இராமாயணம் பகுதி - 56
இராவணன் விபீஷணனிடம், தம்பி! நல்லது செய்தாய். இல்லையென்றால் இக்குரங்கை கொன்று பாவம் செய்திருப்பேன் என்றான். ஆனால் இந்த வானரம் குற்றம் செய்துள்ளது. அதற்கு தண்டனை தர வேண்டும் என நினைத்தான். அதனால் இக்குரங்கின் வாலில் தீ மூட்டி, இலங்கை நகரை சுற்றி வந்து பிறகு இந்நகரை விட்டு விரட்டியடியுங்கள் என்றான். அப்போது இந்திரஜித், இவன் பிரம்மாஸ்திரத்தால் பிணைக்கப்பட்டுள்ளான். அப்படி இருக்க இவன் மீது தீயிடக் கூடாது என்றான். உடனே அரக்கர்களிடம் இவனை கனமான கயிற்றை கொண்டு கட்டுங்கள் என சொல்லி விட்டு தன்னால் பிணைக்கப்பட்ட பிரம்மாஸ்திரத்தை அவிழ்த்துவிட்டான். அரக்கர்கள் அனுமனை கனமான கயிற்றை கொண்டு கட்டினார்கள். பிறகு அரக்கர்கள் இலங்கையில் அனைத்து கயிற்றையும் கொண்டு வந்து அனுமனின் வாலில் சுற்றினார்கள்.
பிறகு அனுமனை பார்த்து இப்பொழுது உன் வீரம் என்ன ஆயிற்று என கேலி செய்தனர். சிலர் அரக்கிகள் ஓடிப்போய் நடந்தவற்றை சீதையிடம் கூறினர். சீதை இதைக் கேட்டு மிகவும் வருந்தினாள். உடனே அவள், அக்னி தேவனே! இவ்வரக்கர்கள் அனுமனுக்கு இழைக்கும் கொடுமையைப் பார்! நான் கற்புடைய பெண் என்றால் அக்னியே! நீ அனுமனை சுடக் கூடாது என்றாள். சீதையின் துன்பத்தைக் கண்டு அக்னி தேவனும் பயந்தான். அங்கு அரக்கர்கள் அனுமனின் வாலில் தீயை மூட்டினர். ஆனால் அத்தீ அனுமனை சுடவில்லை. அனுமனுக்கு ஜில்லென்று இருந்தது, அப்போது அனுமன், அன்னை சீதை தான் நம்மை நெருப்பு சுடக் கூடாது என அக்னி தேவனை வேண்டியிருப்பாள் என நினைத்தான். பிறகு அனுமன் சீதை இருந்த திசையை பார்த்து தொழுதான். அரக்கர்கள் அனுமனை கயிற்றில் கட்டிக் கொண்டு இலங்கை முழுவதும் சுற்றினர். அப்பொழுது அனுமன் சரியான நேரம் பார்த்து வான் வெளியில் பறந்தான்.
அரக்கர்கள் செய்வதறியாது அக்கயிற்றில் தொங்கினர். அனுமன் இராமனை நினைத்து, வீடுகள், மாளிகைகள், தெருக்கள் என அனைத்து இடங்களிலும் தீயை வைத்தான். அப்பொழுது இலங்கை நகரம் தீயின் ஒளியால் பிரகாசமாக எரிந்தது. நெருப்பின் புகையால் இலங்கை நகரம் இருண்டு காணப்பட்டது. சில அரக்கர்கள் நெருப்பிற்கு பயந்து கடலில் குதித்தனர். தீயினால் இலங்கை நகரம் அழிந்தது. இலங்கை தீயில் எரிவதை கண்ட இராவணன், இதற்கு யார் காரணம்? எனக் கேட்டான். அங்கு உயிர் பிழைத்து வந்த அரக்கர்கள், குரங்கின் வாலில் நாம் இட்ட தீ தான். இலங்கை நகரம் எரிவதற்கு காரணம் என்றனர். கோபங்கொண்ட இராவணன், இலங்கை அழிவதற்கு காரணமாய் இருந்த அக்குரங்கை பிடித்து வாருங்கள் என கட்டளையிட்டான். அரக்கர்கள் குரங்கை பிடிக்கச் சென்றார்கள்.
இதை கவனித்த அனுமன், தன் பக்கத்தில் இருந்த மரத்தைப் பிடிங்கி அரக்கர்கள் மீது எறிந்தான். இதனால் அரக்கர்கள் மாண்டு போனார்கள். சில அரக்கர்கள் பயந்து ஒளிந்து கொண்டனர். பிறகு அனுமன் தன் வாலில் எரிந்து கொண்டிருக்கும் தீயை கடலில் தோய்த்து அணைத்தான். அப்போது அந்த இடத்தில் இருந்த சிலர், அனுமன் இட்ட தீ இலங்கை முழுவதும் எரிந்தது. ஆனால் அசோக வனத்திற்கு மட்டும் தீ பரவவில்லை என்றனர். இதைக் கேட்டு அனுமன், மகிழ்ந்தான். நல்ல வேளை அன்னை உள்ள இடத்திற்கு தீ பரவவில்லை என நினைத்தான். உடனே அனுமன், சீதையை காண அசோக வனத்திற்கு சென்றான். அனுமனை பார்த்த சீதை மகிழ்ந்தாள். பிறகு சீதை அனுமனின் வீரதீர செயல்களை பாராட்டினாள். அனுமன் சீதையிடம் ஆசி பெற்றுக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான்.
அனுமன் சீதையிடம் ஆசி பெற்றுக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு வடதிசை நோக்கிச் சென்றான். அவ்வாறு அனுமன் செல்லும்போது சமுத்திர ராஜன் வேண்டுகோளுக்கிணங்க தன் மீது ஓய்வெடுத்து செல்லும்படி சொன்ன மைந்நாகம் மலையின் மீது வந்து நின்றான். அங்கு அம்மலையின் மீது சிறிது நேரம் ஓய்வெடுத்தான். அப்பொழுது இலங்கையில் நடந்தவற்றையெல்லாம் அம்மலையிடம் கூறினான். பிறகு தன்னை எதிர்பார்த்து அங்கதனும் மற்ற வானர வீரர்களும் காத்து கொண்டிருப்பார்கள் எனக் கூறி விட்டு அம்மலைக்கு விடைகொடுத்து வானில் பறந்தான். அனுமன் விரைந்து சென்று மகேந்திர மலையை அடைந்தான். அனுமனின் வரவை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த வானர வீரர்கள் அனுமனை கண்டு மிக்க மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தனர். சிலர் அனுமனை தொழுதனர். சிலர் அனுமனை தூக்கி ஆரவாரம் செய்தனர். சிலர் அனுமனை கட்டி தழுவிக் கொண்டனர். சிலர் ஆடி பாடி மகிழ்ந்தார்கள்.
வானரங்கள் அனுமனை பார்த்து! அனுமனே! உன் வீரதீர செயல்களின் காரணமாய் ஏற்பட்ட புண்களும், உன் முகத்தின் பொழிவும் நீ சீதையை பார்த்துவிட்டாய் என்பதை காட்டுகிறது என்றனர். பிறகு வானரங்கள், உனக்காக காய்களும், கனிகளும், கிழங்குகளும் சேகரித்து வைத்துள்ளோம். இவற்றை உண்டு சிறிது நேரம் இளைப்பாறு என்றனர். பிறகு அனுமன் அங்கதனிடம் சென்று அவனை வணங்கினான். ஜாம்பவானின் காலில் விழுந்து வணங்கினான். பிறகு அனைவரும் ஓரிடத்தில் அமர்ந்தனர். அனுமன் அனைவரிடமும் நான் சீதையை கண்டுவிட்டேன். சீதையின் வாழ்த்துக்களையும் பெற்றேன் என்றான். உடனே வானரங்கள் அனுமனிடம், நீ இங்கிருந்து சென்றது முதல் அங்கிருந்து இங்கு வந்தது வரை நடந்தவற்றை எல்லாம் கூறு என்றனர். அனுமன், சீதையின் கற்பு திறனையும், அவர் இராமரின் நினைவாக இருப்பதையும், தன் அடையாளமாக சீதை கொடுத்த சூடாமணி பற்றியும் கூறினான்.
பிறகு அங்கு அரக்கர்களிடம் போர் புரிந்ததையும், இலங்கைக்கு தீ மூட்டியதையும் கூறினான். பிறகு வானரங்கள், அனுமனே! நீ போர் புரிந்ததற்கு அடையாளமாய் உனக்கு ஏற்பட்ட புண்களே காண்பிக்கிறது. அவர்களிடம் நீ வெற்றி பெற்று தான் இங்கு வந்துள்ளாய் என்றனர். அங்கதன் அனுமனிடம், நீ மிகவும் துணிவுடன் இக்காரியத்தை செய்து உள்ளாய். உன் பலத்துக்கும், வலிமைக்கும் நிகரானவர் எவரும் இல்லை என்பதை நிரூபித்து விட்டாய். இன்று உன்னால் வானர குலம் புகழ் பெற்றுள்ளது என பாராட்டினான். பிறகு அனுமன், அன்னை சீதை, நான் இன்னும் ஒரு மாத காலம் தான் உயிருடன் இருப்பேன். அதற்குள் இராமர் வந்து என்னை காப்பாற்றி செல்ல வேண்டும் என்று கூறினார் என்றான். உடனே வானரங்கள், இனியும் நாம் தாமதிக்கக் கூடாது. உடனே இராமரிடம் சென்று சீதையை கண்ட செய்தியைக் கூற வேண்டும் என்றனர்.
அங்கதன் அனுமனிடம், அனுமனே! நாங்கள் உயிரை விட தயாராக இருந்தோம். நீ தான் தக்க சமயத்தில் இலங்கை சென்று சீதையை கண்டு எங்கள் உயிரையும் காப்பாற்றி உள்ளாய் என்றான். ஆதலால் நீ விரைந்து சென்று, இராமரிடம் நடந்த விஷயங்களை எல்லாம் கூறு என்று அனுப்பி வைத்தான். பிறகு அங்கதன் தலைமையில் வானர வீரர்கள் இராமரை நோக்கிச் சென்றனர். அவர்கள் போகும் வழியில் மதுவனத்தை கண்டனர். அம்மதுவனம் முதலில் வாலியின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. வாலி இறந்த பின் அம்மதுவனம் சுக்ரீவன் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. அதனை ததிமுகன் என்னும் வானர வீரன் தன் ஏவலாட்களுடன் காவல் காத்து கொண்டிருந்தான். வானரங்கள் மிகுந்த பசியுடன் இருந்ததால், அவர்கள் அங்கதனிடம், நாங்கள் மிகுந்த பசியுடன் உள்ளோம். தாங்கள் இந்த மதுவனத்தில் உள்ள மதுவை அருந்த அனுமதி தர வேண்டும் என்றனர்.
தொடரும்.....
0 Comments