இலக்கிய விமர்சனம்
அறிமுகம்
இலக்கிய விமர்சனம், இலக்கியத்தின் ஒரு பிரிவாக, தனித் துறையாக இன்று வளர்ந்திருக்கின்றது. திறனாய்வு என்பது குறிப்பிட்ட இலக்கியத்தை அல்லது இலக்கியங்களை அல்லது குறிப்பிட்ட படைப்பாளியைப் பற்றிப் பேசுகின்றது. சில நடப்புக்களை இலக்கியத்தில் பொருத்திப் பார்க்கின்றது. அல்லது குறித்த இலக்கியத்தில் இருந்து சில நடப்புகளை இனங்காண்கின்றது.
விமரிசை என்ற சொல்லில் இருந்து விமர்சனம் என்ற சொல் பிறந்தது. அதாவது விமர்சனம் என்ற சொல் Criticism என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. Criticism என்ற சொல்லுக்கு இணையாக விமர்சனம் என்ற சொல்லை முதன்முதல் 1944 இல் ஆ. முத்துசிவன் என்பவர் பயன்படுத்தினார். விரிவாக, விளக்கமாகச் சொல்லுதல், பாராட்டிப் பேசுதல் என்று அது பொருள்படுகின்றது. கிறிட்டிசம் என்ற சொல்லுக்கு ஆராய்ச்சி, விமர்சனம், குணதோஷ விளக்கம், இரசனைத் திறனாய்வு, ஆராய்ச்சி விளக்கம், மதிப்பீடு, பாநலன் திறன் ஆய்ந்து தெளிதல், பரிசோதனை முதலான பல சொற்கள் தமிழில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. இவற்றில் பல விளக்க உரைகளாக அமைந்துள்ளன. இச்சொற்களுக்கு இடையே வேறுபாடுகள் காணப்பட்டாலும் அவை ஒன்றாகவே முன்னர் கருதப்பட்டு வந்துள்ளன. இச்சொற்களிலே விமர்சனம், திறனாய்வு என்ற இரு சொற்களும் பொருத்தமான சொற்களான இன்று கருதப்பட்டு, அதிகம் வழக்கில் பயன்படுத்தப்பட்டும் வருகின்றது.
இவ்விரு சொற்களிலும் திறனாய்வு என்ற சொல் தமிழ் மரபைச் சார்ந்து தோன்றிய சொல்லாகவும், விமர்சனம் வடமொழிச் சொல்லாகவும் கருதப்படுகின்றன. 'திறனாய்தல்' என்ற சொல்லை வள்ளுவர் முதலானோர் பண்டைய தமிழ் இலக்கியங்களில் பயன்படுத்தி வந்துள்ளனர்.
“விமர்சனம் என்பது தமிழ்ச் சொல்லன்று. வடமொழிச் சொல். அதற்கு தமிழ் ஆராய்ச்சி என்றுதான் பொருள். எனவே இலக்கிய விமர்சனம் என்பதற்கு நூலின் திறனாய்ந்து தெளிதல் என்று பொருள் கொள்ளலாம்” என்று ஜி. சுப்பிரமணியபிள்ளை குறிப்பிடுவார்.
ஒரு இலக்கியப் பிரதியின் மொழி, எடுத்தரைப்பு முறை, வடிவம், அடிக்கருத்து, அதில் பயன்படுத்தப்படுகின்ற உத்திகள், அவ்விலக்கியம் சுட்டிக் காட்டும் வாழ்க்கை முறைகள் மற்றும் அரசியல் சிந்தனைகள் என்பவற்றைத் தனித்தனியாகவோ, அல்லது ஒட்டுமொத்தமாகவோ ஒரு கருத்தியலின் வழி நின்று வியாக்கியானம் செய்வது அல்லது விளக்குவது இலக்கிய விமர்சனம் எனப்படும். அதாவது ஏற்கனவே எழுதப்பட்ட ஒரு பிரதியின் மீதான உருவம் மற்றும் உள்ளடக்கம் தொடர்பான வியாக்கியானத்தை இலக்கிய விமர்சனம் என்று வரையறை செய்யலாம்.
இலக்கியம் பற்றிய முறையான எந்த விவாதமும் திறனாய்வுதான் என்று ஆரம்பத்தில் கூறப்பட்டது.
"இலக்கியப் படைப்பைச் சில கேள்விகளை எழுப்பிக்கொண்டு ஒரு முறையான வழியில் பார்ப்பதுதான் திறனாய்வு. இலக்கியத்தை வாசிப்பதன் மீதான ஒருவகையான எதிர்வினைதான் திறனாய்வு" என்று இம்ஷேர் என்பவர் குறிப்பிட்டார்.
அதாவது, வாசிப்பின்போது கிடைக்கின்ற அனுபவங்களும் பொருள்களும் உணர்வுகளும்தான் திறனாய்வுக்குத் தளங்கள் என்பது அவரது கருத்தாகும்.
அமெரிக்கக் கலைக்களஞ்சியம் விமர்சனத்தைப் பின்வருமாறு வரையறை செய்கின்றது :
"ஒரு கலையாக்கத்திலிருந்து தான் பெறுகின்ற அனுபவ உணர்வைத் தெளிவுபடுத்தி, மதிப்பிட்டு மற்றோருக்கு உணர்த்துகின்ற செயற்பாடே விமர்சனமாகும். இது அழகியல் அனுபவத்தில் தவிர்க்க முடியாததாகவும் அமைகின்ற ஒன்றாகும்".
மேலும், பிரிட்டானிக்க கலைக்களஞ்சியம் பின்வருமாறு கூறுகின்றது :
“இலக்கியத்தில் அல்லது நுண்கலைகளில் உள்ள அழகியல் கூறுபாடுகளின் பண்பையும் மதிப்பையும் பற்றித் தீர்ப்பளிப்பதே விமர்சனமாகும்"
பல ஆங்கில அகராதிகள் மதிப்பிடுவதும் தீர்ப்பளிப்பதுமே விமர்சனம் என்று கூறுகின்றன. ஆனால் பிரெஞ்சு மொழிக் கலைக் களஞ்சியம் "தீர்ப்பளிப்பதும் விமர்சனத்தின் கடமைதான் என்று கருதினாலும் ஒரு படைப்பை விரித்து விளக்குவதே விமர்சனத்தின் இன்றியமையாத பணியாக உள்ளது" என்று சுட்டிக்காட்டுகின்றது.
ஜேர்மனிய கலைக்களஞ்சியம் ஒப்பீட்டு ஆராயும் தன்மையை வலியுறுத்துகின்றது. எனவே, திறனாய்வு என்பது படைப்பை விளக்குவது, மதிப்பிடுவது என்ற அளவில் பலரும் உடன்படுவதைக் காணலாம். ஆனால் தீர்ப்பளித்தல் என்பதில் கருத்து முரண்பாடுகள் உள்ளன.
முதலில் தீர்ப்பு வழங்கும் விமாசனத்தை வரவேற்ற ஐ.ஏ.ரிச்சர்ட்சு பிற்காலத்தில் பகுத்தாராயும் முறையை மட்டும் பின்பற்றினார். ஆனால் டி.எஸ். எலியட் தீர்ப்பளிக்கும் விமாசனத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். தீர்ப்பளிக்கும் திறனாய்வாளர் தன்னை முதன்மைப்படுத்துகின்றார். பகுத்தாராய்கின்ற விமர்சகா படைப்பை முதன்மைப் படுத்துகின்றார். அந்த வகையில் விமாசனத்தைப் பின்வருமாறு வரையறுக்கலாம்.
"ஓர் இலக்கிய ஆக்கத்தைப் பகுத்தாராய்வதும், விளக்குவதும், மதிப்பிடுவதும், தீர்ப்புக் கூறுவதும் ஆகிய அனைத்துச் செயற்பாடுகளும் இலக்கியத் திறனாய்வேயாகும். இது தவிர்க்கவே முடியாதபடியான ஒரு தளத்தில் இயங்கும் செயற்பாடாகும்"
திறனாய்வாளனது நோக்கம், பயிற்சி, இலக்கியத்தினுடைய தேவை முதலியவற்றைச் சார்ந்திருக்கின்ற திறனாய்வு இலக்கியத்தை அடித்தளமாகக் கொண்டு, வாசகனை நோக்கியதாக அமைகின்றது.
அந்தவகையில் படைப்பு வாசகன் திறனாய்வு என்ற மூன்றும் முக்கோண உறவுகளுக்கு உட்பட்டவை. படைப்பிலக்கியத்தையும் வாசகனையும் நெருங்கியிருக்கத் தூண்டுவது திறனாய்வுதான்.
திறனாய்வு இலக்கியத்தின் உள்ளார்ந்த பண்புகளையும் செய்திகளையும் ஆழமாகச் சென்று, அமிழ்ந்து கிடப்பவற்றை வெளிப்படுத்திக் காட்ட வேண்டும். கவிஞனின் வேலை வெளிப்பட்டுக் கிடப்பவற்றை உள்ளே மறைத்து வைப்பது. திறனாய்வின் வேலை மறைந்து கிடப்பவற்றை வெளிப்படுத்திக் காட்டுவது. கவிஞன் எந்த இடத்தில் விட்டுச் செல்கின்றானோ அந்த இடத்தைத் திறனாய்வாளன் பிடித்துக் கொள்கின்றான். அதாவது, கவிதை முடிகின்ற இடத்தில் இருந்து திறனாய்வு தொடங்குகின்றது; அதை இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்கின்றது.
நன்றி




0 Comments