தமிழ் கட்டுரை
புவியைப் பாதுகாப்போம்
புவியைப் பாதுகாப்போம்
முன்னுரை
இந்நிலவுலகானது இயற்கை வளங்களையும் வாழும் உயிரினங்களையும் கொண்டுள்ளது. ஒன்றை ஒன்று சார்ந்து வாழ வேண்டுமென்பது இயற்கையின் நியதி. நமது வாழ்க்கைச் சக்கரம் பல்வேறு வகையான மாசுகளுக்கிடையே சுழன்று கொண்டிருக்கிறது. இப்புவியைப் பாதுகாக்கக் காலநிலை மாற்றத்தைக் கட்டுபடுத்த நிலைபாடு எடுக்க வேண்டியுள்ளது நமது கடமையாகும் என்பதை எடுத்துரைப்பதாக இக்கட்டுரையும் அமைகிறது.
இயற்கை வளங்களைப் பேணுவோம்
நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என்னும் ஐம்பூதங்களாலானது இவ்வுலகம். கிரியாவின் தற்காலத் தமிழகராதி, “நிலம், நீர், தீ, காற்று, வானம் ஆகிய ஐந்தும் இயற்கைச் சக்தி” என ஐம்பூதங்களைக் குறிக்கின்றது. ‘இவ்வுலகமானது முழுமுதற் கடவுளின் ஆனந்தமயமான வெளிப்பாடு’ என்று கவிஞர் தாகூர் குறிப்பிடுகிறார். இவ்வாறு மனிதனைச் சுற்றி அமைந்துள்ள இயற்கைக் கூறுகள் அனைத்தும் ஏதாவதொரு வகையில் மனித வாழ்வோடு கலந்து செயலாற்றுகின்றது. இயற்கை இனிமை தருவது, இன்பம் பயப்பது அழகாகக் காட்சி தருவது. பல்லாயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன்னரே இயல்பாகத் தோன்றி நிலைபெற்றது. மரஞ்செடி, கொடி, மலை, கடல், ஆறு போன்ற அஃறிணைப் பொருட்கள் ஆகிய எல்லாம் இயற்கை என்றும் பெரும் பிரிவில் அடங்கும். இயற்கை இறைவனுடைய படைப்பு. உயிரினங்கள் உருவெடுப்பதும், வாழ்தலும், பின் அழிதலும் இயற்கையில் நடைபெறுவதால் இயற்கையையே இறைவன் என்பர். ‘இயற்கையின் அரவணைப்பிலே மகிழ்வோடு இந்நாளைச் செலவழிக்கவும் அருளைப் பொழிந்திடும்’ என்ற வேண்டுதல்களையும் காணலாம்.
“மனிதனுடைய ஆன்மாவைத் தன்வயப்படுத்திக் கொள்ள நினைக்கின்றது இயற்கை. அது பலவகையான மாயங்களைச் செய்து மனித இதயத்தை ஈர்க்கப் பார்க்கிறது. விரிந்து கிடக்கும் பரப்பாலும் ஓங்கி வளரும் உயரத்தாலும் இயற்கையானது மனிதனை உயர்த்த முனைகின்றது. தன் எழிலில் அவனை மகிழ்விக்க முயல்கின்றது. துடைத்துத் தொலைக்கும் தன் அழிப்பாற்றலால் அவனை அவலத்தில் மூழ்கடிக்கப் பார்க்கிறது. தன் அமைதி திறத்தால் அவனுக்கு மீட்சி தருகின்றது. இவ்வாறான எண்ணற்ற செயல்களின் வாயிலாக இயற்கை மனித இதயத்தைக் கவர்வதற்கு இடையறாமல் முயன்று கொண்டேயிருக்கிறது” என்று ஜே.சா.ஷார்ப் என்பவர் இயற்கை மனிதனைப் பாதிக்கும் முறையை மனிதனுக்கு ஏற்படுத்தும் நன்மை தீமைகளை விளக்கியுரைக்கிறார்.
காட்டுவளம்
காடு செழித்திருந்தால் தான் நாட்டு வளமை காப்பாற்றப்படும். காடு அழிந்தால் நாடு அழியும். காடுகள் தாவர இனங்கள், விலங்குகள், பறவைகள் முதலிய உயிரினங்களின் சரணாலயங்களாக இருந்து மனிதனுக்கும் இயற்கைக்கும் பெருந்தொண்டு புரிவதால் காடுகளைக் காப்பது நமது பெருங்கடமையாகிறது. “காடு என்பது வண்ணக் களஞ்சியம். இறைவன் இன்னருள் முழுவதும் நிறைந்த சுவர்க்கம். பல்வகைச் செடிகளும், கொடிகளும் ஒன்றோடொன்று இணைந்து வளரும். சீறிவரும் வேங்கையும், சினந்து வரும் சிங்கமும், பாய்ந்தோடும் மானினமும், பதுங்கி வரும் நரியினமும், கூவி வரும் குயிலினமும், ஆடி வரும் மயிலினமும், குறும்பு செய்யும் குரங்கினமும் கூடி வரும் யானையினமும் இன்னும் பிறவும் வளர்கின்ற தனி உலகம்.” காட்டின் உதவியோடு, உயிரினங்கள் வளமுடன் வாழ்வதோடு, மனிதன் காட்டைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் வளமுடன் வாழலாம். கால நிலையைக் சீராக வைப்பதற்கும், மழைபொழியவும், வெப்பத்தைக் குறைக்கவும், நிலச்சரிவு மற்றும் மண் அரிப்பு ஏற்படாதவாறு பாதுகாக்கவும் காடுகள் பயன்படுகின்றன. ஆனால் இன்று காடுகள் அழிக்கப்படுவதால் வறட்சியும் பஞ்சமும் ஏற்பட்டு உள்ளன் தட்ப வெப்பநிலை மாறுபட்டுள்ளது. பூமியின் வெப்பநிலை கூடிக் கொண்டே வருகின்றது. காடுகள் அழிப்பே சுற்றுச்சூழல் பாதிப்பிற்கு முக்கிய காரணமாகும்.
நீர் வளங்கள்
இந்தப் பூமியின் மூன்றில் இரண்டு பங்கு நீரால் நிரப்பப்பட்டிருக்கிறது. ஆனால் நமது தேவைக்குப் பயன்படுத்த முடியாத நிலையில் அந்த நீர் உள்ளது. பூமியின் நீர் வளத்தில் கடல், ஆறுகள், ஓடைகள், குளங்கள், அணைக்கட்டுகள், நிலத்தடி நீர், பனிக்கட்டிகள், நீரோடை, நீர்வீழ்ச்சிகள் முக்கியமான இடத்தைப் பெறுகின்றன. ‘நீரை இரைப்பது சீரை இரைப்பது போல்’ எனவே பூமியிலுள்ள நீர் வளங்களான மேற்பரப்பு நீர், நிலத்தடி நீர், அணைகள், வெள்ளம் இவற்றைப் பாதுகாப்பது அவசியம். நீர்பெருக்கு, நீர்பற்றாக்குறை, வெள்ள அபாயங்களிலிருந்து மனிதகுலத்தைக் காப்பதும் முக்கியம். ‘வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால், மையத்து நாடுகளில் பயிர் செய்வோம்’ எனப் பாரதி பாடியது போல, நதிகளை இணைத்து வளங்களைப் பேணுவோம். பெய்யும் பருவ மழையால், ஆங்காங்கே உள்ள குட்டைகள், குளங்கள், கால்வாய்கள், ஆறுகள் ஆகியவற்றில் தூர் எடுத்து, பின்பு அவற்றை மழை நீர் சேகரிக்கும் வகையில் சரி செய்ய வேண்டும். நீர் வளத்தைப் பெருக்கக் கழிவுநீரைச் சுத்திகரிப்பதும் அவசியம்.
அவை இன்று தொழிற்சாலைகளின் சொந்த வீடு”
எனும் மித்ராவின் நிலம் பற்றிய கவிதையில் இடம் பெறும் வரிகள், மனிதன் தொழில் வேண்டி, இடம் வேண்டி கடற்கரைகளைப் பாழ்படுத்துவதைக் காணலாம். கடலோர மண் அரிப்பிற்கு மணல் அள்ளுதல், மணல் மேடு சீராக்கல், கடற்கரைச் சுவர் கட்டுதல், பவளப் பாறைகளைக் குறைத்தல், துறைமுகம் கட்டுதல், கடல் வழிப் பயணத்திற்கான கால்வாய்களை அமைத்தல் போன்ற சில மனிதர்களின் சுயநல நடவடிக்கைகளும்; கடற்கரைகள் பாதிக்கப்படுவதைத் தெரிவிக்கின்றன.
கனிம வளங்கள்
பூமியிலுள்ள இயற்கை வளங்களில் கனிம வளங்கள் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கனிமங்கள் திடமான பாறை வடிவிலே கிடைக்கின்றன. இவை உலோக வகை, உலோகம் சாரா வகை, எரி பொருள் வகை, எண்ணெய் வகை எனப் பிரிக்கலாம். கனிமங்களை அளிப்பதாலும் அவற்றைத் தோண்டி எடுப்பதினாலும் சுற்றுப்புறச்சூழல் பாதிக்கப்படுகிறது. இதனால், காற்று மாசடைதல், தண்ணீர் மாசடைதல், மண் மாசடைதல், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுகிறது.
உணவு வளங்கள்
இந்தியாவில் வேளாண்மை முதன்மையான தொழிலாகக் கருதப்படுகிறது. வேளாண்மையின் மூலமாக மனிதர்களுக்குத் தேவையான கோதுமை, நெல், சோளம், திணை வகைகள் இதைத்தவிர இறைச்சி மற்றும் மீன்கள் போன்றவற்றையும் மனிதன் உணவாக உட்கொண்டு வருகிறான். எனினும் உலகளாவிலே உணவு ஒரு பிரச்சனையாக உள்ளது. இதற்கு முக்கிய காரணங்கள், மக்கள் தொகை பெருக்கம், வேலையில்லாத் திண்டாட்டம், உற்பத்தி குறைவு, குறைவான நீர் ஆதாரங்கள், குறைவான விஞ்ஞான அறிவு, சுற்றுச்சூழல் தூய்மை கேடு, குறைந்து விட்ட மண்ணின் தரம் போன்றவையாகும்.
“விளைநிலங்கள் விலை நிலங்களாகி, கான்கிரீட் பயிர்கள், காற்றில் செயற்கையாய் கலகலத்துச் சிரிக்கும்”
எனும் மித்ராவின் கவிதையும் விளைநிலங்கள் அழிக்கப்படும் அவலத்தினைப் பறைசாற்றுகின்றது.
ஆற்றல் வளங்கள்
ஒரு நாட்டின் பெருமை, அந்நாட்டில் உற்பத்தியாகும் எரிபொருள் அளவையொட்டி அமையும். ஆற்றல் வளங்களை விறகு, சூரிய ஆற்றல், காற்று அலை, நீர்மின் நிலையங்கள், சாண எரிவாயு, வேளாண்மைக் கழிவுகள் எனப் புதுப்பிக்கக் கூடிய ஆற்றல் வளங்கள், நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, மின்சாரம், அணு ஆற்றல் எனப் புதுப்பிக்கவியலாத ஆற்றல் வளங்கள் என்றும் பிரிக்கின்றோம். இத்தகைய, ஆற்றல் வளங்களையும் பாதுகாக்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.
முடிவுரை
மனிதன் உடல் உழைப்பையும், மன மகிழ்ச்சியையும் விட்டுவிட்டுச் செயற்கைக்கு முதன்மை கொடுக்கிறான். இயந்திரங்களோடு இயந்திரமாகிப் போகிறான். இந்நிலையில் புவியை மாசற்ற நிலைக்கு உட்படுத்துகிறான். ‘இயற்கையை வணங்குங்கள, இயற்கையோடு நட்பாயிருங்கள், இதுதான் இன்றைக்குத் தேவை’ எனக் கண்ணுக்கு விருந்தானதை, உணர்ச்சிக்குப் புத்துயிர் அளித்ததை, உணர்வால் உதவி நின்றதை, வெப்பத்தை நீக்கிக் குளிர்ச்சி தந்ததை, இறையுணர்வை எழுப்பியதை, வசதிகளை வாரி வழங்கியதை, வாழ்விடமாய், வகையாய், அருமருந்தாய் பாதுகாப்போம்.
இந்த கட்டுரை பிடித்திருந்தால் Share செய்யுங்கள் இதன் மூலம் போட்டியாளரை வெற்றி பெர செய்யலாம்.
0 Comments