இராமாயணம் பகுதி - 50
அனுமன், இனி நான் தேவியை எவ்வாறு காண்பேன். சம்பாதி, சீதை இலங்கையில் இருக்கிறாள் என கூறினாரே. அவருடைய சொல்லும் பொய்யாகி விட்டதே. இனி என் உடலில் உயிர் இருந்து என்ன பயன்? நான் இந்த இலங்கையை கடலில் போட்டு அழுத்தி, நானும் உயிரை மாய்த்துக் கொள்வது தான் சரி என்று உறுதி கொண்டான். இவ்வாறு அனுமன் நினைத்துக் கொண்டு இருக்கையில், அருகில் வனம் ஒன்று இருப்பதை கண்டான். அவ்வனத்தின் பெயர் அசோக வனம். பிறகு அனுமன் அவ்வனத்துக்கு அருகில் சென்று பார்த்தான். என்ன இடம் இது? நான் இந்த இடத்தில் சீதையை தேடவில்லையே! அனுமன், இவ்வனத்தில் சென்று சீதையை தேடலாம் என அவ்வனத்திற்குள் சென்றான். அனுமன் யார் கண்ணிலும் படாமல் இருக்க தன் உருவத்தை மிகச் சிறிய உருவமாக மாற்றிக் கொண்டான்.
அனுமன் மரத்திற்கு மரம் தாவிக்கொண்டு சீதையை தேடிக் கொண்டு இருந்தான். அங்கு ஓர் குளத்தைக் கண்டான். அனுமன் அங்கு சென்று குளக்கரையில் ஓர் மரத்தின் மேல் ஏறி சுற்றும் முற்றும் பார்த்தான். அங்கு தூரத்தில் தங்கத்திலான மண்டபத்தைக் கண்டான்.
அசோக வனத்தில் சீதை அரக்கியர் சூழ ஓர் மரத்தினடியில் மிகுந்த சோகத்துடன் அமர்ந்திருந்தாள். சீதையின் கண்கள் அழுதழுது மிகவும் வாடி போயிருந்தது. அவள் மிகவும் உடல் இளைத்து, தூக்கமின்றி புலியிடம் மாட்டிக்கொண்ட மான் போல அகப்பட்டு மிகவும் வருந்திக் கொண்டிருந்தாள். இராமரின் நினைவால் மிகவும் வருந்தி, சோர்வுற்று, இராமரின் வரவை எதிர்பார்த்து மிகவும் துன்பப்பட்டுக் கொண்டிருந்தாள். இராமரின் நினைவு சீதையை வாட்டிக் கொண்டு இருந்தது. இராமர் தன்னை காக்காவிட்டாலும், தன் குலப்பெருமையைக் காக்கும் பொருட்டு நிச்சயம் வருவான் என நாலாபுறமும் இராமரின் வரவை எதிர்நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
இராவணன் தன்னை கவர்ந்து வந்த செய்தியை இராமரும், இலட்சுமணரும் அறியவில்லை போலும் என பலவாறு நினைத்து மிகுந்த துன்பப்பட்டுக் கொண்டிருந்தாள். இராவணன் என்னை கவர்ந்து வந்த போது வழியில் அவனை தடுத்து போரிட்ட ஜடாயுவும் இறந்து விட்டான். ஆதலால் இராமரிடம் என் நிலைமையை எடுத்துரைக்க ஆள் இல்லாமல் போய் விட்டது போலும். ஆதலால் இப்பிறவியில் இராமனையும், இலட்சுமணனையும் காண்பது என்பது நடக்காத காரியம் என நினைத்து மிகவும் வருந்தினாள். தான் அமர்ந்த இடத்தை விட்டு சற்றும் நகராத சீதை, இனி இராமருக்கு யார் உணவளிப்பார்கள். முனிவர்கள் எவரேனும் வந்தால் அவர்களுக்கு இராமர் எவ்வாறு உணவளிப்பார் என நினைத்து வருந்தினாள்.
ஒரு வேளை என்னை கவர்ந்து வந்த அரக்கர்கள், இவ்வளவு நாட்கள் ஆகியும் என்னை உயிருடன் விட்டுவிட மாட்டார்கள். இவர்கள் என்னை தின்று இருப்பார்கள் என நினைத்து இருப்பாரோ என்று நினைத்து மிகவும் துன்பப்பட்டாள். ஒருவேளை பெற்ற தாய்மார்களும், தம்பி பரதனும் காட்டிற்கு வந்து இராமரையும் இலட்சுமணரையும் அழைத்துக் கொண்டு சென்று விட்டார்களோ? என்னவோ? இராமர் தாயின் கட்டளைப்படி பதினான்கு ஆண்டு வனவாசம் முடியாமல் நிச்சயம் நாடு திரும்ப மாட்டார்கள். அவ்விருவருக்கும் ஏதேனும் ஆபத்து நேர்ந்துவிட்டதா என நினைத்து மிகவும் வருந்தினாள்.
அசோகவனத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த சீதையை சுற்றி பல அரக்கர்கள் நின்று கொண்டிருந்தனர். அங்கு திரிசடை என்னும் அரக்கி மட்டும் சீதையிடம் அன்பாக பேசுவாள். அங்கு திரிசடையை தவிர்த்து மற்ற அரக்கர்கள் மயக்க நிலையில் வீற்றிருந்தனர். அங்கு மற்ற அரக்கர்கள் தூங்கிவிட்டதால் சீதை திரிசடையிடம் பேச ஆரம்பித்தாள். திரிசடை நீ என்னிடம் அன்பாக இருப்பதால் நான் உன்னிடம் ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன் என்றாள். பிறகு சீதை, அன்புமிக்க திரிசடையே! என் இடக்கண் துடித்துக் கொண்டு இருக்கிறது. இதனால் ஏற்படும் விளைவு தான் என்ன? என் துன்பங்கள் நீங்கி நன்மை உண்டாக போகிறதா? இல்லை, துன்பத்திற்கும் மேல் துன்பம் வர போகிறதா? எனக் கேட்டாள்.
அதுமட்டுமில்லை, இராமர் விசுவாமித்திர முனிவரிடம் மிதிலைக்கு வரும்போது எனது இடக்கண் துடித்தது. இன்றும் அதேபோல் என் இடக்கண் துடிக்கிறது. இராமர் நாட்டை விட்டு வனம் செல்லும்போது என் வலக்கண் துடித்தது. பிறகு இராவணன் என்னை கவர்ந்து வரும்போதும் என் வலக்கண் துடித்தது. ஆனால் இன்று என் இடக்கண் துடிக்கிறது. இதனால் ஏற்படும் விளைவு என என்னிடம் சொல் எனக் கூறினாள். சீதை சொன்னதை கேட்டுக் கொண்டிருந்த திரிசடை, சுபம் உண்டாகும். உன் இடக்கண் துடிப்பதால், நீ நிச்சயம் உன் கணவரை அடைவாய் என்றாள்.
பிறகு திரிசடை, சீதையே! நான் என் கனவில் ஒளி மிகுந்த ஒரு பொன் வண்டு ஒன்று உன் காதருகே பாடிச் சென்றதை கண்டேன். இவ்வாறு ஒரு பொன் வண்டு காதருகே வந்து பாடினால், நிச்சயம் உன் கணவனால் அனுப்பப்பட்ட தூதன் உன்னை வந்து சந்திப்பான். குலமகளே! உனக்கு தூக்கம் என்பதே இல்லாததால் உனக்கு கனவு வரவில்லை. மேலும் நான் கண்ட கனவுகளை கூறுகிறேன், கேள் என்றாள். இராவணன் தன் வீட்டில் அக்னி ஹோத்ரம் செய்வதற்காக அக்னியை பாதுகாத்து கொண்டு வருகிறான். அந்த அக்னி அணையாமல் பாதுகாக்க வேண்டும். ஆனால் என் கனவில் அந்த அக்னி அணைந்துவிட்டது. மேலும் அந்த அக்னி இருந்த இடத்தில் செந்நிறத்தில் கரையான்கள் தோன்றின.
அதே போன்று, மாளிகையில் நெடுங்காலமாக மணி விளக்குகள் ஒளி வீசி கொண்டு இருந்தன. திடீரென்று வானத்தில் வீசிய பேரிடியால் அவ்விளக்குகள் எல்லாம் அணைந்து போயின. தோரணங்கள், கம்பங்கள் என அனைத்தும் முறிந்து விழுந்தன. பொழுது விடியும் முன்பே கதிரவன் தோன்றியது. அரக்க பெண்களின் கழுத்திலிருந்த மங்கல நாண்கள் தானாக அறுந்து விழுந்தது. அதுமட்டுமின்றி இராவணனின் மனைவி மண்டோதரி தலைவிரி கோலமாக தோன்றினாள். இவை அனைத்தும் அரக்கர் குலம் அழிவதற்கான தீய சகுனங்கள்.
நான் கடைசியாக கண்ட கனவு, இரண்டு ஆண் சிங்கங்கள், தங்கள் புலிக் கூட்டத்தை அழைத்துக் கொண்டு யானைகள் மிகுந்த காட்டிற்கு சென்று யானைகளை எதிர்த்து போரிட்டனர். அங்கு கணக்கற்ற யானைகளை கொன்று வீழ்த்திவிட்டு, இறுதியில் அவர்களுடன் ஓர் மயிலை அழைத்துக் கொண்டு சென்றனர். அதுமட்டுமின்றி இராவணனின் மாளிகையில் இருந்து ஓர் அழகிய பெண், ஆயிரம் திரிகளை கொண்ட ஓர் விளக்கை தன் கையில் ஏந்திக் கொண்டு விபீஷணனின் மாளிகைக்கு சென்றாள். விபீஷணனின் பொன் மாளிகையில் அப்பெண் நுழைந்த நேரத்தில் விபீஷணன் உறக்கத்தில் இருந்து எழுந்தான். அதற்குள் தாங்கள் என்னை எழுப்பி விட்டீர்கள் என்றாள் திரிசடை.
தொடரும்.....
0 Comments