கருட புராணம் பகுதி - 04 - GARUDA PURANAM PART - 04

கருட புராணம் பகுதி - 04


கருட புராணம் பகுதி - 04 - GARUDA PURANAM PART - 04

நான்கு யுகங்கள் என்னென்ன?

ஸ்ரீமந்நாராயணன் எமலோகத்தில் இருக்கக்கூடிய நிகழ்வுகள், தண்டனைகளை பற்றி எடுத்துரைத்ததை அறிந்து மகிழ்ச்சி அடைந்த கருடாழ்வார் மென்மேலும் ஐயங்களை கேட்கத் துவங்கினார். அதாவது, உலகில் உள்ள பல உயிர்களை காத்து ரட்சித்து கொண்டே இருக்கக்கூடிய ஆதிசேஷன் மீது வீற்றிருக்கும் நாராயணனே...!! உலகில் வாழும் உயிரினங்கள் எவ்விதம் தங்களுடைய கர்மவினைகளை குறைத்து நல்வினைகளை மேம்படுத்த இயலும். அதாவது தான, தர்மங்கள் கொடுப்பதன் மூலம் தீய வினைகள் நீங்குமா? என்றும்... தான, தர்மங்களால் ஏற்படும் பலன்களை விரிவாக எடுத்துரைக்க வேண்டும் என்று வினவினார். கருடனே...!! கர்ம வினைகளை குறைக்கும் வல்லமை கொண்ட தான, தர்மங்களை பற்றி உமக்கு ஏற்பட்டுள்ள ஐயங்களை நீக்கும் பொருட்டு யாம் உமக்கு உரைக்கின்றோம் என்றவாறு ஓம் என்று கூறிய வண்ணமாக ஸ்ரீமந்நாராயணன் கருடாழ்வாரின் கேள்விகளுக்கு பதிலளிக்க துவங்கினார்.

பிரபஞ்சம் உருவானது முதல் யுகங்கள் நான்கு யுகங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. நான்கு யுகங்கள் என்பது,

கிருத யுகம்
திரோதா யுகம்
துவாபர யுகம்
கலியுகம்

இந்த நான்கு யுகமும் ஒவ்வொரு செயல்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. அந்த செயல்கள் யாவும் மனிதர்கள் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே. அதாவது, கிருத யுகம் மகா தவத்திற்கு மிகுந்த முக்கியத்துவமும், சிறப்பும் வாய்ந்தது. திரோதா யுகம் தியானம் செய்வதில் முதன்மை பெற்றிருந்தது. துவாபர யுகத்தில் யாகங்கள், வேள்விகள் முதலியவை முக்கியமானதாக கருதப்பட்டது. கலியுகத்தில் தானங்கள் செய்யப்படுவதே புண்ணியத்தை கொடுக்கக்கூடியதாகும்.


எச்செயல் புண்ணியத்தை வளர்க்கும்?

இல்லற வாழ்க்கையில் ஈடுபடக்கூடிய மானுடர்கள் யாவரும் எல்லா யுகங்களிலும் வேள்விகள் நடத்துவதும், கோவில், குளம், சத்திரம் அமைத்தல் மற்றும் சீர்த்திருத்த பணிகளை மேற்கொள்ளுதல், அவற்றிற்கு தம்மால் முடிந்த அளவு உதவுதல், உறவினர்களை உபச்சாரம் செய்தல், சான்றோர் பெருமக்களை மதித்தல் போன்ற செயல்கள் பாவங்களை அழித்து புண்ணியத்தை வளர்க்கும். இந்த கர்மங்கள் யாவும் எல்லா யுகத்திலும் இருக்கக்கூடிய, இல்லறத்தில் ஈடுபடக்கூடிய மானுடர்கள் அனைவருக்கும் பொருந்தும் விதமாக வரையறுக்கப்பட்டவைகள் ஆகும்.


சுகங்களை தவிர்க்க வேண்டியது எப்போது?

இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டு இருப்பவர்கள் அவர்களுடைய பங்காளிகள் எவரேனும் இறந்துவிட்டால் அவர்களை குறித்து தர்ப்பணம் செய்ய வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். இறந்தவருக்கு கர்ம காரியங்கள் செய்தவர் எவராயினும் அவர்கள் பஞ்சணையில் படுத்து உறங்குவது போன்ற சுகங்களை அனுபவிக்கக்கூடாது. கர்ம காரியங்கள் அதாவது பத்து நாட்கள் கிரியைகளை செய்து முடிக்கின்ற வரை கர்ம காரியத்தை செய்தவன் தனது சுகங்களை தவிர்க்க வேண்டும்.

மரணம் அடைந்தவரை எண்ணி பார்ப்பதோடு நின்று விடாமல் அவர் யார்? என்றும், அவருடைய நற்குணங்களையும் மற்றவர்களிடத்தில் எடுத்துச் சொல்ல வேண்டும். எமனை வணங்குவதும் நன்மை அளிக்கக்கூடியதாகும். இறந்தவர்களை குறித்து அவர்களுக்காக செய்யப்படுகின்ற பிண்டங்களினாலேயே சரீரமானது இறந்தவருக்கு உண்டாகும். இறந்தவருக்கு சரீரம் கிடைக்க பத்து நாட்கள் கர்மங்களை முறையாக, தவறாமல் செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும். ஒருவேளை கர்ம காரியங்கள் செய்ய தவறும் பட்சத்தில் அவ்விடத்தில் பலவிதமான சாபங்களும், தோஷங்களும் ஏற்படுகின்றன.

பூமியில் மானுடனாக பிறப்பெடுக்க காரணமாக இருக்கக்கூடிய தாய், தந்தையருக்கு செய்ய வேண்டிய கர்ம காரியங்களை தவறாமல் செய்தால் செய்த அந்த கர்ம காரியத்தின் பலன்கள் அவர்களுடைய பெற்றோர்களை சென்றடையும். அதனால் அவர்களுடைய பெற்றோர் மனம் மகிழ்ந்து தனது புத்திரர்களை ஆசீர்வாதம் செய்வார்கள். மரணம் அடைந்தவர்களுக்கான பத்துநாள் கிரியைகளை செய்ய தவறினால் மரணம் அடைந்தவர் பிண்ட சரீரம் கிடைக்கப்பெறாமல் வருந்துவார்கள். இறந்துபோன ஜீவாத்மாக்கள் முதல் மூன்று நாட்கள் நீரிலும், அடுத்த மூன்று நாட்கள் நெருப்பிலும், அதற்கடுத்த மூன்று நாட்கள் ஆகாயத்திலும், ஒரு நாள் ஆவி உருவில் தன்னுடைய வீட்டிலும் வந்து வாழ்வார்கள்.


நவ சிரார்த்தம்

இறந்துபோன ஆத்மாவிற்காக முதல் நாள், மூன்றாம் நாள், ஐந்தாம் நாள், ஏழாம் நாள், ஒன்பதாம் நாள் மற்றும் பதினொன்றாம் நாளிலும் நவ சிரார்த்தம் என்ற கர்ம செயலை செய்வது அவசியமாகும். இறந்தவருக்காக முதல் நாள் எந்த இடத்தில் தர்ப்பண கிரியைகள் செய்யப்படுகின்றதோ அதே இடத்தில்தான் மற்ற ஒன்பது நாட்களிலும் கர்ம நிகழ்வுகளை நிகழ்த்த வேண்டும்.


தீட்டுகள் :

இறந்தவருடைய குலம், கோத்திரத்திற்கு விதிக்கப்பட்டுள்ள 'ஆசௌசம்" எனப்படும் தீட்டு எத்தனை நாட்களுக்கு இருக்கின்றதோ அத்தனை தினங்களுக்கும் இறந்தவருக்காக பிண்ட தர்ப்பணம் செய்ய வேண்டும். ஒருவர் எந்த திதியில் இறக்கின்றாரோ அந்த திதியில் இறந்தவருக்கு மாசிகம் செய்ய வேண்டும். இது மிகவும் அவசியமான ஒன்றாகும். (மாசிகம் என்பது இறந்தவருக்காக மாதா மாதம் செய்யப்படுகின்ற சிரார்த்த கர்மம் ஆகும்). இறக்கும் தருவாயில் ஒருவர் மிகுந்த துன்பத்துடனும், துயரத்துடனும் இருந்திருந்தால் அவரைக் குறித்து 'ஏகோதிஷ்ட சிரார்த்தம்" என்ற கர்மாவை சிறப்பாக செய்ய வேண்டும். அவ்விதம் செய்வதினால் இறந்த ஆன்மாவிடம் இருந்துவந்த வருத்தங்கள் யாவும் நீங்கி மகிழ்ச்சி அடையும்.

ஒருவர் இறந்த பின்பு அவருடைய பங்காளிகளுக்கு பத்து நாட்கள் என்பது தீட்டு காலமாகும். ஒருவர் இறந்து அவருக்கு கர்ம காரியங்கள் யாவும் முடிந்து மூன்று மாதங்களுக்குள் அவர் இறந்துவிட்டார் என்ற செய்தியை கேட்டால், அந்த பங்காளிக்கு மூன்று நாட்கள் மட்டுமே தீட்டு உண்டு. ஒருவேளை ஒருவர் இறந்து அவருக்கு கர்ம காரியங்கள் யாவும் முடிந்த பின்பு மூன்று மாதங்களுக்கு மேல் ஒரு வருடத்திற்குள் அவர் இறந்துவிட்டார் என்ற செய்தியை கேட்டால், ஒரு தினம் மட்டுமே அவர்களுக்கு தீட்டு உண்டாகும். ஒருவேளை ஒருவர் இறந்து அவருக்கு கர்ம காரியங்கள் யாவும் முடிந்த பின்பு ஒரு வருடத்திற்கு பின் அவர் இறந்துவிட்டார் என்ற செய்தியை கேட்டால், செய்தி கேட்டவுடனேயே குளித்து கொண்டால் தீட்டை அப்பொழுதே போக்கிக் கொள்ளலாம். இந்த நீயதி என்பது அனைத்து குலத்தாருக்கும் பொருந்தக்கூடியதாகும்.

தானங்கள் செய்யப்படுவதினால் என்னென்ன பயன்கள் ஏற்படுகின்றன? என்பதை பற்றி யாம் உமக்கு முன்பே உரைத்து இருக்கின்றோம் என்றார் திருமால். எவன் ஒருவன் அன்னதானம் செய்ய விரும்புகின்றானோ அவன் தன்னுடைய கரங்களினால் மட்டுமே அன்னதானத்தை செய்ய வேண்டும். அன்னதானத்தினை மற்றவர்களுக்கு விட்டுக்கொடுத்தோ அல்லது மற்றவர்கள் செய்வதற்கோ அனுமதிப்பது கூடாது. அவரவர் கரங்களினால் செய்யப்படுகின்ற அன்னதானத்தின் மூலமாகவே அதன் முழு பலனையும் அவர்கள் அனுபவிக்க இயலும்.


ஈமக்கிரியைகள் எவ்விதம் செய்யப்பட வேண்டும்?

வாசுதேவன் தானங்களை பற்றியும், தீட்டை பற்றியும் எடுத்துரைத்து கொண்டிருந்த பொழுது கருடாழ்வாருக்கு இறந்தவர்களுக்கான ஈமக்கிரியைகள் எவ்விதம் செய்ய வேண்டும்? என்பது தொடர்பான ஐயங்கள் தோன்ற அதை வாசுதேவனிடம் வினவினார். வாசுதேவரும் கருடாழ்வார் எழுப்பிய வினாவிற்கு விடையளிக்கும் விதமாக இறந்தவர்களுக்கான ஈமக்கிரியைகள் எவ்விதம் செய்யப்பட வேண்டும்? என்பதையும் உரைக்கத் தொடங்கினார்.


அத்தியாவசிய கடமை என்பது யாது?

கருடனே இறந்தவருடைய பெற்றோர்கள் உயிருடன் இருக்கும் பட்சத்தில் அவர்களின் தலைமுறையை சேர்ந்த மூன்று பிதுர்களின் பிண்டத்தோடு மரணமடைந்தவரின் பிண்டத்தையும் சேர்த்தல் வேண்டும். அவ்விதம் முன்னோர்களுடைய பிண்டத்துடன் இறந்தவரின் பிண்டத்தை சேர்க்கப்பட வேண்டிய இந்த நிகழ்வுகளை இறந்தவனுடைய குமாரன் நடத்த வேண்டும்.

இறந்தவருடைய மைந்தன் சிரார்த்தம் செய்தால் இறந்தவருடைய ஆன்மா மகிழ்ந்து அவர்களுடைய சந்ததிகளை ஆசீர்வாதம் செய்யும். இதனால் அடுத்த ஆண்டிற்குள் இறந்தவருக்கு சிரார்த்த காரியங்களை செய்தவருக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். பித்ருக்களை மகிழ்ச்சிப்படுத்துவது சம்சார வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளவர்களின் அத்தியாவசிய கடமைகளில் ஒன்றாகும்.


உடனடியாக ஈமக்கிரியைகள் செய்யக்கூடாத நட்சத்திரங்கள் யாது?

உடலை விட்டு உயிர் பிரியும் பொழுது அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் இருக்கும் பட்சத்தில் இறந்தவருக்கு உடனடியாக கர்ம காரியங்கள் செய்தல் கூடாது. இந்த நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு இந்த நட்சத்திரம் முடிந்த பின்பே ஈமக்கிரியைகளை செய்தல் வேண்டும்.


இரத்த மற்றும் மாமிச தோஷம் யாருக்கெல்லாம் ஏற்படும்?

பூமியில் பஞ்ச பூதங்களால் உருவாக்கப்பட்ட உடலிலிருந்து ஆன்மா வெளியேறிய பின்பு உடலானது சவமாக மாறுகின்றது. உயிர் இல்லாத அந்த சவத்தின் கால்களில் உள்ள இரண்டு கட்டை விரல்களையும், கைகளையும் கட்ட வேண்டும். எந்த சூழ்நிலையிலும் சவத்தினை தனியாக விடாமல் அதன் அருகிலேயே உறவினர்கள் இருக்க வேண்டும்.

சவமானது இருக்கும் பொழுது வீட்டில் உள்ளவர்கள் அல்லது அருகில் இருப்பவர்கள் தாம்பூலம் தரித்தல் கூடாது. எந்தவொரு ஆணும், பெண்ணும் இணைதல் கூடாது. இறந்தவர் அவர்களுக்கு உறவினர்களாக இல்லாத பட்சத்திலும் அவர்கள் இணைவது அவர்களுக்கு மகா பாவத்தினை ஏற்படுத்தும். சவமானது ஒருவர் வீட்டில் இருக்கும் பொழுது அந்த வீதியில் இருப்பவர்கள் யாவரும் உணவினை உண்ணுதல் என்பது பாவத்தை செய்யும் செயலாகும்.

ஆகவே சவத்தினை நல்ல முறையில் மயானத்தில் அடக்கம் செய்த பிறகு அந்த வீதியில் இருக்கக்கூடியவர்களும், வீட்டில் இருப்பவர்களும் தண்ணீரை அருந்தலாம். அவ்விதம் செய்யாமல் சவத்தினை வைத்து கொண்டு உணவை உண்பது மாமிச மற்றும் ரத்த தோஷத்தை அந்த வம்சத்தினருக்கு ஏற்படுத்திவிடும். இந்த தோஷமானது அந்த வம்சத்தினை தழைக்கவிடாமல் படிப்படியான கஷ்டங்களை கொடுத்து கீழ் நிலையிலேயே வைத்திருக்கக்கூடிய தோஷமாகும்.


தீர்த்த யாத்திரைகளும்... அதனுடைய பயன்களும்...

இறைவன் படைத்த உலகில் பஞ்ச பூதங்களாலான உடலிலிருந்து உயிர் பிரிந்த பின்பு அந்த உடலுக்கு செய்யப்பட வேண்டிய ஈமக்கிரியைகள் பற்றி அறிந்து கொண்ட கருடாழ்வாருக்கு ஒருவர் வாழும் காலத்தில் தீர்த்த யாத்திரை பயணங்களை மேற்கொண்டால் என்னென்ன பலன்கள் உண்டாகும்? என்றும், ஒருவேளை அவர் தீர்த்த யாத்திரை பயணங்களை மேற்கொள்ளும் பொழுது அவருக்கு மரணம் ஏற்பட்டால் எந்த மாதிரியான விளைவுகள் உண்டாகும்? என்பதை பற்றியும் அறிந்துகொள்ள விருப்பம் ஏற்பட்டது. அதன் பொருட்டு கருடன் நாராயணனிடம் தன்னுடைய மனதில் எழுந்திருக்கக்கூடிய ஐயங்களை கூறி இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று மிகவும் பணிவுடன் வேண்டினார்.


பிரயோபவேசம் :

பறவைகளின் அரசனே...!! உயிருடன் இருக்கும் பொழுது பல சுகங்கள் நிரம்பி இருக்கக்கூடிய பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் காலங்களில் நாவின் சுவைக்கு அடிமையாகாமல், உள்ளம் மற்றும் உடலை தூய்மையாக வைத்துக் கொண்டு தர்ம நியாயங்களின் அடிப்படையில் வாழ்ந்து, முழு மனதோடு தர்ப்பணம் மற்றும் சிரார்த்த பூஜைகளை செய்து, தர்ப்பையை பரப்பி அதன்மீது படுத்துறங்கி என்னை தியானித்து கொண்டு உயிரைவிடுவார்கள் எனில் அவன் என்னுடைய லோகமான வைகுண்டத்தை அடைவான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அவ்விதம் அவன் கடைபிடிக்கும் இவ்விடத்திற்கு 'பிரயோபவேசம்" என்று பெயர்.

ஒருவர் வாழ்கின்ற காலத்தில் எத்தனை நாட்களுக்கு இந்த நெறிமுறைகளை கடைபிடித்து என்னை தியானித்த வண்ணம் வாழ்கின்றார்களோ அத்தனை காலம் அவர்களுக்கு யாகங்கள் செய்த பலன் கிடைக்கும். சிலர் வாழும் பொழுது மாயைக்கு உட்பட்டு இதை உணராமல் பல தவறுகளை செய்வார்கள். பின்பு தாம் செய்ததை உணர்ந்து இறுதி காலத்தில் இந்த நெறிமுறைகளை பின்பற்றுவார்கள்.

உலகத்தில் இருக்கக்கூடிய சுக மற்றும் துக்கங்களில் நிலையாமையையும், இறைவனிடம் இருக்கக்கூடிய நிலை பேற்றையும் உணர்ந்து உலக வாழ்க்கையின் மீது பற்றில்லாமல் இருக்கின்ற பொழுது பிரயோபவேசம் மேற்கொள்ளலாம். ஒருவேளை பிரயோபவேசம் மேற்கொண்ட பிறகு மீண்டும் உலக வாழ்க்கையில் வாழ விருப்பம் ஏற்படுமேயானால் பிரயோபவேசத்தை இடையிலேயே விட்டுவிடலாம். சான்றோர்கள் ஒருவரின் மூலம் பிரயோபவேசம் செயலுக்கான பிராயசித்தம் செய்த பிறகே சம்சார வாழ்க்கையை ஒருவர் மேற்கொள்ள வேண்டும்.

அவ்விதம் வாழும் பொழுது அறநெறி வழுவாது வாழ்தல் மிகவும் அவசியமாகும். ஒருவர் சம்சார வாழ்க்கையை விடுத்துவிட்டு சந்நியாச வாழ்க்கையை வாழ விரும்பி, ஆசிரமத்தை அமைத்து, நியம விதிகளின் அடிப்படையிலும், அறநெறியின் அடிப்படையிலும் வாழ்ந்து வரும் வேளையில் மாண்டு போனால் அவன் சந்நியாச ஆசிரமம் ஏற்ற நாள் முதல் சமாதியான நாட்கள் வரை வாழ்ந்த ஒவ்வொரு நாளுக்கும் இறந்தவர் இரண்டு வேள்விகள் செய்த பலன்களை அடைவார்.


மகா பாவமான செயல் எது?

ஒருவர் உடல் நோயினால் அவதியுற்று பலவித இன்னல்களை அனுபவித்து கொண்டிருக்கும் காலத்தில் தனக்கு அந்திமகாலம் மிகவும் நெருக்கத்தில் இருக்கின்றது என்பதை உணர்ந்த பின்பு அறநெறியின் அடிப்படையிலும், நெறிமுறைகளின் அடிப்படையிலும் சந்நியாச வாழ்க்கையை மேற்கொள்கின்றார். அவ்விதம் அவர் வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது அவருடைய உடலில் ஏற்பட்ட பிணிகள் யாவும் நீங்கி புத்துணர்ச்சி பெறுகின்றார் என வைத்துக்கொள்வோம். புத்துணர்ச்சி பெற்றதும் மீண்டும் ஈடுபட விருப்பம் கொண்டு சம்சார வாழ்க்கையில் ஈடுபட்டால் அவர் மகா பாவத்தை செய்ததற்கு சமமானவராகின்றார்.

அவர் பாவி என்பதில் துளியும் ஐயமில்லை. அவ்விதம் பாவம் செய்தவனை பார்த்தல் என்பது கூட மிகவும் பாவமாகும். அவனுடன் இருப்பவர்கள் இதை அறிந்தும் அவனுடன் தங்கி இருந்தாலோ அல்லது பழகி இருந்தாலோ அவர் செய்த பாவத்தில் பங்கு பெறுவார்கள். இதை உணர்ந்த அவரது குடும்பத்தினர்கள் உடனே அவரை விட்டுவிட்டு தொலை தூர பயணத்தை மேற்கொள்ள வேண்டும். அவ்விதமாக பயணங்களை மேற்கொள்ளும் போது பிரம்மாதி தேவர்கள் அவர்களுடைய மன உறுதியையும், உலகப்பற்றின் இன்மையையும் அறிந்து அவர்களுக்கு வேண்டியவற்றை வழங்குவார்கள். அதாவது, அவர்களுக்கு தேவையான உதவிகள் அவ்விடத்தில் கிடைத்த வண்ணமாக இருக்கும்.


சொர்க்கத்தை அடைபவர்கள் யார்?

தீர்த்த யாத்திரைக்கு சென்ற ஒருவர் பயணத்தின் வழியில் அதாவது இடையில் அவருடைய கர்ம வினைகளின் அடிப்படையில் மரணம் அடைந்தார் எனில் அவர் சொர்க்கத்தை அடைவார். சந்நியாசிகளையும், தீர்த்த யாத்திரை மற்றும் தல யாத்திரையை மேற்கொள்ளக்கூடியவர்கள் என அனைவரையும் தேவர்கள் பாதுகாக்கிறார்கள். ஆகவே அந்த பயணத்தின் முழுப்பொறுப்பும் தேவர்களையே சார்ந்ததாகும்.

நயவஞ்சகமாக தீர்த்த யாத்திரை பயணிகளை தன்னுடைய சுய லாபத்திற்காக இடையூறுகளை ஏற்படுத்தக்கூடியவர்களும் அல்லது ஏதாவது ஒரு வகையில் அவர்களுடைய மரணத்திற்கு காரணமாக இருக்கக்கூடியவர்களும் மகா பாவத்தை செய்ததற்கு சமமானவர்கள் ஆவார்கள். பூமியில் வாழும் பொழுது சுகமாக இருக்கும் ஒவ்வொரு நொடியும் நரகத்தில் ஒவ்வொரு யுகங்களாக எமகிங்கரர்கள் மூலமாகவும், நரகத்தில் இருக்கும் தண்டனைகளாலும் கழிப்பார்கள். ஆகவே தீர்த்த யாத்திரை பயணிகளுக்கு முடிந்த அளவிற்கு இடையூறுகளை ஏற்படுத்தாமல் தம்மால் இயன்ற அளவு உதவி செய்வார்கள் எனில் உதவி செய்தவர்களுக்கு இச்செயல் புண்ணியத்தை உருவாக்கும்.

தீர்த்த யாத்திரை மேற்கொண்ட ஒருவர் ஒரு புண்ணிய தலத்தில் தன்னுடைய உயிரை விட விரும்பி அங்கேயே நீண்ட நாட்கள் வாழ்ந்து கொண்டிருந்த அவ்விடத்தில் உயிர் பிரியாமல், தன்னுடைய தீவினை காரணமாக வேறொரு இடத்திற்கு சென்று கொண்டிருக்கும் நேரத்தில் விதியின் வசத்தால் அவருடைய உடலில் இருந்து உயிர் பிரிந்து இறந்துவிட்டால், அவர் மறுபிறவியில் தெய்வ பக்தியும், இறை நம்பிக்கையும் கொண்டிருக்கக்கூடிய குடும்பத்தில் பிறந்து சாஸ்திர கலைகளில் நன்கு தேர்ச்சி பெற்று, நல்லொழுக்கத்துடனும், பக்தியுடனும் வாழ்ந்து முடிவில் நல்லுலகை சென்றடைவார்.


முடிவில் மாற்றமும், மகா பாவமும்... :

ஒருவர் ஒரு குறிப்பிட்ட திருத்தலத்திற்கு சென்ற பின்பு இந்த தலத்தில் தான் தன்னுடைய உயிர் விடுவேன் என்று வேத விற்பன்னர்கள் மூலமாக சங்கல்பம் செய்து, யாத்திரை செய்து வாழ்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் தன்னுடைய முடிவுகளில் சில மாற்றங்கள் செய்து, மீண்டும் தன்னுடைய குடும்பத்தையோ அல்லது குடும்ப உறுப்பினர்களையோ பார்க்க இல்லத்திற்கு திரும்பினால் அவரும் மகாபாவி தான்.


கோ தானம் செய்த பலன் எப்போது கிடைக்கும்?

விஷ்ணு தலங்களை நோக்கி செல்கின்றவர் தான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் ஒரு பசு மாட்டினை தானம் செய்த பலனை பெறுவார். எந்தவொரு சூழ்நிலையிலும் தான் மேற்கொண்ட இந்த பயணத்தை நிறைவு செய்யாமல் இல்லம் திரும்ப எண்ணம் கொண்டு அவர் இல்லத்தை நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் ஒரு பசு மாட்டினை கொன்றதினால் ஏற்படக்கூடிய தோஷத்தை பெறுகின்றார். ஆகையால் புண்ணியம் தேடும் எண்ணம் கொண்ட ஒவ்வொருவரும் தான் மேற்கொண்ட தீர்த்த யாத்திரை பயணத்தை எப்பாடுபட்டாவது பூர்த்தி செய்தல் வேண்டும்.

தீர்த்த யாத்திரை பயணங்களின் போது திருத்தலங்களில் தங்கியிருந்து கோவில் பணிகளை மனநிறைவோடு செய்து திருத்தலங்களில் கொடுக்கப்படும் பிரசாதங்களை பக்தியோடு பெற்று உண்பார் எனில் அவர் தன்னுடைய இல்லற வாழ்க்கையில் செய்துவந்த பாவங்களை இத்தகைய புனித யாத்திரை பயணங்கள் மேற்கொள்வதன் மூலம் போக்கிக் கொள்ள முடியும். ஒருவர் தீர்த்த யாத்திரை பயணத்தை முழுமையான மனதோடும், இறை பக்தியோடும் மேற்கொண்டவராயின் அவருடைய வாழ்க்கையில் செய்துவந்த பாவங்கள் யாவும் நீங்க பெற்று புண்ணியங்களை அவர் சேர்க்கத் துவங்குவார்.


பரிகாரமே கிடையாத பாவம் எது?

தீர்த்த யாத்திரை பயணங்கள் மேற்கொள்ளும் பொழுதும், திருத்தலங்களில் தங்கியிருக்கும் பொழுதும் ஏதேனும் பாவச்செயலை அவர் செய்துவிட்டார் எனில் அவர் செய்த அந்த பாவச்செயலுக்கு எப்பொழுதும் பரிகாரமோ, விமோச்சனமோ அவர்களுக்கு கிடைக்காது.


முதன்மை கடமை எது?

கருடா... ஒருவர் யார் என்று தெரியாத அந்நியர்களுக்கு உதவி செய்து அவர்கள் மூலம் நல்ல பெயர்களை எடுப்பதை காட்டிலும் தன்னுடைய பெற்றோர்களுக்கும், தன்னுடன் பிறந்தவர்களுக்கும் தேவையான உதவிகளை செய்வது என்பதே முதன்மை கடமையாகும். பெற்றோரின் மனதினை குளிர செய்யாமல் எந்த செயலை செய்தாலும் அதில் முழு பயன் கிடைப்பது என்பது மிகவும் குறைவாகும். பெற்றோரும் தன் மகன் செய்கின்ற செயல்களின் தன்மையையும், அதில் இருக்கும் நன்மைகளையும் உணர்ந்து தன்னுடைய மகனை வாழ்த்த வேண்டும்.

அதை விடுத்து பெற்றோர்கள் நயவஞ்சகமாக செயல்பட்டார்கள் எனில் நன்மையை செய்ய தடையாக இருக்க என்ன தண்டனை கிடைக்குமோ, அவர்களுக்கும் அதே தண்டனை கிடைக்கும். பலவிதமான இன்னல்களுக்கு இடையே கஷ்டப்பட்டு சேர்த்த பொருளை நல்லவிதமாக அனைவருக்கும் பயன்படும் வகையில் செலவிட வேண்டும். தான் சேர்த்த பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். பூமியில் பிறக்கின்ற ஒவ்வொருவருக்கும் பிறப்பு எவ்விதம் இருக்கின்றதோ, அதே போல இறப்பு என்பது உறுதியானது ஆகும்.

ஆகவே அதை உணர்ந்து நிலையற்ற செல்வங்களின் மீது விருப்பம் கொள்ளாமல், நிலையான செல்வங்களின் மீது விருப்பம் கொள்ள வேண்டும். நிலையான, நிலையற்ற செல்வங்கள் என்று உணராத பகுத்தறிவாளர்கள் நிலையில்லாத செல்வத்தை விரும்பி அணிந்து கேளிக்கையில் ஈடுபட்டு செல்வத்தை விரயமாக்குவது மட்டுமின்றி, பாவத்தின் அளவுகளையும் அதிகமாக்கி கொள்கின்றார்கள். சம்சார சமுத்திரத்தில் ஆழ்ந்து கிடப்பவர்களை கண்டு காலனும் எள்ளி நகையாடி கொண்டிருப்பான். அவனுடைய பாவ கணக்குகளை எழுத முடியாமல் சித்திரகுப்தன் தவித்துக் கொண்டிருப்பான்.

வாழும் காலத்தில் தேடிய செல்வத்தை தானும் பயன்படுத்தாமல், மற்றவர்களுக்கும் கொடுக்காமல் மேலும் மேலும் பொருள் சேர்ப்பவர்கள் ஒன்றை மட்டும் உணர்ந்து கொள்ள வேண்டும். பொன்னும், பொருளும் ஒருவருக்கு உரித்தானது அல்ல. அவைகள் யாவும் கை மாறும் தன்மை உடையது. இவைகள் யாவும் நிலையற்ற செல்வங்கள். ஆகவே இவைகளை உணர்ந்து நிலையற்ற செல்வங்களை 'எனது எனது" என்று உரிமை கொள்ளாமல் அதை நல்வழியில் பயன்படுத்த வேண்டும். ஒருவேளை சந்ததியற்ற சூழ்நிலையில் இருப்பவர்கள் தான் சேர்த்த சொத்துக்கள் யாவையும் தத்துப்பிள்ளைகளுக்கு கொடுத்து செல்கின்றார்கள். அந்த தத்துப்பிள்ளையும் ரத்த சம்பந்தம் இல்லாமல் இருந்தால் எவரோ ஒருவர் பெற்ற பிள்ளைக்கு அந்த செல்வமும் உரிமை ஆகின்றது.

அதனால் இறந்தவருக்கு எந்தவித பயனும் இல்லை. ஏன் இறந்த பின்பு அவர்களின் இடுப்பில் இருக்கக்கூடிய அரைஞாண் கயிறு கூட அவர்களுக்கு சொந்தமில்லை. எமலோக பயணத்தை மேற்கொள்ளும் பொழுதோ அல்லது எமலோகத்தில் இருக்கும் பொழுதோ பூமியில் சேர்த்த செல்வங்கள் யாவும் அவனுடன் வரப்போவதில்லை. வாழும் காலத்தில் இதனை உணர்ந்து ஒவ்வொருவரும் தன்னால் முடிந்த அளவு நல்ல காரியங்களை செய்து பாவங்களை குறைத்து புண்ணியங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். மனிதர்களாக உடலுடன் கூடிய நிலையில் பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில் முடிந்த அளவு புண்ணியங்களை செய்தால் அவனுக்கு உயர்பதவி பூமியில் கிடைக்காவிட்டாலும், எமனின் உலகத்தில் நீதிகள் தழைத்திருக்கும் இடத்தில் செய்த புண்ணியத்திற்கு ஏற்ப பலன்களும் கிடைக்கும்.

நாம் செய்யும் காரியங்கள் நற்காரியங்களாக இருக்கும் பொழுது இப்பிறவியும், மறுபிறவியும் நம்மை மகிழ்ச்சியுடனும், சுகமாகவும் வாழவைக்கும். பகுத்தறிந்து உணரும் மனிதர்கள் பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது நில தானம், கோ தானம், பல வேள்விகளை முன்னின்று செய்வதும், போரில் நேர்மையான முறையில் வீரத்துடன் போரிட்டு எவனொருவன் முன்னேறுகின்றானோ அவனே மண்ணுலகிலும், விண்ணுலகிலும் ஏன் இப்பிறப்பிலும், மறு பிறப்பிலும் மகிழ்ச்சியுடன் வாழ்வான் என்று ஸ்ரீமந்நாராயணன் கருடாழ்வாருக்கு எடுத்துரைத்தார்.


நித்திய சிரார்த்தம் என்றால் என்ன?

ஜெகத்தை காப்பவரான ஜெகநாதன் கருடாழ்வாரிடம் இம்மையிலும், மறுமையிலும் நன்மை பயக்கக்கூடிய செயல்கள் யாது? என்று உரைத்துக் கொண்டிருப்பதை கேட்ட கருடாழ்வாருக்கு மேலும் ஐயங்கள் உருவாகத் துவங்கியது. அதாவது, நித்திய சிரார்த்தம் செய்வதன் மூலம் இறந்தவர் நற்கதி அடைய இயலும் என்று கூறியிருந்தார் அல்லவா? நித்திய சிரார்த்தம் என்றால் என்ன? என்பதையும், அதை எப்படி செய்ய வேண்டும்? என்பதையும் பொறுத்து தனது மனதில் எழுந்த ஐயங்களை ஜெகத்தை காத்துக்கொண்டு இருக்கக்கூடிய ஜெகநாதனிடம் மனதில் தோன்றிய மற்றும் எழுந்த ஐயங்களை உரைத்து விலக்கி அருளுமாறு வேண்டினார் கருடன். கருடாழ்வார் எழுப்பிய வினாவிற்கு விடை அளிக்கும் பொருட்டு ஸ்ரீமந்நாராயணனும் நித்திய சிரார்த்தத்தை பற்றி எடுத்துரைக்க துவங்கினார்.


நித்திய சிரார்த்தம் :

கருடனே...!! உலகில் வாழ்ந்து மடிந்த அதாவது இறந்தவரை எண்ணி முதல் ஆண்டில் தினந்தோறும் அறிவில் சிறந்த, வேதம் உணர்ந்த சத் பிராமணன் ஒருவருக்கு உணவளித்து உபசரிப்பது நித்திய சிரார்த்தம் ஆகும்.

அவரவர்களின் செல்வ நிலைக்கு ஏற்ப தினம்தோறும் அல்லது முக்கியமான புண்ணிய தினங்களிலும் அன்னத்தையும், நீரையும் தனித்தனியாக இரண்டு கும்பங்களில் நிரப்பி அதை வேதம் உணர்ந்த, உபசரித்த சத்பிராமணனுக்கு தானமாக அளித்திட வேண்டும். இவ்விதமாக நாள்தோறும் செய்துவர இறந்தவருடைய ஆன்மாவானது மகிழ்ச்சி அடையும். இறந்தவரின் ஆன்மா மட்டும் மகிழ்ச்சி அடைவதோடு மட்டுமல்லாமல் இறந்தவனை இழுத்து செல்கின்ற எமகிங்கரர்களையும் இந்த தானமானது திருப்திப்படுத்தும். இதனால் இறந்தவரின் ஆன்மாவினை எமபுரத்தை நோக்கி அழைத்து சென்று கொண்டிருக்கின்ற ஓராண்டு காலத்திற்கும் எமகிங்கரர்கள் இறந்தவரின் ஆன்மாவிற்கு எந்தவிதமான இன்னல்களும், துன்பங்களும் நேராத வண்ணமாக அழைத்து செல்வார்கள். நித்திய சிரார்த்தம் என்பது இறந்த ஆன்மாவை மட்டுமல்லாமல் எமகிங்கரர்களையும் திருப்திப்படுத்தக்கூடிய ஒரு செயலாகும்.


12ஆம் நாளில் செய்ய வேண்டிய தானம் எது?

ஒருவர் மடிந்த அதாவது இறந்துபோன 12ஆம் நாளில் அவருடைய ரத்த சம்பந்தமுடைய உறவினர்கள் இறந்தவரை எண்ணி எந்தவிதமான மன குழப்பங்களுக்கும் ஆட்படாமல் அதாவது, செலவாகின்றது அல்லது இந்த செலவு இந்த நிலையில் அவசியமா? என்றெல்லாம் எண்ணாமல், மனதிருப்தியுடன் இறந்தவர் நற்கதி அடைய வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் 12 கும்பங்கள் (சொம்பு அல்லது குடம்) தானமாக செய்தல் வேண்டும்.

வசதி இல்லாதவர்கள் அல்லது வறுமையில் வாடுகின்றவர்கள் 12 கும்பங்களை தானமாக தர இயலாவிட்டாலும், ஒரு குடத்தை என்னை நினைத்தும், ஒரு சொம்பை சித்ரகுப்தனை நினைத்தும் தானமாக கொடுக்க வேண்டும் என்று திருமால் கூறினார்.


மோட்சமும், சொர்க்கமும் ஒன்றா? வேறா?

திருமால் எடுத்துரைத்துக் கொண்டிருக்க கருடாழ்வார் ஜெகன்நாதனை நோக்கி மோட்சமும், சொர்க்கமும் ஒன்றா? அல்லது வௌ;வேறா? என்றும், ஒருவருக்கு மோட்சமும், சொர்க்கமும் எவ்விதம் கிடைக்கும்? அல்லது அதை அடைவதற்கு என்ன செய்ய வேண்டும்? என்று வினவினார்.


மோட்சம்... சொர்க்கம் வேறுபாடு :

ஸ்ரீமந்நாராயணன் கருடாழ்வாரை நோக்கி அவருடைய வினாவிற்கு விடை அளிக்க துவங்கினார்.

மோட்சம் என்பது ஒருவர் எந்தவிதமான பிறவியும் எடுக்காமல் அல்லது பிறவி நிலைகளில் இருந்து முழுவதுமாக சுதந்திரம் அடைவதாகும். சுருங்க சொல்லப்போனால் மீண்டும் ஜனனம் அதாவது பிறவி எடுக்காமல் இருப்பது மோட்சம் ஆகும்.

சொர்க்கம் என்பது பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் காலங்களில் நற்செயல்கள் செய்வதினால் ஏற்படும் புண்ணிய பலன்களை கொண்டு அவர் அடைக்கின்ற இன்ப வீடு ஆகும். தேவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் உலகங்களில் இன்புற்று இருக்கும் பேறு தான் சொர்க்கம் ஆகும் என்றார்.


என்னென்ன கர்மங்கள் செய்தால் புண்ணிய லோகத்தை அடைய இயலும்?

ஸ்ரீரங்கம், காசி, குருச்சேத்திரம், பிருகு சேத்திரம், பிரபாச தீர்த்தம், காஞ்சி, திரி புஷ்கரம் மற்றும் புதேஸ்வரம் ஆகிய புண்ணிய ஸ்தலங்களில் இறப்பவர்களுக்கு மோட்சம் கிடைப்பது உறுதியாகும். வடமதுரை, காசி, அயோத்தி, மாயாபுரி, காஞ்சி, அவந்திகா மற்றும் துவாரகை போன்ற சந்த ஸ்தலங்களில் ஏதாவது ஒன்றில் இறப்பாராயின் அவர் வைகுண்டத்தை வந்தடைவார். சன்னியாச ஆசிரமத்தை அமைத்து அதை ஒழுக்கத்துடன் கடைபிடிப்பவர்களும், என் மீது பக்தி கொண்டவர்களும், உயிர் அவர் உடலிலிருந்து பிரியும் பொழுதும் என்னுடைய நாமங்களை உச்சரித்து கொண்டிருப்பவர்களும் பேரின்ப வீட்டை அடைவார்கள்.

துளசியை பயிர் செய்து கோவிலுக்கு கொடுப்பவர் மற்றும் துளசிக்கு நீர் பாய்ச்சுகின்றவர்களின் பாவங்கள் யாவும் நீங்கி மேலோகத்தில் மகிழ்ச்சியாக இருப்பர். பசு, குழந்தைகள், பெண்கள் மற்றும் வேதம் உணர்ந்த, அறிவில் சிறந்த சான்றோர்கள் ஆகியோரை ஆபத்து ஏற்படும் காலங்களில் தன்னை பற்றி கவலைப்படாமல் சுயநல நோக்கம் எதுவும் இல்லாமல் அவர்களை காப்பாற்றக்கூடியவர்கள் இறுதியில் சொர்க்கலோகத்தில் தேவர்களால் வரவேற்கப்பட்டு இன்பமாக இருப்பார்கள்.

பசு, ஆடை மற்றும் பூமி ஆகியவற்றை தானம் கொடுப்பவர்களும், கிணறு மற்றும் குளம் போன்ற நீர் நிலையங்களை பழுது பார்த்தவர்களும், ஏற்படுத்தியவர்களும், கோவில்கள் எழுப்பியவர்களும் அதில் உள்ள பழுதுகளை நீக்கி புதுப்பித்தவர்களும் புண்ணியம் செய்தவர்கள் ஆவார்கள். இவர்கள் செய்த இந்த செயலினால் உருவான புண்ணியத்தால் விஷ்ணு லோகத்தை அடைந்து மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

காளை கன்றினை தானம் செய்தவரும், தர்ப்பை புல்லால் வீடு கட்டி, மனை தானம் கொடுத்தவர்களும், விருஷோற்சர்க்கம் செய்தவர்களும் சொர்க்கத்தை அடைவார்கள் என்று ஸ்ரீமந்நாராயணன் கூறினார். சூதமாமுனிவர் மேற்கண்டவாறு கருடாழ்வாருக்கு ஸ்ரீமந்நாராயணன் உரைத்தவற்றை முனிவர்களுக்கு எடுத்துரைத்து கொண்டிருந்தார்.


தீட்டு 

ஸ்ரீமந்நாராயணரிடம் பணிந்த கருடாழ்வார் ஆசௌசம் எனப்படும் தீட்டு தொடர்பான விபரங்களை எடுத்துரைக்க வேண்டும் என்று வேண்டினார். கருடனே...!! வேதம் உணர்ந்த அந்தணர் ஒருவருக்கு புத்திரன் பிறந்தாலும், இறந்துவிட்டாலும் அவருடைய தாயாதிகளுக்கு 10 நாட்கள் வரை தீட்டு உண்டாகும். தீட்டு உடையவர்கள் இல்லத்தில் தீட்டுகள் நீங்கும் வரை ஹோமம், ஆராதனைகள் யாவும் தவிர்க்கப்பட வேண்டும். தீட்டு உடையவர் வீட்டில் தீட்டு காலம் நீங்கும் வரையில் தீட்டு இல்லாத யாரும் உணவு உண்ணக்கூடாது.

ஒருவர் தீப்பற்றி இறந்து போனாலோ, சிங்கம் புலி போன்ற கொடிய விலங்குகளால் மரணம் ஏற்பட்டாலோ, வெளிநாடுகளுக்கு சென்று அங்கு சென்று அவ்வூரில் மரணமடைந்தாலோ அவர்களுக்கு உடனே கர்ம காரியங்களை செய்தல் கூடாது. அப்படி செய்தால் அவருடைய குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர்களுக்கும் தீட்டு உண்டாகும். வாழ்ந்து கொண்டிருந்தவர் இயல்பான முறையில் இறந்து இருந்தால் அவர் இறந்துவிட்ட செய்தியை கேட்டவுடன் குளிக்க வேண்டும். நாட்டை ஆளுகின்ற தலைவனுக்கும், வேள்விகளை நடத்துகின்ற வேதம் உணர்ந்த அந்தணனுக்கும், தவம் செய்து கொண்டிருக்கும் அந்தணனுக்கும் அவர்களுடைய தாயாதிகள் இறந்தால் தீட்டு என்பது இல்லை.

அதைப்போலவே திருமணக்கோலத்தில் இருக்கின்றவர்களுக்கும், திருவிழா நடத்த கரங்களில் காப்பு அணிந்தவர்களுக்கும் தாயாதிகள் இறந்தால் அவர்களுடைய தீட்டு இவர்களை சாராது. பசு, மங்கை, அறிவில் சிறந்த நன்னெறி உணர்ந்த வேதம் அறிந்த சான்றோர் பெருமக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு இருக்கக்கூடியவர்களும், நாட்டினை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருப்பவர்களும், போரிடும்போது இறந்துவிட்டாலும் அவர்களை சார்ந்த உறவினர்களுக்கு ஒருநாள் மட்டுமே தீட்டு உடையதாகும்.


யாருக்கெல்லாம் தீட்டு என்பது இல்லை?

கருடனே...! ஒரு மனிதன் பூமியில் பிறந்து வாழ்ந்து சுக துக்கங்களை அனுபவித்து வயது மூப்பின் காரணமாக மரணம் அடைவதே உயர்ந்ததாகும். அதை விடுத்து வயது மூப்பின் காரணமாகவும், நோயின் கொடுமையை தாங்க முடியாமலும் தற்கொலை செய்து கொள்வது என்பது மகா பாவமாகும். கொடிய நஞ்சு உண்டும் அல்லது நீரிலோ பாய்ந்து உயிரை மாய்த்து கொள்கின்றனர். மேலும், வாங்கிய கடனை திருப்பித் தராமல் இறந்தவர்களுக்கும் நரகத்தில் இடம் உண்டு. தொழு நோயினால் பாதிக்கப்பட்டு உடல் முழுவதும் புழு உண்டாகி இறக்கின்றவன் மகா பாவியாவான்.

விபத்தில் அடிபட்டு மரணம் அடைந்தவர்களும் நற்கதி அடைவது என்பது குறைவுதான். சிலரோ கொடிய மிருகங்களால் கொல்லப்படுவார்கள் அல்லது கொல்லப்படுகின்றார்கள். வஞ்சக எண்ணங்களின் விளைவாக தாக்கப்பட்டு மரணமும் அடைகின்றார்கள். சிலரோ வேற்றின மங்கையருடன் உறவு வைத்துக் கொண்டிருக்கும் பொழுது இறந்து போகின்றார்கள். இவ்விதமாக இறந்தவர்களுக்கு நற்கதி என்பது அவ்வளவு எளிதானது அல்ல. இவர்கள் அடைவது என்பது நரகம் தான். இவ்வாறு இறந்தவர்களை சார்ந்தவர்களுக்கு தீட்டு என்பது இல்லை.

இவ்விதமாக இறந்தவர் வேதம் உணர்ந்து, நன்னெறிகள் அறிந்த சான்றோராக இருக்கும் பட்சத்தில் அவர்கள் இறந்த ஆறு மாதங்களுக்கு பிறகும்...

நேர்மையுடனும், உண்மையுடனும் நேரடியாக எதிரியை காணக்கூடிய சத்திரியனாக இருப்பவராக இருந்தால், அவர் இறந்த பின்பு இரண்டு மாதங்களுக்கு பிறகும்...

வணிகம் சார்ந்த பணிகளில் இருப்பவராக இருந்தால், 15 நாட்களுக்கு பிறகும்...

இழிவான காரியங்களை செய்யக்கூடியவராக இருந்தால், இறந்த உடனேயும் அவர்களுக்கு உரிய கர்மங்களை செய்ய வேண்டும்.

அகால முறையில் மரணம் அடைந்தவர்களுக்கு புண்ணிய நதிகளின் தீர்த்தத்திலாவது கங்கை, நைமிசாரண்யம், புஷ்கர ஷேத்திரங்களிலேயோ... அரசமர நிழலிலேயோ அல்லது மாட்டு கொட்டைகளிலோ அல்லது எதுவுமே முடியாவில்லை எனில் வீட்டிலாவது நாராயண பலியைக் கொடுக்க வேண்டும். ஸ்ரீமந்நாராயணன் இவ்விதம் கூறியதை கேட்ட கருடாழ்வார் நாராயண பலி என்றால் என்ன? என்று வினாவினார். நாராயண பலி என்பது வேத மந்திரங்களால் பகவானைத் துதித்து மனதார ஆராதனை செய்து வழிபட வேண்டும். தெற்கு நோக்கி நின்ற வண்ணமாக மங்களகரமான வார்த்தைகளினால் பகவானை துதித்து, இறைவா... பூமியில் வாழ்ந்து மடிந்து அதாவது இறந்துபோனவருக்கு தாங்கள் தான் நற்கதியை அளிக்க வேண்டுமென்று எம்மை பிரார்த்திக்க வேண்டும்.

அவர்களின் பிரார்த்தனைகள், தியானம் முதலியவை முடிந்த பின்பு வேதமும், அறிவில் சிறந்தவர்களுக்கும் தம்மால் முடிந்தளவு, இருக்கும் செல்வ நிலைக்கு ஏற்ப அன்னமிட்டு, நவதானியங்களை தானமாக அளிக்க வேண்டும். அன்று இறந்து போனவருக்காக பிண்ட தர்ப்பணமும் செய்வது மிகவும் அவசியமாகும். இவ்விதமாக செய்த பின்பு மறுநாளில் மும்மூர்த்திகளான சிவன், பிரம்மா, விஷ்ணுவிற்கும் மற்றும் எமனுக்கும் பிரதிமை செய்து, பூஜை செய்து வழிபடுதல் அவசியம் ஆகும். அதாவது மேற்கு திசையில் தங்கத்தால் எம்மையும், கிழக்கு திசையில் வெள்ளியால் பிரம்மாவையும், வடக்கு திசையில் தாமிரத்தால் ருத்ரனையும், தெற்கு திசையில் இரும்பால் எமனையும் வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

பூஜையின்போது 5 கும்பங்களை வைத்து அலங்கரித்து, நான்கு தேவர்களையும் எண்ணி மற்றும் ஐந்தாவதாக இருக்கும் கும்பம் இறந்தவருக்காக வைத்து இறந்தவருக்காக சிரார்த்தம் செய்து, பிண்டம் வைத்து எட்டு வகையான தானங்களை அவரவர்களின் வசதிக்கு ஏற்ப கொடுக்க வேண்டும். முந்நூற்று அறுபது பலாச இலைகளின் காம்புகளால் இறந்தவரின் உடலை போல் ஒரு பிரதிமை செய்ய வேண்டும். (சிரசிற்கு நாற்பது, கழுத்திற்கு பத்து, மார்பிற்கு இருபது, வயிற்றுக்கு இருபது, தொடைகளுக்கு நூறு, இமைக்கு இருபது, இரு கரங்களுக்கு நூறு, முழந்தாள்களுக்கு முப்பது, இனக்குறிக்கு நான்கு, விருஷணங்களுக்கு ஆறு, கால்களுக்கு பத்தும் வைத்து, மறுபடியும் சிரசுக்கு தேங்காய், முகத்திற்கு பஞ்சரத்தினம், நாவிற்கு வாழைப்பழம், மூக்கிற்கு எள்ளுப் பூவும், காதுக்கு எள்ளும், நரம்பிற்கு தாமரைத் தண்டும், தசைக்கு அன்னமும், இரத்தத்திற்கு தேனும், மயிர்களுக்கு சவுரியும், தோலுக்கு மான்தோலும், ஸ்தன பிரதேசத்திற்கு குன்றிமணியும், நாபிக்கு தாமரைப் பூவும், விருஷணங்களுக்கு பனங்காயும், வைத்து சந்தன புஷ்பங்களால் அலங்கரித்து சாஸ்திர முறைப்படி கிருத்தியங்கள் செய்தால் துர்மரணம் அடைந்தவன் நற்கதி அடைவான்.) இவ்விதமாக கர்மவினை செய்தவருக்கு பத்து நாட்களும் மற்ற தாயாதிகளுக்கு மூன்று நாட்களும் தீட்டு உண்டாகும்.


கர்மவினை என்பது யாது?

ஸ்ரீமந்நாராயணன் கருடாழ்வாரை நோக்கி பிறப்பெடுத்த அனைத்து உயிரினங்களும், வாழும் பொழுதும், இறந்த பின்பும் இன்ப, துன்பங்களை அனுபவிப்பது என்பது அந்தந்த ஜீவாத்மாக்களினால் செய்யப்பட்ட நல்வினையும், தீவினையும் முக்கியமான ஒரு காரணமாகும். பிறப்புகளிலேயே மிக உயரிய பிறப்பு என்பது மானுட பிறப்பாகும். ஏனெனில் மற்ற பிறவிகளை காட்டிலும் மானுட பிறப்பு என்பது பகுத்தறிந்து உணரும் தன்மையையும், சிந்தித்து செயலாற்றும் குணத்தையும் கொண்டிருக்கக்கூடியவர்கள் ஆவார்கள்.

ஒவ்வொரு பிறவியிலும் உடலுடன் கூடிய ஜீவாத்மா செய்கின்ற கர்மவினை என்பது அடுத்தடுத்த பிறவிகளிலும் பாவம் மற்றும் இன்ப கர்மாக்களாக நிழல் போல தொடரும். கர்ம வினையானது தன்னை செய்தவர் யார்? என்று அந்த வினையே அவர் எடுக்கும் அடுத்தடுத்த பிறப்புகளில் அந்த வினையின் பலன்களோடு சென்றடையும். கர்மவினை வினையை செய்தவன் யாரென்று எவ்விதம் அறிந்து கொள்கின்றது? என்று கருடாழ்வார் வினவினார்.

ஸ்ரீமந்நாராயணர் கருடனை நோக்கி கர்மவினை என்பது கர்மம் செய்த ஜீவாத்மாவை குறிக்கக்கூடியதாகும். உடல் என்பது அழியக்கூடிய ஒன்றாகும். ஆனால் ஜீவாத்மா என்பது அழிவதில்லை. அழியாத ஜீவாத்மாவிற்கு மாறாக மற்றொரு உடல் மட்டுமே கிடைக்கின்றது. மாறுபட்ட உடலுடன் ஜீவாத்மா இருந்தாலும், ஜீவாத்மாவின் பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப கர்மவினையும் அந்த ஜீவாத்மாவினை சென்றடைகின்றது. இது எவ்விதம் சாத்தியம்? என்றும் ஐயம் தோன்றலாம். ஆனால் இதுவே சாத்தியமாகும்.

பல பசுக்கள் நிறைந்து இருக்கக்கூடிய கூட்டத்தில் கன்றானது எவ்விதம் தன்னுடைய தாய் பசுவைத் தேடி சென்று தனக்கான பாலை அருந்துகின்றதோ, அதைப்போலவே கர்மவினையை செய்தவனை வினையே தேடிச் சென்று அவன் எடுக்கும் அடுத்தடுத்த பிறவிகளிலும் அந்த வினையின் பலன்களை அவனே அனுபவிக்க வேண்டும். கர்மவினையும் தன்னை செய்தவனை அடையாளம் கண்டுகொள்ளும். வளங்கள் நிறைந்த பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய மனிதர்கள் சொற்ப விஷயங்களுக்கும், அற்பத்தனமான எண்ணங்களுக்கும் தன்னுடைய இன்னுயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். அதாவது தற்கொலை செய்து கொண்டால் மட்டுமே தீர்வு கிடைக்கும் என்பது தீர்வல்ல. தற்கொலை செய்து கொள்வதன் மூலம் பாவங்கள் அதிகமாகும்.

செய்த செயலுக்கான வினையின் பலன்களை எடுக்கப்போகின்ற அடுத்த பிறவிகளிலும் வௌ;வேறு விதமான வழிகளில் கர்ம வினையின் பலனை அனுபவித்தே தீர வேண்டும். பல பிறவிகளாக பிறப்பெடுத்து பல இன்னல்களை அனுபவித்து இன்னும் கர்ம வினைகள் மிச்சமாக இருக்கும் பட்சத்தில் அந்த கர்ம வினைகளின் பலனாகவே வறுமை கொண்ட குடும்பத்தில் தரித்திரம் உடையவராகவும் அல்லது உடல் பாகங்கள் குறைவுள்ள மூடனாக பிறந்து துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். எப்பொழுதும் சத்தியத்துடன் இருப்பதும், சத்தியமாய் நடந்து கொள்வதுமே பெரிய புண்ணியமாகும். தானங்களில் உயர்ந்த தானம் என்பது நில தானம் ஆகும்.

சூழ்நிலைகளுக்கு ஏற்ப சத்தியத்தை மறைத்து பொய் உரைப்பதும், மற்றவர்களின் பொருளுக்காக ஆசைப்பட்டு பொய் பத்திரங்கள் எழுதுவதும் பெரும் பாவமாகும். பொய் சொல்லுபவர்களையும், பொய் பத்திரங்களை தயாரிப்பவர்களுக்கும் நரகத்தில் கொடுக்கப்படும் தண்டனை யாதெனில் நன்றாக சூடுபடுத்திய நிலையில் அந்த ஜீவாத்மா எண்ணெய் கொப்பரையில் தள்ளி நன்றாக வேக வைக்கப்படுவார்கள். ஒருவருக்கு தானமாக கொடுத்த நிலத்தினை மீண்டும் அவரிடமிருந்து பெறவோ அல்லது அந்த நிலத்தில் விளையும் பொருட்களினால் கிடைக்கும் லாபத்தை அவரை அனுபவிக்கவிடாமல் தடையாக இருக்கக்கூடியவர்கள் நரகத்தில் வீழ்ந்து துன்பத்தை அனுபவிப்பார்கள்.

பாவம் செய்வதினால் ஏற்படும் இன்பம் என்பது பூமியில் எவ்வளவு அதிக அளவில் இருக்கின்றது? என்பதைவிட பன்மடங்கு செய்த பாவத்தின் விளைவாக உண்டான தண்டனையை உடல் இல்லாத ஜீவாத்மா பல காலங்கள் நரகத்தில் இன்பத்தை விட மேலான நரக வேதனையை அனுபவிக்கும். பிழைப்பிற்காக மற்றொருவர் செய்து கொண்டிருக்கும் தொழிலை எடுத்து அவரை வறுமையில் வாட செய்யக்கூடிய மானுடர்கள் ஆயிரம் பசுவை கொன்றதற்கான பாவத்தை அடைவார்கள்.

பாவம் செய்தவன் இறந்த பின்பு மல ஜலம் கலந்த வைதரணி நதியின் கரையை கடக்க உதவிக்கு துணையில்லாமல் ஜீவாத்மா பலவிதமான இன்னல்களை அவ்விடத்தில் அனுபவிக்கும். ஒருவரை வாழ வைப்பதற்காக அவருக்கு தேவையான உத்தியோகத்தை கொடுப்பது மட்டுமல்லாமல் அவர்களிடமிருந்து பெறப்படும் உழைப்புக்கு உண்டான ஊதியத்தை வழங்கக்கூடியவர்கள் ஒரு லட்சம் கோதானம் செய்த பலன்களை அடைவார்கள்.

உத்தியோகத்தை மற்றவர்களுக்கு கொடுத்து அந்த உத்தியோகத்தில் அவர்களின் உடல் உழைப்பை சுரண்டி குறைந்த அளவு ஊதியத்தை கொடுக்கக்கூடியவர்கள் நரகத்தில் கிடந்து துன்புறுவார்கள். செய்த வினையானது அவர்களின் பரம்பரையை பாதிக்கக்கூடிய வண்ணமாக இருக்கும். ஏனெனில் உழைப்பு என்பது ஒருவரின் மனம், ரத்தம் சார்ந்ததாகும். பசுக்களுக்கு துன்பத்தை இழைக்கக்கூடியவர்களும், பசுக்களை கொல்லக்கூடியவர்களும் மாபெரும் பாவம் செய்தவர்கள் ஆவார்கள். செய்த பாவத்தை அவர்களால் எந்த நிலையிலும் குறைக்க இயலாது.

ஒரு பசுவை கொன்றதற்காக ஒருவன் 100 பசுக்களை தானமாக கொடுத்தாலும் பசுவை கொன்ற பாவம் அவரை விட்டு அகன்று செல்லாது. ஒருவன் நல்ல ஒழுக்கத்தோடு வாழ்ந்து வேதங்கள் மற்றும் ஞான மார்க்கங்களில் இருக்கக்கூடிய சிறந்த சான்றோர்களை வழிபட்டு அவர்களுடைய யாக, தர்ப்பண பூஜைகளுக்கு எந்தவித இடைஞ்சலும் இல்லாமல் வாழ்வாராயின் அவர் அஸ்வமேத யாகம் செய்த பலனை அடைகின்றார். நல்ல பண்பும், குணமும் உள்ள உத்தமன் ஒருவருக்கு தானமாக கொடுத்த பொருளை எந்த நிலையிலும், எந்த காரணத்தை கொண்டும் அவரிடமிருந்து அபகரிக்கக்கூடாது.

மனதில் வஞ்சனை கொண்டு தானமாக கொடுத்த பொருளை அவரிடமிருந்து மீண்டும் அபகரிப்பவர்கள் ஆண்டாண்டு காலத்திற்கும் மலப்புழுவாய் நரகத்தில் கிடந்து துன்புறுவார்கள். சான்றோருடைய பொருட்களை அவர்களுக்கு தெரியாமல் கள்ளத்தனமாக அபகரிப்பு செய்தவர்கள் காலாகாலத்திற்கும் நரகத்தில் கிடந்து துன்புறுவார்கள். கடவுளுடைய சொத்துக்களை ஆக்கிரமித்து அல்லது கோவில் சொத்துக்களையும், இடங்களையும் தங்களது வம்சாவழியில் மாற்றிக் கொண்டாலும், அறிவில் சிறந்த சான்றோர்களையும், பெரியோர்களையும் அவமதிப்பவர்கள் எவ்வளவு பெரிய நிலையில் இருந்தாலும் விரைவில் தாழ்ந்த நிலைக்கு வருவார்கள்.

கோவில் சொத்துக்களை தன்னுடையதாக மாற்றி கொண்டவரை மட்டுமல்லாமல் அவர்களுடைய குலமும் சேர்ந்து அழிந்துவிடும். தானத்தை கொடுப்பவர்களும், தானத்தை பெறுபவர்களும் நல்ல குணங்களையும், பண்புகளையும் கொண்டிருப்பது தானத்தின் பலனை பன்மடங்கு அதிகரிக்கும். புண்ணிய காலங்களில் தானங்கள் செய்வது தானத்தின் பலனை விருத்தி செய்யும். தை மாத பிறப்பன்று தானம் செய்வதினால் தானம் செய்தவர்கள் சூரிய லோகத்தில் வாசம் செய்வார்கள். கருடாழ்வாருக்கு ஒருவர் தானம் பெறுவதினால் ஏதாவது தோஷம் உண்டாகுமா? என்று ஐயம் தோன்ற அதை நாராயணனிடம் வினவினார்.

தானமாக பெறுகின்ற எந்தவொரு பொருளுக்கும் தோஷம் என்பது இல்லை. ஆனால் தானமாக பெற்ற பொருளை தவறான வழிகளில் பயன்படுத்தினால் தோஷத்தின் வீரியம் அதிகமாகும். தானம் பெற்றவர் காயத்ரி ஜெபம் செய்வதாலும், புண்ணிய ஷேத்திரங்களில் தீர்த்தமாடுவதாலும் தானம் பெற்றதினால் ஏற்பட்ட தோஷத்தினை குறைத்து கொள்ள முடியும்.


குழந்தைகள் செய்த பாவங்கள்

ஸ்ரீமந்நாராயணரிடம் கருடாழ்வார் குழந்தைகள் செய்த பாவங்கள் மற்றும் தர்ப்பணம் எவ்விதம் செய்தல் வேண்டும்? என்பதை பற்றி எடுத்துரைக்க வேண்டும் என்று வேண்டினார்.

புன்னகை பூத்த ஸ்ரீமந்நாராயணர் கருடனின் ஐயங்களை போக்கும் விதமாக எடுத்துரைக்க துவங்கினார். கருடனே... நான்கு வயது முதல் குழந்தைகளுக்கு செய்த கர்ம வினையின் விளைவாக பாவங்கள் தொடர ஆரம்பிக்கும். ஆனால் அந்த குழந்தையால் செய்யப்பட்ட பாவமானது 12 வயது வரை குழந்தைகளை சார்ந்து இருப்பதில்லை. குழந்தைகள் செய்த வினை 12 வயது வரை பெற்றோர்களையே சார்ந்து இருக்கும்.

குழந்தைகள் வளரும் பருவத்தில் மற்றவர்களுடைய பொருட்களின் மீது ஆசைப்படக்கூடாது, பொய் உரைத்தல் கூடாது, மற்றவர்கள் பொருட்களை கவர்தல் கூடாது, எந்த நிலையிலும் யாரையும் உடல் அளவிலும், மன அளவிலும் வருத்தமடையக்கூடிய செயல்களை செய்தல் கூடாது. ஆதவன் வருவதற்கு முன்பாகவே எழுந்து நீராட வேண்டும். தினந்தோறும் இறைவனை வணங்க வேண்டும். வயதில் மூத்தோர்களையும், சான்றோர் பெருமக்களையும் மதித்து அவர்களுக்குரிய மரியாதைகளை நன்முறையில் கொடுக்க வேண்டும்.

குழந்தை பருவம் மற்றும் இளமைப் பருவத்தில் கல்வியை நன்றாக கற்க வேண்டும் போன்ற அறிவுரைகளை கூறி வளர்க்கக்கூடிய பெற்றோர்கள், குழந்தைகள் செய்த பாவங்களிலிருந்து தப்பிக்க இயலும். மாறாக இவ்விதமான நற்பண்புகள் ஏதுமில்லாமல் சிறுவயது முதலே மற்றவர்களை இழிவுப்படுத்தி பேசுதல், மற்றவர்களுடைய பொருட்களை அவர்களுக்கு தெரியாமல் எடுத்து வருதல் மற்றும் பெரியோர்கள், சான்றோர்கள் என யாரையும் மதிக்காமல் மரியாதை குறைவாக பேசுதல் போன்ற செயல்களை குழந்தைகள் செய்தால் அதனால் ஏற்பட்ட வினைகளின் பயனாக பெற்றோர்கள் துன்பத்தை அனுபவிக்க நேரிடும் என்று கூறினார்.

ஸ்ரீமந்நாராயணன் இவ்விதம் எடுத்துரைத்து கொண்டிருந்த பொழுது கருடாழ்வார் ஒருவேளை குழந்தைக்கு பெற்றோர்கள் இல்லாத பட்சத்தில் அந்த குழந்தையின் பாவங்களை யார் அனுபவிப்பார்கள்? என்று வினவினார். பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் பாவம் அவர்களை யார் பாதுகாக்கின்றார்களோ அவர்களையே சென்றடையும்.

பெற்றோர்களும், குழந்தைகளை பாதுகாக்கக்கூடியவர்களும் குழந்தைகள் செய்த பாவங்களிலிருந்து விடுபட நற்காரியங்களையும், நல்ல சிந்தனைகளுடன் அவரவர்களின் குழந்தைகளை வளர்ப்பதன் மூலம் குழந்தைகளினால் ஏற்படக்கூடிய துன்பத்திற்கு பிராயச்சித்தமாகவும், பாவங்களின் தன்மைகளை குறைக்கக்கூடியதாகவும் இருக்கும். குழந்தைகள் செய்த பாவங்களினால் அவர்களுக்கு எவ்வித தண்டனைகளும் கொடுத்தல் கூடாது. அந்த வினைகளினால் குழந்தைகளுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படாது. கடவுள் இல்லை என்று கூறுபவர்களும், இறைவனிடத்தில் நம்பிக்கை இல்லாதவர்களும் மகா பாவி ஆவான். அவர்களுக்கு எந்தவிதமான உத்தர கிரியையும் செய்ய வேண்டியதில்லை.


சிரார்த்தம் செய்யும் முறைகள்

இறந்துவிட்ட பெற்றோர்களுக்கு புத்திரர்கள் ஆண்டுதோறும் சிரார்த்தம் செய்ய வேண்டும். தந்தையானவர் தன்னுடைய பிள்ளைக்கும், உடன்பிறந்த சகோதர, சகோதரிகளுக்கும் சிரார்த்தம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் தன்னுடைய தலைமுறையில் உள்ளவர்களை குறிப்பிடாமல் இறந்து போனவர்களை மட்டும் குறித்து திதி செய்தல் வேண்டும். இறந்தவர்களுக்கு சிரார்த்த பூஜைகள் செய்கின்ற பொழுது ஏதேனும் தீட்டு ஏற்பட்டால் அந்த தீட்டு காலங்கள் நிறைவடைந்தவுடன் இறந்தவர்களுக்கு திதி கொடுக்க வேண்டும்.

தமக்கு தீட்டு இருக்கும்பட்சத்தில் இறந்து போனவர்களுக்கு திதி கொடுத்தால் திதியின் பலன்களானது இறந்தவர்களை சென்றடையாது. ஒருவேளை பெற்றோர்களுக்கு அவர்களுடைய குழந்தை சிறுவயதாக இருக்கும்பட்சத்தில் சிரார்த்தம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குழந்தையின் கரங்களிலிருந்து தர்ப்பைப்புல்லினை வாங்கி இறந்தவர்களுடைய உறவினர்கள் இறந்தவர்களுக்கு சிரார்த்தம் செய்யலாம். இதனால் குழந்தைக்கோ அல்லது சிரார்த்தம் செய்த பெரியோருக்கோ எந்தவிதமான தீவினைகளும், தோஷங்களும் ஏற்படாது.

ஒருவருடைய உறவினர்கள் யாவரும் வேறு தேசங்களில் தங்கியிருக்கும் சூழ்நிலையில், அவர்கள் ஒரு சில நிகழ்வுகளின் காரணமாக அனைவரும் இறந்துவிட்டார்கள் என்று கேள்விப்பட்டால், முதலில் யாருடைய இறந்த செய்தியை கேள்விப்பட்டார்களோ அவர்களுக்கு முதலில் சிரார்த்தம் கொடுக்க வேண்டும். பின்பு அடுத்தடுத்ததாக இறந்தவர்களுக்கான கர்ம நிகழ்வுகளையும், சிரார்த்ததையும் செய்தல் வேண்டும். ஒருவர் இறந்து போன நாள் தெரிந்து, மாதமும் மற்றும் அவர் இறந்து போன திதியும் தெரியாமல் போனால் ஆடி, புரட்டாசி, மார்கழி மற்றும் மாசி ஆகிய மாதங்களில் தேய்பிறையில் வருகின்ற அஷ்டமி தினத்திலும், அமாவாசை தினத்திலும் சிரார்த்தம் செய்து கொள்ளலாம்.

ஒருவர் வேறு தேசத்திற்கு பயணம் மேற்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது அவ்விடத்தில் அவர் இறந்துவிட்டால் அவர் இறந்து போன நாளும், மாதமும் தெரியாமல் இருக்கும்பட்சத்தில் அவர் வெளிநாடு செல்வதற்கு புறப்பட்ட நாளில் உள்ள திதியில் சிரார்த்தம் செய்து கொள்ளலாம். தாய், தந்தையர்கள் இறந்து போன திதியும், கிழமையும், தேதியும் தெரியாமல் இருக்கும்பட்சத்தில் அஷ்டமி, ஏகாதசி மற்றும் அமாவாசை முதலான நாட்களில் ஏதாவது ஒரு நாட்களில் நீத்தார் கடனை கழிக்கலாம். பெற்றோர்களுக்கு சிரார்த்தம் செய்யாமல் இருப்பது மகா பாவமாகும். நித்திய திருத்தத்திற்கு எந்த விதியும் இல்லை. நித்திய சிரார்த்தம் செய்வதினால் அசுபம் குறைந்து சுபம் மேம்படும்.


The notes are referenced from 
the app "கருட புராணம்''. 
For more details, visit : 
[https://play.google.com
/store/apps/details?id=nithra.
tamil.garudapuranam]

தொடரும் .....

Post a Comment

0 Comments