இராமாயணம் பகுதி - 48
சுரசை, என்னை ஒருவரும் கடந்து செல்ல முடியாது என்றாள். அவளின் வாய் மெதுவாக திறந்து கொண்டிருப்பதை கண்ட அனுமன் சிறிய வடிவம் எடுத்து சுரசையின் வாயில் புகுந்து வெளியே வந்தான். அனுமன் நொடியில் உள் புகுந்து வெளி வந்ததால் அவளால் அனுமனை உட்கொள்ள முடியவில்லை. அனுமனின் வலிமையை அறிந்த சுரசை தன் பழைய வடிவம் எடுத்து, அனுமனிடம் இனி உனக்கு வெற்றி உண்டாகட்டும் என வாழ்த்தி அனுப்பினாள். அனுமன் இன்னும் வேகமாக வானில் பறந்து சென்றான். அவனின் வேகத்தை கண்ட தேவர்கள், கருடன் தான் வேகமாக செல்கிறான் என நினைத்தனர்.
அனுமன் வானில் வேகமாக பறந்து கொண்டு இருந்தபோது, அனுமனின் நிழலை யாரோ பிடித்து இழுத்ததால் அனுமனின் வேகம் தடைப்பட்டது. பிறகு அனுமன் தன் வேகத்திற்கு தடையாக வருபவர் யார் என பார்த்தார். அப்போது சிம்மிகை என்னும் அரக்கி தன் வாயை குகை போல திறந்து அனுமனை விழுங்க முன் வந்தாள். உடனே அனுமன் சிறிய உருவம் எடுத்து அரக்கியின் வாயில் புகுந்து வயிற்றை கிழித்துக் கொண்டு வெளியே வந்தான். இதனால் அவள் மாண்டு போனாள். பிறகு அனுமன் எவ்வித தடையும் இன்றி, சமுத்திரராஜாவும், வாயு பகவானும் துணைபுரிய கடலின் அக்கரையை அடைந்தான். அங்கு பவளமலை என்னும் இடத்தில் இறங்கினான். அனுமன் இறங்கிய வேகத்தில் பவளமலை நடுநடுங்கியது.
பின்பு அங்கிருந்து இலங்கை நகரை சுற்றி பார்த்தான். இலங்கை நகரின் அழகை கண்டு அனுமன் வியந்தான். இலங்கை மாநகரின் மாட மாளிகைகள், கோபுரங்கள், குளங்கள், நந்தவனங்கள் நவரத்தினங்கள் போல் ஜொலித்தது. பிறகு அனுமன், இவ்வளவு அழகு வாய்ந்த இலங்கையை காக்க எத்தனை அரக்கர்கள் வேண்டும்? இப்பொழுது நான் இங்கு வந்தது போல் வானர வீரர்களான அங்கதனும், தளபதியான நளனும், அரசனான சுக்ரீவனும் மட்டுமே வர முடியும். மற்ற வானர வீரர்கள் எவ்வாறு இங்கு வர முடியும்? சீதையை எப்படி மீட்பது? சீதை எங்கே இருப்பாள்? நான் சீதையை எவ்வாறு காண்பேன்? நான் சீதையை அரக்கர்களுக்கு தெரியாமல் தான் பார்க்க வேண்டும். ஆனால் இப்பொழுது பகலாக இருக்கிறது.
நான் செய்யும் வேலையை தடங்கல் இல்லாமல் ஆராய்ந்து தான் செய்ய வேண்டும். இரவில் சீதையை தேடிச் செல்லலாம் என மனதில் நினைத்துக் கொண்டான். அனுமன் இருள் சூழும் வரை காத்திருந்தான். அனுமன் தன் சிறிய உருவத்தினை எடுத்தான். இருளும் மெல்ல மெல்ல சூழ்ந்தது. அரக்கர்களான இராவணனின் ஏவலர்கள் இந்திரலோகத்திற்கு சென்றனர். தேவர்களும், நாகர்களும், வேந்தர்களும் தங்களது பணியை முடித்துக் கொண்டு வானவழியில் சென்றனர். இரவும் முழுவதும் சூழ்ந்தது. சந்திரன் தோன்றினான். இராம தூதனான அனுமன் வந்ததை பார்த்து சந்திரன் மிக்க மகிழ்ச்சியுடன் பிரகாசமான ஒளியை தந்தது.
அனுமனுக்கு இலங்கை நகரம் புதிதான நகரம். ஆதலால் அனுமனுக்கு எவ்வழியில் செல்வது என்று தெரியவில்லை. அவனின் உணர்வு வழிகாட்ட, நகரத்திற்குள் சென்றான். இலங்கை மதில்சுவரை அடைந்தான். மதில்சுவரின் உயரத்தை கண்டு வியந்து நின்றான் அனுமன். மதில் சுவரை அரக்கர்கள் காவல் புரிந்து கொண்டு இருந்தனர். இதனை கண்ட அனுமன், அரக்கர்களிடம் போரிட்டால் நம் காரியம் தடைபடும் அதுமட்டுமில்லாமல் நேரமும் வீணாகும். ஆதலால் மரங்கள் மீதும், மதில் மீதும் ஏறி உள் நுழைய தீர்மானித்தான். அனுமன் மதில் மீது ஏறி தாவ முயன்றார். அப்போது இலங்கையை காவல் புரியும் இலங்கா தேவி அவன் முன் தோன்றினாள்.
இலங்கா தேவி, இலங்கையை விழிப்புடன் பாதுகாத்து வரும் நகர தேவதை ஆவாள். நான்கு முகங்களும், எட்டு கரங்களும், கொடிய உருவமும் கொண்டவள். அவள் தோற்றமே அச்சம் தருவது போல் இருந்தது. அவள் வேல், வாள், சூலம், கதை, பாசம், சங்கு, வில், அம்பு ஆகிய ஆயுதங்களைத் தன் எட்டு கரங்களிலும் ஏந்திக் கொண்டு இருந்தாள். அனுமன் மதில் சுவரை ஏறுவதைக் கண்டு இலங்காதேவி, நில்! நில்! என சொல்லிக் கொண்டு ஓடி வந்தாள். அனுமனிடம், யார் நீ? ஒரு குரங்கு, உனக்கு எவ்வளவு தைரியம்? என் அனுமதியின்றி யாரும் உள் செல்லக் கூடாது. எவரும் உள் செல்ல அஞ்சும் இக்காரியத்தை செய்ய உனக்கு எவ்வளவு தைரியம்? இத்தனை அரக்கர்கள் காவல் புரிவதை பார்த்து உனக்கு பயம் இல்லையா? இங்கிருந்து ஓடிப்போ, என்றாள்.
இவளது பேச்சைக்கேட்டு அனுமனுக்கு கோபம் வந்தது. ஆனால் அனுமன் அதை வெளிக்காட்டி கொள்ளவில்லை. அனுமன், எனக்கு இந்நகரை சுற்றிப் பார்க்க வேண்டும் என்று ஆசை. அதனால் தான் நான் இங்கு வந்தேன் என்று புத்திசாலிதனமாக கூறினான். நான் உன்னை இங்கிருந்து, ஓடிப்போ என்று சொன்ன பிறகும் நீ என்னிடம் வாதம் செய்து கொண்டிருக்கிறாய். உனக்கு எவ்வளவு துணிவு வந்திருந்தால் இங்கே வந்திருப்பாய்? உன்னைப் போன்றோர் இங்கே வரக் கூடாது. பதில் பேசாமல் இங்கிருந்து ஓடிப் போ என ஏளனமாக கூறினாள். அரக்கி இப்படி பேசுவதை கேட்டு அனுமன் மனதில் சிரித்துக் கொண்டான். மறுபடியும் அரக்கி அனுமனிடம், நீ யார்? யார் சொல்லி நீ இங்கே வந்துள்ளாய்?
நான் இவ்வளவு சொல்லியும் நீ இங்கிருந்து போவது போல் தெரியவில்லையே! உன்னை கொன்றால் தான் இங்கிருந்து போவாய் என நினைக்கிறேன் என்றாள். அனுமன், நீ என்ன தான் செய்தாலும், இந்த ஊருக்குள் போகாமல் திரும்பி போகமாட்டேன் என்றான். அனுமன் பேசியதைக் கேட்ட இலங்காதேவி, அனைவரும் என்னைப் பார்த்து அஞ்சி நடுங்குவார்கள். ஆனால் இவன் என்னைப் பார்த்து பயப்படுவது போல் தெரியவில்லை. இவன் சாதாரணமான குரங்கு இல்லை. இவனை இப்படியே விட்டுவிடக் கூடாது. இவனை கொல்வது தான் சரி. இல்லையென்றால் இலங்காபுரிக்கு தீங்கு ஏற்படும் என்று மனதில் நினைத்தாள். உடனே இவள் அனுமனை பார்த்து, முடிந்தால் உன் உயிரை காப்பாற்றிக் கொள் என கூறிக் கொண்டு வேலை அனுமனை நோக்கி எறிந்தாள்.
தன்னை நோக்கி வந்த வேலை அனுமன் தன் கைகளால் ஒடித்து தூக்கி எறிந்தான். தன் வேலை ஒடித்த அனுமன் மீது மிகுந்த கோபம் கொண்டு பல ஆயுதங்களை ஏவினாள். அனுமனோ தன்னை நோக்கி வந்த ஆயுதங்களை எல்லாம் ஒடித்து வானில் வீசினான். தன் ஆயுதங்கள் அனைத்தும் வானில் தூக்கி எறியப்பட்டதை பார்த்து மிகவும் கோபங்கொண்டு குன்றுகளை அனுமன் மேல் ஒவ்வொன்றாக தூக்கி எறிந்தாள், இலங்கா தேவி. பிறகு இலங்கா தேவி அனுமனை தன் கரங்களால் அடிக்க ஓடி வந்தாள். அனுமன் அவளது கரங்களை ஒன்றாக பிடித்து அவளை ஓங்கி அடித்தான். அவள் வலி தாங்க முடியாமல் சுருண்டு கீழே விழுந்தாள்.
பிறகு இலங்கா தேவி அனுமனிடம், வானரமே! எவராலும் வீழ்த்த முடியாத என்னை நீ வீழ்த்திவிட்டாய். அப்படியென்றால் அரக்கர்களுக்கு அழிவுக்காலம் ஆரம்பித்துவிட்டது. ஐயனே! நான் பிரம்மதேவரின் கட்டளையினால் இலங்கையை காவல் புரிகிறேன். பிரம்மன் என்னிடம், எப்போது வானரத்தால் நீ வீழ்கிறாயோ, அப்பொழுது அரக்கர் குலம் அழிய போகிறது என்று அர்த்தம் என்றார். உன்னால் இன்று என் காவல் நிறைவுப்பெற்றது. பிரம்மன் சொன்னது போல் நடந்துவிட்டது. இனி நீ செய்யும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி உண்டாகும் எனக்கூறி அனுமனுக்கு வழிவிட்டு வானுலகம் சென்றாள்.
தொடரும்.....
0 Comments