இராமாயணம் பகுதி - 99 - RAMAYANAM PART - 99


இராமாயணம் பகுதி - 99


இராமாயணம் பகுதி - 99 - RAMAYANAM PART - 99

இராமர், புஷ்பக விமானத்தில் இருந்து இறங்க முற்பட்டார். உடனே பரதர், தான் தலையில் வைத்திருந்த பாதுகைகளை இராமரின் திருவடிக்கு கொண்டு சேர்த்தார். இராமர், பரதரின் பாசத்தை நினைத்து மகிழ்ச்சி அடைந்தார். பிறகு இராமர் பரதரை அன்போடு தழுவிக் கொண்டார். அதன் பின் குல குருவான வசிஷ்டரை பார்த்து இராமர் வணங்கினார். வசிஷ்டரின் கண்களில் கண்ணீர் பெருக இராமரை வாழ்த்தி, தழுவிக் கொண்டார். சத்ருக்கன், இராம இலட்சுமணரை கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தான். இராம இலட்சுமணர், சத்ருக்கனை அன்போடு தழுவிக் கொண்டனர். சத்ருக்கன் ஆனந்த கண்ணீர் வடித்தான். பிறகு இராமரின் தாய்மார்கள் இராமர் சீதை மற்றும் இலட்சுமணனை பார்த்து மகிழ்ச்சி அடைந்தார்கள். கௌசலை, இராமரைப் பார்த்து, இராமா! உன்னை நான் இத்தனை காலம் பார்க்காமல் தவித்துக் கொண்டிருந்தேன்.

இன்று உன்னை கண்டு நான் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தேன் என்றாள். இராமரும், தன் தாய் கௌசலையை அன்போடு பார்த்தார். பிறகு இராமர், சீதை மற்றும் இலட்சுமணர் கௌசலையின் திருவடிகளில் விழுந்து ஆசியைப் பெற்றுக் கொண்டனர். அப்பொழுது சுமித்திரை, இராமா! நீ வந்துவிட்டாயே! இனி எனக்கு கவலைவில்லை. உன்னை காணாமல் நாங்கள் மிகவும் துன்பம் அடைந்தோம் எனக் கூறி அன்போடு தழுவிக் கொண்டார். அதன்பின் இலட்சுமணனை பார்த்து, இலட்சுமணா! என் அருமை மகனே! நீ எவ்வாறு இருக்கின்றாய்? எனக் கூறி அன்போடு தழுவிக் கொண்டாள். இலட்சுமணனும் தன் தாய் சுமித்திரையைக் கண்டு அளவற்ற மகிழ்ச்சி அடைந்தான். அதன்பின் இராமர், சீதை மற்றும் இலட்சுமணர் சுமித்தரையின் திருவடிகளில் விழுந்து ஆசியைப் பெற்றுக் கொண்டனர்.

அப்பொழுது இராமர் தன் தாய் கைகேயியை தேடினார். கைகேயி, ஓரமாக நின்றுக் கொண்டு இருந்தாள். இதைப் பார்த்த இராமர், கைகேயிடம் ஓடிச் சென்று திருவடிகளில் விழுந்து வணங்கினார். கைகேயின் கண்களில் கண்ணீர் ஆறாய் பெருக்கெடுத்து ஓடியது. பிறகு இராமர் கைகேயிடம், அம்மா! தாங்கள் ஏன் ஓரமாக நின்று கொண்டு உள்ளீர்கள் எனக் கேட்டார். கைகேயி, என் அன்பு மகனே! நான் உனக்கு செய்த செயல் தான் நான் ஓரமாக நிற்பதற்கு காரணம் என்றாள். இராமர், அம்மா! தாங்கள் இவ்வாறு பேசுதல் கூடாது. என்னை அன்போடு வளர்த்தவர் நீங்கள். தங்களால் தான் எனக்கு இந்த பதினான்கு வருட வனவாச காலத்தில், பல முனிவர்களின் ஆசிகளையும், பல ரிஷிகளின் சாப விமோச்சனைத்தையும், பலரது நட்புகளையும் பெற்று தந்தது.

அது மட்டுமல்லாமல் பல அரக்கர்களின் பாவச் செயல்களும் அழிந்து போனது. இது எல்லாம் தங்களால் தான் நடந்தது. இதை நினைத்து தாங்கள் வருந்துதல் கூடாது என்றார். இராமரின் இந்த பணிவான சொற்களை கேட்டப்பின் கைகேயி இராமரை அன்போடு ஆசிர்வதித்தாள். இதைப் பார்த்து அயோத்தி மக்கள் மகிழ்ச்சி கடலில் திளைத்தனர். அதன்பின் இலட்சுமணரும், சீதையும் கைகேயின் திருவடிகளில் விழுந்து ஆசியைப் பெற்றுக் கொண்டானர். பிறகு சுமந்திரர் முதலான அமைச்சர்கள் இராமரை கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தனர். அயோத்தி மக்களும் இராமரைக் கண்டு தரிசித்து அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர்.

அதன் பிறகு இராமர், சுக்ரீவன், அங்கதன் மற்றும் விபீஷணன் முதலானவர்களை தன் தாய்மார்களுக்கும், பரதன் மற்றும் சத்ருக்கனுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அதன் பின் இராவணாதி அரக்கர்களால் ஏற்பட்ட துன்பங்களையும் எடுத்துக் கூறினார். இதைக்கேட்டு அவர்கள் மிகவும் கவலை அடைந்தனர். இராமரால் இராவணாதி அரக்கர்கள அழிந்ததை நினைத்து அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர். அதன் பிறகு அனைவரும் அயோத்தி செல்ல முற்பட்டனர். இராமர், நாம் அனைவரும் இந்த புஷ்பக விமானத்தில் பரதன் தங்கிருந்த நந்தி கிரமத்திற்கு சென்று அதன்பின் அயோத்தி செல்லலாம் என்றார். இராமரின் சொற்படியே அனைவரும் புஷ்பக விமானத்தில் நந்தி கிராமத்திற்கு புறப்பட்டனர்.

சிறிது நேரத்தில் அனைவரும் நந்தி கிராமத்தை அடைந்தனர். இராமர் சீதையை காண்பதற்காக அயோத்தி மக்கள் கூட்டமாக கூடியிருந்தனர். புஷ்பக விமானம் நந்தி கிராமத்தில் இறங்கியது. இராமருக்காக அங்கு வெண் குதிரைகளால் பூட்டப்பட்ட பொன்னால் ஆன சிறந்த தேர் காத்துக் கொண்டிருந்தது. நந்திகிராமத்தை அடைந்த இராமர் தம்பிகளுடன் சடாமுடி போக்கி, வன வாச கோலத்தை நீங்கி சரயு நதியிலே நீராடினர். பிறகு இராமரை அழகாக ஒப்பனை செய்தனர். பிறகு இராமர் அயோத்திக்குச் செல்ல, வெண் குதிரைகள் பூட்டப்பட்ட அழகிய தேரிலே ஏறினார்.

இலட்சுமணர், இராமருக்கு குடை பிடித்தார், சத்ருக்கன், இராமருக்கு வெண்சாமரம் வீசினார். பரதர், அத்தேருக்கு சாரதியாக இருந்து தேரை செலுத்தினார். விபீஷணன் மற்றும் சுக்ரீவன் இருவரும் தேரின் இருபுறமும் யானைகள் மீது சென்றனர். அங்கதனும், அனுமனும் அத்தேருக்கு முன்னும் பின்னும் சென்றனர். பொன்னாலான தேரில் சீதை சென்றாள். மனித உருவம் கொண்ட வானர பெண்கள் சீதையுடன் குதிரைகளின் மேலும், பல்லக்கிலும் அமர்ந்துச் சென்றனர். சிறிது தேரிலேயே அனைவரும் அயோத்தி நகரை அடைந்தனர்.

அயோத்தி மக்கள் அனைவரும் தாயை பிரிந்த குழந்தை போல் இராமரை கண்டு அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர். அனைவரும் அரண்மனை அடைந்தனர். இராமர் பரதனிடம், தம்பி! அனுமன், சுக்ரீவன், விபீஷணனுக்கு தேவையான வசதிகளைக் செய்துக் கொடுத்து அரண்மனையை சுற்றி காண்பிப்பாயாக என்றார். பிறகு பரதன் அவர்களுக்கு அரண்மனையை சுற்றி காண்பித்தான். அப்போது சுக்ரீவன் பரதனிடம், பரதரே! முடிசூட்டும் விழாவிற்கு ஏன் தாமதமாகிறது எனக் கேட்டான். பரதன், ஐயனே! பட்டாபிஷேகத்திற்காக நாடு முழுவதும் உள்ள புண்ணிய தீர்த்தங்களை கொண்டு வர தான் தாமதத்திற்கு காரணம் என்றான். உடனே சுக்ரீவன், அனுமனை நோக்கினான். சுக்ரீவனின் நோக்கத்தை அறிந்த அனுமன் புண்ணிய தீர்த்தங்களை கொண்டு வர புறப்பட்டான்.

அதன் பிறகு பரதன், வசிஷ்ட முனிவரிடம் சென்று, குருவே! அண்ணல் இராமருக்கு விரைவில் பட்டாபிஷேகம் செய்ய வேண்டும். ஆதலால் பட்டாபிஷேகம் செய்ய உகந்த நாளை தாங்கள் கணிந்து கூறுங்கள் என்றான். வசிஷ்ட முனிவர், நல்ல நாட்களை கணித்து பார்த்து, பரதரே! நாளையே நாம் இராமருக்கான முடிசூட்டும் விழாவை வைத்துக் கொள்வோம் என்றார். இதைக் கேட்டு பரதர் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார். இச்செய்தி தாய்மார்களுக்கும், அனுமன், சுக்ரீவன், விபீஷணனுக்கு தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்டு அனைவரும் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர். இச்செய்தி நாட்டு மக்கள் அனைவருக்கும் முரசறைந்து அறிவிக்கப்பட்டது. மக்கள் இச்செய்தியைக் கேட்டு அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர். இராமருக்கு பட்டாபிஷேகம் செய்வதற்கான ஏற்பாடுகள் விரைவாக நடக்க தொடங்கியது.

ஶ்ரீராமருக்கு நாளை முடிசூட்டும் விழா என்ற செய்தியை ஓலை மூலம் மன்னர்களுக்கும், சிற்றரசர்களுக்கும் அனுப்பப்பட்டது. குகனுக்கும் இராமரின் முடிசூட்டும் விழாவிற்கு வரும்படி அழைப்பு விடப்பட்டிருந்தது. அயோத்தி மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளை அலங்கரித்தனர். மறுநாள் பட்டாபிஷேகத்திற்கான மண்டபத்தை பொன்னாலும், மலர்களாலும் அலங்கரித்தனர். அப்பொழுது அனுமன், பல நாடுகளிலிருந்து புண்ணிய தீர்த்தங்களை கொண்டு வந்தான்.

இராமரின் பட்டாபிஷேகத்தை காண பல நாட்டிலிருந்து மன்னர்களும், சிற்றரசர்களும் குவிந்த வண்ணம் இருந்தனர். குகனும் இராமரின் பட்டாபிஷேகத்தை காண வந்து சேர்ந்தான். பட்டாபிஷேகத்திற்கு தேவையான பொருட்கள் எல்லாம் அமைச்சர் சுமந்திரர் தலைமையில் கொண்டு வரப்பட்டது. வசிஷ்டர் முதலான முனிவர்கள் வேள்விகளை ஆரம்பித்தனர். இராமரும் சீதையும் அரியணையில் அமர்திருக்க, பரதன் வெண்கொற்ற குடையை பிடித்தான். இலட்சுமணனும், சத்ருக்கனும் இருப்புறங்களில் நின்றுக் கொண்டு வெண்சாமரை வீசினர்.

தொடரும்.....

Post a Comment

0 Comments