இருந்த அத்திருத்தலத்தை மீட்டுப் புனருத்தாரனம் செய்வித்தருளினார்.
அங்கிருந்து புறப்பட்டு பல தலங்களையும் வணங்கிப் பதிகம் பாடிச் சென்று, திருப்பைஞ்ஞீலியை நோக்கி நடந்தார். வழிநடந்து வந்த அப்பர் மிக இளைத்துப் பசியும் நீர் வேட்கையும் உடையவராய் இருந்தார். அந்நிலையில், திருப்பைஞ்ஞீலிப் பெருமான் சைவ வேதியர் கோலத்துடன், பொதிசோறு வைத்துக்கொண்டு அப்பர் வரும் வழியிலே ஒரு சோலையையும் குளத்தையும் அமைத்திருந்தார்.
அப்பர் அங்கு வந்ததும் அவருக்குச் சோறும் நீரும் வழங்கி அவரது இளைப்பைப் போக்கி அவரோடு திருப்பைஞ்ஞீலி வரை சென்று திடீரென மறைந்தார். அப்பர் அது கண்டு இறைவன் திருவருளை வியந்து, கண்ணீர் பொழிந்து அழுது, நிலத்தில் வீழ்ந்து வணங்கினார். கோயிலுக்குட் சென்று இறைவனை வணங்கிப் பதிகம் பாடினார். பின்னர் அங்கே சிறிதுகாலம் தங்கி உழவாரத் தொண்டு செய்தார்.
அப்பர் அங்கிருந்து புறப்பட்டு வழியிலுள்ள தலங்களை வணங்கித் தமிழ் மாலை பாடிச்சென்று தொண்டை நாட்டை அடைந்தார். அங்கே கண்ணப்பர் முத்தியடைந்த திருக்காளத்தியை அடைந்து, காளத்திநாதரை வழிபட்டு 'விற்றூணொன் றில்லாத' என்ற திருத்தாண்டகத்தைப் பாடினார். தென்கயிலை எனப்படும் திருக்காளத்தி, அப்பருக்கு வடகயிலையை நினைவூட்டிற்று. அவர் இமயமலையிலுள்ளதான வட கயிலையைத் தரிசிக்க மிகுந்த ஆர்வங் கொண்டார்; வடதிசை நோக்கிப் புறப்பட்டார்; தேசம் பல கடந்தார்; காசியை அடைந்தார்; விசுவநாதரை வணங்கினார்; தம்முடன் வந்தவர்களை அவ்விடத்திலே நிறுத்திவிட்டார்; இலை கிழங்கு, பழம் உண்பதையும் நீக்கினார்; அனல் உமிழும் கற்சுரங்கங்களிலே நடக்கலானார்; பாதங்கள் தேய்ந்தன; கை களால் தாவிச் சென்றார்; கைகள் தேய்ந்தன; மார்பினால் ஊர்ந்தார்; மார்பும் தேய்ந்தது; எலும்புகளும் முறிந்தன; புரண்டு புரண்டு பார்த்தார்; உடம்பும் தேயலாயிற்று; மெல்ல மெல்ல நகர முயன்றார்; அதற்குமேல் அப்பர் செயலற்றவரானார். இந்நிலையில் இறைவன் முனிவர் வடிவில் அவரின் முன் வந்து "திருக்கயிலாய மலை மனிதர் சென்றடைதற்கு எளிதன்று; இனித் திரும்பிச் செல்லுதலே நன்று" என்று நாவுக்கரசருக் குக் கூறினார். அப்பொழுது,
மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன்
என்று நாவுக்கரசர் உறுதியாகக் கூறிவிட்டார். உடனே முனிவர் மறைய, "ஓங்கு நாவினுக்கு அரசனே எழுந்திரு" என்று ஓர் ஒலி கேட்டது. கேட்டவுடன் அவருடைய உடல் வருத்தம் எல்லாம் நீங்கி, ஒளிபெற்றுத் திகழ்ந்தது. அப்பொழுது அவர்,
நண்ணி நான் தொழ நயந்து அருள்புரி
எனப் பணிந்தார். அதற்கு இறைவன், "நீ இந்தத் தடாகத்தில் மூழ்கித் திருவையாற்றை அடைவாய்" நாம் கயிலாயத்தில் இருக்குங் கோலத்தை அங்கே காண்பாய்" என்று மீண்டும் ஒலித்தார். இவ்வாறாக, அத்தடாகத்தில் மூழ்கிய நாவுக்கரசர் திருவையாற்றிலுள்ள ஒரு வாவியிலிருந்து கரையேறினார். இறைவன் தம்மீது கொண்ட கருணையை நினைந்து கண்ணீர் பெருக, அவர் திருவையாற்றுக் கோயிலை நோக்கிச் சென்றார். அவர் கோயிலை அடைந்தபொழுது அது கயிலைமலை போலக் காட்சி அளித்தது. கயிலையில் நடைபெறும் நிகழ்ச்சிகளும் அங்கு நடைபெற்றன. தாம் கண்ட கயிலைக் காட்சியை மாதர்ப் பிறைக் கண்ணியானை என்ற பதிகத்தில் நாவுக்கரசர் பாடினார்.
அதன்பின் அப்பர் காவிரியின் இரு மருங்குமுள்ள தலங்களைத் தரிசித்துக் கொண்டு, திருப்பூந்துருத்தியை அடைந்தார். அங்குந் திருமடம் ஒன்று அமைத்து உழவாரப்பணி புரிந்துவந்தார். அப்பொழுது திருஞானசம்பந்தர் தம்மைக் காண விரும்பி வரும் செய்தி அறிந்து, எதிர்சென்று எவரும் அறியாத வகையிற் சம்பந்தரின் சிவிகையைச் சுமந்து வரலானார். நாவுக்கரசரைக் காணும் பெரு விருப்பில், "அப்பர் எங்குற்றார்?" என்று உடன் வருவோரைச் சம்பந்தர் வினவ, நாவுக்கரசர் "உம்மடியேன் உம்மடிகள் தாங்கி வரும் பெருவாழ்வு வந்து எய்தப் பெற்று இங்குற்றேன்" என்றார். உடனே சம்பந்தர் சிவிகையை விட்டுக் கீழே இறங்கி அப்பரை வணங்கினார். அவருக்குமுன் நாவுக்கரசர் அவரை வணங்கினார். இருவரும் அன்புடன் அளவளாவி மகிழ்ந்தனர்.
நாவுக்கரசர் பூம்புகலூர்க் கோயிலுக்குச் சென்று, உழவாரத் தொண்டு செய்துவரும் நாளில், அவருடைய பற்றற்ற நிலையை உலகத்தார்க்குக் காட்ட இறைவன் திருவுளங்கொண்டான். எனவே, அவருடைய உழவாரம் நுழையும் இடமெல்லாம் பொன்னும் மணியும் பொலிய இறைவன் அருள் செய்தான். நாவுக்கரசர், பொன்னையும் மணியையும் பருக்கைக் கற்களாவே கண்டு அகற்றினார். பின்னர் வானுலக அரம்பையர் வந்து, அவரின் முன் ஆடல் பாடல் புரிந்து, அவருடைய மனத்தைக் கலைக்க முயன்றபோதும் அவர் தம் நிலையிலிருந்து பெயராது, 'பொய்ம்மாயப் பெருங்கடலிற் புலம்பா நின்ற என்னும் பதிகத்தைப் பாடினார். அப்பொழுது அந்த விண்மடந்தையர் அவரைத் தொழுது அகன்றனர்.
அப்பருக்கு எண்பத்தொரு வயது நிரம்பியபொழுது, அவ்வாண்டு சித்திரை மாத சதய நட்சத்திரத்திலே, திருப்புகலூர் என்ற தலத்தில்,
எம்பெருமான் திருவடியே எண்ணில் அல்லால்
என்று தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடினார். பாடல்களின் இறுதிதோறும்,
பூம்புகலூர் மேவிய புண்ணியனே
என்று வைத்துப் பாடி, சிவனடி நிழலில் இரண்டறக் கலந்தார். நாவுக்கரசர் தாச மார்க்கத்தைக் கடைப்பிடித்துச் சிவனடி சேர்ந்தார். இவருடைய குரு பூசை தினம் சித்திரை சதயம் ஆகும்.
திருநாவுக்கரசரின் பணிகள்
வருஞானத் தவமுனிவர் வாகீசர் வாய்மைதிகழ்
பெருநாமச் சீர்பரவ லுறுகின்றேன் பேருலகில்
ஒருநாவுக் குரைசெய்ய ஒண்ணாமை உணராதேன்
என்று நாவுக்கரசரின் சிறப்புக்களைப் பெரியபுராணத்தில் சேக்கிழார் குறிப்பிடுவார். இவர் மகேந்திரவர்மன் காலத்திலும் அவனது மகன் நரசிம்மன் காலத்திலும் வாழ்ந்தவராவார். மகேந்திரவர்மன் கி.பி 615 - கி.பி 630 களிலும் நரசிம்மன் கி.பி 630-கி.பி 668 வரையும் ஆட்சிபுரிந்ததாக வரலாற்று ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. கி.பி 564 - கி.பி 645 ஆகிய ஆண்டுகளில் வாழ்ந்து 81 வயது வரையும் இருந்து தனது செயலாலும், திருவாக்கினாலும், மெஞ்ஞான அறிவினாலும் சைவநெறியின் வளர்ச்சிக்காகப் பலதரப்பட்ட பணிகளை ஆற்றினார்.
சைவ சமயப் பணிகள்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
என்ற உறுதிப்பாட்டுடன் விளங்கித் தனக்கு வந்த துன்பங்கள் அனைத்தையும் இறைதிருவருளுடன் நீக்கிப் பலதரப்பட்ட சைவப்பணிகளை ஆற்றியவராக இவர் காணப்படுகின்றார்.
பல்லவ மன்னனை சைவனாக மதம் மாற்றியமை
திருஞானசம்பந்தர் பாண்டிய மன்னனை சைவனாக மதம் மாற்றி பாண்டிய நாடு முழுவதும் சைவம் மீண்டும் மறுமலர்ச்சி அடையச் செய்தது போன்று நாவுக்கரசர் மகேந்திரவர்மன் என்ற பல்லவமன்னனை இறைவனது திருவருளால் மதம் மாற்றி அவனது ஆட்சிக்குட்பட்ட வட தமிழ்நாட்டின் பகுதிகளெங்கணும் சைவம் மறுமலர்ச்சி அடைய வழிவகுத்தார். சமணர்களது துர்ப்போதனைகளால் கவரப்பட்ட மகேந்திர பல்லவன் நாவுக்கரசருக்குப் பல துன்பங்களை இழைத்தான். ஈற்றில் அவர் இறைவனது திருவருளினால் அவற்றில் இருந்து தப்பியதை அறிந்து அவன் திருவதிகையில் வந்து அப்பரை வணங்கிச் சைவனாக மீண்டும் மதம் மாறினான். இது போன்று காடவன் என்ற குறுநிலமன்னனும் சைவனாக மீண்டும் மதம் மாறியதோடு பாடலிபுரத்தில் இருந்த சமணப் பள்ளிகளை அழித்து விட்டுத் திருவதிகையில் குணபரவீச்சரம் என்ற ஆலயத்தை அமைத்தான்.
ஆலயங்களின் புனருத்தாரணம்
நாவுக்கரசர் சிவாலயங்கள் பலவற்றை இறைவனின் துணையுடன் புனருத்தாரணம் செய்து அங்கு அடியவர்கள் வழிபட வழிவகுத்தார். பழையாறையை அடுத்துள்ள வடதகளி என்னும் இடத்தில் விளங்கிய சிவாலயத்தை சமணர்கள் சமணப்பள்ளியாக மாற்றியதோடு அங்குள்ள சிவலிங்கத்தையும் மறைத்துவைத்தனர். அதனை அறிந்த நாவுக்கரசர் மனம் வருந்தி உண்ணாநோன்பிருந்து இறைவனைத் துதித்தார். இறைவன் சோழமன்னனது கனவிலே தோன்றி தம்மை வெளிப்படுத்துமாறு கட்டளையிட்டார். மறுநாள் சோழ மன்னன் வடதகளிக்குச் சென்று சமணப்பள்ளியாக மாற்றப்பட்ட ஆலயத்தை புனருத்தாரணம் செய்து, மறைத்து வைத்திருந்த சிவலிங்கத்தினையும் வெளிப்படுத்தி வழிபட வழிவகுத்தான்.
இதுபோன்று திருமறைக்காடு என்ற தலத்திற்கு ஞானசம்பந்தருடன் நாவுக்கரசர் தல யாத்திரை மேற்கொண்டு வருகை தந்திருந்தார். அங்கு அதன் பிரதான நுழைவாயிற் கதவு வேதங்களால் மந்திரித்துப் பூட்டப்பட்ட நிலையில் காணப்பட்டது. அதனால் அடியவர்கள் பிரதான வாயிலால் செல்லாது வேறொரு பாதையால் சென்று இறைவனை வழிபட்டனர். இதனைக் கண்ட நாவுக்கரசர் திருக்கோயிலுக்குச் செல்லும் அடியவர்கள் இறைவனைத் தடையின்றி எளிமையாக வழிபடவேண்டும் என்பதற்காக “பண்ணணினேர் மொழியாள்...." என்ற பதிகத்தைப்பாடி ஆலயக்கதவு திறக்க வழிவகுத்தார். அப்போது ஞானசம்பந்தரும் “சதுரம் மறை...." என்ற பதிகத்தைப்பாடி ஆலயக்கதவு மூடவும் வழிவகுத்தார். இவ்வாறு நாவுக்கரசர் ஆலயவழிபாட்டின் அவசியத்தினை வலியுறுத்தினார்.
ஆலயங்களில் சரியைத் தொண்டு
நாவுக்கரசர் ஆலயவழிபாட்டினை முதன்மைப்படுத்தியது போன்று ஆலயங்களைத் தூய்மையாகப் பேண வேண்டும் என்பதிலும் முன்மாதிரியாக வாழ்ந்து காட்டினார். ''என்கடன்பணி செய்து கிடப்பதே" என்ற தேவார அடிக்கமைய கையில் உழவாரப்படையை வைத்துக் கொண்டு, செல்கின்ற ஆலயங்களின் திருவீதிகளில் காணப்படும் புற்களை உழவாரத்தின் மூலம் செதுக்கி வீதிகளைத் தூய்மைப்படுத்தினார். அங்கே இறைவனால் இடப்பட்ட பொன்னையும், மணிகளையும் சாதாரண ஓட்டுடன் ஒப்பவே நோக்கினார். திருச்சக்திமுற்றம், திப்புகலூர் முதலான ஆலயங்களில் உழவாரப்பணி புரிந்தமையால் நாவுக்கரசரை உழவாரப்படையாளி என்றும், தொண்டுக்கு அப்பர் எனவும் சிறப்பித்து அழைப்பர்.
தலயாத்திரையும் சிவனடியார் வழிபாடும்
ஞானசம்பந்தரைப் போன்று நாவுக்கரசரும் பல தலங்களை நோக்கித் தல யாத்திரை மேற்கொண்டார். தெற்கே இராமேஸ்வரம் தொடக்கம் வடக்கே இமயமலை உச்சிவரை இவர் தலயாத்திரை மேற்கொண்டு, அத்தலங்களில் எழுந்தருளியுள்ள இறைவனது பெருங்கருணையை ஏனையோருக்குத் தெரியப்படுத்தினார். வடக்கே காசி யாத்திரையை முடித்துக் கொண்டு அப்பால் திருக்கைலாயத்துக்கு செல்ல அப்பர் ஆயத்தமானார். அப்போது இறைவன் அவரது அங்கங்கள் தேய அவர் தள்ளாடுவதைக் கண்டும், அவர் பணிகள் மேலும் தென்னாட்டில் தொடரவேண்டும் என்பதற்பாக சிவனால் ஆட்கொள்ளப்பட்ட நாவுக்கரசர் அங்கே தோன்றிய குளத்தில் மூழ்கி திருவையாற்றில் தோன்றி இறைவனது திருக்கைலாயக் காட்சியைக் கண்டு இன்புற்றார். இவரது தேவாரங்களில் இருந்து அவர் 125 தலங்கள் மீது பதிகங்கள் பாடியுள்ளதாக அறியமுடிகின்றது. மேலும் அங்கமெலாம் குறைந்தொழுகு தொழு நோயராக ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும், கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்பராகில் அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே.' என்ற உறுதிப்பாட்டுடன் நின்று பல தரப்பட்ட நிலையில் உள்ளவர்களையும் சிவனடியாராகப் போற்றிப் பேணிய பெருந்தகையராக இவர் அமைகின்றார்.
தேவாரங்களை அருளியமை
நாவுக்கரசர் அருளிய தேவாரங்களின் தொகை 49000 என சேக்கிழார் குறிப்பிடுவார். ஆயினும் இவரது தேவாரங்களில் 3066 பாடல்களே இன்று நமக்கு கிடைத்துள்ளன. நான்காம் திருமுறையில் 113 பதிகங்களும், ஐந்தாம் திருமுறையில் 100 பதிகங்களும், ஆறாம் திருமுறையில் 99 பதிகங்களுமாக 312 பதிகங்களை இவர் அருளியுள்ளார். இவரது தேவாரங்கள் திருவிருத்தம், திருத்தாண்டகம் ஆகிய பாடல்வகையை
சார்ந்தவையாகும். மேலும், உடல் உறுப்புக்கள் ஒவ்வொன்றையும் விளித்து அவற்றை இறை வழிபாட்டுக்கு நெறிப்படுத்துவதாக இவரது திருவங்கமாலைப் பாடல்கள் அமைகின்றன. மேலும் சிவ சின்னங்களாகிய திருநீறு, திருவைந்தெழுத்து ஆகியவற்றின் பெருமைகள் பற்றியும் இவரது பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. சங்க இலக்கியங்களில் அகமரபில் காணப்படும் காதல் பாடல் மரபு, இறை காதலைப் பாடுவதற்கான குறியீட்டு மரபாக மாற்றம் பெற்றதை இவரது பாடல்களில் அவதானிக்கலாம்.
சமூகப் பணிகள்
நாவுக்கரசர் இவ்வாறு பலதரப்பட்ட சைவ சமயப் பணிகளை ஆற்றியது போன்று சமூகம் சார்பான பல பணிகளையும் ஆற்றியுள்ளதை அறிய முடிகின்றது.
இறந்தவரை உயிர்ப்பித்தல்
இறைவனின் திருவருள் பெற்ற நாவுக்கரசர் இறந்தவரை உயிர்ப்பித்துள்ளார். நாவுக்கரசரது இறை தொண்டினால் கவரப்பட்டு, அவரிடத்தில் மிகுந்த அன்பு கொண்டு இருந்த அப்பூதியடிகள் நாவுக்கரசரது திருப்பெயரைப் பயன்படுத்தி தண்ணீர்ப் பந்தல், அறச்சாலைகள், பூங்காக்கள், குளம், கிணறு என்பவற்றை அமைத்து அவரது தொண்டினைத் தானும் தொடர்ந்தார். நாவுக்கரசர் அப்பூதி அடிகளது அழைப்பினை ஏற்று திருவமுது உண்பதற்காக அவரது இல்லத்துக்குச் சென்றிருந்தார். அப்போது வாழை இலை வெட்டுவதற்காகச் சென்ற அப்பூதியடிகளது மூத்ததிருநாவுக்கரசு என்ற மகன் பாம்பு கடித்து இறக்கின்றான். இதனைக் கேள்விப்பட்ட நாவுக்கரசர் "ஒன்று கொலாமவர் சிந்தை .." என்ற பதிகத்தைப்பாடி அச்சிறுவனை உயிர்ப்பித்தார். அத்தோடு வாகீசர் அமுது செய்யாதிருந்ததைக் கண்டு அப்பூதியடிகள் தளர்வெய்தியதனால் அவரது மனத்தளர்ச்சியை நீக்கும் பொருட்டு "சொன்மாலை" எனத்தொடங்கும் பதிகத்தைப்பாடி அதில் "அழலோம்பு மப்பூதி குஞ்சிப் பூவாய் நின்ற சேவடியாய்.." என்று அப்பூதியடிகளையும் புகழ்ந்துள்ளார்.
பஞ்சம் தீர்த்தல்
நாவுக்கரசர் ஞானசம்பந்தருடன் திருவீழிமிழலை திருத்தலத்தை அடைந்தபோது அங்கு நீண்ட நாட்களாக மழை இன்மையால் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. இப் பஞ்சத்தினை நீக்கும் பெருட்டு இறைவனிடம் படிக்காசு பெற்று அதனைக் கொண்டு பொருட்களை வாங்கி அம்மக்களது பஞ்சத்தினை நீக்கினார்.
நன்றி
0 Comments