சமூக நல்லுறவினைச்
சீர்குலைக்கும் காரணிகள்
சமூக நல்லுறவு இன்றைய சூழலில் அருகிச் செல்வதற்கான காரணங்களை ஆழமாகச் சென்று ஆராய்ந்து பார்த்தால், பல்லின, சமய, மொழி, கலாசார ரீதியான பல்வேறு பிரிவினைசார் தோற்றப்பாடுகளே சமூகத்தில் நல்லுறவு இன்மைக்குக் காரணமாக அமைகின்றன. சமூக நல்லுறவின்மையின் அடிப்படை சமத்துவமின்மையேயாகும். சமயம், சாதி. மதக்கோட்பாடு, மொழி, போன்ற காரணங்கள் தொடக்கக் காலம் முதல் உலகில் எல்லா பாகங்களிலும் விரிவடைந்துள்ளது. வளர்ச்சியடைந்த நாடுகளில் முரண்பாடுகள் ஏற்படுவதற்கு இவையே காரணமாக அமைகின்றன. வரலாற்று ரீதியாக சமுதாயத்தை எடுத்து நோக்கினால் கலாச்சார ரீதியான வேறுபாடுகளே சமத்துவமின்மைக்கு பங்களிப்புச் செய்துள்ளன. இதன் விளைவாக மனிதனின் கௌரவம், சுயமரியாதை என்பன அழிவுக்குள்ளாகின்றன.
சமூக நல்லுறவு இன்மையானது சமூகத்தில் பலவிதமான பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றது. சமூக நல்லுறவின் தடைக்கற்களாக அமையும் காரணங்களாக வன்முறை, போதைவஸ்து பாவனைக்கு அடிமையாதல். பால்நிலை சமத்துவமின்மை. இனத்துவம், சமயரீதியான பிற்போக்குவாதமும் அடிப்படைவாதமும். கலாசாரமும் சமுதாயமும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், முற்சாய்வு எண்ணங்கள் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
வன்முறை
வன்முறை என்பது, உடல், உளரீதியான காயம் அல்லது சேதத்தை ஏற்படுத்தக் கூடியதும், பொருட்கள், சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கக்கூடியதுமான இவ்வெண்ணக்கருவானது சமூகத்தில் பல நிறுவனங்களுக்கூடாக அடையாளப்படுத்தப்படுகின்றது. அவற்றினைச் சிறுவர் துஷ்பிரயோகம், மனைவி மீதான கணவனது மிதமிஞ்சியக் கட்டுப்பாடு, வயதானோர் மீதான அடக்குமுறை குடும்பத்திலும், பாடசாலை குழு வன்முறை, தொழில் புரியும் இடங்களில் இடம்பெறும் வன்முறை என்ற அடிப்படையில் சமவயதுக் குழுக்களுக்கிடையிலான வன்முறை என்றும், பருவத்தினருக்கிடையிலான பலாத்காரம் முதலான பாலியல் வன்முறை இவைகளுடன், சமுதாய வன்முறை. வெறுப்படையும் பேச்சுக்களால் ஏற்படும் வன்முறை. தொடர்புசாதனங்கள் ஊடாக ஏற்படும் வன்முறை, அரசியல் வன்முறை என்பனவும் முக்கியம் பெறுகின்றன.
ஒவ்வொரு மனிதரும் குணத்தால் சற்று வித்தியாசமானவர்கள். அவற்றுள்ளும் சிறப்பாக மனித விழுமியத்தை தன்னகத்தே கொண்டிராத மனிதர்கள் மிகவும் மூர்க்க குணமுள்ள மனிதர்கள் எதற்கெடுத்தாலும் ஆவேசப்படுகின்ற நிலை சமூகத்தில் காணப்படுகின்றது. இத்தகைய மனிதர்களே அமைதியான சமூகத்தில் ஆரவாரத்தை ஏற்படுத்திவிடுகின்றனர். வன்முறையை கட்டவிழ்த்து விடுகின்றனர். இதற்கு அவர்களைப் போலவே இன்னும் சில மனிதர்கள் வன்முறைக்குத் துணைபோய் விடுகின்றனர்.
தற்போதைய உலகில் எங்கு பார்த்தாலும் வன்முறை, பயங்கரவாதம், அடிதடிக்கலாசாரம் போன்ற பேச்சுக்களாகவே உள்ளன. திசைரிப் பத்திரிகைகளைப் புரட்டினால் கொலை,கொள்ளை,பாலியல்,பலாத்காரம், ஆட்கடத்தல். அரசியல் படுகொலைகள். தேர்தல் வன்முறைகள் மற்றும் மனித உரிமை விவகாரங்கள் என குற்றச் செயல்களின் அதிகரிப்பு இன்று சர்வதேச ரீதியிலும் எமது பண்பாட்டிலும் காணப்படுகின்றது. இந்த வன்முறைகள் மேலும் வன்முறையையே கொண்டுவந்து சேர்க்கின்றன.
மேலே குறிப்பிட்ட வகையைச் சார்ந்த வன்முறையாளர்களை சுயநலப்போக்கைக் கொண்ட கும்பல்கள் வன்முறைகளுக்குத் தூண்டிவிடுகின்றன. இதனால் கர்த்தால், கடையடைப்பு. பொதுசொத்துக்கள் அழிப்பு. வீடுகள் தீக்கு இரையாக்கப்படுதல், குண்டுவெடிப்பு போன்ற நாசகார வேலைகள் இடம்பெறுகின்றன. இவை அமைதியான சூழலை சீரகுலைக்கும் நடவடிக்கைகளாக அமைகின்றன.
போரினால் ஏற்பட்ட உள் ரீதியான தாக்கங்களும் விளைவுகளும் வன்முறையை தோற்றுவிக்கின்றன. அதனால் ஏற்பட்ட மனக்கசப்பு இனங்களுக்கிடையே நல்லுறவுக்கு தடைச்சுவராக அமைகின்றன. அறிச்சர்ட் என்பவர் தன்னுடைய சமூகப்பொருண்மைகள் எனும் நூலில் யாழ் யுவதி ஒருவரை நேர்கண்ட போது,
வன்முறையுடன் எனக்கு மிக நெருங்கிய தொடர்புண்டு. ஆனால் அதனுடன் நேரடியாக நான் சம்பந்தப்படவில்லை. வன்முறையால் எனது குடும்பம் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டதென்றே கூறலாம். வன்முறையால் எனது தகப்பனாரையும், சகோதரனையும் இழந்துள்ளேன். இந்திய அமைதி காக்கும் படையினர் (IPKF) காலத்தில் எனது தகப்பனார் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். (1987) 1985 இல் எனது சகோதரனை இழந்தோம். இச்சம்பவம் நாகவிகாரை எரிப்பு சம்பவத்தில் இடம்பெற்றது. வன்முறை ஒருபோதும் தீர்வினை வழங்காது அழிவினையே உண்டுபண்ணும்.
ஒத்திசையாத்தன்மை ஏற்படுகின்ற வேளையில் முரண்பாடாக தோற்றம் பெற்று, வன்முறையாக மாறுகிறது. மோதல்கள் உச்சக்கட்டத்தினை அடைகின்ற போது அது வன்முறையாக மாறுகின்றது. பொதுவாக வன்முறைகள் அரசியல் ரீதியான மோதல்களாலேயே ஏற்படுகின்றன. கல்துங். அரசியல் வன்முறையைக் கட்டமைப்பு வன்முறை எனக் குறிப்பிடுகின்றார்.
கட்டமைக்கப்பட்ட வன்முறையினாலே பாரிய அழிவுகள், சேதங்கள் ஏற்படுகின்றன. உலகில் ஏற்பட்டுவரும் இன, சமய ரீதியான வன்முறைகளின் தாக்கம் தொடர்ந்த வண்ணமே உள்ளன. இதனால் பலவித சேதங்களும், உயிர்க்கொலை ஏற்படுத்துவது மட்டுமல்லாது, ஒரு நாட்டின் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் காரணியாகவும் வன்முறை அமைகின்றது.
போதை வஸ்துக்கு அடிமையாதல்
போதையூட்டும் அனைத்துப் பொருட்களும் சமூகநல்லுறவைச் சீர்குலைக்கும் காரணிகளாக அமைகின்றன. நல்ல உள்ளம் படைத்த மனிதர்களையெல்லாம் கெட்டவர்களாக மாற்றுகின்ற சக்தி போதைவஸ்துக்கு இருக்கின்றது. எனவே போதை ஏறிய மனிதன் சமாதான சூழலை மாற்றி கலகத்தை உண்டுபண்ணுவதற்குத் தூண்டுகோலாக அமைகின்றது.
ஒரு நாட்டின் சிறந்த சமுதாயத்தை வழிநடத்தி செல்வதற்கு நல்லொழுக்கம் பிரதான காரணியாகும். ஒரு சில தீய பழக்கங்கள் காரணமாக சமுதாயத்தில் ஏற்படும் பாரிய சீர்குலைவு அச்சமுதாயத்தை நாச வழியில் இட்டுச்செல்லும். போதைவஸ்து பாவனை மூலம் சமுதாயத்திற்கு ஏற்படும் மிகக் கொடூரமான விளைவை நாம் அனைவரும் அறிவோம். தம்மை மறந்து மடமை நிலையை ஏற்படுத்தும் போதைவஸ்து ஒரு மனிதனை முற்று முழுதாக நிலைகுலையச் செய்கின்றது.
போதைவஸ்துக்கு அடிமையாகும் ஒருவர் எவ்வழியைப் பயன்படுத்தியேனும் அதைப்பெறும் அளவுக்கு தன்னை முழுமையாக ஈடுபடுத்துவான். இப்பயங்கரமான செயற்பாடுகளை இளைஞர்கள் மத்தியில் பரப்பும் முயற்சியில் பல தீய சக்திகள் இயங்குகின்றன. இதன்மூலம் ஆட்கடத்தல். கொலை, களவு என்பவற்றிலும் ஈடுபடுகின்றன.
கடந்த பத்தாண்டுகளாக பாதிக்கு மேற்பட்ட மக்கள், போதைப் பொருளின் பாவனைக்கு அடிமையாகியுள்ளமை விஸ்தாரமாகப் பரவியுள்ள ஒரு விடயமாகும். மிக அதிகளவு போதைப்பொருளின் பாவனை காரணமாகச் சட்டவிரோதமானப் பிரச்சினைகள் சுற்றிலும் ஏற்படுவதாகக் குறிப்பிடப்படுகின்றது. சட்ட மற்றும் சட்டவிரோதமானப் போதைப்பொருட்கள் எவை என்பதைக் கண்டறிவது கடினமான விடயமாகும். போதைப்பொருள் பாவனை குறித்து ஆய்வு செய்து பார்த்தால், அவை சமூகத்தைக் கட்டுப்படுத்துகின்ற செயற்பாடாக விருத்தியடைந்து வருவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. மிக அதிகளவான போதைப்பொருட்களாக Marijuana, heroin, cocaine, LSD and other hallucinogens, மற்றும் amphetamines போன்றன உட்கொள்கின்றனர்.
பண்டைக்காலத்தில் போதைப்பொருள் என்பது செல்வத்தை மட்டும் சிதைக்கும் ஆற்றல் உடையனவாகக் காணப்பட்டன. ஆனால், இன்றைய போதைப்பொருட்கள் செல்வத்தை மட்டுமல்ல. உடலை, உள்ளத்தை, ஊரை, நாட்டை, ஏன் உலகத்தையே சிதைப்பனவாகத் தீமையின் ஒட்டுமொத்த விஸ்வரூபமாக வடிவெடுத்து. மானிட சமுதாயத்தையே அச்சத்தால் உலுக்கியுள்ளது. மதுவை உண்பவன் ஏனைய பாதகங்களாகப் பொய், களவு, கொலை, மற்றும் பிறர் பொருளைக் கவர்தல் போன்றவைகளையும் செய்யத் தயங்கமாட்டான் என ஞானி டால்ஸ்டாய் கூறியுள்ளார். குடியால் தனிமனிதன் மட்டுமன்றி அவனது மனைவி மக்கள், குடும்பம். தெரு, ஊர், நாடு, உலகம் என அனைத்துமே - பாதிக்கப்படுகின்றன. மதுவால் பெண்ணினம் விடுகின்ற கண்ணீருக்கு அளவேது? குடியால் பல சமுதாயங்களும், சாம்ராய்ச்சியங்களும் அழிந்தள்ளன.
தர்பீ குறிப்பிடும் போது, குடிப்பழக்கத்தின் முடிவு, அவனது உடல் நிலையை முதலில் பாதிக்கின்றது. உள்ளத்தின் அமைதியைப் பாதிக்கின்றது. வீட்டு வாழ்க்கையை மகிழ்ச்சியற்றதாக்குகின்றது. தொழில் நலிவடைகின்றது. சமூகத்தில் அவருடைய புகழ் மங்குகின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக குடி எனும் கொடிய நெருப்பு அவரது வாழ்க்கையோடு இணைந்த ஒன்றாகி விடுகின்றது.
சமூகத்தில் விழுமியங்கள் மழுங்கடிக்கப்பட்டு சமூகக் கட்டமைப்புக்கள் சிதைவுறுவதற்கும், மக்களின் நடத்தை ஒழுக்கம் என்பன சீர்கெடுவதற்கும் போதைவஸ்து பாவனையே காரணமாக அமைகின்றன. இந்தவகையில் சமூகச் சீர்குலைவை ஏற்படுத்துவதில் போதைவஸ்து பாவனைக்கு அதிகளவான பங்கு உள்ளது எனலாம்.
இனத்துவம்
இனத்துவம் (Racism) பற்றி நோக்குவோமாயின், இனம் என்பது பரம்பரை ரீதியான ஒரு விடயமல்ல. எண்ணங்களின் அடிப்படையில் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. சமூகக் கட்டமைப்பை ஏற்படுத்துவதில் இனமே ஆதிக்கம் உடையதாக உள்ளது. இனக்குழுக்கள் என்பது. குறிப்பிட்ட மக்கள் பொதுவான உ கலாசாரத்தைப் பகிர்ந்து கொள்வதைப் பிரதிபலிப்பதாக அமையும். ஓர் இனக்குழுவானது பழையமரபு, மொழி, சமயம், இடஅமைவு, நெறிமுறைகள், பழக்கவழக்கங்கள். என்ற பண்புகளை வெளிப்படுத்துவதாகக் காணப்படும். இதனால், அவை தமக்கேயுரிய தனித்துவத்தைக் கொண்டு விளங்குகின்றன.
இன்றைய காலகட்டத்தில் இனமுரண்பாடுகள் மனக்குரோதங்கள் என்பவை உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டு இருக்கின்றன. இனங்கள் வாழும் நாட்டினுள் பல இனமுரண்பாடுகள் மலிந்து இருப்பதை நாம் காணலாம். ஒவ்வொரு நாட்டிலும் இனப்பிரச்சினைகள் பல்வேறு விதமாக காணப்படுகின்றன. தமது உரிமைகளை மீளப்பெற்று அசமத்துவ நிலையை நீக்கி தம் இனத் தனித்துவத்தைப் பேண ஒவ்வொரு இனமும் போராடிக் கொண்டிருக்கின்றன. இவ்வாறான முரண்பாட்டுத் தன்மை, சமூகத்தில் பிற இனத்துடன் முரண்பாடுகளை ஏற்படுத்தவும். தம் இனத்துள் அதிகளவு ஒருங்கிணைவை உருவாக்கவும் வழி செய்கின்றன. இவை போன்ற பிரச்சினைகளை மையமாகக் கொண்டு இனங்கள் போராடும் போது, தம் இனத்தின் வளர்ச்சியை மறந்து யுத்தங்களில் ஈடுபடும் அளவுக்கு தம் இன உணர்வை வலுவாக்கி, அதனை நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கின்றன. இதன் விளைவாக போர் மூண்டு கொண்டிருக்கும் நாடுகள் பலமான பொருளாதார வீழ்ச்சி. சமூக அபிவிருத்தியின்மை என்பவற்றை எதிர்நோக்குகின்றன. இனமுரண்பாடு நீங்குமாயின் சமூகத்தில் முரண்பாடுகளுக்கு இடமில்லை.
நாட்டுக்கு நாடு நிலவிவரும் அமைதியற்ற தன்மைக்கும் ஆயுதப்போராட்டங்களுக்கும் வழிவகுத்தவற்றுள் இனத்துவம் முக்கிய பங்குவகிக்கின்றன. இதன் மூலம் பல நாடுகளில் இனவேறுபாடு இடம் பெற்று வருவதை அறிந்து கொள்ள முடியும்.
உதாரணம் - 1992 இல் அமெரிக்காவில் இடம் பெற்ற வெள்ளைக் கறுப்பினர் கலவரம், இலங்கையில் இடம் பெற்ற தமிழர், சிங்களவர் எனும் இனப்பாகுபாடுகள்.
பால்நிலை சமத்துவமின்மை
பால்நிலை சமத்துவமின்மை பற்றி நோக்குமிடத்து. ஒரு மனிதனைப் பால் அடிப்படையிலான முறைசார்ந்த ரீதியில் பாகுபாட்டுக்கு உட்படுத்துதலே பால்நிலை வேறுபாடு ஆகும். ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஓமோன் அடிப்படையில் வேறுபட்ட செயற்பாடுகள் காணப்படுகின்றன. அறிவு, பலம், மனோபாவம், தலைமைத்துனப் பண்புகள், உணர்வு ஆகியவற்றின் அடிப்படையில் ஆண்களிலிருந்து பெண்கள் வேறுபடுகின்றனர். இதனால் பெண்கள் சமூகமயமாக்கம் அடைவதற்கான பயிற்சிகள் தேவைப்படுகின்றன.
ஆண் பெண் சமத்துவம் என்பது, உண்மையில் பால்நிலை என்ற எண்ணக்கருக்களின் தெளிவிலும் ஒட்டுமொத்தமான சமூகரீதியிலும் தங்கியுள்ளது. தெளிவுமட்டுமன்றி தெளிவின் வழியான செயல் என்பதும் தேவையாக உள்ளது. சமூகநீதிக்கான போராட்டத்தில் சரிநிகர் சமனாய் இருபாலரின் ஒன்றிணைந்த செயல் இன்றியமையாதது.
ஆண், பெண் என்ற பால்நிலை பாகுபாடு பெரும்பாலான சமூகத்தில் ஆதிகாலம் தொட்டு நிலவி வருவதனைக் காணலாம். விவசாயத்திற்கு கலப்பை கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் இருந்து பெண் அடிமைத்தனம் நிலவி வருவதாக பேராசிரியர் வானமாமலை கூறுகின்றார்.
பால் அடிப்படையிலான கூலிவேறுபாடுகள். பாலியல் வன்முறைகள் எனப் பாரபட்சப் புலங்கள் இன்றைய சமூகங்களில் தொடர்ந்த வண்ணமே உள்ளன. சமூகத்திலும், வேலைத்தளத்திலும், குடும்பத்திலும், பெண்கள் அடக்கப்படுவதும், சுரண்டப்படுவதும் பற்றி விழிப்பாய் இருப்பதோடு இதை மாற்றுவதற்கான முயற்சிகளைப் பெண்கள் பிரக்ஜை பூர்வமாக மேற்கொள்ள வேண்டும் என்று பெண்ணிலைவாதம் கூறுவதுடன். பெண்களுக்குப் பல வழிகளிலும் பாரபட்சம் காட்டுவதற்கு எதிராகச் சட்டரீதியான நடவடிக்கைகளும், சமத்துவத்திற்குமாகப் போராடும் ஒரு இயக்கம் என்று நாம் இதனைக் கூறலாம். பெண்கள் குடும்பத்தில் கீழ்மைப்பட்டிருப்பதற்கான அடிப்படைக் காரணங்களைக் கண்டறிவதோடு இன்று நிலவும் பொருளாதார அரசியல் அமைப்புக்கு எதிராகவும் போராட வேண்டும்.
சில சமூகங்கள் சில பின்னடைவுகளை மாற்றுவதற்குப் பெண்களை ஆண்களுக்குச் சமமாக இல்லாமல் தடுத்துவிடுவதைத் தடுக்கவும். நியாயமாக இருக்கவும் ஏற்பாடுகளைச் செய்கின்றனர். அது தற்காலிக ஏற்பாடாகவே காணப்படுகின்றது. ஆண், பெண் இருவரும் சேர்ந்து சமூக அபிவிருத்திக்கும், சமூக மாற்றத்துக்கும் உழைக்கும் போதுதான் சமூக நல்லுறவு என்பது சாத்தியமாகின்றது.
சமூகத்தை நல்வழிப்படுத்தும் பெரும்பாலான சமயநூல்களும் நீதிசாஸ்திரங்களும் பெண்களுக்கான இலக்கணங்கள் பெண்களுக்கான கட்டுப்பாடுகள் ஒழுக்கம் என்ற போர்வையால் காலத்திற்கு காலம் பெண்ணடிமைத் தனத்தை ஊக்குவிக்கும் கருத்துக்களை போதித்து வந்துள்ளன.
இந்தவகையில் பெண்கல்வி. திருமணவாழ்வு, அரசியல், பொருளாதாரச் செயற்பாடுகள். பொழுதுபோக்கு, விளையாட்டுப் போன்ற அம்சங்களில் பெண்கள் ஒதுக்கப்படுகின்ற நிலைமை காலம் காலமாக நடைமுறையில் இருந்து வருகின்றன. இவ்வாறான பால்நிலை வேறுபாடு சமூகத்தில் அசாதாரண நிலைமை ஏற்படக் காரணமாக அமைகின்றது.
கணவன், மனைவி இடையேயுள்ள பால்நிலை சமத்துவமற்ற தன்மை, குடும்பங்களிடையே விரிசல்களை ஏற்படுத்துகின்றது. இறுதியில் விவகாரத்தில் முடிவடைகின்றது. எனவே சமூகநல்லுறவை சீர்குலைப்பதில் பால்நிலைசமத்துவமின்மையும் அதிகளவு செல்வாக்கு வகிக்கின்றது.
பாகுபாடு
அன்றிலிருந்து இன்றுவரையும் சமாதானம், சகோதரத்துவம் என்றெல்லாம் உலகம் பூராகவும் ஒலி எழுப்பப்பட்டாலும் கூட பாகுபாடு என்பது சமூகத்தில் பிறையோடிப் போதொன்றாகக் காணப்படுகின்றது. சமூகநல்லுறவைச் சீரகுலைக்கும் காரணிகளுள் பாகுபாடு என்பது முக்கிய இடத்தைப் பெறுகின்றது.
பாகுபாடானது பல்லின சமய கலாசார சமூகப் பாரம்பரியங்களைக் கொண்டதாக அல்லது பிரதேசத்திற்குப் பிரதேசம் நீடித்து நிலைத்துவிட்ட ஒன்றாகக் காணப்படுகின்றது. இத்தகைய பல பிரிவுகள் காணப்பட்டாலும் பல்வேறு வர்க்கப் போட்டி ஒன்றை ஒன்று குறை கூறுதல், ஒரு பிரிவு இன்னொரு பிரிவுடன் ஒப்பிட்டு விமர்சனம் செய்யப்படல், பிரிவுகள் பகுதிகளை ஒன்றிணைக்காமல் அவ்வாறே நீடித்து நிற்க விரும்புதல் போன்றவையாகும் இவை இனப்பாகுபாட்டிற்குள் அடங்கும்.
இத்தகைய பாகுபாட்டினால் தான் தொடர்ந்து சமுதாயத்தில் சண்டைகளும். குழப்பங்களும் ஏற்படுகின்றன. சாதிப்பாகுபாடு ஆனது சமுதாயத்தை பிளவடையச் செய்து எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றால் அதனை யாராலும் மறுக்க முடியாது.
இவற்றினை விடுத்து சமூகத்தில் பல்வேறு பிரிவினரிடையே பரஸ்பர புரிந்துணர்வை வளர்க்கும் பட்சத்தில் சமூகநல்லுறவு ஏற்பட வாய்ப்பு உருவாகும்.
சமயரீதியான பிற்போக்குவாதமும் அடிப்படை வாதமும்
சமய ரீதியான பிற்போக்குவாதமும் அடிப்படைவாதமும் என்பது, பிற மதங்களின் மீது வெறுப்பை வளர்ப்பதற்கு உந்துசக்தியாக அமைகின்றது. இது பலாத்காரத்தின் மீதான முத்திரையைப் பதிக்கின்றது. தன்மதம் மட்டுந்தான் உயர்ந்தது என்னும் மத உணர்வுடைய மனிதன் படுபயங்கரமான குற்றத்தைச் செய்யத் தயங்க மாட்டான். ஒரு அப்பாவிக் குழந்தையைக் கூட கொல்லத் தயங்கமாட்டான். பிற மதத்தைச் சார்ந்த மக்களைக் கொல்லத் தயங்கமாட்டான். மதத்தின் பெயராலும், கடவுளின் பெயராலும் நடைபெறும் அநீதி, படுகொலை, ஆகியவை போல வேறெந்தக் காரணத்தாலும் நடந்ததில்லை. மதவெறி ஒரு நோய். இது மத அடிப்படைவாதம் என்னும் நோயின் தாய், மத அடிப்படைவாதம் பழமை வாதத்தையும், குருட்டு வாதத்தையும் நம்புகின்றது.
சமயங்கள் பொதுவாக அடிப்படைவாதத்தினை கொண்டுள்ளன. எந்த ஒரு மதமும் தனது கொள்கைகளையும் கோட்பாடுகளையும் மட்டும் சரியெனக் கூறிக்கொண்டு தாங்கள் மட்டும்தான் அதன் பாதுகாவலன் எனக் காட்டிக் கொண்டு ஏனைய மதங்களையும் கொள்கைகளையும் தூற்றுவதும் தாக்குவதும் அழிப்பதுமாகும். இதற்கு அந்தந்த மதங்களின் அடிப்படைவாதக் குழுக்கள் துணை போகின்றன.
உதாரணம் - ஆப்கானிஸ்தானில் பௌத்தர்கள் வணங்கும் புத்தர் சிலையை தாலிபான்கள் உடைத்தனர். இதன்மூலம் உலகம் பூராகவும் இஸ்லாமியர் மீது எதிர்ப்பு எழுந்தது. மத அடிப்படைவாதத்திற்கு அரசியல் காரணிகளும் செல்வாக்கு செலுத்துகின்றன.
உதாரணம் - இந்தியாவில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது இந்துமதம் சார்ந்த பாரதிய ஜனதாக்கட்சி ஆட்சியில் இருந்தமை.
2005ம் ஆண்டு திருகோணமலையில் பொது இடமான பஸ் தரிப்பு நிலையத்திற்குள் புத்தர் சிலையை வைக்க முயற்சித்து பெரும் கலவரம் ஏற்படுத்திய பின் அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி பலாத்காரமாக அச்சிலை நிறுவியது போன்ற செயல் மத அடிப்படைவாதத்திற்கு உதாரணமாகக் கொள்ளலாம்.
சமயத்தின் அரசியலிலும் சரி, நாட்டின் அரசியலிலும் சரி. மதம் முரண்பாட்டினையே தோற்றுவிக்கின்றது. குறிப்பாக இந்தியா பாகிஸ்தான். இஸ்ரேல் பலஸ்தீனம், முதலிய நாடுகளில் இடம்பெறும் மதம் தொடர்பான யுத்த நெருக்கடி நிலையினைக் குறிப்பிடலாம். இவற்றினை விட சிறியதாக இலங்கை யுத்தத்திலும் இவ்வாறான நிலை கருத்திற் கொள்ளப்பட்டது. மேலும், ஈராக் போர் கூட இவ்வகையைச் சார்ந்து உள்ளதாகக் கருத்துக் கூறுவோர் உளர்.
ஏனைய ஒரு மதத்தின் அடிப்படை அம்சங்களிலும் அம்மக்களின் கருத்துக்கள், நம்பிக்கைகள், வழக்காறுகள், பாரம்பரியங்கள். நெறிமுறைகள், விழுமியங்கள் என்ற ரீதியில் அவர்கள் கொண்டிருக்கும் அனைத்துவித அம்சங்களையும் கருத்திற் கொள்ளப்படாமல் தனது மதப்பற்றின் பிணைப்பினால் ஒரு மதத்தினை அடக்கியாளும் முறையானது தோன்றுவதற்கு மதம் என்ற ரீதியில் மக்கள் அகவயமாகக் கொண்டிருக்கும் பற்றே காரணமாகும். இதனை ஒரு போதைப் பொருளாகக் குறிப்பிடும் மாக்ஸ். உண்மையில் மத முரண்பாட்டிற்கான மூலப்பொருளாக இதனைக் கருத இடமுண்டு.
இலங்கையில் தற்போது ஒரு அமுக்கக் குழுவாகச் செயற்படும் பொதுபால சேனா இன, மத குரோதத்தினை தோற்றுவித்து நாட்டில் பிரச்சினையை உண்டுபண்ணுகின்ற போக்கு காணப்படுகிறது. அளுத்கம பேருவளை பிரச்சினை, இதன் விளைவாக யாழ்ப்பாணத்தில் பள்ளிவாசல் மீது தாக்குதல் மற்றும் அழுத்கம, பேருவளை. தர்கா நகர் போன்ற இடங்களில் முஸ்லிம் மற்றும் அவர்களது வழிபாட்டு இடங்கள் மீதான தாக்குதல் போன்ற செயல்கள் மத அடிப்படைவாதத்தின் ஒரு கட்டமாகக் கருதப்படுகிறது. இதனால் சிங்கள அல்லது பௌத்த மக்களிடையேயும், முஸ்லிம் அல்லது இஸ்லாமிய மக்களிடையே தொடர்ந்து இன, மத துவேசங்கள் அதிகரித்துச் செல்கின்றன.
இலங்கையில் பௌத்த பிக்குகள் நாட்டின் எல்லா பிரச்சினைகளுக்கும் தலையிட்டு தமது அடிப்படைவாதப் போக்கினை வெளிப்படுத்துகின்றனர். குறிப்பாக சிறுபாண்மை சமூகத்தின் அரசியல் அபிலாசைகள், மத உரிமைகள், அடிப்படை உரிமைகள் போன்றவற்றைக் கூட பெற்றுக் கொள்ள இவர்கள் தடையாக உள்ளனர்.
மத அடிப்படைவாதம் எந்த மதத்தின் பெயரால் நடந்தாலும் அது ஆபத்தானது அது மதத்திற்கு கூட ஊறு விளைவிக்கக்கூடியது. இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தமது மதத்திற்கு எதிரானவர்களை கொலை செய்தனர். தற்கொலை குண்டுதாரிகளின் உருவாக்கமும் மத அடிப்படைவாதத்தால் உருவாகியுள்ளது. இலங்கையில் இஸ்லாமிய மதம் சார்ந்த சில அமைப்புக்கள் சர்வதேச பயங்கரவாதிகளுடன் இணைந்து தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களையும் இனமத அழிப்புக்கள், சொத்தழிப்புக்கள், பலநூறு உயர் அழிப்புக்களைச் செய்து வருகின்றனர்,
எனவே சமூக நல்லுறவைப் பாதிக்கும் காரணிகளில் சமய அடிப்படைவாதத்தின் பங்கே அதிகம் என்று கூற வேண்டும்.
பொருளாதார ஏற்றத்தாழ்வு
பொருளாதார ஏற்றத்தாழ்வு பற்றி நோக்கும் போது, சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுவதற்கான காரணங்களுள் 'ஆதாயம்’ இருக்கிறது. வருவாயைப் பகிர்வதற்குரியவர். உற்பத்திக் காரணிகளில் தொழில் முயல்வோர் தாம் மிகுதியான பங்கைப் பெறுகிறார். நிலம், உழைப்பு. முதல் ஆகியவற்றுக்கு ஒரு குறிப்பிடத்தக்க வருவாயைப் பகிர்ந்தளித்துவிட்டு, மிஞ்சுவதை எல்லாம் அவர் எடுத்துக் கொள்கிறார். இதனால் அவரிடம் செல்வம் குவிகிறது. செல்வர்கள் மேலும் செல்வந்தர்களாகவும், ஏழைகள் மேலும் ஏழைகளாகவும் மாற ஆதாயம் வழி வகுக்கிறது.
ஏழை பணக்காரர்களிடையே பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுகின்றன. சமூகத்தில் உள்ள வறுமை, ஏற்றத்தாழ்வு, சமூக அந்தஸ்து ஆகியன முரண்பாட்டிற்கு காரணமாக அமைகின்றன. பொருளாதார வளர்ச்சி திட்டங்களில் சாதியமைப்பு செல்வாக்குச் செலுத்துகின்றது. சமூகத்தில் பொருளாதாரம் என்று வந்த பின் தான் உலக மக்களிடையே ஏற்றத்தாழ்வுகள் ஏற்படத் தொடங்கின.
பொருளாதாரத்தில் உயர்நிலையில் இருப்பவர்கள் பொருளாதாரத்தில் தாழ்ந்த நிலையில் இருப்பவர்களை தாழ்வாகக் கருதும் போக்கும். அடிமையாக நடத்தும் போக்கும் காணப்படுகின்றது.
கால்மார்க்ஸ் முதலாளித்துவ அமைப்பில் ஆதாயம் என்ற பெயரில் சுரண்டல் நடைபெறுவதாகக் கூறுகிறார். ஒரு தொழிலாளி பதினைந்து ரூபாய் மதிப்புள்ள பொருளை உற்பத்தி செய்தால், அவருக்கு முதலாளி உற்பத்தி செய்த அளவிற் கூலி கொடுப்பதில்லை. நாள் ஒன்றுக்கு பத்து ரூபாய் கூலி கொடுப்பதாக வைத்துக் கொண்டால், எஞ்சுவதை முதலாளியே எடுத்துக் கொள்கிறார். இதனாலேயே சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுவதாகக் குறிப்பிடுகின்றார்.
நீதியும் நடுநிலை நேர்மையும் எழுப்புகின்ற கோரிக்கைகளை நிறைவு செய்ய வேண்டுமாயின் தனி மனிதரையும், சமூகங்களையும் அநீதியாகப் பாகுபடுத்துவதற்கு அடிப்படையாகவுள்ள பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்படுகின்றது. எனவே சமூக நல்லுறவை பாதிக்கின்ற காரணிகளில் பொருளாதார ஏற்றத்தாழ்வு ஒரு காரணமாக அமைகிறது.
பிரித்து வைத்துப் பார்த்தல்
இன, மத, பால், மொழி, சமய கலாசார ரீதியாக பிரித்து வைத்து நொக்கும் மரபு காணப்படுகின்றது. இத்தன்மை சமுதாயத்தில் அதிகமாக காணப்படுகின்றது. இதனால் இதய சுத்தியுடன் சமூக உறவினை மேற்கொள்வது முடியாத காரியமாக உள்ளது.
பல்லினக் கலாசாரங்களைக் கொண்ட மக்கள் பங்கு கொள்கின்ற வைபவங்களாய் இருந்தால் என்ன? கல்வி சாலைகளாக இருந்தால் என்ன? களியாட்ட நிகழ்வுகளாக இருந்தால் என்ன? குறிப்பிட்ட இனம் அதே போன்றுதான் மொழி. சமயம், கலாசாரம் எல்லாம் அமையும் இத் துர்ப்பாக்கிய நிலையை நாம் ஒவ்வொறுவரும் அன்றாடம் காணக்கூடியதாக உள்ளது. இன்நிலையில் பிரித்து வைத்துப் பாரக்கும் சந்தர்ப்பம் இயல்பாகவே ஏற்பட்டு விடுகின்றது. எனவே இதுவும் சமூக நல்லுறவை சீர்குலைப்பதில் முக்கிய பங்காற்றுகின்றது.
கலாசாரமும் சமுதாயமும்
பல்வேறுபட்ட கலாசார சூழல் ஒரு சமுதாயத்தின் சமூக உறவு நிலைகளில் பாதிப்பை ஏற்படுத்துவதுண்டு. கட்டுக் கோப்புடைய சமூகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட கலாசாரமும் ஊடுருவ முயலும் போது சமூக உறவுத்தாக்கம் ஏற்படுகின்றது. நவீன கலாசாரத்தை விரும்பும் ஒரு சாரரும் மரபுக் கொள்கையை கொண்ட ஒரு சாரருக்காக உடைவு நிலையை ஏற்படுத்துகின்றது.மற்றும் ஒரு நாட்டில் உள்ள பல்லினக் கலாசாரமும் சமூக சமரசம் இன்மையை நிலைபெறச் செய்வதால் உள்ளது. கலாசார வேறுபாடுகள் காரணமாக மக்கள் கூட்டத்தினர் மற்றுமொரு கூட்டத்தினரும் இணைவதற்கும். திருமணம் போன்ற உறவு முறைகளைக் கொண்டாடவும், கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் பின்வாங்குகின்றன.
பல் கலாசாரங்களைக் கொண்ட சமூகங்களில் முரண்பாடு. வன்முறை ஏற்படுவது சாதாரணமான ஒரு விடயமாக உள்ளது. கலாசார சின்னங்களான சமயம், சித்தாந்தம், மொழி போன்றன கலாசார வன்முறையை ஏற்படுத்துகின்ற காரணிகளென கல்துங் குறிப்பிடுகின்றார். ஒவ்வொரு சமூகங்களும் பின்பற்றுகின்ற சில சின்னங்கள் முக்கிய வகிபாகத்தினைக் கொண்டுள்ளன. அதாவது நட்சத்திரங்கள், சிலுவைகள், பிறைவடிவங்கள். தேசிய கீதங்கள். இராணுவ அணிவகுப்புக்கள். தலைவர்களின் உருவப்படங்கள், சுவரொட்டிகள், ஆத்திரமூட்டக் கூடிய உரைகள் போன்றன கலாசார ரீதியான வன்முறைகளை தோற்றுவிக்கும் அடையாளங்களாக இனங்காணப்பட்டுள்ளன. கலாசாரக் காரணிகளைத் தீர்மானிக்கும் ஆறு வகையான கூறுகள் சமயம். கருத்தியல். மொழி, கலை, பொருளாதாரம், விஞ்ஞானம் என்பவற்றைக் கூறலாம்.
ஒரு சிறுபான்மையினருக்கு எதிரான கலாசார பாரபட்ச நிலைகள் என்னும் போது சிறுபான்மையினருக்கான சமயச் சுதந்திரம் மீதான கட்டுப்பாடுகள், மொழியினைப் பாவிப்பதில். கல்வி கற்பதிலுள்ள கட்டுப்பாடுகள் போன்றன இதனுள் உள்ளடக்கப்படுகின்றன. இதனால் சமூகங்களில் பலவிதமான முரண்பாடுகள். புரட்சிகள் என்பன ஏற்பட்டிருப்பதைக் காலம் காட்டியுள்ளது.
முற்சாய்வு எண்ணங்கள்
முற்சாய்வு என்பது பிறரைப் பற்றியோ, பிற குழுக்களைப்பற்றியோ, உண்மை நிலையை அறியாமல், அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வருவதால் ஏற்படும் மனப்பாங்கு பிறருக்கு எதிரான முறையில் சிந்திக்கவும் செயற்படவும் இவை நம்மைக் கட்டுப்படுத்தும் மனநிலையாகும் என நியூ மோம்ப் என்பவர் கூறுகிறார்.
Prejudice என்னும் சொல்லானது Pre - Judice என்ற மூலத்திலிருந்து பெறப்பட்டது. அதாவது, ஒரு உண்மையை ஆராய்ந்து அறிவதற்கு முன்னமே அவ் உண்மை தொடர்பான தீர்ப்பு வழங்கப்படுகின்றது. இது நேர்மையற்ற வகையில் வழங்கப்படும் தீரப்பு ஆகும். "எங்கட இனம் செய்தது சரிதான்" என எண்ணுவதுடன், புறக்குழு நடத்தைகள் யாவும் பிழை எனத் தீர்மானிக்கவும் வழிவகுக்கின்றது. இதற்கு சாதகமாக அமைவது வலுவுள்ள மனவெழுச்சிகளும், விருப்பு வெறுப்புகளும் தான் எனக் கூறினாலும் தகும்.
பிறர் மீது காட்டும் வெறுப்பின் மூலம் உண்டாகும் முற்சாய்வு எண்ணங்கள் குழுக்களுக்கிடையில் பகைமையுணர்வை உண்டாக்கி, ஒன்றிலிருந்து ஒன்றை பிரித்து ஒதுக்கிவிடுகின்றது. இதனால், மிகக் குறுகிய காலத்தில் முடிவு எடுக்கும் நிலை காணப்படும். மீள ஆராயும் தன்மை மட்டுப்படுத்தப்படும். முற்சாய்வின் காரணமாகவே பாரபட்ச உணர்வு தோற்றம் பெறுகின்றது.
முற்சாய்வு என்பது நேரானதாகவும், எதிரானதாகவும் அமையலாம். ஒரு குழுவுக்கு அல்லது தனிப்பட்ட நபருக்கு ஆதரவாக அமையும் போது நேரானதாகவும், ஒரு குழுவுக்கு அல்லது தனிநபருக்கு விரோதமாக அமையும் போது எதிரானதாகவும் காணப்படும். ஆரம்ப நிலையில் குறித்தவர்களை மட்டும் பாதிக்கும் அழிவுநிலையில் பெரும்பாலனவர்களைப் பாதிக்கும் தன்மை கொண்டது எனலாம்.
ஒருவர் செய்த தவறுக்காக இன்னொருவர் பழி சுமத்தல் - இதன் மூலம், இரு குழுக்களில் ஒரு குழு மட்டும் முற்சாய்வுக்கு உற்படல். ஒரு கருத்தினை தவறாகப் புரிந்து கொள்வதனால் முற்சாய்வு ஏற்படுகின்றது. தனிநபரை வேறுபடுத்திப் பார்க்கும் சூழ்நிலையில் இது உருவாகின்றது.
அதிகாரியின் ஆளுமை - அதர்னோவும் அவரது சகாக்களும் 1950 இல் அதிகாரமயவாதமும் முற்சாய்வும் தொடர்பாக கற்றுள்ளனர். இந்த அதிகாரம் சார்ந்த ஆளுமையின் விமர்சனமாக ஒரு பறவையில் இரண்டு சிறகுகளைப் போன்று இரண்டு குழுக்களை எடுத்துக் கொண்டால், இடப்பக்க குழுவை அழித்து வலப்பக்கக் குழுவை மையப்படுத்துகின்றது. இதன் மூலம் பக்கச் சார்பான செயற்பாட்டை மேற்கொள்கின்றது.
சுரண்டல் - முற்சாய்வு இன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சுயநலத்தை ஊக்குவிக்கின்றது. அதிகாரத்தில் உயர்ந்த குழுக்கள் இதன்மூலம் நன்மையைப் பெற்றுக் கொள்ளும், சிறுபான்மை இனம் புறந்தள்ளப்படும்.
விழுமியம் சார்ந்தது
முற்சாய்வு சமூகத்தினது அல்லது நெறிமுறைக்குள் வடிவமைக்கப்பட்டது. ஒரு குழுவினுடைய மதிப்புக்கள் கலாசார
தனிமனிதர்களிடையே காணப்படும் வேறுபாடுகளும் தவறான எண்ணங்களைத் தோற்றுவிக்க வழிவகுக்கலாம். அதாவது, ஒரு பொருளை வெறுப்பவன் அந்தப் பொருள்களின் சாயலைக் கொண்ட எல்லாவற்றையும் வெறுக்கத் தொடங்குவான். தான் வெறுக்கும் பொருள் மீது ஈடுபாடு கொண்டவனையும் அவன் வெறுக்கத் தொடங்குவான்.
உலக அமைதிக்கு ஊறு செய்யும் காரணங்களில் பிறர் நாட்டினரைப் பற்றிய தவறான சார்பெண்ணங்கள், குறுகிய மனப்பாங்குகள் என்பவற்றின் காரணமாக பிறர்பால் வெறுப்பு, அரசியல் காரணிகள், சமயவெறி. மற்றும் சுயநலப்பிரச்சாரம் போன்றன ஏற்படுகின்றன. இத்தகைய சிந்தனை, செயற்பாடுகள் சமூக நல்லுறவைச் சிதைக்கின்றன.
முற்சாய்வினைக் குறைப்பதற்கான தீர்வு ஆலோசனைகள்
கல்வியினுடைய முக்கிய நோக்கம் மாணவர்களிடையே ஆராய்ச்சி மனப்பான்மையையும், சிந்தனை ஆற்றலையும் தோற்றுவித்தது. உண்மைக் கருத்துக்களைப் பெற பயிற்றுவித்தாலும் இப்பயிற்சியினை வழங்குவதன் மூலம் முற்சாய்வினைக் குறைப்பதில் மிகச் சிறந்த பங்காற்ற முடியும்.
உண்மையான ஆராய்ச்சி மனப்பான்மை கொண்ட கல்வியறிவு பெற்றவர்களிடத்தில் ஏனையவர்களிடையே முற்சாய்வெண்ணம் குறைவு எனக் கூறப்படுவதையும் மனதிற் கொள்ளலாம்.
குழுக்களுக்கிடையில் இடைவினை வடிவத்தை மாற்றுதல்.- வெவ்வேறு குழுக்கள் ஒன்றாக வாழும்போது அவர்கள் இதுவரை காலமும் அசையாத நம்பிக்கையாகப் பற்றிக் கொண்டிருந்த தவறான கருத்துக்களை விட்டு அனேக முரணில்லாத ஒத்த மனப்பாங்குகளை பிற குழுக்களுடன் வைத்திருப்பர்.
அமெரிக்காவிலே வெள்ளையருக்கென உருவாக்கப்பட்டிருக்கும் பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்கள் பற்றிய முற்சாய்வு அதிகமாகக் காணப்பட்டது. ஆனால், கறுப்பின மாணவர்களும் வெள்ளையின மாணவர்களும் இணைந்து பயிலும் பாடசாலைகளிலே மாணவர்களிடையே நட்புணர்வே அதிகமாகக் காணப்பட்டது என 1967 இல் அமெரிக்க குடியுரிமை ஆணைக்குழு அறிக்கையில் காட்டப்பட்டுள்ளது.
சமூக முன்னேற்றம்
சமூக முன்னேற்றத்தில் வர்க்கமும் சாதிமுறையும் செல்வாக்கு செலுத்துகின்றன. அதாவது ஒருவர் பொருளாதாரத்தில் உயர்நிலையில் உயர் வர்க்கத்தில் காணப்பட்டாலும் அவர் சாதியில் தாழ்ந்த நிலையில் காணப்பட்டால் அவர் சமூகத்தில் தனிமைப்படுத்தப்பட்டவராவார். ஏனெனில் அவர் பொருளாதாரத்தில் முன்னேற்றம் கண்டாலும் பிறப்பால் உண்டான சாதியை உயர்நிலைக்கு கொண்டுவர முடியாது. இதனால் சமூகத்தில் பிரிவினைகள் தோன்றி நல்ல உறவை பேணமுடியாதுள்ளது. மேலும் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட உயர்வர்க்கம். நடுத்தரவர்க்கம். தாழ்ந்தவர்க்கம் என பிரிவுகள் காணப்படுகின்றனர். உயர்வர்க்கத்தைச் சார்ந்தவர்கள் தன்னை ஒத்த அந்தஸ்தில் உள்ளவர்களுடனேயே உறவுகளை மேற்கொள்வர். ஏனைய இரண்டு பிரிவினரையும் அடிமை நிலையிலே நடத்துவர். இதனால் இவர்களுக்கிடையில் சமூக நல்லுறவை பேணமுடியாத நிலை காணப்படுகின்றது.
தாழ்ந்த வர்க்கத்தில் உள்ளவர்கள் எல்லா வகையிலும் தனிமைப்படுத்தப்படுவர். பிறவர்க்கத்தினரில் தங்கி வாழவேண்டிய நிலை காணப்படும். உயர்ந்த வர்க்கத்தினரிடம் கடன்வாங்கி கடனை திருப்பி கொடுக்க முடியாத முரண்பாடுகள் ஏற்படும் இதனால் இவர்களிடையே நல்ல உறவுநிலையைப் பேணமுடியாது.
நன்றி
0 Comments