இராமாயணம் பகுதி - 31 - RAMAYANAM PART - 31


இராமாயணம் பகுதி - 31


இராமாயணம் பகுதி - 31 - RAMAYANAM PART - 31

பெண்மணியே! நீயோ விஸ்ரவசுவின் மகள். அவர் ஒரு அந்தணர். நானோ தசரதரின் ராஜகுமாரன். அந்தணரின் மகளை இராஜகுமாரர்கள் மணந்து கொள்ளக் கூடாது. அது மட்டுமின்றி உன் தாய், தந்தை, இராவணன் முதலிய உன் சகோதரர்களின் அனுமதியின்றி உன்னை மணந்து கொள்வது தவறான செயல் ஆகும். நான் திருமணம் ஆனவன். நீ என்னை விரும்புவது முறையற்ற செயல் ஆகும் என்றார், இராமர். இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது சீதை வந்து கொண்டு இருந்தாள். சீதையின் அழகை பார்த்து சூர்ப்பனகையே ஒரு நிமிடம் மயங்கி போனாள். சீதை ராமனை நோக்கி வருவதை சூர்ப்பனகை கவனித்தாள்.

சூர்ப்பனகை இராமனிடம், பெருமானே! தங்களை நோக்கி வருபவள் ஒரு அரக்கி. நீங்கள் அவளை நம்ப வேண்டாம். இவள் மாய வேலை செய்வதில் மிகவும் வல்லவள் என்றாள். இராமர், சூர்ப்பனகை நல்லவள் அல்ல தீயவள் என்பதை உறுதி செய்து கொண்டார். அவளிடம் விளையாட ஆரம்பித்தார். இராமர் சூர்ப்பனகையிடம், நானோ திருமணம் ஆனவன். என்னை நோக்கி வருபவள் என் மனைவி சீதை. திருமணம் ஆன ஒரு ஆண்மகனை மறுபடியும் திருமணம் செய்ய சொல்வது உனக்கு தீமையை உண்டாக்கும். உனக்கு நான் ஒரு வழியை காட்டுகிறேன். இதோ என் தம்பி இலட்சுமணர் இருக்கிறான். அழகிலும், வீரத்திலும் சிறந்தவன். நீ வேண்டுமானால் அவனை திருமணம் செய்து கொள் என்றார்.

சூர்ப்பனகையும் இராமனின் சொல்படி அவனை விட்டுவிட்டு இலட்சுமணனிடம் பேச ஆரம்பித்தாள். வீரனே!

உன்னை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. வா! நாம் இருவரும் திருமணம் செய்து மகிழ்ச்சியாக இருப்போம் என்றாள். இலட்சுமணரும் அண்ணனுடன் சேர்ந்து கொண்டு, நீ என்ன பைத்தியமா? நானோ அண்ணனுக்கு அடிமையாக இருக்கிறேன். நீ என்னை திருமணம் செய்து கொண்டால் அடிமைக்கு அடிமையாகத்தான் இருக்க வேண்டும். நீ நன்றாக சிந்தித்துப்பார். இதற்கு பதில் என் அண்ணன் இராமனை இரண்டாவது தாரமாக திருமணம் செய்து கொள்ளலாம் என்றார். சீதைக்காக நீ பயப்பட தேவையில்லை. என் அண்ணனையே திருமணம் செய்து கொள் என்றார். சூர்ப்பனைகையும் இலட்சுமணனனின் பேச்சை சரி என நினைத்து மறுபடியும் இராமனிடம் சென்று சீதையை பார்த்தாள். இவளால் தான் நீங்கள் என்னை திருமணம் செய்ய மறுக்கிறீர்கள். இவளை நான் ஒழித்து விடுகிறேன். பிறகு தாங்கள் என்னை தாராளமாக திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கூறி கொண்டு சீதையின் மீது பாய்ந்தாள்.

சீதை பயந்து இராமனின் பின் ஒளிந்து கொண்டாள். இதற்கு மேல் விளையாடினால் ஆபத்தாகிவிடும் என நினைத்து இலட்சுமணனிடம், இலட்சுமணா! இவளுக்கு நீ நல்ல பாடம் புகட்ட வேண்டும் என்றார், இராமர். இராமர் சீதையை பர்ணசாலைக்கு அழைத்துச் சென்றார். இலட்சுமணர், அரக்கியிடன் சண்டையிட்டு அவளின் காதையும், மூக்கையும் அறுத்து துரத்தி அனுப்பினார். இரத்தம் வழிந்தோடியது. அவள் வலியால் அலறினாள். பிறகு சூர்ப்பனகை அங்கிருந்து மாயமாக மறைந்து சென்றாள்.

சூர்ப்பனகை நேராக, அரக்கர்கள் சூழ அமர்ந்திருக்கும் ராட்சஷ தலைவனான கரன் முன் நின்றாள். கரன், சூர்ப்பனகையின் நிலையை பார்த்து என்ன ஆயிற்று? என விசாரித்தான். என் நிலைமைக்கு தவக்கோலத்தில் வனத்திற்கு வந்திருக்கும் இராமனும், இலட்சுமணுனும் தான் காரணம் என்றாள். கரன், எனக்கு ஒன்றும் புரியவில்லை சற்று தெளிவாக சொல் என்றான். சூர்ப்பனகை, தசரதரின் இரண்டு குமாரர்கள் தவக்கோலம் பூண்டு இங்கே வந்து இருக்கிறார்கள். அவர்களுடன் ஒரு பெண்ணும் இருக்கிறாள். அப்பெண்ணின் காரணமாக அவர்கள் என்னை இக்கதிக்கு ஆளாக்கி விட்டார்கள். நீ உடனே சென்று அவர்களை வதம் செய்துவிட்டு வா என்றாள்.

கரன் தன் பதினான்கு சேனாதிபதிகளுக்கும், உடனே சென்று அந்த இருவரையும் அவர்களுடன் இருக்கும் அப்பெண்ணையும் அழைத்து வாருங்கள் என கட்டளையிட்டான். கரனின் சேனாதிபதிகளை அழைத்துக் கொண்டு சூர்ப்பனகை இராமருடைய பர்ணசாலைக்கு வந்தாள். அவர்கள் தான் என்னை இக்கதிக்கு ஆளாக்கியவர்கள். அவர்களை உடனே கொன்று விடுங்கள் என்றாள். இராமர், சூர்ப்பனகை மற்றும் அவளின் சேனாதிபதிகளை பார்த்த உடன் அவளின் நோக்கத்தை அறிந்து கொண்டார். உடனே, இலட்சுமணரிடம், இலட்சுமணா! சீதையை சிறிது நேரம் பத்திரமாக பார்த்துக் கொள். இவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். இராமர் தன்னுடைய வில்லை ஏந்தி சேனாதிபதிகளை பார்த்து, முனிவர்களின் வேண்டுகோளின்படி அரக்கர்களை அழிக்கவே இந்த வனத்தில் நாங்கள் குடியுள்ளோம். உங்கள் உயிர் மீது ஆசை இருந்தால் உடனே தப்பி ஓடுங்கள். இல்லையேல் உங்கள் யாவரையும் விடமாட்டேன் என எச்சரித்தார்.

சேனாதிபதிகளும் தங்கள் பலத்தை பற்றி பலவாறாக பேசினார்கள். யுத்தம் ஆரம்பமானது. சிறிது நேரத்தில் இராமருடைய பாணங்களுக்கு அரக்கர்கள் இரையாகி மாண்டு போனார்கள். மறுபடியும் சூர்ப்பனகை மிகுந்த கோபத்துடன் கரனிடம் சென்று அழுது புரண்டாள். கரனுக்கு ஒன்றும் புரியவில்லை. நீ ஏன் அழுகிறாய். நான் தான் பதினான்கு சேனாதிபதிகளையும் அனுப்பியுள்ளேன். அவர்கள் இந்நேரம் காரியத்தை முடித்திருப்பார்கள். நீ அழாதே! எனக் கூறினான். அவள் உடனே எழுந்து கண்களை துடைத்து கொண்டு, நீ அனுப்பிய பதினான்கு சேனாதிபதிகளும் அங்கு பிணமாக கிடக்கிறார்கள். இராமனுடைய வீரத்தால் சேனாதிபதிகள் அனைவரும் மாண்டார்கள். இராமனின் வீரத்தை உனக்கு எப்படி சொல்வது என்று தெரியவில்லை? உன் ராட்ஷச குலத்தை காப்பாற்ற வேண்டுமென்றால் உடனே சென்று இராமனிடம் யுத்தம் செய்.

நீ பலசாலி என்று அனைவரிடமும் சொல்வதால் ஒரு பயனும் இல்லை. உடனே இராமனிடம் சென்று போரிட்டு உன் வீரத்தையும், தீரத்தையும் காண்பி. இல்லையேல் அவன் உன் குலத்தை நிச்சயம் அழிப்பான் என்றாள். தன் சபையில் சூர்ப்பனகை இப்படி தன்னை இழிவுபடுத்தி பேசுவதை கரனால் பொறுத்து கொள்ள முடியவில்லை. சூர்ப்பனகை! நீ இந்த அற்பனை கண்டு இவ்வளவு அஞ்சி பேசலாமா? அவனைக் கொல்ல எனக்கு ஒரு நிமிடம் போதும். அவனை அழித்து அவனின் இரத்தத்தை உனக்கு தருகிறேன். கரன் அங்கிருந்து செல்ல முற்பட்டான். உடனே சூர்ப்பனகை! நீ தனியாக போகாதே உன்னுடன் சேனையை அழைத்துக் கொண்டு செல் என்றாள்.

கரனும் அப்படியே கட்டளையிட்டான். தூஷணன் தலைமையில் ஆயுதங்களுடன் பெரிய சேனை சென்றது. அவர்களுக்கு பின்னால் கரனும் தேரில் சென்றான். இவர்கள் போகும் வழியில் அபசகுணங்களை பல கண்டார்கள். அதற்கு கரன், இந்த அபசகுனங்களை கண்டு யாரும் அஞ்ச வேண்டாம். நாம் சீக்கிரம் அவர்களை கொன்று விட்டு திரும்புவோம். நான் இதுவரையில் எந்த யுத்தத்திலும் தோல்வி அடைந்ததில்லை என்று கூறினான். கரனின் இவ்வார்த்தைகளை கேட்டவுடன் சேனைகள் கம்பீரமாக சென்றன. பர்ணசாலையில் இராமருக்கும், இலட்சுமணக்கும் சேனை வரும் ஓசை கேட்டது.

யுத்தத்திற்காக சேனை வந்துக் கொண்டு இருக்கிறது என்பதை அறிந்த இராமர் யுத்தத்திற்கு தயாரானார். உடனே இலட்சுமணரிடம், இலட்சுமணா! சேனையின் ஓசையை கேட்டாயா! இன்று யுத்தம் நடப்பது நிச்சயம். ராட்ஷச அரக்கர்களும் அழிந்து போவது நிச்சயம் எனக் கூறினார்.

இலட்சுமணா! நீ ஆயுதங்கள் ஏந்தி கவசம் அணிந்து சீதையை அழைத்து போய் மலை குகையில் பத்திரமாக பாதுகாப்பாய். நான் இங்கு இருந்து எதிர் வரும் ராட்ஷச சேனையை பார்த்துக் கொள்கிறேன். நீ தாமதிக்காமல் சீதையை அழைத்துச் செல் எனக் கூறினார். பிறகு இராமரும் கவசம் அணிந்து யுத்தத்திற்கு தயாரானார். இலட்சுமணரும் சீதையை அழைத்துக் கொண்டு மலை குகைக்கு சென்றார்.

தொடரும்.....

Post a Comment

0 Comments